02 பிப்ரவரி 2025

 நடவடிக்கை கோருதல் மனு 🙏

தமிழார்வலர்கள் அனைவருக்கும்

 வணக்கம்.

மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் உலகப்பொதுமறையான திருக்குறள் வாசகம் புதியதாக இயக்கப்படுகின்ற பேருந்துகளிலும் காட்சிப்படுத்தாமலும், பழைய பேருந்துகள் பலவற்றில் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் அலட்சியப்படுத்திஇருப்பது வேதனையாக உள்ளது. திருவள்ளுவர் பெருமகனார் பெயரைத் தாங்கி அண்டைமாநிலங்களுக்கும் அரசு விரைவுப்பேருந்துகளை இயக்கி பெருமைப்படுத்திய காலம் கடந்து தற்போது திருக்குறளை அலட்சியப்படுத்திவரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் இயக்கப்படுகின்ற எல்லா பேருந்துகளிலும் மீண்டும் திருக்குறள் வாசகங்களை காட்சிப்படுத்துவதுடன் பாதுகாப்பாக பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தமிழியக்கம்,தலைமை அலுவலகம்,விஐடி பல்கலைக்கழகம்,வேலூருக்கும்  கோரிக்கை மனு அனுப்ப உள்ளேன்.என வேதனையுடன்,

தமிழியக்கம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர்,

செ.பரமேஸ்வரன்


25 ஜனவரி 2025

தஞ்சைப்பெரிய கோவில் விசித்திரமான வரலாறு ...

    தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?

              பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

               ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்.

    கி.பி.1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. Archaeological survey of india ( ASI) .

இத்துறையின் சென்னை மாகாண கல்வெட்டியல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Dr. Euger julius theodor Hultzsch. சுருக்கமாய் E.ஹூல்ஸ்.

   கி.பி.1886 ல் அசோகரது கல்வெட்டை படியெடுத்தார். 1886 டிசம்பரில் மாமல்புரம் கல்வெட்டைப் படித்தார். 1887 டிசம்பர் மாதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகிறார். கோவிலைக் கட்டியது கரிகால்ச்சோழன், தனக்கு வந்த வியாதி தீர கைங்கரியமாய் கோவிலைக் கட்டினான். மோர் வித்த அழகி என்னும் மூதாட்டி கதை என்று செவிவழிச் செய்திகள் வழக்கத்தில் இருந்த நேரம் அது.

கோவிலுக்கு வருகிறார் ஹுல்ஸ். கோவிலின் அமைப்பும் பிரம்மாண்டமும் அவரை உறைய வைத்தது. தன்னிச்சையாக அவரிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தை.

கோவிலின் வாயில் முதல் கொண்டு எங்கெங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள். அழகான தமிழ் எழுத்துக்களில் அமைந்த கல்வெட்டுகள்.

தனக்கு இங்கு நிறையவே வேலை இருக்கிறது என்று முடிவு செய்கிறார். ( பிற்பாடு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்தகவல்களை விவரிக்கிறார். )

பொறுமையாகக் கல்வெட்டுகளை வாசிக்கத்தொடங்கிய அவர், கல்வெட்டுகளின் தொடக்கத்தை தேடினார். மிகச்சரியாக ஸ்ரீவிமானத்தின் வடபுறம் சென்றடைந்தார்..

சண்டிகேசர் கோவிலுக்கு எதிரே விமானத்தின் வடபுற அதிஷ்டானத்து பட்டிகை..

அங்குதான் அந்த வரிகள் இருந்தன.

இராஜராஜனின் மெய்கீர்த்தியுடன் தொடங்கும் அக்கல்வெட்டில்,

" பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி இராஜராஜீவரம் "

கோவிலைக் கட்டியது பேரரசன் இராஜராஜன் என்று வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவிக்கிறார்.

அப்போது .. இராஜராஜனை இவ்வாறு அழைத்தார்.

பிறகு தனது பரிவாரங்களுடன் கோவிலில் முகாமிட்டு அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து அச்சு நூலாக வெளியிடுகிறார். இவரது பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் இவரது உதவியாளர் வெங்கையா..

1887 - 1891.. நான்கு ஆண்டுகள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வேலை நடந்தது. தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி எண் 2 ல்... படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சு நூலாக வெளிவரத் தொடங்கியது..

இராஜராஜேச்சரமும், இராஜராஜனும், பெருவுடையாரும், அனைத்து மக்களின் இதயங்களை ஆக்ரமித்தார்கள்.

          மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை?

                   மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை என்று தொடர்ச்சியாக பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அவர்கள் செய்தது என்ன. வரலாறு விசித்திரமான ஒன்றுதான்.

                   தஞ்சை சமஸ்தானத்தின் அதிபதியாக இருந்த வாரிசு ஒருவர் அடுத்த வேளை உணவுக்கும் ஆடைக்கும் ஆங்கிலேயரிடம் கைகட்டி நின்ற விசித்திரம்.

                    ராஜ்ய அதிகாரம் வேண்டாம். கோவில் போதும் .. என்று கோவிலுக்கு தன்னை அர்ப்பணம் செய்த மராட்டிய அரசர்.வட்டிக்கு கடன் வாங்கி லிங்கத்தை பூஜை செய்த சரபோஜி.

                 தஞ்சையும், பெரியகோவிலும் அந்நியர்களின் தாக்குதலுக்கு பலமுறை உட்படுத்தப்பட்டாலும்...

                 கி.பி. 1758 ல் .. தஞ்சை பெரியகோவில் மீது பீரங்கி தாக்குதல் தொடங்கியது. இத்தாக்குதல் நடத்தியவன் பிரஞ்சு தளபதி லாலி..

                  கி.பி. 1771 மற்றும் 1773 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினரின் தாக்குதலும் பெரியகோவில் மேல் நடைபெற்றது. இக்காலத்திய மராட்டிய அரசர் இரண்டாம் துளஜா.

           Robert orme என்னும் ஆங்கிலேய வரலாற்று அறிஞர் தான் எழுதிய

                      " A History of the military transaction of the British nation in indostan " என்னும் நூலில் தஞ்சை கோவிலின் மீது நடந்த தாக்குதலை வரைபடத்துடன் பதிவு செய்கிறார்.

                    நவாப் முகமது அலி, ஆங்கிலேயப் படையின் உதவியுடன் 1773 இல் தஞ்சையை கைப்பற்றி தஞ்சையின் மராட்டிய அரசன் துளஜாவை சிறை வைத்தான். அதிகாரம் படைத்த அந்த தஞ்சை அரசனின் அடுத்த வேளை உணவு நிச்சயமில்லை.

                         கி.பி. 1773 - 1776 வரை மூன்று வருடம்.. தஞ்சை பெரியகோவில் ஆற்காடு நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியினரின் இரானுவவீரர்கள் தங்கும் படைவீடாக இருந்தது. கோவிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி. பூஜைகள் வழக்கொழிந்து துப்பாக்கி முழக்கம் கேட்டுக்கொண்டேயிருக்கும்..

                         இன்றும் பெரியகோவிலில் நாம் அந்தத் தோட்டாத் தடங்களைப் பார்க்கலாம். பெரியகோவிலில் உள்ள முருகன் கோவிலில் " Shelter for 36 person " என்ற எழுத்துப்பொறிப்பு.

               கருவறை அர்த்தமண்ட வாயிலில் ARP என்னும் படைக்குறியீடு.. திருச்சுற்றில் ARP WARD. என்ற அடையாளக்குறியீடுகளை இன்றும் நாம் காணலாம். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆங்கிலேய அரசு துளஜாவை விடுவித்தது..

                அதற்குப் பிறகு நடந்த அரசியல் உள்ளடி வேலைகள். 1798 ல் தஞ்சை அரசராக இரண்டாம் சரபோஜியை ஆங்கிலேயர்கள் நியமித்தனர்.

                     வெறும் அரசன் என்னும் அந்தஸ்து மட்டும் உனக்கு.. ஆட்சி அதிகாரம் அனைத்து வரிவசூல் எங்களுக்கு. சம்மதமா என ஆங்கிலேயர்கள் சரபோஜியிடம் கேட்க..சரபோஜியும் ஒரு நிபந்தனை விதித்தார். அனைத்தும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரியகோவிலை மட்டும் விட்டு விடுங்கள். அங்கு எந்த ஒரு படைப்பிரிவும் தங்கக்கூடாது. கோவிலில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறவேண்டும்.

                சரபோஜியின் நிபந்தனை ஏற்கப்பட்டு, பெரியகோவிலில் மீட்கப்பட்டது. பெரியகோவிலில் பல புனரமைப்பு பணிகளை செய்கிறார் சரபோஜி. ஆங்கிலேயப்படையினரால் சிதைவுற்ற கோவிலை நன்கு சீரமைத்து, செங்கற்களால் தரைத்தளமும் அமைத்தார்.

                 தஞ்சை அருகே வீரசிங்கம் பேட்டை என்னும் ஊரில் சிதறுண்டும் புதையுண்டும் இருந்த 108 சிவ லிங்கங்களை பத்திரமாக எடுத்து பெரியகோவிலின் திருச்சுற்று மண்டபத்தில் பிரதிட்டை செய்தார். இந்நாள் 1801 மார்ச் 18 .

                லிங்கங்களுக்கு தினசரி பூஜை செய்ய 1802 மே 29. இல் சென்னையைச் சேர்ந்த ஹாரிங்டன் என்பவரிடம் 5000 புலி வராகன் கடன் வாங்கி இக்காரியத்தை செய்கிறார்.

                இச்செய்திகள் அனைத்தும் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணத்தில் உள்ளது. ( ஆவண மொழிபெயர்ப்பு Vol 1 no 14 /7 )..

                    இவ்வாறு தஞ்சை பெரியகோவிலை சீர்படுத்திய, சரசுவதி மகால் நூலகத்தை அமைத்துத் தந்த இரண்டாம் சரபோஜி 1832 மார்ச் 7 ஆம் தேதியில் இறைவனடி சேர்ந்தார்.

              இவருக்குப்பிறகு இவரது மகன் இரண்டாம் சிவாஜி தஞ்சை மன்னராக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார். இவரது ஆட்சி 1832 - 1855 வரை நடந்தது. இதன் பிறகு தஞ்சை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் முழுவதுமாக ஆட்பட்டது.

                 இந்த சிவாஜி மன்னர் காலத்தில் 1843 ம் ஆண்டு செப்டம்பர் 7 ம் நாள் தஞ்சை பிரகதிசுவர சுவாமிக்கு சிகரப் பிரதி ஷசை செய்து அஷ்டபந்தனம் முதலான சீரணோத்ரம் கும்பாபிசேகம் செய்தார். இச்செய்தி விமான கலசத்திலும், தஞ்சை சரசுவதி நூலக ஓலைச்சுவடியிலும் ஆவணமாக உள்ளது. 1729 ஆம் ஆண்டும் ஒரு கும்பாபிசேகம் நடந்த தகவலும் உள்ளது.

                தஞ்சை பெரியகோவிலை அரும்பாடுபட்டு மீட்டு, இன்றைய நிலைக்கு இருக்க காரணமான சரபோஜி வாரிசை வந்தேறி என்று வசைபாடுவது தவறு. 1729 மேற்றும் 1843 ஆண்டுகளில் நடைபெற்ற வைதீக கும்பாபிசேகத்தை, 300 ஆண்டு வழக்கத்தை, ஆண்டாண்டு கால வழக்கம் எனக்கூறுவதும் தவறு.

                   சரபோஜிகளின் பிரகதிசுவரர் என்னும் பெயர் பலகை பெரியகோவில் என்றும் பெருவுடையார் கோவில் என்றும் மாறியதைப் போல்.வழக்கம் என்பது 300 ஆண்டுகள் அல்ல.கோவில் வழக்கம் 1000 ஆண்டுகளுக்கும் மேல்..

                      நன்றி.Malaichamy chinna

திரைப்படப்பாடல்களில் இசைத்தமிழ்

   அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... 

 இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - திருவிளையாடல்

இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது இறைவன் அருளாகும்.

இசையால் வசமாக இதயமேது?

எனப் பாடும் தமிழ் திரைப்பாடல்களில் தமிழ் இசையின் அருமை பெருமைகள் வியந்து பாடப்படுகிறது.

எவனொருவன் நல்ல ரசிகனோ அவன் நல்ல கலைஞனாகிறான். எவனொருவன் நல்ல கலைஞனோ அவன் அறிஞனாகிறான். ஆக இசையைக் கேட்கவும், ரசிக்கவும் நம் மனதிற்கு நல்ல ஒரு ரசனை உணர்வு வேண்டும். அந்த ரசனை உணர்வு இல்லாதவர்கள் இங்கே உயிர் இருந்தும் சடங்களாகவும், உடல் இருந்தும் சவங்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இக்காலச் சூழலில் மனிதர்களுக்கு பற்பல நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதுக் கண்டுபிடிப்புகளும் ஒரு புதிய நோய் உருவாக்கி வருகிறது என்பதே உண்மை. ஆக இன்றைய மனிதர்களின் வாழ்க்கை இயந்திரத்தனமான வாழ்வாக பலருக்கும் மாறிவருவது காலம் செய்த கோலமாகும்.

இப்படிப்பட்ட இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் இம்மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள் ஆங்கில மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம் குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால் பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.

இசையால் இறை நிலை அடையாளம் என்கின்றனர் சில இசை வல்லுனர்கள். அவ்வளவு ஏன், உலகத்தில் உள்ள எல்லா மதங்களின் வழிபாட்டின் போதும் எதோ ஒரு இசைக்கருவியை வாசித்தும், பாடல்கள் பாடியும் இறைவனை வழிபட்டு வருகின்றனர். இச்சூழலில் கர்நாடக சங்கீத இசையில் சில குறிப்பிட்ட ராகங்களைக் கேட்டால் நோய்கள் குணமாகும் என தமிழகத்தில் நடந்த சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலி நாட்டில் உள்ள பாவியா என்ற நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவுப் பேராசிரியர் லூசியானா பெர்னார்டி தலைமையில் இந்த இசை தொடர்பான ஆய்வுகள் நடை பெற்றன. இசை மூலம் நோய்களைக் குணமாக்க முடியும் என இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். கிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம். அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.

நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர். துடும்பு, பறை, மத்தளம், டிரம்ஸ் போன்ற தொல்கருவிகள் ஒலிகளைக் கேட்கும்போது நம் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தி நமது தசை நார்களை தளரச் செய்கின்றன. நமது கிராமங்களில் இன்றும் கூட தீ மிதித்தல், அலகு குத்துதல், சாமி இறக்குதல், சீர்வரிசை கொண்டு வருதல், பால் குடம் கொண்டு வருதல், தேர் இழுத்தல் போன்ற சுப காரியங்கள் நிகழும் போது தவில், பறை, உருமி, பம்பை, உடுக்கை போன்ற தொல்கருவிகள் வாசிக்கப்படுவதால் இதைக் கேட்பவர்களுக்கு ஒரு வித மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளத்திற்கும், உடலுக்கும் ஒரு புதிய வேகம், உற்சாகம், உண்டாவதை நாம் யாராலும் மறுக்க முடியாது. இவ்விசையைக் உற்சாகத்தில் நடனம் ஆடுவதையும், சாமி வந்து ஆடுவதையும் பார்க்கலாம்.

இந்திய மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மைல் கல் இசைமருத்துவம் ஆகும். அதாவது கர்ப்பிணிகளுக்கு இனிய இசை வாயிலாக சுகப்பிரசவம் நிகழுகின்ற அதிசயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் காலை, மாலை வேளையில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நல்ல ராகமுள்ள பாடலைப் பாடி வந்தால் அல்லது இனிய இசையைக் கேட்டு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் ஏற்படுகிறதாம். இந்த முறை இந்தியாவில் தமிழகத்தில் தான் முதலாவதாக அமலுக்கு வந்திருக்கிறது என்பது தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன் என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்
பாடல் : சலங்கயிட்டால் ஒரு மாது
படம் : மைதிலி என்னைக் காதலி

பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
படம் : முள்ளும் மலரும்

அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்
பாடல் : கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்
படம் : தென்றலே என்னைத் தொடு

பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே – சக்கரவாகம்
படம் : கேளடி கண்மணி

பாடல் : பூப்பூக்கும் மாசம் தை மாசம் – மலையமாருதம்
படம் : வருசம் 16

பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம – சக்கரவாகம்
படம் : கர்ணன்

பாடல் : ஓராறு முகமும் ஈராறு கரமும்
படம் : டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
படம் : தியாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு.
படம் : அக்னி நட்சத்திரம்

கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி
பாடல்: கண்ணுக்கு மை அழகு
படம் : புதிய முகம்

பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்
படம் : புதிய பறவை

பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்
படம் : எங்கிருந்தோ வந்தாள்.

*பாடல்: பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படம் : வருசம் பதினாறு.

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி

பாடல்: நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி
படம் : கோபுர வாசலிலே

பாடல்: வசந்த காலங்கள் இசைந்து – ஸ்ரீ ரஞ்சனி
படம் : ரயில் பயணங்களில்

பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி
படம் : டூயட்

பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் – ஆனந்த பைரவி
படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

பாடல்: வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி – நீலாம்பரி
படம் : சிப்பிக்குள் முத்து.
பாடல்: பூவே இளைய பூவே – நீலாம்பரி
படம் : கோழி கூவுது
பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை – கமாஸ்
படம் : சபாஷ் மீனா

மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்
பாடல் : காலம் மாறலாம் நம் காதல் – அம்சத்வனி
படம் : வாழ்க்கை
பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் – பீம்பிளாஸ்
படம் : நல்லதொரு குடும்பம்
பாடல்: தொகை இளமயில் ஆடி வருகுது – அம்சத்வனி
படம் : பயணங்கள் முடிவதில்லை

பாடல்: வா…வா…வா… கண்ணா வா – அம்சத்வனி
படம் : வேலைக்காரன்
பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – பீம்பிளாஸ்
படம் : திருவிளையாடல்
பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்
படம் : சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்
பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா

படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்
பாடல்: வாராய் நீ வாராய்
படம் : மந்திரி குமாரி
இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி
பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான
பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம் – அடான
படம் : சரஸ்வதி சபதம்
பாடல்: வருகிறார் உனைத் தேடி – அடான
படம் : அம்பிகாபதி
மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

பாடல் : தானா வந்த சந்தனமே – கரகரப்பிரியா
படம் : ஊருவிட்டு ஊரு வந்து
பாடல் : கம்பன் எங்கே போனான் – கரகரப்பிரியா
படம் : ஜாதிமல்லி
பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு –ஆனந்த பைரவி
படம் : டூயட்
பாடல்: சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா – கரகரப்பிரியா

படம் : அழகன்
*பாடல்: மாதவிப் பொன் மயிலாள் – கரகரப்பிரியா
படம் : இருமலர்கள்
சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா
*பாடல்: கனவு கண்டேன் நான் – முகாரி
படம் : பூம்புகார்
*பாடல்: சொல்லடி அபிராமி
படம் : ஆதிபராசக்தி
பாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு
படம் : நான் வாழவைப்பேன்
பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம்
வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர – நாஜீவதாரா
எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?
திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு வரையறை கூறுகிறார்.

நேரம் ,ராகம் ;
5-6 மணி (காலை நேரம்) பூபாளம்
6-7 மணிக்கு பிலஹரி
7-8 மணிக்கு தன்யாசி
8-10 மணிக்கு ஆரபி, சாவேரி
10-11 மணிக்கு மத்யமாவதி
11-12 மணிக்கு மனிரங்கு
12-1 மணி (மதிய நேரம்) ஸ்ரீராகம்
1-2 மணிக்கு மாண்டு
2-3 மணிக்கு பைரவி, கரகரப்பிரியா
3-4 மணிக்கு கல்யாணி, யமுனா கல்யாணி
4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம் ,

இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள ராகங்களின் அடிப்படையிலான பாடல்களையும், இசைகளையும் கேட்டு நோயாளிகள் தங்கள் நோய்களைக் குணப்படுத்த வேண்டும். பாட்டைக் கேட்டல் நோய் தீரும் என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த ராகங்களில் உள்ளது. இனியாவது இருக்கமானவர்கள் இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும் ரசிப்பார்கள், கேட்பார்கள், அமைதி பெறுவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. நன்றி .தமிழ் நியூஸ் கூகுள்

இசை

 



   இசை என்ற தமிழ்ச்சொல் ஆழ்ந்த, அகன்ற பொருளுடையதாகும். (இயன்றவரையில் சுருங்கச் சொல்லியிருக்கிறேன்) .

இயை - என்ற வேர்ச்சொல்லி்லிருந்து பிறந்த இசை என்ற சொல் ஒரு காரணப் பெயர்ச்சொல்லாகும்.

  • இயை > இசை.
  • இயை > இயைதல் = பொருந்துதல், இணங்குதல், நிரம்புதல், ஒத்தல்.
  • இயை - என்பது பொருந்துதல், சொல், பொருள், பா,பண் எனப் பலப் பொருள்கள் கொண்டது.
  • பாவோடு பொருந்தி நிற்றலால் 'இசை' என்று பெயர் பெற்றது.

இசை என்ற சொல் இசைவு, ஊதியம், சொல்லுதல், அறிவித்தல், பாடுதல், ஓசை, சொல், புகழ், இசைப்பாட்டு, நரம்பில் பிறக்கும் ஓசை, சீர் என்ற பொருள்களிலும் வரும்.

பாடற்பொருளோடும், சொல்லோடும், தொடரோடும் இசைந்து, உணர்ச்சிகளுக்கு வலிவும் பொலிவும் தருவதால் இசை என்று பெயரிட்டனர்.பாடலில் வரும் யாப்பமைதியோடு இன்னோசை தரும் இசைச்சுரங்கள் இயையும்பொழுது, மக்களையும், வனத்தில் வாழ் உயிரினங்களையும் இசை மகிழ வைக்கிறது - உள்ளங்களை ஈர்க்கிறது - இறை அருளோடு மக்களை இசையவைக்கிறது.

முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழை, இசையின் இலக்கணம் எனக் கருதுவர்.இசை இலக்கணம் என்ற பொருள் தரும் சொல்லாக இசைத்தமிழ் கையாளப்படுகிறது. நரம்பிசை இலக்கணம்,பண் இலக்கணம், தாள இலக்கணம், இசைப்பா இலக்கணம், இசைக்கருவிகள் இலக்கணம், ஆடலிசை இலக்கணம் போன்றன இசைத்தமிழில் அடங்கும்.

இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர்.

ஏழு சுவரங்கள்:

ச- சட்டுசமம் -சட்டெனத் தொடங்கும் மயில் குரலை ஒத்த அடிப்படை இசையொலி.

ரி- (இ)ரிடபம்- எருதின் அடித்தொண்டை ஒலி ஒத்த இசையொலி.

க- காந்தாரம்- காந்தார நாட்டின் ஆடுகளது கட்டைக்குரல் போன்ற கம்பீர இசையொலி.

ம- மத்திமம்- மந்தமாக ஒலிக்கும் நாரையின் குரல் போன்ற இசையொலி.

ப- பஞ்சமம் - பஞ்சு போன்ற உறுதியில் மேயானால் மென்மையாக ஒலிக்கும் குயிலின் இசையொலி.

த- தைவதம்- தை தை என குதித்தோடும் வலிமையான குதிரைகளின் கனைப்பொலி போன்ற இசையொலி.

நி- நிடாதம் - நிதானமாக நடந்தவாறே யானையின் பிளிரலின் இசையொலி.

               இசை என்பது உலகின் எல்லா மதங்களின், மொழிகளின் ஆதி ஒலி வடிவம். இசை என்பதே தன்னில் தானாகவே ஒரு மொழி. எனவே இசையைப் பறிமாற இன்னொரு மொழி தேவையில்லை. ஆம். இசைக்கு மொழி இல்லை. (மொழி ஒரு தடை இல்லை).

மெட்டுடன் கூடிய பாடல்கள் என்பன உண்மையில் இசையின் மொழியை பேச்சு மொழியில் சொற்களின் வடிவில் பிரதிபலிக்கச் செய்யும் மொழிபெயர்ப்பு முயற்சிகளே.

மொழி பிறந்தது பிற்பாடு. அருவியின் ஓசை, மின்னல்-இடியின் முழக்கம், மழைச் சாரலின் சல்லாப அரட்டைக் கச்சேரி, தீக்கங்குகளின் வெடிப்புச் சிதறல் தில்லானா, கடல்-நதிகளின் அலையோசை ஆலாபனை, மூங்கிலுடன் காற்று உறவாடும் உல்லாசப் பிரபந்தம் என இசை எங்கும் நிறைந்து பரவி இருந்தது. இருக்கிறது. பின்பும் இருக்கும்.

ஏற்றம் இறைக்கும் முறுகல் இசை, நாட்டுச் செக்கிழுக்கும் தைலக் கசிவான நெஞ்சைப் பிழியும் துன்பியல் சுரங்கள் என எங்கும் இசை. எல்லாம் இசை. இசைக்கு இத்தனை பெருமைகள் இருப்பதால்தான் புகழ் என்றச் சொல்லுக்கே 'இசை' என்று இன்னொரு பெயரும் உண்டு.

ஆதிமனிதன் பகலில் அதிகம் ஒளி கண்டான். இரவில் இருளோ, நிலவின் வெண்ணெய் தடவிய ஒளியோ, மின்மினிப் பூச்சிகளும் நட்சத்திரங்களும் கசியும் கொஞ்சமேயான சமிக்ஞை ஒளி கசிந்து வரக்கண்டான். அந்த ஒளித் தெளிப்புகள் இருட்டின் மறுவடிவங்களாகவே தோன்றின.

ஆனால், இரவும் பகலும் பறவைகளின் கூவலாய், கேவலாய் காலடிச் சருகுகள் நொறுங்கும் கவன ஈர்ப்புத் தாளங்களாய் எப்போதும் அவன் உடனேயே பிரியாமல் இருந்தது இசை. பிரியாமல் இருந்த அதன் மேல் பிரியம் கொண்டான்.

வயிற்றுப்பாட்டுத் தேவை தேனுக்கு. தேவை தேடல் ஆயிற்று.தேடல் பாடல் ஆயிற்று.

தேடும் கானம் தேவகானம் ஆயிற்று. அதுவே வேதகானமும் ஆயிற்று.

இரை தந்த இயற்கையே இசைவாக இருந்து இசையும் தந்தது. இசை தந்த இயற்கையே இறையும் ஆயிற்று. கூப்பிட்டு உணவு தந்த இயற்கையே கும்பிட்டுக் கூவுகின்ற இசையும் ஆயிற்று.

கையறு நிலையிலும், வயிற்றுக்கு உணவில்லாத போதும் காத்திருந்த அவனது காதுகளில் இந்த இசையே பால் வார்த்தது. தேன் பாய்ச்சியது. காத்திருப்பவனைக் காத்த அந்தக் கண்ணுக்குத் தெரியாத இசைப் பொருளையே இறைவன் என்று ஏற்றிவைத்தான் மனிதன்.

மரக்கிளையில் உச்சியில் காணும் மாங்கனிக் கொத்தாய், மரக்கிளையின் அடியில் கட்டிய கூட்டை மொய்க்கும் தேனீக்களின் பாட்டாளி மந்திரங்கள் என்று வர்க்க பேதம் இல்லாத அரசியே சங்கீத தேவதை.

வீணையை ஒரு வல்லுநர் மீட்டும்போது அவர் மீட்டுவது வீணையை மட்டும் அல்ல. தன்னையும், கேட்கும் நம்மையுமே. அவர் மீட்டுவதில்லை. மீட்கிறார். நம்முள் புதைந்திருக்கும் இசைக் கூறுகளை தம் விரல் நுனிகளால் கொய்து மீட்டு, மீண்டும் நமக்கே தருகிறார்.

தாலாட்டில் தொடங்கி, குலவையாகத் தொடர்ந்து ஒப்பாரியில் முடியக்கூடிய நம் வாழ்வின் குறுகியப் பொழுதுகளை இசையால் நிரப்புகிறார். இருப்பை நீட்டிக்கிறார். விளைவு? இசை கேட்கும் ஒவ்வொரு தருணமும் நாம் குழந்தைகளாய் மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறக்கிறோம்.

கூர்ந்து கவனித்தால் நமது சுவாசக் காற்றுதான் இசை. வடமொழியில் உயிர்மூச்சுக்கு 'ஸ்வரம்' என்றும் பெயர். நமது இதயத் துடிப்பே லயம் என்னும் தாளகதி.

இன்னும் ஆழ்ந்து நோக்கின் கரும்பின் கணுக்கள் போல, வீணையின் பிரடைகள் போல 'மேரு' என்று சூக்குமமாகச் சொல்லப்படும் நமது முதுகெலும்பும் நீட்டி வைத்த வீணைதான்.

நாம் பார்க்கும் இசையும், கேட்கும் இசையும், முணுமுணுக்கும் இசை நிரல்களும் நமது மூச்சுக் காற்றால் இங்கேதான் மீட்கப்பட்டு ரீங்கரிக்கப்படுகிறது.

வீணையில் சுரம் மீட்டும் 22 பிரடைகள் (ஸ்வரஸ்தானங்கள்) இருப்பது போலவே நம் முதுகெலும்பிலும் 22 கணுக்கள் (பழுக்கள்) இயற்கையஇயற்கையாம் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன. மனிதனை விட சிறந்த இசைக்கருவி உலகில் வேறொன்று கிடையாது.

மனிதன் இசை என்னும் அந்தக் கிடங்கு உள்ளே வைக்கப்பட்டுத்தான் பிறக்கிறான். மனம் என்னும் பேழைக்குள் லட்சம் கோடி ராகங்கள் ஒவ்வொரு நொடியும் துள்ளித் ததும்பிக் கொண்டிருக்கின்றன. ஆம். ராகம் என்றால் 'ஆசை' என்றும் பொருள் உண்டே. அந்த ராகங்கள் அரங்கேறும் கச்சேரி மேடைகளே காதலும், பாசமும், கடமையும், கடவுளும், பக்தியும்.

இசை இன்றி யாரும் இல்லை இங்கே! ஒவ்வொரு மனிதனும் ஒரு ராகமாலிகைதான். இசையாகவே வாழ்கிறான் மனிதன்.

இசை என்பது ஒரு நீண்ட பயணம். முடிவில்லாதது இசை.

                              தமிழர் சமயம்

 பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்

சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி

மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. . . . . . . - 
(திருமந்திரம் 86)

விளக்கம்: பிறப்பற்ற நாதனை பெருமையுடைய நந்தியும் அவனைப் போல சிறப்புடைய வானவரும் சென்று கை கூப்பி மறக்காமல் தனது நெஞ்சில் திருமந்திர மாலையை பொருளுணர்ந்து கூடிநின்று ஓதுவார்கள்.

பண்அமை யாழ்குழல் கீதம்என்று இன்னவை

நண்ணி நயப்ப செவிஅல்ல - திண்ணிதின்

வெட்டெனச் சொல்நீக்கி விண்இன்பம் வீட்டொடு

கட்டுரை கேட்ப செவி. - (அறநெறிச்சாராம் - 196)

விளக்கவுரை: இசையுடன் பொருந்திய யாழும் குழலும் இசைப் பாட்டும் என்னும் இவற்றை அவை நிகழும் இடங்களுக்குப் போய் அவற்றை விரும்பிக் கேட்பவை செவிகள் ஆகா. உறுதியுடன் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைக் கேளாது நீக்கித் துறக்க இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும் உறுதிமொழிகளைக் கேட்பதே செவிகளாகும்.

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்

தலையாயார் தம்கருமம் செய்வார் - தொலைவில்லாச்

சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்

பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)

வாழ்க்கை நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் கடமையை உடனுக்குடன் செய்வர். இடையறாத இசையை சோதிடத்தை பார்த்துப் பிதற்றிக் கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை.

பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்

நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்

சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,

தீர்ந்தாற்போல் தீரா வரும். (ஏலாதி 25)

பொருள்பாடல் பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள்தோன்றும் நாடகங் காணாமை. அவ்வாறு கண்டால், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்....கலாச்சார பாதுகாப்பு

 "தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணர்ந்திடாத இயல்பினளாம் எங்கள் தமிழ்த்தாய்!"-  மகாகவி பாரதி ....


                                             வீரமாமுனிவர்....

                                   தமிழில் ஒற்றுவைத்து எழுதும் பழக்கத்தைக் கொண்டுவந்தவர் ''வீரமாமுனிவர்'' என்று தமிழில் அழைக்கப்பட்ட இத்தாலியப் பாதிரியாரான கான்ஸ்டன்டீன் ஜோசஃப் பெஸ்ச்கி(Constantine Joseph Beschi (8 November 1680 – 4 February 1742) ஆவார்.

          மதநூல்களுக்கப்பால், தமிழில் அகராதிகள், உரைநடை விளக்கங்கள் பற்றியும் பிரவாளமாகவே எழுதியிருக்கிறார். அவர் செய்த எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றைய தமிழை இலகுவாக வாசிக்கக்கூடியதாக மாற்றியிருக்கிறது.

அவையாவன:

1) தரிப்புக்குறியீடுகளும் முற்றுப்புள்ளிகளும்

2) மெய்யெழுத்துக்களுக்கு மேல் குற்றிடல் (க், ங்,ச்……..)

3) குறில்-நெடில் குறியீட்டு மாற்றம்: தமிழில் தொல்காப்பியர் தந்த வழக்கப்படி உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தோம். அவற்றின் நெடில் ஓசைக்குப் புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை வீரமாமுனிவர் மாற்றி "ஆ, ஏ" எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே,பே) வழக்கத்தை உண்டாக்கினார்.

4) உயிர் - எகர ஒகர மாற்றம்: எ, ஒ என்னும் குற்றெழுத்துகளில் மேலே உள்ள புள்ளியை நீக்க வேண்டும்; ஏகாரத்துக்குக் கீழே காலிட வேண்டும்; ஓகாரத்துக்குச் சுழி தந்து எழுத வேண்டும் என்பவை அவர் செய்த மாற்றங்கள்

5) உயிர்மெய் - எகர ஒகர மாற்றம்: உயிர்மெய்க் குறில் எகர ஒகரங்களுக்குப் புள்ளி உண்டு என்பது பழைய இலக்கணவிதி. ஆனால், இவ்விதியை மாற்றி உயிர்மெய்க்குறில் எகர ஒகரங்களுக்கு ஒற்றைக் கொம்பையும் உயிர்மெய் நெடில் ஏகார ஓகாரங்களுக்கு இரட்டைக் கொம்பையும் அமைத்தார்.

6) ரகர வரிவடிவ மாற்றம்: ரகரத்திற்குக் கால் இட்டு மற்ற நெடில் குறியாகிய ‘ா’ துணைக்காலிலிருந்து வேறுபடுத்தினார்.


இணையத்திலிருந்து  ....

                நான் தமிழில் எழுதுகிறவன். கதை, கவிதை, கட்டுரை என்று எதையும் விட்டுவைப்பதில்லை. இவற்றுக்கான பல குழுக்களிலும் தளங்களிலும் உள்ளேன். இங்கெல்லாம் நான் பிற எழுத்தாளர்களின் எழுத்துகளை மேம்படுத்தவும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்தும் வருகிறேன்.

இந்த துய்ப்பின் (அனுபவம்) அடிப்படையில் தமிழில் எழுதுபவர்கள் செய்யும் பிழைகள் பின்வரும் வகைகளில் அமைகின்றன:

  1. ஒற்றுப்பிழை
  2. எழுத்துப்பிழை
  3. சொற்பிழை
  4. தொடரமைப்புப் பிழை
  5. மரபுப் பிழை
  6. நடை தெளிவின்மை

1. ஒற்றுப்பிழை: இது பெரும்பான்மையும் வல்லினம் மிகல் என்ற இலக்கணப் புரிதல் இன்மையால் வருகிறது. சிறுபான்மை பிற புணர்ச்சிவிதிகளைப் பற்றிய புரிதல் இன்மையால் உண்டாகின்றது. சொற்களுக்கிடையே வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமையும், மிகாத இடத்தில் மிகுத்து எழுதுதலும் ஒற்றுப்பிழையாகும்.

2. எழுத்துப்பிழை: நெருக்கமான ஒலி உடைய எழுத்துகளைக் குழப்பிக்கொள்ளுதல். ணகர நகர னகர வேறுபாடு, லகர ழகர ளகர வேறுபாடு ரகர றகர வேறுபாடு ஆகியவற்றை அறியாமையால் இப்பிழைகள் பெரும்பான்மையும் எழுகின்றன. ’ற்’ என்ற வல்லின தனிமெய்யை அடுத்து பிற வல்லின தனிமெய்கள் வாரா (எந்த வல்லினமெய்யும் தனித்து இரட்டித்து வாரா!) ஆனால் பலரும் ‘அதற்க்கு’ என்று றகர மெய்யை அடுத்து ‘க்’ போட்டு எழுதுகின்றனர்! இடையினமான ரகர தனி மெய்யை அடுத்து பெரும்பான்மையும் வேறொரு தனி மெய் வரும் (சொல்லின் முதலெழுத்து நெடிலாக இருக்கும், தனிக்குறிலைத் தொடர்ந்து ரகரமும் ழகரமும் அமையாது, தமிழ்ச் சொற்களில்!) இது போன்ற இலக்கண அமைப்புகளைத் தெரிந்திராமையாலும் பிழைகள் உண்டாகின்றன.

3. சொற்பிழை: சொற்களை அவற்றின் சரியான பொருளறிந்து கையாள வேண்டும். தமிழின் பல சொற்கள் ஒருபொருட்பன்மொழியாகவும் பலபொருளொருமொழியாகவும் அமைந்திருக்கின்றன. அதாவது, ஒரே பொருள் உடைய பல சொற்கள் என்றும், பல பொருள் உள்ள ஒரே சொல் என்றும் பல இருக்கின்றன. ஆனால், இவற்றின் வெவ்வேறு பொருளுக்கிடையே நுண்ணிய வேறுபாடுகளும் இருக்கும். ஒரு சூழலுக்குப் பொருந்தும் ஒரு சொல் வேறொரு சூழலுக்குப் பொருந்தாமல் போகலாம். சொற் பொருளின் ஆழ அகலங்களையும் வீச்சையும் உணர்ந்து கையாண்டால் எழுத்து மிளிர்வுறும்!

மேலும், சிலர் தவறான முறைகளில் சொற்களை படைத்துக் கையாள்கின்றனர். ‘ஒருவன்’ என்ற ஆண்பால் சொல்லுக்கான பெண்பால் நிகரன் ‘ஒருத்தி’ என்பதே, பலரும் ‘ஒருவள்’ என்று பிழையாகக் கையாள்கின்றனர். ’சொன்னால்’ என்பதற்கும் ‘சொன்னாள்’ என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் ‘என்று அவள் சொன்னால்’ என்று எழுதும் பலரை நான் பார்த்துவிட்டேன்!

அதே போல சில வினைகளின் தன்வினை பிறவினை வடிவங்களைக் குழப்பிக்கொள்கின்றனர். ‘செய்தான்’ / ‘செய்வித்தான்’ போன்ற அமைப்பின் தன்மையை உணர வேண்டும்.

4. தொடரமைப்புப் பிழை: (தொடரமைப்பு - வாக்கியம்) இதுவும் ஒற்றுப் பிழைகளைப் போல பெரும்பான்மையாகக் காணப்படும் ஒன்று.

தொடரில் இருக்கும் எழுவாய்க்கு ஏற்ப வினைமுடிபு அமைய வேண்டும். திணை - பால் & எண் ஆகியவை பொருந்தி வர வேண்டும். பொதுவாக பன்மை எழுவாய்க்கு ஒருமை வினைமுடிபு கொடுத்து எழுதும் பிழையே அதிகம் காணப்படுகிறது (அதிலு அஃறிணையில்!). ’மாடுகள் சென்றன’ என்று எழுதுவதற்குப் பதில் ‘மாடுகள் சென்றது’ என்று எழுதுகின்றனர்.

தான், உம் போன்ற இடைச்சொற்களைக் கையாள்வதில் பலருக்கும் குழப்பம் இருப்பது தெரிகிறது!

தான் என்பது தனிச்சொல்லாக வருகையில் படர்க்கை தன்மையைக் குறிக்கும்: ‘அவன் தான் செய்ததாக ஒப்புக்கொண்டான்’

அதுவே இடைச்சொல்லாக வருகையில் (முந்தைய சொல்லோடு இணைந்து வர வேண்டும்) அழுத்தம் கொடுக்கப் பயன்படும்: ‘அவன்தான் செய்தான் என்று அனைவரும் சொன்னார்கள்’

‘உம்’ என்பதைப் பற்றித் தனிக்கட்டுரை எழுத வேண்டும்!

5. மரபுப் பிழை: இதை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று தமிழ் இலக்கணங்கள் சில மரபுகளை வைத்திருக்கின்றன. எழுதும் பொருளின் தன்மைக்கேற்ப அவற்றை அவ்வப்போது மீறலாம். குறிப்பாக கவிதைகளில் நிறையவே மீறலாம். ஆனால், மீறுவதற்கும் மரபைச் சரியாக உணர்ந்திருத்தல் தேவையல்லவா?

மயில் அகவும், யானை பிளிறும்… என்று ஒவ்வொரு விலங்கின் ஒலிக்கும் ஒரு பெயரை வைத்திருக்கிறோம், இதை மாற்றினால் குழப்பமே மிஞ்சும்!

கதை எழுதுபவருக்கு எந்தக் கதைமாந்தரை ‘அவன், இவன்…’ என்பது, யாரை ‘அவர், இவர்…’ என்பது என்பதில் குழப்பம் இருப்பதை நான் காண்கிறேன்!

வாசகர் யாரை மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அக்கதைமாந்தரையும், வயதில் மூத்தோர், சமூக நிலையில் பெரியோர், சான்றோர் போன்றோரை ‘அவர், இவர்’ என்றும், வயதில் இளையோர் போன்றோரை ‘அவன், இவன்’ என்றும் எழுதுதல் பொருத்தமாக இருக்கும்.

சில கதைகளில் நாயகன் / நாயகியின் தந்தை / தாயைச் சுட்டுகையில் அவன் / அவள் என்று எழுதுவிடுகின்றனர். இது பொருந்தாது அல்லவா?

6. நடை தெளிவின்மை:

‘நடை’ (style) என்பதும் ‘பாணி’ என்பதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இயல்பானதாக உருவாக வேண்டும். எது சிறந்த நடை என்ற ஆய்வுக்குள் நாம் புக வேண்டா.

ஆனால், எந்த நடை / பாணியாக இருந்தாலும் படிப்பவருக்கு எழுத்தாளர் சொல்ல வரும் கருத்து தெளிவாகப் போய்ச் சேர வேண்டும். (சில வேளைகளில் கதை சொல்லலின் ஒரு உத்தியாகத் தெளிவின்மை கையாளப்படலாம், அது வேறு!)

எழுத்தாளர் ஒன்றை நினைத்து எழுத, படிப்பவர் வேறு வகையாகப் புரிந்துகொள்ளும் சாத்தியங்கள் பலவாக இருந்தால் எழுத்து வாசகரைச் சரியாகச் சென்று சேராது!

நாம் எழுதியவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.

நாம் ஒரு மனநிலையில் இருந்து எழுதுவோம், படிப்பவரும் அதே மனநிலையில் இருந்துதான் படிப்பார் என்று எந்த உறுதியும் இல்லையே!

அதே போல, நாம் ஒரு துறையில் / விடயத்தில் நல்ல தேர்ச்சி பெற்று அதைப் பற்றி எழுதுகிறோம், படிப்பவருக்கு அதே அளவு தேர்ச்சி இருக்காது, எனில் அவருக்கு நாம் எழுதுவது சரியாகப் புரியுமா என்று நாம் அலச வேண்டும்.

இதற்குப் பிறரின் உதவியை நாம் நாடலாம்.

நாம் எழுதியதை நாமே சில நாள்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்கலாம்.

பொதுவாகவே நாம் எழுதுவதை மீண்டும் மீண்டும் நாமே படித்தும், பிறரிடம் கொடுத்தும் குறைந்தது மூன்று முறையாவது மெய்ப்புப் பார்த்துப் பிழை திருத்தி மெருகேற்ற வேண்டும்!

நன்றி; விசயநரசிம்மன் கார்த்திகேயன் அவர்களுக்கு...


       முதலில் ஒலிப்பு பழக வேண்டும்.எழுத்து பழக வேண்டும். இயல்புச் சொற்கள், வாழ்க்கைச் சொற்களைப் பழக வேண்டும்.

*ஒருமை பன்மை பிழைகள் நிறைய நடக்கின்றன. பன்மை மயக்கம் வரக் கூடாது. "அவை நடந்தன" என்பதே சரி; "அவை நடந்தது" என்று சொல்லக்கூடாது.

*போலவே ஒரு/ஓர் பயன்பாடும். அஃறிணைச் சொற்களில் உயிரெழுத்து முதலாய் வரும் போது, ஓர்/ஈர் என்றே பயன்படுத்தல் நலம். உயிரெழுத்து அல்லாத பிற உயிர்மெய் முதலாய் வரும் சொற்களில், ஒரு/ஓர் என்று இரண்டு பயன்பாடும் சரியே.
சான்று: ஓர் அருவி, ஒரு சொல்; ஓர் சொல் என்று சொன்னாலும் பிழையில்லை; ஆனால் ஒரு அருவி பிழையே; ஓர் அருவி என்பதே சரி.

*காலப் பிழைகளும் கூடாது. நேற்று வந்தாள் என்பதே சரி, நேற்று வருவாள் அல்ல. நாளை வருகிறாள் என்று எழுதாது, நாளை வருவாள் என்பதே சரியான காலம் காட்டும் முறை. காலம், மொழி அடிப்படை!

*சந்திப்பிழை பெரிய குற்றம் கிடையாது. நிறுத்தற் குறிகள்/தரிப்புக் குறிகள் இல்லாத காலத்தில் சந்தி பயன்படுத்தப்பட்டது. இன்று, காற்புள்ளிகளை (comma) சேர்த்து எழுதிக் கொண்டால் குற்றமில்லை.

*வாழ்த்துக்கள்/ வாழ்த்துகள், கோயில்/ கோவில், மாயிலை/ மாவிலை – இவையெல்லாம் தமிழில் இரட்டைப் பயன்பாடுகள்; இரண்டும் சரியே. ஒன்று மட்டும் சரியில்லை என்று மிகைத்திருத்தம் (Over Correction) செய்வதும் பிழையே! பொழுதுபோக்குக்காக, அறியாமலே மிகைத் திருத்தம் செய்து, மொழிநெகிழ்வை நம் காலத்தில் நாம் அழித்துவிடக் கூடாது.

*அறிவியல் காலத்தில் பெருகி விட்ட தொழில்நுட்பத்தால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுதல் என்பதும் இன்று பலரும் செய்யும் பிழை. ‘சூப்பர்’ என்று எழுதாமல், ‘Super’ என்று அதை ஆங்கிலத்திலேயே எழுதிவிடுதல் தான் நலம்.

*ஆங்கிலத்தை விடச் சம்ஸ்கிருதச் சொற்கள் தான், தமிழுக்குத் தீங்கானவை. ஆங்கிலமாச்சும் ‘பிகர்’ என்று எழுதினால், அது Figure என்று யாரும் அறிந்து கொள்ளலாம். ஆனால் வார்த்தை/அர்த்தம் இவையெல்லாம் பிரித்தறிய முடியாதபடி, இந்தச் சம்ஸ்கிருதச் சொற்களே தமிழ் போல் தோற்றம் காட்டி, ஓர் ஒட்டுண்ணி (Parasite) போல் உறிஞ்சி விடும்.

வார்த்தை/அர்த்தம் விலக்கி, சொல்/பொருள் என்று பழகுவதே, தமிழ்நலம்!
இதோ, இந்த வடமொழி விலக்கு அகராதியைப் (
tamilchol.com) பயன்படுத்திக் கொள்க.

இவை தான் பெரும்பாலோனோர் செய்யும் சிறுசிறு பிழைகள். பிழை செய்வோரைக் கடிந்து கொண்டு திட்டாது, எள்ளி நகையாடாது, தக்க ஊக்கமூட்டுங்கள்! தமிழும் ஊக்கமுறும்!



                      நமது கலாச்சாரம் , மற்றும் பண்பாடு குறித்து நமது விழிப்புணர்வு மிகவும் குறைவு. நாம் மொழியைக் காப்பாற்ற பல மேடைகளிலும் அரசியல் களங்களிலும் அசகாய சூரர்களின் பேச்சை கேட்கலாம். ஆனால் கலாச்சார சீரழிவு பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. உண்மையில் கலாச்சார சீரழிவு தான் மொழிக்கும் ஆபத்தாகி இருப்பதை யாரும் உணரவில்லை. இதற்கு முக்கிய காரணம் நமது தொலைக்காட்சி சேனல்கள். வட இந்திய சீரியல்கள் மற்றும் உடை நடை பாவனைகள் நம்மை கவர வைத்து இப்போது திருமண நிகழ்ச்சிகளிலும் மெஹெந்தி இருக்கிறதே தவிர நலங்கு இருப்பதில்லை. திருமணத்திற்கு வருவோரும் சேலை கட்டுவதில்லை (இதில் குறிப்பாக reception அல்லது நிச்சயதார்த்தம் என்பது மாடர்ன் ட்ரேஸஸ்ஸிற்காகவே என்று ஆகிவிட்ட்து.)சுரிதார் மற்றும் குர்த்தா வகைகள் தான் பிரபலம். முகூர்த்த நேரத்தில் மணப்பெண் மற்றும் இதர பெண்கள் புடவை அணிகிறார்கள்.

நாம்  பொருளாதாரப் போர்வையில் கலாச்சார சீரழிவை விலைக்கு வாங்கி விட்டோம். பல வருடம் முன்பே திருமதி ராதிகா வட இந்திய சீரியல்கள் நமது தொலைக்காட்சிகளில் நுழைவதை தடுக்க முற்பட்டார். ஆனால் பாவம் அவருக்கு யாரும் பக்க பலமாக இல்லாமால் அவரை தோற்கடித்துவிட்ட்து.

என்றாலும் இதுவரை கோவில்கள் மற்றும் பூஜை போன்ற நேரங்களில் ஆண்கள் வேட்டி மற்றும் பெண்கள் புடவை கட்டுவதை பார்க்க இதமாக இருக்கிறது.


      ஒரு மொழியானது ஒரு நாளில் தோன்றுவதல்ல, அதேபோன்று கடவுள் உடுக்கினை அடிக்க மறுபக்கதிலிருந்து வருவதுமல்ல; மாறாக அது  'படிமலர்ச்சி' (Evolution)முறையில் இடம்பெறும் ஒரு தொடர்ச்சியான நீண்டகாலச் செயற்பாடாகும்.  மேலும் மொழியில் எழுத்துகளானவை ஓவிய எழுத்துகள், கிறுக்கல்கள், ஒலி எழுத்துகள் என்ற வரிசையிலேயே இன்றைய எழுத்துகள் கிடைத்துள்ளன (அவையும் தமிழி- வட்ட எழுத்துகள் என்ற வகையிலேயே). மற்றொன்று மொழி தோன்றும்போது பேச்சு வடிவிலேயே தொடங்கியே, பின்பே எழுத்துகள் தோன்றின.

எவ்வாறாயினும் தமிழில் எமக்குக் கிடைக்கும் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுவதன்படி, தமிழில் எத்தனை எழுத்துகள் எனப் பார்ப்பது அவசியம்.

"எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப
.” : (தொல். முதல் சூத்திரம்).

எனவே தொல்காப்பிய காலத்திலேயே 30 எழுத்துகளே (உயிர், மெய்) முதன்மையாகக் காணப்பட்டன. அவற்றினைச் சார்ந்தே பிற எழுத்துகள் அமைந்தன. இன்றைக்கும் இந்த தொல்காப்பிய விதி பொருந்தும். அதுவே தமிழின் சிறப்பியல்பு.

                      தாய்த்தமிழர்களுக்கோ,தமது மொழி பற்றிய ஆய்வு ,மதிப்பீடு போன்றவை பற்றி எதுவும் தெரியாது!பெரும்பாலோர் மொழி உணர்வே இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்!இவர்களில் அதிக சதவீதத்தினர்,அவர்களுடைய அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கே போராட வேண்டிய தாழ்- பொருளாதார நிலையில் இருப்பதால்,தாய்மொழி பற்றி சிந்திப்பதற்கோ அதிலுள்ள இலக்கியங்களைப் படித்துச் சுவைப்பதற்கோ கால அவகாசம் இல்லாதவர்களாக உள்ளனர்!அவர்களுக்கு தம் தாய்மொழியின் பழமை பற்றி எதுவும் தெரியாது!

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...