09 ஜூன் 2014

உணவே மருந்து

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 உணவே மருந்து
* * * * * * * * * * *
உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. அறுசுவைகளால் ஆனதே இந்த உடல்.

நாம் இப்போது எந்த வகை உணவு நம் உடலிற்கு உகந்தது இல்லையோ அதைத் தான் அதிகம் உண்கிறோம். நவீன உணவுகள் என்ற பெயரில் அதிக பட்சம் மைதாவால் ஆன நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகளை உட்கொள்வதுதான் நாகரீகம் என்ற விளம்பர மோகத்தில் சிக்கியதால் , நம் பழமையான பாரம்பரிய உணவு வகைகளை தீண்ட தகாத பொருட்களை பார்த்து விட்டதை போல எண்ணம் பலருக்கு. அதை உண்டால் நம் தரம் தாழ்ந்து விட்டது போல எண்ணுகிறார்கள்... கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை, சம்பா கோதுமை, மக்காசோளம், பார்லி, குதிரை வாலி, பனங்கற்கண்டு இந்த பெயர்களை எல்லாம் இனி வரும் காலங்களில் பிள்ளைகள் அறியாத விஷயமாக ஆகி விடும்.

இனியும் கூட இந்த வகை பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளா விட்டால் வாழும் நாட்களை வியாதிகளுடன் நரகமாக வாழ வேண்டியது தான்.

வாரத்திற்கு ஒரு நாள் என பகல் நேரங்களில் கம்பு, புழுங்கலரிசி, தினை, வரகு, சாமை, கோதுமை ரவை, மக்காசோளரவை இவற்றில் சாதம் செய்து பச்சை காய்கறிகள், கீரை வகைகளை குழம்பாக்கி சேர்த்து உண்டு வர சர்க்கரை மட்டும் இல்லை நம் உடம்பில் இருக்கும் மற்ற பிரச்சனைகள் மொத்தமும் குணமாகும். கேரட், வெள்ளரி போன்றவற்றை சாலட் ஆகவும் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.

இரவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பாத்தி மட்டுமே சாப்பிடாமல் கேழ்வரகு அடை, கம்பு அடை, கம்பு இட்லி என்றும் காலையில் வரகரிசிப் பொங்கல், திணை பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி, கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் என்று சாப்பிட்டால் உடல் எப்போதும் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கும்.

கம்பு, திணை, வரகு, சாமை, மக்காசோளம், சம்பா கோதுமை, மற்றும் கொள்ளு போன்றவற்றை ரவை போல (அரிசி நொய் போல ) உடைத்து கஞ்சியாக செய்து , இரவு வேளையில் இரண்டு அல்லது மூன்று டம்பளர்கள் குடித்தால் மிகவும் நல்லது .. அனைவருக்கும் ஏற்ற இரவு உணவு இது. பெரும்பாலும் இரவில் வயிறு நிறைய உணவு உண்ணக்கூடாது.. அதிலும் சர்க்கரை வியாதிக்காரர்கள் முழு வயிறு நிறையும் அளவு உண்ணவே கூடாது என்றாலும் கூட, இந்த கஞ்சியை சர்க்கரை வியாதிக்காரர்கள் இரவில் முழு வயிறு நிறையும் அளவு கூட குடிக்கலாம்... இதனால் உடலில் சர்க்கரையின் அளவு ஏறாது..இது இவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும்.
இஞ்சி,புதினா, கொத்துமல்லி, பிரண்டை, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றில் துவையல் செய்து இந்த கஞ்சிக்கு தொட்டும் சாப்பிடலாம்.

கேழ்வரகு தானியங்களில் அதிக சத்துமிக்கது. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்தது.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச் உள்ளது. பி 11 வைட்டமின் ரைபோபிளேவின் நயாசின் சத்து உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகள் சோள உணவு சாப்பிட கூடாது.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. வரகு மாதவிடாய் கோளாறுகளை சரி பண்ணும்.

சாமை மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகமாக்கி ஆண்மை குறைவையும் போக்கும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் போக்கும்.

பார்லியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பார்கள். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். மலச்சிக்கலை போக்க வல்லது. காய்ச்சலை தடுக்கும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். சிறுநீர் தடையில்லாமல் செல்ல உதவும். எலும்புகளுக்கு உறுதி கொடுக்கும். இருமலை நிறுத்தும். குடல் புண்ணை ஆற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...