17 மே 2014

நீங்களும் ஆட்சியர் ஆகலாம் வாங்க

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நீங்களும் ஆட்சியர் ஆகலாம் வாங்க. பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

              இன்றைக்கு இளைஞர்கள் சீக்கிரம் பணக்காரராகி, சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் தானும் உயர்ந்து, தன்னுடைய சமுதாயமும் உயர வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு.
                 நம்முடைய நாடு சுதந்திரமடைந்த பின்பு, கடந்த 65 வருடங்களில் பல விஷயங்களில் முன்னேறி இருந்தாலும், இன்னும் பல பகுதிகளில் அடிப்படை வசதிகளான மருத்துவமனை வசதிகளும், தரமான கல்வி நிலையங்களும், நியாயமான விற்பனைக்கூடங்களும், குடியிருப்புக்கான இடமும், கழிப்பிட வசதிகளும் இல்லை. இத்தகைய இல்லாமையிலும், பல மட்டங்களில் ஊழல், சுரண்டல், ஆக்கிரமிப்பு, அபகரிப்பு என ஏகப்பட்ட ஓட்டைகள். இவைகளுக்கு இடையே, சத்து குறைப்பாடுள்ள பலவீனமான குழந்தைகள், நலிவடைந்த நிலையில் பெண்களும் மற்றும் பல்வேறு சமுதாய பிரிவினர்கள், உள்நாட்டில் வகுப்புவாத கலவரங்கள் என பல்வேறு பிரச்சனைகள். திட்டங்கள் பல இருந்தும் பயனடைவோருக்கும் தெரியாமலேயே நிறைவேறி வரும் நிலைகள். பாதுகாப்பு என்பது ஒரு காகிதத்தாளில் எழுதப்பட்ட வார்த்தை என இன்னும் பல விஷயங்களைச் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனை அடுக்கடுக்கான காயங்களை குணப்படுத்துவதற்கு மருந்துத் தேடாமல், நடந்த விஷயங்களை குறைச்சொல்பவர்கள் அதிகம்.
                         படித்த இளைஞர்கள், மேற்சொன்ன பிரச்சனைக்களுக்கான காரணம் என்ன என்பதையும், அதன் அடிஆழத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மாற்றம் இருந்தால் பரவாயில்லை என்று சொல்லுவதை விட மாற்றத்தை ஏற்படுத்திட உங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும். இதன் மூலம் சமுதாயமும் சிறக்கும் நீங்களும் உன்னதமான நிலையை அடைந்து சிறப்படையவும் முடியும். உங்களுக்காக காத்திருக்கிறது பல்வேறு கனவு பணிகள். இதில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது இண்டியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ் மற்றும் இண்டியன் போலீஸ் சர்வீஸ் போன்ற பணிகள்.
                      இந்த பணிக்கான தேர்வில் நீங்கள் தேர்வாகிவிட்டால் போதும். வாழ்நாள் முழுவதும் நீங்கள் மதிப்புகுரியவராகி விடுகிறீர்கள். நாட்டு மக்களுக்கு நீங்கள் பல்வேறு வழிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சேவை செய்ய முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து தகுதிகள் இருக்கும் பல இளைஞர்களுக்கும் தகுந்த வழிகாட்டுதல்கள் இல்லாததால் இதுகுறித்த சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களைத் தட்டியெழுப்பவும், தகுந்த வழிகாட்டவும் தான் இந்த கட்டுரை. தொடர்ந்து வாசியுங்கள். சின்ன சின்ன வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றியடைந்து விடுவீர்கள்.
       எவ்வளவு பேரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?
           அரசாங்க சேவைகளின் பணிகளுக்காக இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்றழைக்கப்படும் யூபிஎஸ்சி. ஒவ்வொரு ஆண்டும் 850 பேரை தேர்வு செய்து மத்திய மற்றும் மாநில பணிகளுக்கு அனுப்புகிறது. அதிக மதிப்பெண் பெறுபவர்களை இண்டியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ் என்றழைக்கப்படும் பணிகளுக்கும், அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களுக்கு இண்டியன் போலீஸ் சர்வீஸ் பணிகளுக்கும், அதற்கு அடுத்து இண்டியன் •பாரீன் சர்வீஸ் மற்றும் இண்டியன் ரெவன்யூ சர்வீஸ் பணிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி மொத்தம் 20க்கும் மேற்பட்ட பணிகள் இருக்கின்றன. இவர்கள் இந்தியாவின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இந்த பணிகளின் சிறப்பை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மிகவும் உயர்தர பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்பையும், அரசு சேவையையும் உணர வைக்கப்படுவார்கள்.
            எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும்? தேர்வு எப்போது நடத்தப்படுகிறது?

           நேர்மையான மற்றும் அறிவார்ந்த இளைஞர்கள், இளைஞிகள் மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதலாம். இந்த தேர்வில் முதல் கட்டமாக முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இரண்டாவதாக முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படும். மூன்றாவதாக நேர்முகத்தேர்வு நடைப்பெறும். பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை. இதர பிரிவினருக்கு 150 ரூபாய் மட்டுமே கட்டணம். முதல் நிலையில் தேர்ச்சி பெறுகிறவர்கள் இரண்டாம் நிலை தேர்வு எழுதவும், இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் நிலை தேர்வு எழுத விளம்பரம் செய்யப்படுகிறது. தேர்வு ஜூன் மாதத்தில் நடைப்பெறும். முதன்மை தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைப்பெறும். நேர்முகத்தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைப்பெறும். மே மாதம் முடிவு அறிவிக்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள பயிற்சி மையத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி மேற்கொள்ளவும் செய்யலாம்.
என்ன மாதிரியான பாடங்கள் படிக்க வேண்டும்?
                 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவியில் இருப்பவர்களுக்கு சமூக அறிவியல், அறிவியல் , கணிதம் ஆங்கிலம் போன்ற அறிவு அவசியம். இது குறித்த கேள்விகள் முதல்நிலை தேர்வில் அதிகளவில் கேட்கப்படுகிறது. இதில் இரண்டு பொது அறிவு தாள்கள் இருக்கின்றன. முதல் தேர்வில் வரலாறு, இந்திய சட்டம், பூகோளம், தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். இரண்டாவது தேர்வில் பத்தாவது வகுப்பிற்கு இணையான ஆங்கிலம், கணிதம், லாஜிக்கல் மற்றும் பகுப்பாய்வு திறன் சார்ந்தவைகள், முடிவெடுக்கும் தன்மையை பரிசோதித்தல் போன்றவை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இதுகுறித்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வேலைவாய்ப்பு செய்தித்தாளில் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கிய வகையில் வெளியிடப்படுகிறது. மேலும் நீங்கள் விவரம் தெரிந்துக் கொள்ள http://employmentnews.gov.in/ அல்லது http://www.upsc.gov.in என்ற இணையத்தளங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடலாம்.
           தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு என்ன செய்ய….
                        முதலில், இந்த தேர்வு குறித்து வெளியிடப்படும் செய்தியை முழுமையாக படித்துக் கொள்ளவும். இந்த தேர்வுக்கு NCERT வெளியிடும் பத்தாவது மற்றும் அதற்கு கீழே வகுப்புக்களுக்கான பாடநூல்கள் குறிப்பாக வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் போன்றவற்றை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு அட்லஸ் வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் வெளியாகும் இரண்டு மூன்று செய்தித்தாள்களை தினமும் படிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டு அரசு வெளியிடும் இயர் புத்தகத்தையும், மனோரமா இயர் புத்தகம் போன்றவற்றையும் படிக்க வேண்டும். நீங்கள் தேர்வுக்கு திறம்பட தயாராக வேண்டும். தினமும் ஆல் இண்டியா ரேடியாவில் நியூஸ் அனாலிசிஸ் இரவு 9 மணியில் இருந்து 9.30 மணி வரை ஒலிபரப்பாகிறது. இதனை தவறாமல் கேட்க வேண்டும். இப்படி தொடர்ந்து கேட்டு வரும் போது உங்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும்.
  வெற்றிக்கான வழிமுறைகள் தொடரும்…
                         கட்டுரையாளர்: காரைக்கால் பகுதியைச் சார்ந்த முருகராம். இவர் இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி, 623 ரேங்க்கை பெற்று இண்டியன் ரெவன்யூ சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாகிறார். இவர் பி.டெக் பட்டதாரி. முதலில் டாடா கன்சல்டான்ஸி சர்வீஸ் பணியாற்றியிருக்கிறார். ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக தனது பணியினைத் துறந்துவிட்டு மும்முரமாக தயார் செய்து தேர்வாகி இருக்கிறார்.
ஐ.ஏ.எஸ் தேர்வு சார்ந்த சந்தேகங்களை கடிதம் வாயிலாக எழுதி அனுப்பினால், உங்களுக்கு உரிய முறையில் வழிகாட்டப்படும்.
தகவல் :  Mourugaram S.V, Karaikal, peace2047@gmail.com
தமிழாக்கம் : சக்திவேல் , MSSRF, Chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...