18 மார்ச் 2012

கொங்கு விளையாட்டு-01

     

 

 

அன்பு நண்பர்களே,

     வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.


நூத்தாங்குச்சி:

தேவையானவை: 10 சின்ன ஈக்குமாத்து குச்சிகள் (பாதாங்கை நீளம்), ஒரு பெரிய ஈக்குமாத்துக்குச்சி (சின்னத விட ஒரு மடங்கு நீளம்)
ஆட்கள்: 2 அல்லது மேல்

மொதல்ல சின்னக்குச்சியெல்லாம் ஒட்டுக்கா சேத்து புடிச்சுக்கிட்டு, பெரிய குச்சிய நடுவால சொருகொணும். அப்புறம் எல்லாத்தயும் கீழ போடனும். மொதல்ல தனியாக் கிடக்கற சின்னக் குச்சிய எடுத்துட்டு, அந்தக் குச்சிய வெச்சு எல்லாக் குச்சியயும் அலுங்காம எடுக்கணும். அலுங்கிருச்சுன்னா ஆட்டம் முடிச்சது. சின்னக் குச்சிகெல்லாம் 10 புள்ளிகள். பெரிய குச்சிக்கு 100 புள்ளிகள். அதிக புள்ளிகள் எடுக்கரவங்க ஜெயிச்சவங்க..


தாயக்கரம் (அ) தாயம்

தேவையானவை: 2 தாயக்கட்டைகள் (அது இல்லீனா, ஒரு பக்கம் ஒரசிய 6 புளியங்கொட்டைகள் ),கரம், காய்களாக கற்கள் (அ) கொட்டமுத்துகள் (அ)உடைந்த ஓடுகள்

ஆட்கள்: 2 அல்லது மேல். (2 ஜோடியாக் கூட ஆடலாம்)

இதுதான் எங்கூருல நான் அதிகம் வெளையாண்ட வெளையாட்டு. சாயந்தரம் பொழுது எறங்கின உடனே, நானு, மோளயன் (மோகன்ராஜ்), பூவான் (பூபதி), சின்னசாமி, தொரயான், மாரப்பன், ஆழி எல்லாஞ் சேந்து ரொம்ப நேரம் ஆடுவோம். அப்பெல்லாம் நான் தோத்துட்டா பயங்கர கோவம் வந்து எல்லாரயும் அடிச்சுட்டு அழுவ ஆரம்பிச்சிடுவேன்..

பொதுவாத் தாயக்கட்டக மரத்திலேயோ, இரும்பிலேயோ இருக்கும்.
தாயக் கட்டையின் மூனு பக்கத்துல (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்துல புள்ளி ஏதும் இருக்காது (0). இந்த 2 தாயக் கட்டைகளை உருட்டினா 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) -ன்ற எண்கள் விழும். இதுல 1(தாயம்), 5, 6, 12 எண்கள் வந்தா மறுக்கா உருட்டலாம். இதே எண்கள் மறுக்கா மறுக்கா வந்தா ‘விருத்தம்'-ன்னு சொல்லுவோம்.

ஒரு சிலருக்கு நல்லா விருத்தம் விழும்..


எங்கூர்ல கரம் இப்படித்தானிருக்கும்.மொதல்ல ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனக்குன்னு காய்கள (4 அல்லது 6) எடுத்து நடுவால மனைல வெச்சுக்கனும்.

யாரு மொதல்ல தாயம் (1) போடறாங்களோ அவங்கதான் காய் நகத்தத் தொடங்கனும். இதனால மொதல்ல கொஞ்சனேரம் ‘தாயமா.. தாயம்மா'-ன்னு கிண்டலா போய்ட்டிருக்கும்.


ஒரு கட்டத்தில ஒரு ஆட்டக்காரரோட காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில நுழைஞ்சா முதலிருந்த காய்கள வெட்டனும். காய் வெட்டப் பட்ட பின்னாடி மனைக்கு திரும்பிபோய் மறுபடியும் தாயமோ, அஞ்சோ போட்டுத்தான் வெளிய வரமுடியும்.

குறுக்க கோடுகள் இருக்குர கட்டங்கள மலைன்னு சொல்லுவோம். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்கலாம். இதுல இருக்கறக் காய்கள வெட்ட முடியாது.

1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. எதிராளி காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.

ஒரு முறை சுத்தி வந்த பின்னாடி திரும்பவும் மனைக்குள் போலாம். இதப் பழத்துக்குப் போறதுன்னு சொல்லுவோம். பழத்துக்குப் போகும்போது கட்டத்து வழியாப் போகாம நடுவால இருக்கர கோடு வழியா காய்கள் போகும்.

ஆனால் எதிராளியோட காய்கள முன்னமே வெட்டாம பழத்துக்குப் போக முடியாது.

முதல்ல யாரு எல்லாக் காயயும் பழமாக்குகிறார்களோ அவங்களெ ஜெயிச்சவங்க.

எதிராளி உங்கள வெட்டாம நீங்க அவங்கள வெட்டி எல்லாக் காயயும் பழமாக்கிட்டா எதிராளி 'வெட்டாக்கூல்'.


 பரமேஸ் டிரைவர் -சத்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக