மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்தப்பதிவில் நுகர்வோர் பற்றி காண்போம்.
1.Consideration = பொருள் அல்லது சேவைக்காக வழங்கப்படும் விலை
2.Defect = பொருளில் உள்ள குறைபாடு
3.Deficiency = சேவையில் ஏற்படும் குறைபாடு
4.Service = சேவை
5.Restriction trade practice = கட்டுப்படுத்தப்பட்ட வியாபார செயல்
6.Unfair trade practice = நேர்மையற்ற வியாபார செயல்
1. நுகர்வோர் என்பவர் யார்? அவருடைய உரிமை என்ன?
தன்னுடைய பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்யும் அல்லது சேவையை பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோர் என அழைக்கப்படுவார். ஆனால் இதனை வியாபாரத்திற்காக பயன்படுத்துபவர் அல்லது மறுவிற்பனை செய்பவர் நுகர்வோராக கருதப்படமாட்டார்.
நுகர்வோரின் உரிமைகள் பின்வருமாறு:
1.குறைபாடான பொருள் அல்லது சேவையினால் பாதிக்காமல் காத்துக்கொள்ளும் உரிமை
2.கொள்முதல் செய்யப்படும் பொருள்/சேவை பற்றிய முழு விவரங்களை பெறுவதற்கான உரிமை.
3.தமக்கு தேவையான பொருட்களை/சேவையை தெரிவு செய்வதற்கான உரிமை.
4.குறைபாடான பொருட்கள்/சேவையை பெற்றிருந்தால் அது பற்றி கேட்பதற்கான உரிமை.
5.இந்த குறையை தீர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை.
6.தம்முடைய நுகர்வோர் உரிமையை சுதந்திரமாக செயல்படுத்துவதற்காக நுகர்வோர் கல்வி பெறுதவதற்கான உரிமை.
2. பொருட்களை கொள்முதல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை யாவை?
கொள்முதல் செய்யும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது தேவைப்படும். மேலோட்டமாக பார்த்த உடனேயே தெரிகின்ற குறையேதும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி கொள்க. பொருளுடன் வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. ISI, Agmark போன்று பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்முதல் செய்க.
3. நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து உடனேயே நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா?
இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து கொடுக்கும்படி கூற வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையை திருப்பி வழங்கிவிடுவார்.
4. நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அணுக வேண்டும்?
விற்பனையாளரிடம்/உற்பத்தியாளரிடம் நேரடியாக சென்று கேட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை அணுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.
5. கட்டணம் ஏதுமின்றி சேவை புரிபவரிடம் பெரும் குறைபாடான சேவைக்கு நீதிமன்றத்திற்கு அணுக முடியுமா?
எந்த ஒரு நுகர்வோரும் தாம் பெற்ற பொருள் மற்றும் சேவைக்கு ஈடாக விலையை இதனை அளிப்பவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பதே நுகர்வோர் வழக்கின் அடிப்படையாகும். இலவசமாக மருத்துவ சேவை புரியும் அரசு மருத்துவமனையின் மீது பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி வழக்கு தொடுக்க முடியாது. ஒரு ரூபாயாவது கட்டணமாக செலுத்தி ரசீது பெற்று சேவை பெற்றிருந்தால் வழக்கு தொடுக்க முடியும்.
6. இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் என்னென்ன நிவாரணம் கிடைக்கும்?
இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.
1 குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்
2.குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்
3.இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்
4.குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்
5.பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்
6.உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்
7.அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல்
7. ஈட்டுத்தொகை பெறுவதற்கு ஏதேனும் உச்ச வரம்பு உள்ளதா?
இல்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கு பொருந்த கூடிய அளவிற்கு ஈட்டுத்தொகை இருக்க வேண்டும்.
8. ஒரு பொருள் அல்லது சேவை பெறும்போது ஏற்படும் குறைபாட்டில் ஒரு பகுதி குறையை மட்டும் தீர்க்கும்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியுமா?
ஆம். ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குறைபாடு உடையதாயின் மற்றவை சரியாக உள்ளது என தெரியும்போது அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் சரிசெய்து தரும்படி நுகர்வோர் நீதி மன்றத்தை அணுக முடியும்.
9. இந்த வழக்கினை வழக்கறிஞர் மூலமாக மட்டும்தான் அணுக வேண்டுமா?
தேவையில்லை. பாதிக்கப்பட்ட நுகர்வோர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாம், மிகவும் சிக்கலான நிலையில் மட்டும் வழக்கறிஞரை அணுகுவது நல்லது.
10 நுகர்வோர் வழக்கு தொடுக்கும்போது என்னென்ன காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்?
1.குறைபாடுடைய பொருள் அல்லது சேவையின் பெயர்
2.வழக்கு தொடுப்பவரின் பெயர் மற்றும் முழு விவரங்கள் அவ்வாறே எதிர்தரப்பாளரின் முழு விவரங்கள்
3.இந்த நிகழ்வுகள், எப்போது. எங்கே எவ்வாறு நிகழ்ந்தது
4.எதிர்தரப்பாளர் ஏன் இதற்கு பதிலீடு செய்ய வேண்டும்? அல்லது பொறுப்பு வகிக்க வேண்டும்? அதற்கான உத்திரவாதம் உள்ளதா? பட்டியல் உள்ளதா? விலை கொடுக்கப்பட்டுள்ளதா?
5.குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள், பட்டியல், பணம் கொடுத்ததற்கான ரசீதுகள், உத்திரவாதம் பெற்றதற்கான ஆதாரங்கள், நேரில் அணுகி கேட்டபோது மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அல்லது எழுத்து மூலம் நிவர்த்தி செய்யும்படி கோரி மறுத்ததற்கான ஆதாரங்கள்
6.பொருள்/சேவை கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.
11. வழக்கை எங்கு பதிவு செய்ய வேண்டும்?
பாதிப்பு எங்கு ஏற்பட்டதோ அந்த இடத்தினுடைய மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். மதிப்பீடு தொகை 25 இலட்சம் வரையிருந்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் 25 இலட்சம் முதல் 1 கோடி வரை மாநில நுகர்வோர் மன்றத்திலும் 1 கோடிக்கும் மேல் எனில் தேசிய நுகர்வோர் மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம்.
12. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?
ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து இதற்கான அனைத்து ஆவன நகல்களை இணைத்து பொருள் மதிப்பிற்கு தகுத்நவாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ. தொலைநகல் மூலமாகவோ, விரைவு தபால் மூலமாகவோ வழக்குகளை பதிவு செய்து இந்த வழக்கின் நகலை எதிர் தரப்பாருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
13. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுத்து மேல் முறையீடு எவ்வாறு செய்வது?
நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பாயின் மாநில மன்றத்திலும் மாநில மன்ற தீர்ப்பாயின் தேசிய மன்றத்திலும், தேசிய மன்ற தீர்ப்பு எனில் உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம். அப்போது அனைத்து நடைமுறைகளுடன் நீதிமன்ற தீர்ப்பு நகலையும் இணைத்து மேல் முறையீட்டிற்கு மனு செய்ய வேண்டும்.
இந்த முப்பது நாட்கள் என்ற வரம்பை நீதி மன்றம் விரும்பினால் சரியான காரணத்திற்காகவே இந்த கால தாமதம் ஆகிவிட்டது எனக்கருதி வழக்கினை ஏற்றுக்கொள்ளும்.
14. மேல் முறையீட்டின்போது நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் ஈடுகட்டும் தொகையின் மதிப்பில் 50% அல்லது ரூ.2500 எது குறைவோ அதனை மாநில மன்றத்திற்கு ரூ.35000 தேசிய மன்றத்திற்கு ரூ.5000 உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய தொகையை செலுத்த வேண்டும்.
15. நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்தரப்பாளர் நடைமுறைபடுத்தவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?
எதிர்தரப்பாளர் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை என்றால் அது ஒரு குற்றச்செயலாகும். குறைந்தது ஒரு மாதம் அதிக பட்சம் மூன்று மாதம் சிறை தண்டனையும், தண்டத் தொகையாக ரூ.2000 அதிக பட்சம் ரூ.10000 மட்டும் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். இடைக்கால உத்தரவு ஏதும் நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுத்தாது.
இந்நிலையில் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?
இந்த உத்தரவை செயற்படுத்த நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தால் அந்த தொகைக்கான சான்றுகளை நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு நிலவரி வசூலிப்பது போன்று வசூலிக்கும்படி அனுப்பி வைக்கும்.
16. நுகர்வோர் நீதிமன்றத்தின் செயல்பாடு வரன்முறை யாவை?
குற்றவியல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி போன்று வழக்குகளை நடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் நுகர்வோர் மன்ற நீதிபதிக்கு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக