19 செப்டம்பர் 2012

வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி இலவச மையம்-தாளவாடி

                    முயற்சிகள் தவறலாம்! முயற்சிக்க தவறக்கூடாது!!


 அன்பு நண்பர்களே,வணக்கம். 
                            நமது ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் வட்டாரப்பகுதிவாழ் 'பிறமொழி' பேசும் மக்களுக்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(தாளவாடி மையம்)மற்றும்  டிவைன் மெட்ரிக் பள்ளி (தாளவாடி)உடன்  இணைந்து  தமிழ் மொழிப்பயிற்சி மையம்  ஏற்படுத்தி உள்ளது. 
          இந்த மொழிப்பயிற்சி மையம் தாளவாடி கொங்கள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ள தொட்ட காஜனூர்  டிவைன் மெட்ரிக் பள்ளியில் 18-09-2012 அன்று முதல் நடைபெறுகிறது.விருப்பமும்,ஆர்வமும் உள்ள இளைஞர் முதல் வயதானவர் வரை சாதி, மத, இன, மொழி, வயது ,பாலினம் வேறுபாடு இன்றி அனைவரும்  கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம்.இப்பயிற்சி சமூக நலன் கருதி இலவசமாக நடத்தப்படுகிறது.

        மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் - காரணம்.
      
               இத்தாலி நாட்டைச் சேர்ந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" (Constantine joseph beschi) என்னும் பெயருடைய கிறித்துவப் பாதிரியார் அவர்கள் கிறித்துவ சமயம் பரப்ப 1710 ஜூன்மாதம் 'லிஸ்பனில்' புறப்பட்டு 'கோவா' (இந்தியா) வந்து அங்கிருந்து 'கொச்சி' வந்து பிறகு கால்நடையாக 'அம்பலக்காடு' வந்து தங்கி மதுரையில் 'காமநாயக்கன்பட்டி' வந்து சேர்ந்தார்.
              தமிழ் உட்பட ஒன்பது மொழிகள் கற்றிருந்த போதிலும் தமிழின் இனிமை மற்றும் பெருமையினை உணர்ந்து   இத்தாலி மொழியிலிருந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" என்ற தனது பெயரை "தைரிய நாதன்" என மாற்றினார்.பிறகு அந்தப்பெயர் வடமொழி என அறிந்து மீண்டும் "வீரமாமுனிவர்" என தனது பெயரை மாற்றி தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டார்.
          முதன்முதலாக பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தார்.மேலும் தமிழில் எழுத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்து எளிமையாக்கினார்.செய்யுள் நடையில் இருந்த 'சதுரகராதி' யினை பேச்சுத்தமிழில் படைத்தார்.அதனால் 'தமிழ் அகராதிகளின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
                 இலக்கியப்படைப்புகளை உரைநடையில் அறிமுகப்படுத்தினார்.இவருக்கு முன்னரே "தத்துவ போதகர்" (1577-1656) இவரது இயற்பெயர் "இராபர்ட் டி நொபிலி" (Robert de nobili) என்னும் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கிறித்துவ பாதிரியார் சமயம் பரப்ப இந்தியா வருகை தந்த போது  முதன்முதலாக  பிறமொழிக்கலப்போடு தமிழில் உரைநடை எழுதியுள்ளார்.எனினும் வீரமாமுனிவர் பிறமொழிக்கலப்பின்றி தூய தமிழில் உரைநடை எழுதினார்.
             உரைநடையில் வேதவிளக்கம்,வேதியர் ஒழுக்கம்,ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம்,பரமார்த்த குருவின் கதைகள்,வாமன் கதை, திருக்காவல் ஊர்க்கலம்பகம்,கித்தேரி அம்மன் அம்மானை, தேம்பாவனி என 23 உரைநடைகள் எழுதி உள்ளார்.உலகப்பொதுமறை நூலான திருக்குறளை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
         இவ்வாறு செய்யுள்,உரைநடை,இலக்கணம்,அகராதி,மொழி பெயர்ப்பு,காவியம் என தமிழ்த்துறையில் பல சிறப்பான படைப்புகளை தந்து தமிழுக்காக செய்த தொண்டின்  நினைவாக  தாளவாடியில் மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் இட்டு அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளோம்.

      வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்ப்பேட்டை அருகில் (6கிலோமீட்டர் தூரத்தில்)உள்ள கோணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகிமாதா கோவிலில் அமைந்துள்ளது.
           வீரமாமுனிவரின் சரித்திரத்தை 1822-இல் வித்துவான் முத்துசாமிபிள்ளை அவர்கள் தமிழில் எழுதி வெளியிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...