31 மே 2014

மருந்தாகும் எளிய பொருட்கள் !

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
மருந்தாகும் எளிய பொருட்கள் !
வயிற்றுவலி
வயிற்று வலி, வாயு, மலச்சிக்கல், உப்புசம் போன்றவை இருந்தால் 5 வெற்றிலையை எடுத்து நன்றாகக் கழுவி 1 கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை 3 நாளைக்குக் குடித்துவந்தால் எந்த மாதிரி வயிற்று வலி இருந்தாலும் சரியாகிவிடும்.
தலைவலி
தலைவலி பொறுக்க முடியாமல் இருந்தால், ஒரு பக்கெட்டில் சுடு நீர் எடுத்து அதில் 1 மேசைக்கரண்டி சுக்குப் பொடியைப் போட்டுக் கால்களைத் தண்ணீரில் வைத்துக் கண்களை மூடிக்கொண்டு 20 நிமிடங்கள் உட்காரவும். இப்படிச் செய்தால் தலைவலி குறையும்.
பூண்டு மருந்து
பூண்டை 2 பல் எடுத்து நன்றாக நசுக்கி 1 ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டாலும் தலைவலி குணமாகும்.
செரிமானமின்மை
அசிடிட்டி, செரிமானமின்மை இருந்தாலோ சாப்பாடு எதுக்களித்து வந்தாலோ, 1 உருளைக் கிழங்கைக் கழுவித் தோல் சீவி கேரட் சீவலில் துருவ வேண்டும். அதை அப்படியே பிழிந்தால் ஜூஸ் வரும். அதை வடிகட்டி 1 சின்ன ஸ்பூன் எடுத்து, அரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து நிதானமாகக் குடித்தால் நல்லது. 2 நாட்களுக்கு இப்படிக் குடிக்கலாம்.
கண் அரிப்பு
வறண்ட கண்கள் இருந்தால், கண் அரிக்கும். சில நேரம் எரிச்சலாகவும் இருக்கலாம். சுத்தமான வெள்ளைத் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்துக் கண் மேல் போட்டு 5, 10 நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கவும். துணி குளிர்ந்ததும் எடுத்துவிடவும். ஒரு நாளைக்கு 2 முறை இப்படிச் செய்தால் நல்லது. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு இது நல்ல பலன் அளிக்கும்.
வாயுப் பிடிப்பு
வாயுப் பிடிப்பு இருந்தால் சுக்கு காப்பி செய்து குடித்தால் பிடிப்பு போய்விடும். இதைச் செய்வதற்குக் கொத்த மல்லி 1 மேசைக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, சுக்கு 1 சிறிய துண்டு, ஓமம் 1 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, இவற்றைத் தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் இதை 1 ஸ்பூன் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி பால், பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கவும்.
குழந்தை சோர்வு
குழந்தைகளுக்குப் பேதி ஆகிச் சோர்ந்துவிட்டால் உடனே காய்ச்சி ஆற வைக்கப்பட்ட தண்ணீரில் 1 ஸ்பூன் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொடுக்கவும். பிறகு டாக்டரிடம் காட்டவும்.
நாமக்கட்டி
தொண்டைக் கட்டு இருந்தால் நாமக்கட்டியை நன்றாகக் குழைத்துத் தொண்டைக் குழியில் தடவினால் தொண்டைக் கட்டு போய்விடும்.
புதினா
வயிற்றுப் புண், வாய்ப்புண் இருந்தால் மணத்தக்காளிக் கீரையைப் போல் புதினாவும் நல்ல மருந்தாகப் பயன்படும். புதினா 1 கைப்பிடி, சுண்டைக்காய் அளவு புளியைச் சுட்டுப் போடவும். உப்பு, பெருங்காயம் சேர்த்துத் துவையலாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து அரைத்த விழுதைப் போட்டு 1 நிமிடம் கிளறி முதல் சாதத்தில் சேர்த்துச் சாப்பிடவும். காரத்தைத் தவிர்க்கவும்.
மார்புச் சளி
கருந்துளசி சற்றுக் காரமாக இருக்கும். ஒரு பிடி எடுத்து 1 கோப்பை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, 1 அவுன்ஸ் இரண்டு வேளை எடுத்துவந்தால் கபம், மார்புச் சளி நீங்கிவிடும்.
உண்மையை உணருங்கள்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...