24 ஜூலை 2011

பத்தியம் அவசியம்!




                                 பத்தியம் அவசியமா?
 


         
      ஒரு நோயாளி நோயுற்றிருக்கும் போது உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். அந்நோய் எந்தப் பொருள் சாப்பிட்டால் அதிகமாக ஆகிவிடுமோ அந்தப் பொருளை உண்பதைத் தவிர்க்கவும். 
       
    எந்த செயலால் அந்நோயின் பாதிப்பு அதிகமாக இருக்குமோ அந்தத் தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் கூறுவதே பத்தியமாகும்.
     
     இது போன்ற பத்திய முறையை சித்த மருத்துவர்கள்,  நவீன மருத்துவர்கள், ஆயுர்வேத யுனானி மருத்துவர்கள் அனைவருமே கூறுவதுதான் மரபு. 
    
    அதே நேரத்தில் பத்தியம் என்பது மருத்துவம் செய்து கொள்ளும்போது தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியதும் ஆகும்.
       
    ஆனால் இன்று சித்த மருத்துவர்கள் மட்டுமே பத்தியம் என்ற பெயரில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் மக்கள் மத்தியில் பரவியிருப்பது வருந்தத்தக்கது.
      
      பொதுவாக மருத்துவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் கூட அவர்களின் குடும்பத்தில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால், நோயுற்ற நோயாளிக்கு நொய் அரிசிக் கஞ்சியோ அல்லது ரொட்டியோ கொடுப்பார்கள். 
          
     காரணம் காய்ச்சல் நோய் வந்துள்ளபோது வழக்கமான இட்லி, தோசை, சாம்பார், ரசம், மோர் போன்ற உணவை நீக்கி எளிதாக ஜீரணிக்கக் கூடிய அரிசி நொய்க்கஞ்சி, பார்லி, அரிசிக்கஞ்சி, கோதுமை ரவைக்கஞ்சி போன்றவை பொதுமக்கள் மருத்துவர் சொல்லாமலேயே தாமே கடைப்பிடிக்கும் பத்திய முறையாகும்.



        
        
        எனவே பத்தியம் என்பது ஒரு கட்டுக்கு உட்படுதல் ஆகும். நோயுற்ற ஒருவன் அந்த நோய்க்கு ஒவ்வாத பொருட்களை நீக்க வேண்டும் என்பது மிகமிக அவசியம்.
        

      காய்ச்சல் வந்தவர்கள் கஞ்சி சாப்பிடும் வழக்கமில்லை என்று கூறி பட்டினி கிடப்பார்களேயானால் நன்மையே பயக்கும் 
         
     அதைவிட்டு வழக்கமான உணவையே உண்டால் நோய் குணமாவதற்குப் பதிலாக அந்நோயின் தாக்கம் அதிகமாகும்.
             
       எனவே மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்களே இதுபோன்று தாமாகவே ஒருசில உணவு முறைகளைப் பின்பற்றும்பேது மருத்துவர்கள், 
           அதாவது எந்த மருத்துவமுறையை செய்துவரும் மருத்துவர்களாக இருந்தாலும் இதுபோன்ற உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க சொல்ல வேண்டியது கடமையல்லவா!
         
      சித்த மருத்துவர்கள் ஒவ்வொரு நோய்க்கு மருத்துவம் அளிக்கும் போதும் அந்த நோய்க்கு எந்தெந்த பொருள் ஆகாதோ அதனை நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும் என நோயாளிகளுக்குக் கூறுவார்கள்.
           
      பொதுவாக உடல் வீக்கமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்கின்ற போதும் உணவில் உப்பு நீக்கி உணவு உண்ணும்படி கூறுவார்கள். இதற்குப் பெயர் உப்பில்லாப் பத்தியமாகும். இந்த நோய்க்கு எவர் மருத்துவம் செய்தாலும் உப்பு நீக்கியே உணவு உட்கொள்ளச் சொல்வார்.

 உடலில் உப்பு நீர் அதிகரித்து இருப்பதால் உணவிலே உப்பு நீக்கி உட்கொண்டால்தான் வீக்கம் குறையும். 

          ஆனால் அதற்கு மாறாக நோயுற்றிருப்பவர் அதுபோன்ற பத்தியம் தன்னால் இருக்க முடியாது என்றும், தன்னால் அதுபோன்று சாப்பிட முடியாது என்றும் கூறுவாரேயானால் அவரால் அந்த நோயிலிருந்து விடுபட முடியாது. 
         அது எந்த மருத்துவ முறையில் அவர் மருத்துவம் செய்து கொண்டாலும் சரி, மேற்சொன்ன உப்பு நீக்கிய உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை கடைப்பிடிக் கவில்லை என்றால் அந்த நோயாளி குணமடைவது கடினமே.

            சிலேத்துமம் மிகுதியால் (கபம் மிகுதியால்) நிமோனியா காய்ச்சல் இருமல் சுவாசகாசம் போன்ற வியாதிகள் உண்டாகும் போது உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கக் கூடிய உணவுகளான தக்காளி, முள்ளங்கி, கல்யாணி, பூசணி, கீரைத்தண்டு, சௌசௌ போன்ற காய்கறிகள், மோர், ஐஸ் தண்ணீர் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் நோயின் தன்மை அதிகரித்து நோயாளி மிகவும் துன்பத்திற்கு ஆளாவார், நோய் குணமடையாது.
           .

             சித்த மருத்துவர்கள் பொதுவாக இச்சாபத்தியம் இருங்கள் என்று கூறுவார்கள். இச்சாபத்தியம் என்றால் இச்சைக்குரிய ஆண், பெண் சேர்க்கை, லாகிரி பொருட்களை பயன்படுத்துதல், புகைப்பொருட்கள், மாமிச வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
 

             உடம்பு அதிக உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டோ அல்லது மாமிச வகைகளை அதிகமாக உண்டோ சீதபேதியால் துன்பப்படும் போது சூட்டை தரக்கூடிய, அதற்கு காரணமான உணவுகளைத் தவிர்க்கும்படி எல்லா மருத்துவர்களுமே கூற வேண்டும்.
        மேல்நாட்டு மருத்துவர்கள் மற்றும் மேல்நாட்டு மக்களும் பத்தியம் என்றால் என்னவென்று அறியத் தொடங்கி இருக்கிறார்கள்.

          முக்கியமாக மகோதரம், நீராம்பல் எனக்கூடிய பெருவயிறு நோய்க்கு கட்டாயம் பத்தியம் இருக்க வேண்டும் என உணர்ந்துள்ளார்கள். 

      உப்பை நீக்க வேண்டும் என்று முடிவு செய்து பெரும்பான்மையாக உப்பை நீக்கி உணவு உட்கொள்கின்றனர்.
        இதற்குப் பெயர் உப்பில்லா பத்தியம் அல்லவா?
       நமது நாட்டில் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவே இத்தகைய வியாதிகளுக்கு உப்பு, காரம், புளி ஆகியவற்றை நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும்.

         இதுபோன்ற பொருட்கள் உதவாது எனவும் கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளனர்.
 


         பத்தியம் என்பது பல அர்த்தத்தை உள்ளடக்கிய பொருளாகும். மருந்து சாப்பிடும் போது அம்மருந்து இரத்தத்தில் கலந்து வேலை செய்யாதவாறு தடுக்கும், மருந்து முறிவு உணவுகளை நீக்குதல் ஆகும்.












           இரத்தத்தில் உஷ்ணத்தை உண்டாக்கி இரத்தத்தை கொதிக்கச் செய்யும் பிராந்தி, சாராயம் போன்ற சில பொருட்களை மருந்து சாப்பிடும் போது நீக்க வேண்டியது முக்கியம்.
 

           ரசம், கந்தகம், தாளகம், பூரம், வீரம், நாகம், வங்கம், தாம்பிரம் போன்ற மருந்துப் பொருட்களுக்கு புகையிலை, பாகற்காய், கல்யாண பூசணிக்காய், உளுந்து, கடலை சிறுகீரை ஆகியவை முறிவுப் பொருட்களாகும். 
       எனவே இவை சம்பந்தப்பட்ட மருந்து உபயோகிக்கும் போது அவ்வகை முறிவுப் பொருட்களை நீக்கும்படிக் கூறுவர்.
 

           கொடுக்கப்படும் மருந்துகள் நல்ல வீரியமுடன் நோய் நீக்குவதற்காகவே அவ்வகையான பத்தியத்தைக் கடை பிடிக்க வேண்டியது அவசியம்.

           வாதநோய் முழுமையாக குணமாக வேண்டுமானால் அவ்வகை கட்டுப்பாட்டுடன் இருந்து மருந்து உட்கொள்வதே சிறந்தது. 
        இதுபோன்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள விரும்பாதவர்களுக்கு எவ்வகை மருத்துவம் செய்தாலும் நோய் முழுமையாக குணமாகாது.
 

          வயிற்று வலியால் கஷ்டப்படும் ஒருவனுக்கு கொத்தவரங்காய், சேப்பங்கிழங்கு உதவாது. மருத்துவர் பத்தியம் கூறினால் அதைப் பொருட்படுத்தாமல் உண்டால் வயிற்றுவலி அதிகமாகும்.

         குன்ம வயிற்று வலியால் துன்பப்படும் ஒருவர் தமக்கு துன்பத்தை தரக்கூடிய இத்தகைய உணவு வகைகளை மருத்துவர் கூறுவதற்கு முன்பாகவே தரமாகவே நீக்கி எளிய உணவை உண்டு வந்தால் அதுவே பத்தியம் காப்பதாகும்.
 

      நவீன மருத்துவத்திலும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும்போது இது போன்ற பொருட்களை நீக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர். ஆனால் அதை பத்தியம் என்று கூறுவதில்லை.

      ஒரு நோய்க்கு மருத்துவம் செய்து கொள்ளும் நோயாளி மருந்தையும் உண்டு. தன் இஷ்டம் போல் தவறான உணவுகளையும் உண்டு வந்தால், எந்த வகையான மருத்துவ முறைகளாலும் அவரை நோயிலிருந்து விடுபட வைக்க முடியாது.

          மருத்துவம் செய்து கொள்ளும் போது ஒவ்வொருவரும் பத்தியம் காக்க வேண்டும் என்பது முக்கியம். எனவே  மருநதையும் உண்டு தவறான உணவையும் உண்டால் மருந்தின் உண்மையான பலன் கிடைப்பது அரிது என்பதை ஒவ்வொரு நோயாளியும் உணர வேண்டும்.
 

       நோயுள்ளவர்கள் மருந்து உட்கொண்டாலும், உட்கொள்ளாவிட்டாலும் பத்தியம் மேற்கொள்வது அவசியம்.
  
      சீதபேதியால் துன்பப்படும் ஒருவர் சூட்டை தரக்கூடிய பச்சை மிளகாய், மாமிச உணவுகள் தூதுவளைக் கீரை, அரைக்கீரை, மாம்பழம் போன்றவற்றை உண்டால் சீதபேதி குணமாகாது. அதற்குப் பதிலாக நோயின் தன்மைதான் அதிகமாகும்.

        எனவே சித்த மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்து கொடுக்கும் போது கண்டிப்பாக பத்தியம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவார்கள். 

      இது எல்லா மருத்துவ முறைகளுக்கும் பொதுவானதே. ஆனால் சித்த மருத்துவர்கள் மட்டுமே மக்களின் நலம் கருதி பத்தியம் என்பதை கட்டாயமாக இருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

 அதுபோல் மக்களை நேசிக்கும் ஒரு சில நவீன மருத்துவர்களும் இதுபோன்ற பத்தியத்தை கடைப்பிடிக்க சொல்கிறார்கள்.

   
           பத்தியம் என்பது அனைத்து மருத்துவ முறைகளில் உள்ள மருத்துவர்களும் நோயாளிகளிடம் கட்டாயம் கூற வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல இது நோயாளியின் உயிர் சம்பந்தமான விஷயமும்கூட.

    இன்று பல்வேறு முறைகளைச் சார்ந்த சில மருத்துவர்களும், குறிப்பாக சில சித்த மருத்துவர்களும் பத்தியம் என்பதை வைத்தால் எங்கே தம்மிடம் நோயாளிகள் வராமல் போய்விடுவார்களோ? என பயந்து,

       தங்களிடம் வரும் நோயாளிகளிடம் பத்தியம் இல்லை என்று கூறி மருத்துவம் செய்கி றார்கள். இதுபோல் இவர்கள் செய்வது இவர்களுடைய நோக்கம் பணம் பறிப்பது மட்டும் தானே தவிர, மக்களுடைய உடல் நலம் பற்றியதாக கருத முடியவில்லை.
              நன்றி= மருத்துவர்; மு. மணிமேகலை அவர்களுக்கு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...