24 ஜூலை 2011

பக்கவாதம்- தீர்வு காண

       
           பக்கவாதம் -பிரச்சினைக்கு தீர்வு


  பக்கவாதம் வந்த பின் பழைய நிலைக்கு திரும்புவது சாதாரண விஷயம் கிடையாது. பெரும்பாலும் நடுத்தர வயதினரைத் தான் பக்க வாதம் தாக்கும்.            
        இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்குகிறது. 
        உடல் பருமன், அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னை உள்ளவர்களை வாதம் எளிதில் தாக்கும். 
        

          நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இந்த இரண்டும் தான் வாதம் ஏற்படக் காரணம் ஆகிறது. 
      ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வாத நோய் வரலாம். ரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
       ரத்த ஓட்டம் தடை பட்ட மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
       மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப முகம், கை, கால் அல்லது முழு  பக்கவாதம் ஏற்படலாம்.

       இத்துடன் தலையில் அடிபட்டு உண்டாகும் மூளை பாதிப்பின் காரணமாக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
      நாள்பட்ட நோய்களான இதய நோய், சிறுநீரகப் பழுது, அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள்,  ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் ரத்தக் கட்டிகள் ஆகியவற்றாலும் வாத நோய் வரலாம்.
         குழந்தைகளுக்கு ஏற்படும் பிளீடிங் டிஸ்ஆர்டரின் காரணமாகவும், ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகளாலும் பக்கவாதம் தாக்கலாம். 
         ரத்த ஓட்டம் தடைபட்டு சிவப்பு அணுக்கள் பிளேட் ஒன்றன் மீது ஒன்றாக படிந்து பிளேட் திரம்டஸ் ஏற்பட்டு ரத்த நாளங்கள் அடைபட்டும் பக்கவாதம் வரலாம்.

         பொதுவாக பக்கவாதத்துக்கு முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி மற்றும் சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

        இந்த அறிகுறி தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ரத்த ஓட்டம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.          
          ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதையும் சோதனை மூலம் தெரிந்து கொண்டு தக்க சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

            பாதுகாப்பு முறை:

       இந்தியாவில் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் ஆகியவை பெரும்பாலானோருக்கு உள்ளது. 
      இவர்களது வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.
      உடலில் உள்ள நோயுடன் எப்போதும் பரபரப்பாக மன அமைதியின்றி இருத்தல், சரியான நேரத்துக்கு தூங்காமல் இருத்தல், தொடர் மன அழுத்தம் ஆகியவை பக்கவாதம் வர வழியமைத்துக் கொடுக்கிறது.
       சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அமைதியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

      சரியான நேரத்துக்கு தூங்குவதும், குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுவதும் அவசியம். 
      சரிவிகித சத்துணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது. 
       ஏனெனில் கொழுப்பு கட்டிகள் ரத்த ஓட்டத்தை தடுப்பதாலும் வாதநோய் தாக்கும். 
       சீரான உடற்பயிற்சியும் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். 
      இதேபோல் வாதநோய்க்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை தடுக்க முடியும்.
       வாதத்தின் அடுத்த கட்டமாக உடல் செயலிழத்தல், நினைவிழத்தல் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.

      வழக்கமாக சாப்பிட வேண்டியவை

           புதினா சப்பாத்தி: புதினா ஒரு கட்டு சுத்தம் செய்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 
       சின்ன வெங்காயம் ஒரு கப் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை அரை கப். கோதுமை மாவை புதினா சாறு சேர்த்து சப்பாத்தி பதத்துக்கு பிசையவும்.
        இதில் உப்பு, மிளகாய்த்தூள், வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். 
       பின்னர் சப்பாத்தியாக போடவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளது.

           மிக்சட் வெஜ் புலவு: கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிபிளவர், முட்டைக் கோஸ், வெங்காயத் தாள், புதினா இலை ஆகியவை இரண்டு கப் கட் செய்து வைக்கவும். 
         இரண்டு கப் பாசுமதி அரிசியை உப்பு சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சாதம் வேகும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். 
       வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாத்தூள், மஞ்சள் தூள், புதினா இலை, கட் செய்த காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
      பாதி வெந்த பின்னர், பாசுமதி சாதம் சேர்த்து கிளறி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இதில் புரதம், நார்ச்சத்து உள்ளது.

            சிறு கீரை முட்டைப் பொறியல்: சிறு கீரையை 2 கட்டுகள் நன்றாக சுத்தம் செய்து கட் செய்து கொள்ளவும்.
         2 முட்டையை தனியாக அடித்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து சின்ன வெங்காயம் மற்றும் வறமிளகாய் சேர்த்து வதக்கவும். 
        இதில் கீரை சேர்த்து பாதி வெந்த பின் முட்டை சேர்த்து கிளறவும். முட்டை ஊற்றிய பின் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
        தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும். இதில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது.


       பாட்டி வைத்தியம்

           வாதநாராயணன் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 3 பல் பூண்டு, சுண்டைக்காய், பெருங்காயம், விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்து சாப்பிட்டால் முடக்கு வாதம் மற்றும் விரை வாதம் குணமாகும்.

          வாதநாராயணன் கீரை உலர வைத்து அத்துடன் அரிசித் தவிடு, புறா எச்சம் இரண்டையும் சேர்த்து வறுத்து துணியில் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் பக்கவாதம் குணமாகும்.

           வேளைக் கீரை, வாதநாராயணன் கீரை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் தீரும்.

                வல்லாரைக் கீரைச் சாற்றில் பூனைக்காலி விதைப் பருப்பை ஊற வைத்துக் காய வைத்துப் பொடியாக்கி, சம அளவு மிளகுத் தூள் சேர்த்து காலை, மதியம் இருவேளையும் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு மற்றும் முடக்குவாதம், கை, கால் வாதம் ஆகியவை குணமாகும்.

           லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு, இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

            ருத்திராட்சப் பொடி 100 கிராம், முத்துச்சிப்பி பஸ்பம் 100 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து தொடர்ந்து 96 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளையும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட வேண்டும். முடக்குவாதம் மற்றும் நரம்பு வாதம் குணமாகும்.

             டயட்

                சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கும், கிட்னியில் பிரச்னை உள்ளவர்களுக்கும் ரத்தக்குழாய் தடிமனாக இருக்கும்.             
        இவர்களது உடலில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் வலியை உணர்வது கடினம். பக்கவாதத்துக்கான அறிகுறிகள் இருந்தாலும் தெரியாது.
         இது போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்க வாதம் திடீரென தாக்க வாய்ப்புள்ளது.
      உணவில் அதிகளவு கெட்ட கொழுப்பை எடுத்துக் கொள்ளுதல், எப்போதும் டென்ஷனாக இருத்தல், 
       நீண்டகால ரத்த சோகை போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்கவாதம் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

              இவர்கள் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை மாதம் ஒருமுறை சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
         மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்தஅளவு பரிசோதனையும் செய்து கொள்ளவும்.
        தினமும் வாக்கிங் மற்றும் சரிவிகித சத்துணவும் அவசியம். உணவில் எண்ணெய் மற்றும் தேங்காய் சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்கவும்.                               
          வெளியிடங்களில் உணவு சாப்பிடுவது, பாஸ்ட் புட், ஜங்க் புட், சாக்லெட், ஐஸ்கிரீம் வகைகள், நெய் ஆகியவற்றையும் கண்டிப்பாக விட்டுவிடவும்.

        நார்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறிகள் கட்டாயம் உணவில் இருக்கட்டும். ராகி, கம்பு, சோளம் போன்ற முழு தானியங்களை உணவில் தினமும் ஒரு வேளை சேர்த்துக் கொள்ளவும்.
            பழங்கள், காய்கறி சாலட் மற்றும் சூப் வகைகளும் அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். 
           அசைவம் மாதம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கோழி மற்றும் மீன் எடுத்துக் கொள்ளலாம்.
       மீன் எண்ணெயில் பொரித்ததாக இல்லாமல் குழம்பாக சாப்பிடலாம். முடிந்த அளவு எண் ணெய் இல்லாமல் சமைப்பது நல்லது

1 கருத்து:

  1. மிகவும் நன்றி,
    பக்கவாதத்தை பற்றியும், அதன் தீர்வு பற்றியும் தந்தமைக்கு எப்படி நன்றி சொல்ல தெரியவில்லை.
    உங்கள் சேவையை தடையில்லாமல் தொடர என் வாழ்த்துக்கள்!....

    பதிலளிநீக்கு