18 மார்ச் 2012

சேவல்

   
      

அன்பு நண்பர்களே,
   வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.



    



     சேவல்! தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. மலையும் மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியுமான முல்லை, வயலும் வயல் சார்ந்த மருதம் ஆகிய நிலத்தில் பிரதான வளர்ப்புப் பறவையாக, செல்லப் பறவையாக, வீரத்தை வெளிக்காட்டும் பறவையாக தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் வீற்றிருக்கக் கூடிய ஒன்று.அவ்வளவு ஏன்? தமிழர்களின் கடவுள் முருகன். அம்முருகனே ஒரு சேவற் கொடியோனாகவே விளங்குகிறான். குறிப்பாகக் கொங்கு நாட்டுப் பகுதியில் இன்றைக்கும் வீரத்தின் வெளிப்பாடாக சேவலை முன்னிலைப் படுத்துவது வழக்கம். சண்டையில் தனது சேவல் வெல்வது என்பது, ஒருவனது கெளரவத்தை நிர்ணயிக்கிறது.

ஊத்துக்குளி அரண்மனை, புரவிபாளையம் அரண்மனை, சமுத்தூர், எரிசனம்பட்டி, கரட்டுமடம், வல்லக்குண்டாபுரம், கோயிலூர், துடியலூர், ஆலாந்துறை, பூலுவபட்டி முதலான இடங்களில் இருக்கும் சேவல் வளர்ப்பவர்கள், அந்த அதீத நாட்டம் குன்றாது இன்றைக்கும் முனைப்போடு இருப்பது தமிழனின் மரபு மற்றும் பண்பாட்டைப் பறைசாற்றுவதாகவே உள்ளது எனலாம்.

இப்படியான சிறப்புமிகு சேவலை, உருவத்தின் கண் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். பெருவடை, சிறுவடை(சித்துவடை) எனப் பகுத்தறிந்து அடையாளம் கொள்கின்றனர் கொங்கு நாட்டுப் பகுதியில். இது தவிர, காட்டுப் பகுதியில் தான்தோன்றித் தனமாகக் காட்டுப் பகுதியில் திரிவனவற்றைக் காட்டுக் கோழி என்றும் அழைக்கின்றனர்.

சேவற்சண்டையில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறை வென்ற சேவலுக்கு, அதிக முன்னுரிமை கொடுத்து வளர்க்கின்றனர், இச்சேவலைச் சுகாதாரமான கோழியுடன் புணர வைத்து, அவை இரண்டுக்குமான குஞ்சுகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.

குஞ்சு பொறித்த பின், முதல் மூன்று மாதங்களுக்கு தாய்க் கோழியின் அரவணைப்பில் வளர்கிறது குஞ்சுகள். பின், தாயாலேயே அவை பிரித்து விடப் படுகின்றன. பெருவடைக் கோழிகள் பொதுவாக, பதினைந்து முட்டைகள் இட்டு பதின்மூன்று குஞ்சுகள் வரை பொறித்தெடுக்கும். சித்துவடைக் கோழிகள், இருபத்து ஐந்து முட்டைகள் வரை இட்டு, அனைத்தையும் பொறித்தெடுக்கும் வல்லமை பெற்றவை.

பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை தாயுடன் இருந்த சேவற் குஞ்சுகள், தனியாக வளரத் துவங்கி, ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆனதும் கூவ ஆரம்பிக்கும். கூடவே, உடன் பிறந்த சக சேவல்களுடன் சண்டை இடவும் பழகிக் கொள்ளும். இதன் பொருட்டு, இவற்றைத் தனித் தனிக் கூடுகளில் அடைக்க முற்படுவர்.

ஏழு முதல் பனிரெண்டு மாதங்கள் வரைக்குமான காலம், சேவல்களின் வாலிபப் பருவம் ஆகும். இந்த வாலிபப் பருவத்தில், இவைகளின் வளர்ச்சி என்பது அதிவேகமாக உருவெடுக்கும். சேவல் விற்பன்னர்கள், இப்பருவத்தினைக் கூர்ந்து கவனித்து, சேவலின் வலிமையை எடை போட்டு, பயிற்சிக்கு உகந்ததா எனக் கணிப்பர்.

பயிற்சிக்கு உகந்தது எனக் கருதப்பட்ட சேவல்கள், முகைச்சல் எனும் சண்டைக்கு அழைக்கும் பயிற்சிக்கு விடப்படும். பனிரெண்டு முதல் பதினைந்து மாதங்கள் வரை, முகைச்சல், நீச்சல், உயரந்தாண்டுதல், பறத்தல் முதலான பயிற்சிக்கு ஆளாகும். நீச்சல் பயிற்சி என்பது வெகுமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நீச்சல் ஒன்றின் மூலம்தான், நெஞ்சு விரியும், கால்கள் முன்பின்னாக வாங்கும் திறம் கொள்ளும், மூச்சடக்கிப் பாயும் வல்லமை பெருகும் என்கிறார் சேவல் வளர்ப்பில் கரை கண்ட சீரபாளையம் வசந்த் என்பவர்.

சேவல் போட்டி நடைபெறும் இடங்களுக்கு, போட்டிக்காக நூறுக்கும் மேற்பட்ட சேவல்கள் தினசரி கொண்டு வரப்படுகிறது. சேவல்களின் வலது கால் பின் விரலில் சிறிய கூர்மையான கத்தியை கட்டி விடுகின்றனர்.எல்லோராலும் இப்படி கத்தியை கட்ட முடியாது.சிறப்பு பயிற்சி பெற்ற சிலரால் தான் இந்த கத்திகளை கட்ட முடியும். இவர்களுக்கு கட்டாலிகள் என்ற பட்டமும் உண்டு.
சண்டையில் வெற்றி பெறும் சேவலுக்கு வெற்றி என்றும், தோல்வி பெறும் சேவலுக்கு கோச்சை என்றும் பெயர். ஒரு சேவல் தனது சேவலுடன் சண்டையிட்டு வெற்றி பெற குறைந்த பட்சம் ஐந்து மணித்துளிகள் முதல் முப்பது மணித்துளிகள் வரை ஆகிறது.

சேவல்கள் சோர்வு அடையும் போது எலுமிச்சை சாறு, குளுக்கோசு, கோவத்தலை போன்றவற்றை கொடுத்து வீரியம் ஊட்டுகின்றனர். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் பெருமளவில் குருதி சிந்தி, அது யுத்த களம் போல் காட்சி தருகிறது.

திருச்சி, வெள்ளகோவில், காங்கயம், பொள்ளாச்சி, மூலனூர் , சேலம், வேடசந்தூர், திண்டுக்கல், பழனி, திருநெல்வேலி, போன்ற ஊர்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானவர்கள் இரண்டு சக்கர வாகனங்களிலும், சொகுசுந்துகளிலும் வந்து இந்த சேவற் சண்டையைப் பார்க்கின்றனர்.

சேவலொடு சேவல் சண்டையிடும் இந்த நிகழ்ச்சியை பறவையிடுவது என்றும் அழைக்கின்றனர்.


கொங்கு மண்டலத்தின் சில பகுதிகள் தவிர்த்து, ஏனைய இடங்களுக்குச் சென்று இது என்ன என்று வினவினோமானால், கோழி என்று சொல்லக் கூடியவர்களும், வெறுமனே சேவல் என்றும் சொல்லக் கூடியவர்களும்தான் மிக அதிகமாக இருப்பர். எதைக் கேட்டாலும், மேலெழுந்தவாரியாகச் சொல்வதென்பது, இன்றைய தமிழனின் துர்ப்பாக்கியம்?!

ஆனால், சேவலில் கிட்டத்தட்ட நானூறு விதமான சேவல்கள் உள்ளன என்பதை கிராமத்து வெள்ளந்திகள் தவிர வேறு யாரறிவார்?? நிறம் மற்றும் சிறகமைப்பைப் பொறுத்த மட்டிலும், பரப்பு, பேடு, மயில், கீறி, வல்லூறு, செவளை, காகம், ஆந்தை, அரளை, புள்ளி, பொன்றம் எனப் பலவகைகள்.

கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரகம்.
அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர் என்கிறார் வெள்ளக்கிணறு சண்முகம். வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியலிடுகிறார் அவர்.

கொங்குமண்டலத்தில், மானத்தின் சின்னமாக, வீரத்தின் அடையாளமாக, சிறப்புச் சேர்க்கும் பறவையாக, தன்னோடு ஒருவனாக இருக்கும் சேவல்களின் படங்கள் மற்றும் இன்னபிற வாழ்வியல் கூறுகளை ஆராய, கொங்குப்பகுதியை வலமிட்டு கூடுதல் தகவல்களுடன் வந்து உங்களைச் சந்திக்கும் வரை விடை பெற்றுக் கொள்வது,


  
  பரமேஸ் டிரைவர் - சத்தி மற்றும் தாளவாடி ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...