09 ஜூலை 2025

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருது வழங்கும் 6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025

   "செயற்கரிய செய்வார் விருது" வழங்கி பாராட்டு வழங்க அழைத்துள்ளனர்.

அனைவருக்கும் வணக்கம். 

                வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணிமன்றம் அறக்கட்டளையினர், 

ஆற்றல்மிகு 6ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவினை, 

வாசிப்போம்,சமூகத்தை நேசிப்போம்

                          என்னும் அறிவுசார்ந்த மக்கள்சிந்தனையில், 

                  திருப்பூர் மாவட்டம்,சீரங்கராய கவுண்டன்வலசு ரோட்டில் அமைந்துள்ள,R.P.S.மஹால் கல்யாணமண்டபத்தில் 

          2025 ஜூலை மாதம் 10ஆம்தேதி வியாழக்கிழமை இன்று தொடங்கி 14ஆம்தேதி திங்கட்கிழமைவரை

       மக்கள்சிந்தனையுள்ள சான்றோர்களின் 

               அறிவுசார் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா, நூல்வெளியீடு என  ஐந்துநாட்களும் அறிவுத்திருவிழாவாக நடத்துகின்றனர். .

     10-07-2025 வியாழக்கிழமை     இன்று தொடங்கிய புத்தகத்திருவிழாவிற்கு   வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு.இரா.ராஜ்குமார் அவர்களுடைய தலைமை வகித்தார். 

             வெள்ளக்கோவில் நகராட்சித்தலைவர், திருமதி.கனியரசி முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.,

புத்தகத்திருவிழாவினை காங்கேயம் சார்புநிலை நீதிமன்றம் நீதிபதி மாண்புமிகு  S.சந்தான கிருஷ்ணசாமிB.A.B.L., அவர்கள் தொடங்கி வைத்தார்.

             வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையாளர்.உயர்திரு.C.மனோகரன் அவர்கள் புத்தக முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  

       கோட்டாட்சியர்,வட்டாட்சியர், அரிமா சங்கம், மற்றும் பள்ளிகள்,கல்லூரிகளின் நிர்வாகிகளும்,ஆசிரியர்,பேராசிரியர் பெருமக்களும்,சமூக சிந்தனையாளர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் இருபால் மாணவர்கள் இருபால் பேராசிரியர்கள்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மகாத்மாகாந்தி நற்பணிமன்ற உறுப்பினர்களனைவரும் பங்கேற்கும்

 ' வெள்ளக்கோவில் வாசிக்கிறது' 

தலைப்பில் வாசிப்பைப் பரவலாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது.

தினந்தோறும் மாலை 6.30மணிக்கு நடைபெறும் அறிவுசார் நிகழ்வில்,

      சிறப்பு விருந்தினர்களாக,

          தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்,  மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள், 

        மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுத்தாளர்,முனைவர்.S.S.வைகைச்செல்வன் அவர்கள்,

        சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் மரியாதைக்குரிய தேவிபாரதி அவர்கள், 

         காந்தியச்செம்மல் மரியாதைக்குரிய தமிழருவி மணியன் அவர்கள்,

      புகழ்பெற்ற சொற்பொழிவாளர் திருமதி.சுமதிஸ்ரீ அவர்கள், 

    தீக்கதிர் ஆசிரியர்,உயர்திரு. மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள், 

      முதன்மைச்சேவகர்,மரியாதைக்குரிய K.அண்ணாமலை (Ex IPS) அவர்கள்,

         ஜெயா தொலைக்காட்சி புகழ் பட்டிமன்றப்பேச்சாளர் முனைவர்.கோ.பா.இரவிக்குமார்  அவர்கள் மற்றும் அறிவுசார் சான்றோர் மேன்மக்கள்

      ஐந்துநாட்களும்  கலந்துகொண்டு அறிவுத்திருவிழாவிற்கு பெருமைசேர்க்கின்றனர்.

தொடர்ந்து....

           கலைமாமணி,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையிலான குழுவினர்,

 'குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரிவது கணவனின் வருமானமா? மனைவியின் நிர்வாகமா?' 

                என்னும் தலைப்பில்,சிந்தனையைத்தூண்டும் மாபெரும் சிரிப்புப் பட்டிமன்றம்  நடத்துகின்றனர்.வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில்  

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதுகள் கீழ்க்குறிப்பிட்டவாறு வழங்கி பாராட்டுகின்றனர்.

             ஆன்மீகச்செம்மல் விருது,

சிறந்த இயற்கைஆர்வலர் விருது,  

பாரம்பரியக்காப்பாளர் விருது,

மண்ணின் மைந்தர்கள் விருது, 

சிறந்த பள்ளிகள் விருது,

செயற்கரிய செய்பவர் விருதுஎன வழங்குகின்றனர்.

       செயற்கரிய செய்பவர்கள் விருது சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர்,உயர்திரு.தேவிபாரதி அவர்களுக்கும்,

உயர்திரு.செ.பரமேஸ்வரன்,   (அரசுப்பேருந்து ஓட்டுநர்-Rtd) சமூக ஆர்வலர்,இலக்கிய ஆர்வலர்,

சத்தியமங்கலம்,விதைகள் வாசகர் வட்டம்,செயலாளர்,

சத்தியமங்கலம்முத்தமிழ்ச்சங்கம்செயலாளர்,

அரியப்பம்பேரூராட்சி தமிழியக்கம் செயலாளர்,

ஆகிய அடியேனுக்கும் வழங்கப்படுகிறது.

 கடந்த  2 010ஆம் ஆண்டு 'கற்கும் பாரதம்'எழுத்தறிவு கலைப்பணி இயக்கத்தில் தொடங்கி,இன்றுவரை  15 ஆண்டுகால சமூகசேவை களை பட்டியலிட்டு கணக்கிட இயலாது.

காரணம்,

                   பணியிலிருக்கும்வரை தாளவாடி சென்று வாழ்வாதாரப்பணியான ஓட்டுநர்பணியை முடித்துக்கொண்டு ஓய்வெடுக்கவேண்டிய  நேரத்தில் தாளவாடி வட்டாரத்திலுள்ள பள்ளிகளுக்குச் சென்று போதை தவிர்ப்பது, சாலைப்பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, இயற்கையைக்காப்பது பற்றிய விழிப்புணர்வு, கண்தானவிழிப்புணர்வுதருதல், இலவச கண்சிகிச்சைமுகாம் நடத்துதல், பொது மருத்துவமுகாம் நடத்துதல், தாளவாடி வனத்துறையில் இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி பொதுஇடங்களில்  மரங்களை நடுதல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அறிவயல்சார்ந்த விழிப்புரைகளைத்தருதல்,இலவசமாக சதுரங்கப்பயிற்சியளித்தல்,வானொலி வாயிலாகவும்,தொலைக்காட்சி வாயிலாகவும் சமூக விழிப்புணர்வு வழங்குதல்,

       நடமாடும் மாணவர் நூலகம் தொடங்கி மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பொதுஅறிவுப்புத்தகங்களை வாசிக்கத்தூண்டுதல், புத்தகத்திருவிழாக்களை நடத்துதல், தமிழ்இலக்கியம் சார்ந்த பணிகளைச்செய்தல்,என பல்வேறு சூழல்களிலும்  

        எனக்கு ஆதரவாக களமிறங்கி சமூகப்பணியாற்றியவர்களான  (1) தற்போது CPM (I)ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினராக இருந்துகொண்டு பவானிசாகர் மற்றும் புஞ்சைப்புளியம்பட்டி வட்டாரக்கமிட்டி &,தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தில் மாவட்டக்குழுவிலும் செயலாற்றிவருகின்ற  சமூக ஆர்வலர்  திரு.A.P..ராஜூ அவர்கள்,

(2)பாரதிபுத்தகாலயம்,ஈரோடுகிளைப்பொறுப்பாளர்

திரு.இளங்கோஅவர்கள்,

(3) சேலம் தோழா FM90.0 MHz இயக்குநர் திரு. R.V. முத்துசாமி அவர்கள்,

(4) பண்ணாரி அம்மன் சமுதாய வானொலிநிலைய மேலாளர்.திரு.சங்கர் அவர்கள், 

(5)தாளவாடி தாலுக்கா சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, 

(6)கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, 

(7)சத்தியமங்கலம்  அரிமா K  லோகநாதன் Logu Driving School, விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர்எழுத்தாளர்.யாழினி ஆறுமுகம் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்,

(8)கல்வி உரிமைகளுக்கான மேம்பாட்டுமையத்தின் இயக்குநர் திரு.  R.கருப்புசாமி(READ) அவர்கள்,

(9) வேலூர் பல்கலைக்கழக வேந்தர் மதிப்பிற்குரிய கோ.விஸ்வநாதன் VITஅவர்கள் தலைமையிலான பன்னாட்டுத்தமிழியக்கத்தின் கிளையான அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கப்பொறுப்பாளர்கள் ,

(10) Rtnஆனைக்கொம்பு கல்யாண மண்டப உரிமையாளர்  Rtnஆனைக்கொம்புஸ்ரீராம் அவர்கள் தலைமையிலான சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் ,

(11)கரட்டூர் இளந்தளிர்நண்பர்கள் குழுவினர் உள்ளிட்ட  பல தன்னார்வலர்களின் கூட்டுப்பணிக்கு வழங்கப்பட்ட விருது இன்று வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் எனக்கு வழங்கவுள்ள விருது, 

 "சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதாக" அறிவிக்கப்பட்ட ,

     "செயற்கரிய செய்பவர் விருது" 



  

    





 

 

செ. பரமேஸ்வரன் (C.Parameswaran) ஆகிய அடியேனின் சமூகப்பணிகளில் சில...

2010ஆம் ஆண்டு...


 

 

ஆசனூர்,அரேபாளையம் ஊ.ஒ.ந,நி,பள்ளியில் அரிமா சங்கம் பாராட்டு 
12-0802010 
 
 

13-08-2010 தாளவாடி ஊ.ஒ.ந.நி,பள்ளியில்தொடங்கி21-08-2010வரை

, கற்கும்பாரதம்,எழுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைத்து நடத்துதல். 




































இன்னும்,இன்னும் நிறைய சான்றுகள் இனி தொடராகப்பதிவிடப்படும் ....



ஓரெழுத்து ஒருமொழி-

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...

 

   ஓரெழுத்து ஒருமொழி ...
(1) அ - எட்டு, சிவன்,திருமால், நான்முகன், அசை, சேய்மை,திப்பிலி,
(2) ஆ - பசு,வியப்பு, சொல்,விடை, துன்பம்,
(3)இ - இங்கே, இவன்,அண்மைச்சுட்டு,
 (4) ஈ - அழிவு,கொடு, ஈ ,
(5) உ- சுட்டு , இருக்கும்,உமையவள்,
(6) ஊ - இறைச்சி, தசை,உண்ணல்,
(7) எ- குறி, வினா எழுத்து,
(8) ஏ - அம்பு,விளித்தல், மேல்நோக்குதல்,
(9) ஐ - ஐந்து, தலைவன், வியப்பு, அழகு,
(10)  ஓ - நீர்தாங்கும் பலகை, மதகு, வினா,
(11) ஔ - அழைத்தல்,தடை,பாம்பு,
(12) க - ஒன்று, உடல்,ஆன்மா,
(13) கா- காத்தல்,  அசைச்சொல், காவல், சோலை,
(14) கீ - தடை,தொனி,
(15) - கூ - கூவுதல், பூமி,
(16) - கை - கரம்,இடம்,ஆற்றல், உடலுறுப்பு,
(17) கோ - அரசன்,குயவன், தலைமை, இறைவன், தலைவன்,
(18) கௌ - வாயில் பிடித்தல், தீங்கு,
(19)  சா - சாதல், மரணம்,
(20) சீ - இகழ்ச்சி,சீழ், 
(21) சு- சுகம்,விரட்டுதல்,
(22) சூ - வானவகை,
(23) சே - எருது, உயர்வு,
(24) சோ - மதில்,நகர்,
(25) ஞா. பொருத்து,
(26) த - குபேரன்,,
(27) தா - கொடு,தருக, கேட்பது,
(28) தீ - நெருப்பு,
(29) து - அனுபவம்,  கெடு, பிரிவு, இறகு,
(30) தூ - தூய்மை,சீ,  வெண்மை,
(31) தே - தெய்வம்,மாடு,  நாயகன்,
(32) தை - தமிழ் மாதம்,தைப்பது,
(33) ந- மிகுதி,நகைத்தல்,
(34) நா - நாக்கு, சொல், மணி,
(34) நீ - உன்னை ,முன்னிலை,
(35) நே - நேயம்,அன்பு,
(36) நை - நைதல்,வருந்துதல்,
(37) நொ - நொண்டி, துன்பம்,
(38) நோ - நோய், 
(39) பா - பாட்டு, நிழல், அழகு,
(40) பூ - மலர், 
(41) பே - மேகம், நேர,
(42) பை - உறை, பசுமை,
(43) போ - செல்க,
(44) மா - பெரிய விலங்கு, மா மரம்,
(45) மீ - மேலே,உயரம்,ஆகாயம்,
(46) மூ - மூன்று,மூப்பு,
(47)  மே - மே மாதம், மேன்மை,மேல்,
(48) மை - கண்மை, அஞ்சனம்,இருட்டு,
(49) - மோ - மோதல், முகர்தல்,
(50) யா- மரம், அகலம்,
(51) வா - அழைப்பது,
(52) வீ - பூ, அழகு, பறவை,
(53) வை. - வைத்தல்,கூர்மை,
(54) வௌ-  கௌவுதல்,கொள்ளை அடித்தல்,

தமிழ் எண்கள் , நாமும் பயன்படுத்தலாமே

  அனைவருக்கும் 

வணக்கம்.

         உலகின் மிக மூத்த மொழியான தமிழ் எண்களை அனைவரும் பயன்படுத்த‍த்தொடங்கலாமே...

                   தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 

             10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

         தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது

        சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.

       உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி,

  ௨௲௪௱௫௰௩      என எழுதப்பட்டது.

அதாவது,

இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று

௨-௲-௪-௱-௫-௰-௩

தற்கால புதிய முறைப்படி, இவ்வெண்     ௨௪௫௩     என எழுதப்படுகிறது . 

 தமிழ் எண்கள்..
௧ -   ஒன்று,
௨ -  இரண்டு,
௩  -  மூன்று,
௪ -   நான்கு,
௫ -  ஐந்து ,
௬ -  ஆறு,
௭ -   ஏழு,
௮ -  எட்டு,
௯ -  ஒன்பது,
௧௦ - பத்து.


              பழங்காலத்தில் தமிழ் எண்கள் இடம்சார்ந்து அதாவது தசம ஸ்தானத்தில் எழுதப்படாமல் தனித்தனிக் குறியீட்டுமுறையில் எழுதி வந்துள்ளனர்.
சுழியம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரேமேற்குறிப்பிட்டவாறு  இடமதிப்புமுறையில் எழுதப் பழகியுள்ளனர்.


பழைய குறியீட்டுமுறைப்படி எழுதப்பட்ட  தமிழ் எண்கள்


  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௰௧ = 11
  • ௰௨ = 12
  • ௰௩ = 13
  • ௰௪ = 14
  • ௰௫ = 15
  • ௰௬ = 16
  • ௰௭ = 17
  • ௰௮ = 18
  • ௰௯ = 19
  • ௨௰ = 20
  • ௱ = 100
  • ௱௫௰௬ = 156
  • ௨௱ = 200
  • ௩௱ = 300
  • ௲ = 1000
  • ௲௧ = 1001
  • ௲௪௰ = 1040
  • ௮௲ = 8000
  • ௰௲ = 10,000
  • ௭௰௲ = 70,000
  • ௯௰௲ = 90,000
  • ௱௲ = 100,000 (lakh)
  • ௮௱௲ = 800,000
  • ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
  • ௯௰௱௲ = 9,000,000
  • ௱௱௲ = 10,000,000 (crore)
  • ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
  • ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
  • ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
  • ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
  • ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
  • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
  •  நன்றி : விக்கிப்பீடியா தமிழ்த்தளத்திற்கு.

05 ஜூலை 2025

வந்தே மாதரம் தேசியப்பாடல்

 

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)

சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)


.

இந்திய தேசிய கீதம்

             இந்திய நாட்டுப்பண் 

      தேசிய கீதமானது இந்திய நாட்டுப்பண் ஆகும். இந்த தேசிய கீதத்தை பாடுவதற்கு மொத்தம் 52 வினாடிகள் ஆகும். தேசிய கீதம் பாடல் முதன் முதலில் கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார். ஜனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் “ஜன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. 

தேசிய கீதத்தை பாடும்போது ஆடாமல் நேராக நின்று மரியாதையுடன் பாட வேண்டும். 

தேசிய கீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. 


ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹேஜெய ஹேஜெய ஹே,
ஜெய ஜெய ஜெயஜெய ஹே.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இந்திய தேசிய கீதம்....அனைவரும் நினைவில் வைத்திருப்போம்.

                                     தமிழ்த்தாய் வாழ்த்து 

     தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் என்பவராவார்.இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும். இது பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா என்ற பாவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ் தாய் வாழ்த்து பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழரான திரு. “மனோன்மணியம்” சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. 1913 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1914ஆம் ஆண்டு முதல் தமிழ் சங்க கூட்டங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தாய் வாழ்த்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடல் என அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், “ஆரியம் போல தமிழ் உலக வழக்கழிந்து சிதையவில்லை” என்கிற ஆட்சேபகரமான வரி நீக்கப்பட்ட பிறகே அதிகாரபூர்வ பாடலாக அறிவிக்கப்பட்டது.

முழு உண்மை பாடல் வரிகள்..! 

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந்தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 

வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

     2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் “நீராரும் கடலுடுத்த” என்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டாயம் பாட வேண்டும் எனவும். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் பொழுது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து அனைவரும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் 

 நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

 சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

 தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

 தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! 

தமிழணங்கே! 

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!


புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து..
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!


 

07 ஜூன் 2025

தமிழ்மொழியில் சொற்புணர்ச்சி இலக்கணம்

 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்படன் வரவேற்கிறோம்.

  சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் சார்பாக மாணவக்குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் வளம்பெறுவதற்கான தனிப்பயிற்சிகளை இலவசமாக நடத்தி வருகிறோம். அதற்கான தேடலில்  புணர்ச்சி விதிகள்...

1.2 பொருள் புணர்ச்சி

சொற்றொடர்கள் கருத்தை உணர்த்தப் பயன்படுகிறன. சொற்றொடரில் இடம்பெறும் சொற்கள் ஒன்றோடு ஒன்று பொருள் தொடர்பு கொள்வதால் கருத்து உணர்த்தப்படுகிறது. சொற்களின் இத்தொடர்பு ‘புணர்ச்சி’ எனப்படும். புணர்ச்சிக்குக் குறைந்தது இரண்டு சொற்கள் தேவை. இவ்விரண்டு சொற்களில் முதலில் நிற்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும். நிலைமொழியை அடுத்துவரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.

(எ.டு)  தாமரை மலர்ந்தது.

இத்தொடரில் ‘தாமரை’ என்பது நிலைமொழி. ‘மலர்ந்தது’என்பது வருமொழி. சொற்றொடரில் உள்ள சொற்களுக்கு இடையிலான பொருள் தொடர்பே பொருள்புணர்ச்சி எனப்படுகிறது. இஃது இரண்டு வகைப்படும். அவை,

  • வேற்றுமைப் புணர்ச்சி
  • அல்வழிப் புணர்ச்சி

சொற்றொடரில் நிலைமொழியும் வருமொழியும் பொருள்தொடர்போடுதான் புணரும் எனக் கூறமுடியாது.

(எ.டு) பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரை

இத்தொடரில் உள்ள முதல் இரண்டு சொற்களை எடுத்துக்கொள்ளலாம். பவளம் என்பது நிலைமொழி. கூர் என்பது வருமொழி. இந்நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் பொருள் தொடர்பு சரியாக அமையவில்லை. இங்குப் பவளம் என்பது செம்மை வண்ணத்தைக் குறித்து வந்துளளது. அதற்கும் கூர்மைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள் தொடர்பில்லை என்பதை இலக்கணப்படி சொல்வதானால் ‘பவளம் என்னும் சொல் கூர் என்னும் சொல்லைத் தழுவாது தொடர்ந்தது’ என்பர். இவ்வாறு நிலைமொழியோடு வருமொழி பொருள் தொடர்பின்றிப் புணருமானால், நிலைமொழியும் வருமொழியும் சேர்ந்த அத்தொடரைத் ‘தழாத் தொடர்’ என்றும், பொருள் தொடர்போடு புணருமானால், அத்தொடரைத் ‘தழுவு தொடர்’ என்றும் கூறுவர்.

மெய்யுயிர் முதலீறு ஆமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே
                             (நன்னூல் : 151)

1.2.1 வேற்றுமைப் புணர்ச்சி

ஒரு சொற்றொடரில் வேற்றுமைப் பொருளில் சொற்கள் புணர்வதை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.

(எ.டு)

கம்பன் பாடினான்.
கம்பனைப் பாடினான்.
கம்பனோடு பாடினான்.

முதல்சொற்றொடரில் கம்பன் என்னும் பெயர் எழுவாயாக உள்ளது. இரண்டாம் சொற்றொடரில் அப்பெயர் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு ஏற்றதால் செயப்படுபொருளாக மாறிவிட்டது; மூன்றாம் சொற்றொடரில் ‘ஓடு’ என்னும் உருபு சேர்ந்ததால் உடன்நிகழ்ச்சிப் பொருளாக அப்பெயர் மாறியது. இவ்வாறு ஒரு பெயர் பல்வேறு பொருளைத் தருவதாக மாறுவதற்குக் காரணம் அப்பெயருடன் சேரும் ஐ, ஓடு முதலிய உருபுகள் ஆகும். இவ்வுருபுகள் பெயரை வேறுபடுத்துவதால் ‘வேற்றுமை உருபுகள்’ எனப்படுகின்றன. வேற்றுமை உருபுகள் ஆறு ஆகும்.

  • வேற்றுமை உருபுகள்

    வேற்றுமை உருபுகள் பெயர்களையும் அவற்றின் உருபுகளையும் இனிக் காணலாம்.

  • 1)இரண்டாம் வேற்றுமை-
    2)மூன்றாம் வேற்றுமை-ஆல், ஆன், ஒடு, ஓடு
    3)நான்காம் வேற்றுமை-கு
    4)ஐந்தாம் வேற்றுமை-இன், இல்
    5)ஆறாம் வேற்றுமை-அது, ஆது
    6)ஏழாம் வேற்றுமை-கண்

    வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகவும் வரும்; மறைந்தும் வரும். எவ்வாறு வந்தாலும் அவ்வேற்றுமைப் பொருளை அப்பெயருக்குத் தரும்.

    (எ.டு)

    பாடம் படித்தான்
    பாடத்தைப் படித்தான்.

    முதல் சொற்றொடரும் இரண்டாம் சொற்றொடரும் ஒரே பொருள் தருவதைக் காணலாம். முதல் சொற்றொடரில் பாடம் என்னும் பெயரில் 'ஐ' உருபு மறைந்து வந்துள்ளது. அதனால் அச்சொற்றொடரை இரண்டாம் வேற்றுமைத்தொகை நிலைத்தொடர் என்பர். இரண்டாம் சொற்றொடரில் பாடம் என்னும் அப்பெயரில், 'ஐ' என்னும் வேற்றுமை உருபு, வெளிப்படையாக வந்துள்ளது. இதனை இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் அல்லது வேற்றுமை விரி என்பர்.

    வேற்றுமைத் தொடர் தழுவு தொடராயும் தழாத் தொடராயும் வரும்.

    (எ.டு)

    பால் குடம் (பாலை உடைய குடம்)
    பால் குடித்தான் (பாலைக் குடித்தான்)

    முதல் தொடராகிய ‘பால் குடம்’ என்பதற்கு என்ன பொருள்? ‘இக்குடம் பாலை உடையது’ என்பதே பொருள். பால் என்பது குடத்தைத் தழுவாமல் ‘உடைய’ என்பதைத் தழுவி உள்ளதை த்தொடர் காட்டுகிறது. எனவே இத்தொடர் தழாத் தொடர் ஆகும். இரண்டாம் தொடராகிய ‘பால் குடித்தான்’ என்பதில் பால் என்பது குடிக்கப்படும் பொருள். எனவே இத் தொடரில் உள்ள வினைமுற்றான ‘குடித்தான்’ என்பதைப் ‘பால்’ தழுவி வந்துள்ளது. எனவே இத்தொடர் தழுவு தொடர் ஆகும்.

    1.2.2 அல்வழிப் புணர்ச்சி
     

    ஒரு சொற்றொடரில் வேற்றுமை அல்லாத பொருளில் சொற்கள் புணர்வது அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.

    (எ.டு.) ஓடி விழுந்தான்

    இச்சொற்றொடரில் வேற்றுமை உருபு எதுவும் மறைந்தோ வெளிப்பட்டோ வரவில்லை. அதனால் இது வேற்றுமை அல்லாத  சொற்றொடர் ஆயிற்று. வேற்றுமை அல்லாத புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி ஆகும். அவை பதினான்கு வகைப்படும்.

    1)வினைத்தொகை-கொல்யானை
    2)பண்புத்தொகை-செந்தமிழ்
    3)உவமைத்தொகை-தாமரைமுகம்
    4)உம்மைத்தொகை-இராப்பகல்
    5)அன்மொழித்தொகை-பொற்றொடி (வந்தாள்)
    6)எழுவாய்த்தொடர்-ஆசிரியர் வந்தார்
    7)விளித்தொடர்-நண்பா வா
    8)பெயரெச்சத்தொடர்-வந்த மனிதர்
    9)வினையெச்சத்தொடர்-வந்து சேர்ந்தார்
    10)தெரிநிலை வினைமுற்றுத்தொடர்-உறவினர் வந்தனர்
    11)குறிப்பு வினைமுற்றுத் தொடர்-நண்பர் நல்லவர்
    12)இடைச்சொற்றொடர்-மற்றொன்று
    13)உரிச்சொற்றொடர்-மாநகர்
    14)அடுக்குத்தொடர்-உண்மை உண்மை

    அல்வழித்தொடர்கள் தழுவு தொடராகவும் தழாத் தொடராகவும் வரும்.

    ........... ......... ........அல்வழி
    தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
    எழுவாய் விளிஈர் எச்சம்முற்று இடைஉரி
    தழுவு தொடர்அடுக்கு எனஈர் ஏழே (நன்னூல் : 152)


    வாழை மரம்
         இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர்.மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர். நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
         நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.
     
         வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
         வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி
     
         இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு "இயல்பு புணர்ச்சி" என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, "விகாரப் புணர்ச்சி" என்பதே அமைதலையும் காண்க.
         இவ்வாறு 
    தோன்றல், திரிதல், கெடுதல் 
    என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.
     
    பல, சில என்பனவற்றின் புணர்ச்சி
    பல + பல = பலபல
    சில + சில = சிலசில
     
    இவை இயல்பாகப் புணர்ந்துள்ளன.
    பல + பல = பலப்பல
    சில + சில = சிலச்சில
     
    இவை வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணர்ந்துள்ளன.
    பல + பல = பற்பல
    சில + சில = சிற்சில
     
    இவற்றில், நிலை மொழியில் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு, லகரம் றகரமாய்த் திரிந்துள்ளன. இவ்வாறு, பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன் தாம் வருமாயின் (பல + பல ; சில + சில) இயல்பாகவும், வல்லெழுத்து மிகுந்தும், நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு லகரம் றகரமாகத் திரிந்தும் புணரும். மேலும், பல, சில என்னும் சொற்களின் முன், பிற சொற்கள் வந்தால் நிலைமொழியின் அகரம் கெட்டுப் புணரும் ; கெடாமலும் புணரும் என்பதையும் அறிந்து கொள்க.
     
    இதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
    பல + கலை = பலகலை ; பல்கலை
    பல + சாலை = பலசாலை ; பல்சாலை
    பல + தொடை= பலதொடை ; பஃதொடை
    பல + மலர்  = பலமலர் ;     பன்மலர்
    பல + நாடு   = பலநாடு ;      பன்னாடு
    பல + வேண்டி = பலவேண்டி; பல்வேண்டி
    பல + அரண் = பலஅரண் ; பல்லரண்
    சில + சொல் = சிலசொல் ; சில்சொல்
    சில + மலர் = சிலமலர் ;      சின்மலர்
    சில + வளை = சிலவளை ; சில்வளை
    சில + அணி = சிலவணி ;      சில்லணி
     
    இதற்கான புணர்ச்சி விதி கூறும் நூற்பா :
     
    பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்இயல்பும், மிகலும், அகரம் ஏகலகரம் றகரம் ஆகலும் பிறவரின்அகரம் விகற்பம் ஆகலும் உள பிற.
                                               - (நன்னூல் நூற்பா - 170)
     
    (விகற்பம் ஆகல் - ஒரே புணர்ச்சியில் அகரம் கெட்டுப் புணர்தல் ; கெடாது நின்றும் புணர்தல்)
     
    திசைப் பெயர்ப் புணர்ச்சி:
         வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசையை உணர்த்தும் பெயர்களாதலால் இவை திசைப் பெயர்கள் ஆகும்.
         ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என வழங்குகிறோம்.
     
         திசைப் பெயர்ப் புணர்ச்சிக்கான விதிமுறைகளை இப்பகுதியில் காண்போம்.
     
    வடக்கு + கிழக்கு     = வடகிழக்குவடக்கு + மேற்கு     = வடமேற்குவடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்குடக்கு + திசை     = குடதிசை(மேற்கு)குணக்கு + திசை     = குணதிசை(கிழக்கு)
         இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.
     
    தெற்கு + கிழக்கு     = தென்கிழக்குதெற்கு + மேற்கு     = தென்மேற்குதெற்கு + குமரி     = தென்குமரிதெற்கு + பாண்டி     = தென்பாண்டி
         இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
     
         மேற்கு + காற்று = மேல்காற்று
         மேற்கு + ஊர் = மேலூர்
    இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
     
    கிழக்கு + கடல்     = கீழ்கடல்
    கிழக்கு + நாடு     = கீழ்நாடு
    இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலை மொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழ என்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.
     
    மேற்காட்டியவாறு, திசைப் பெயர்கள் புணரும் முறைகளைக் கூறும் நூற்பா 
    பின்வருமாறு :
     
    திசையொடு திசையும் பிறவும் சேரின்
    நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
    றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற.
                             - (நன்னூல் நூற்பா - 186)
     
    மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி:
    நன்மை, தீமை, மென்மை, மேன்மை, வெண்மை, செம்மை போல்வன, மை என்னும் விகுதியைக் கொண்டு முடிந்து பண்பை உணர்த்தும் பெயர்கள். ஆதலால் இவற்றை மையீற்றுப் பண்புப் பெயர்கள் என்பர்.
     
    இதனை அறிய, கீழ்க்காணும் நூற்பாவை அறிந்து கொள்க.
    செம்மை சிறுமை சேய்மை தீமை
    வெம்மை புதுமை மென்மை மேன்மை
    திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
    இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே
                                                - (நன்னூல் நூற்பா - 135)
     
    மேற்காட்டிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று, வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக் கீழ்வருமாறு அறிந்து கொள்க:
     
    1. நல்லன்      = நன்மை + அன்     வெண்பட்டு     = வெண்மை + பட்டு     வெண்குடை     = வெண்மை + குடை     செம்மலர்     = செம்மை + மலர்
    இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன.
     
    2. பெரியன்     = பெருமை + அன்     சிறியன்     = சிறுமை + அன்
    பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன.
     
    3. மூதூர்     = முதுமை + ஊர்     பாசி     = பசுமை + இ
         முதுமை என்பதன் ஈறு (மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர் என்று ஆயிற்று.பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று.
     
    4. பைங்கொடி     = பசுமை + கொடி     பைந்தார்     = பசுமை + தார்
         இவற்றுள் பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப) ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன.
     
    5. சிற்றூர்     = சிறுமை + ஊர்     வெற்றிலை     = வெறுமை + இலை
         இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்துள்ளன.
     
    6. வெவ்வேல்     = வெம்மை + வேல்     வெந்நீர்     = வெம்மை + நீர்
         இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர வொற்று வகர ஒற்றாகவும், ‘ந’கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து முடிந்தன.
     
    7. செங்கோல்     = செம்மை + கோல்     செந்தமிழ்     = செம்மை + தமிழ்
         இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல் எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன.
     
    மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும் மாற்றங்களைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது.
     
     ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;
    ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;
    தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;
    இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
    -                                               (நன்னூல் நூற்பா - 136)
     
         மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில், மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீண்டும் நினைவு கூர்க.
     
            விதி                             எடுத்துக்காட்டு
    1. ஈறு போதல்                   - வெண்மை + குடை = வெண்குடை
    2. இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்
    3. ஆதி நீடல்                      - பெருமை + ஊர் = பேரூர்
    4. அடியகரம் ஐ ஆதல்         - பசுமை + பொழில்= பைம்பொழில்
    5. தன்னொற்று இரட்டல்      - சிறுமை + ஊர் = சிற்றூர்
    6. முன்னின்ற மெய் திரிதல் - வெம்மை + நீர் = வெந்நீர்
    7. இனம் மிகல்                    - செம்மை + தமிழ் = செந்தமிழ்
     
    உடலும் உயிரும்:
     
    தமிழ் + ஆசிரியர்     = தமிழாசிரியர்
    கடவுள் + அருள்     = கடவுளருள்
    பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்
     
    நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.
     
    இதற்குரிய விதி,
    உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
                                                        -(நன்னூல் நூற்பா - 204)
    பூப்பெயர்ப் புணர்ச்சி
    பூ + கொடி     = பூங்கொடி
    பூ + சோலை = பூஞ்சோலை
    பூ + தோட்டம் = பூந்தோட்டம்
    பூ + பாவை     = பூம்பாவை
     
    பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணரும்.
     
    இதற்குரிய விதி,
         
    பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
                                                     - (நன்னூல் நூற்பா - 200)
    மென்மையும் - என்ற உம்மையால், அதே வல்லெழுத்து வந்து புணரும்.
    (பூ + கொடி = பூங்கொடி ; பூ + கொடி = பூக்கொடி
    பூ + கூடை = பூக்கூடை)
     
    தேங்காய் - புணர்ச்சி:
         தேங்காய் - இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா ‘தெங்கு’  (தென்னை) என்பதாகும்.
         தெங்கு + காய் = தேங்காய்
         ‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.
     
    இதற்குரிய விதி,
         
    தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின்
    என்பதாகும்.
    தனிக்குறில் முன் ஒற்று
    கண் + ஒளி = கண்ணொளி
    பண் + ஓசை = பண்ணோசை
    மண் + ஓசை = மண்ணோசை
     
    இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும்.
    (கண்ண்+ ஒளி = கண்ணொளி)
    இதற்குரிய விதி,
     
         
    தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
     
    என்பதாகும்.
     
    உடம்படுமெய்
     
    மணி + அடித்தது = மணியடித்தது.     (இ)
    தீ      + எரிந்தது = தீயெரிந்தது     (ஈ)
    வாழை + இலை     = வாழையிலை     (ஐ)
    நிலா + அழகு = நிலாவழகு     (வ)
    சே + அழகு = சேயழகு ; சேவழகு (ய,வ)
     
    நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பிய் யகரம் வகரம் ஆகிய இரண்டுஉடம்படுமெய்களும் தோன்றும்.
     
    உடம்படுமெய் விதியாவது,
     
    இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
    உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்.
     
    உடம்படுமெய் ஒரு விளக்கம் :
    இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டிசைக்கும். அவை சேர்ந்திசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற்கு (ஒன்று சேர்வதற்கு) அவற்றின் இடையே யகரமும், வகரமும் தோன்றும். இவ்வாறு, ஒன்றுபடுத்தற்காக வரும் மெய்களை உடம்படுமெய் என்பர்” என்பதறிக.
     
    வல்லினம் மிகும் இடங்களும் மிகா விடங்களும்:
         தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன பற்றிச் சிறிது காண்போம்.எழுதும் பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும் ; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகாஇடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும் ; மொழி மரபும் சிதையும்.
         எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்தபொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.
         இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.
         அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.
     
    வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
    1. அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
         அந்த + பையன் = அந்தப்பையன்
         இந்த + பெட்டி = இந்தப்பெட்டி
     
    2. அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
         அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
         இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
    எத்துணை + கொடுமை = எத்துணைக்கொடுமை
     
    3. அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
         அவ்வகை + காடு     = அவ்வகைக்காடு
         இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு
         எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்
     
    4. மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
         மற்ற + கலைகள்     = மற்றக்கலைகள்
    மற்று + சிலை     = மற்றுச்சிலை
    மற்றை + பயன்     = மற்றைப்பயன்
     
    5. “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         மோர் + குடம்     = மோர்க்குடம்
         மலர் + கூந்தல்     = மலர்க்கூந்தல்
         தயிர் + பானை     = தயிர்ப்பானை
         தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி
     
    6. “மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         மரம் + பெட்டி     = மரப்பெட்டி
         இரும்பு + தூண்     = இரும்புத் தூண்
    தங்கம் + தாலி     = தங்கத்தாலி
     
    7. “நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         குடை + கம்பி     = குடைக்கம்பி
         சட்டை + துணி     = சட்டைத்துணி
     
    8. “ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         அடுப்பு + புகை     = அடுப்புப்புகை
         விழி + புனல்     = விழிப்புனல்
     
    9. “பண்புத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
         புது + குடம்     = புதுக்குடம்
         வட்டம் + பலகை     = வட்டப்பலகை
         பொய் + செய்தி     = பொய்ச்செய்தி
     
    10. ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்’ வல்லினம் மிகும்.
         வேழம் + கரும்பு     = வேழக்கரும்பு
         தாமரை + பூ     = தாமரைப்பூ
         மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்
     
    11. ‘உவமைத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
         தாமரை + கண்ணன் = தாமரைக்கண்ணன்
         பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
         மலை + தோள்     = மலைத்தோள்
     
    12. “அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.
         அரை + காணி     = அரைக்காணி
         அரை + படி     = அரைப்படி
         பாதி + பங்கு     = பாதிப்பங்கு
         அரை + தொட்டி     = அரைத்தொட்டி
         பாதி + செலவு     = பாதிச்செலவு
     
    13. ‘முற்றிலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.
         திரு + கோவில்     = திருக்கோவில்
         புது + பை     = புதுப்பை
         பொது + சாலை     = பொதுச்சாலை
     
    14. “தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.
         வினா + குறி     = வினாக்குறி
         பலா + பழம்     = பலாப்பழம்
     
    15. ‘ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்கப்’ பின்வரும் வல்லினம் மிகும்.
         கருத்தாய் + கேட்டாள் = கருத்தாய்க்கேட்டாள்
         அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச்சொன்னார்
         போய் + பார்     = போய்ப்பார்
     
    16. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
         முன்னர் + கண்டோம் = முன்னர்க்கண்டோம்
         பின்னர் + காண்போம் = பின்னர்க்காண்போம்
    முன்னர் + செல்க     = முன்னர்ச்செல்க
    பின்னர் + பணிந்தார் = பின்னர்ப்பணிந்தார்
     
    17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.
         பட்டு + சேலை     = பட்டுச்சேலை
         பத்து + பாட்டு     = பத்துப்பாட்டு
     
    வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்
         வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
     
    1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
         அவ்வளவு + பெரிது     = அவ்வளவுபெரிது
         இவ்வளவு + கனிவா     = இவ்வளவு கனிவா?
         எவ்வளவு + தொலைவு     = எவ்வளவு தொலைவு?
     
    2. ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
         அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?
         இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?
         எத்தனை + கருவிகள்     = எத்தனை கருவிகள்?
     
    3. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.
         அவனா + கேட்டான்     = அவனா கேட்டான்?
         அவளா + சொன்னாள்     = அவளா சொன்னாள்?
         யாரே + கண்டார்     = யாரே கண்டார்?
     
    4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.
         பெரிய + பெண்      = பெரிய பெண்
         கற்ற + சிறுவன்     = கற்ற சிறுவன்
         நில்லாத + செல்வம்     = நில்லாத செல்வம்
         அழியாத + கல்வி     = அழியாத கல்வி
     
    5. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
         ஒன்று + கேள்          = ஒன்று கேள்
         ஒரு + பொருள்     = ஒரு பொருள்
         இரண்டு + புத்தகம்     = இரண்டு புத்தகம்
         இரு + பறவை     = இரு பறவை
         மூன்று + குறிக்கோள்     = மூன்று குறிக்கோள்
         நான்கு + பேர்     = நான்கு பேர்
         ஐந்து + கதைகள்     = ஐந்து கதைகள்
         ஆறு + கோவில்     = ஆறு கோவில்
         அறு (ஆறு)     + சீர்     = அறுசீர்
         ஏழு + சான்றுகள்     = ஏழு சான்றுகள்
         ஏழு + பிறப்பு     = எழு பிறப்பு
         ஒன்பது + சுவைகள்     = ஒன்பது சுவைகள்
     
    6. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.கல + கல  = கலகல   சட + சட  = சடசட  - இரட்டைக் கிளவிகள்
    பள + பள  = பளபள  
    தீ + தீ  = தீதீ   பார் + பார்  = பார்பார் !  - அடுக்குத்தொடர்கள்
     
    7. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.
         கற்க + கசடற      = கற்க கசடற
         வெல்க + தமிழ்     = வெல்க தமிழ்
         வீழ்க + தண்புனல்     = வீழ்க தண்புனல்
     
    8. ‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.
         பல + பசு     = பல பசு
         சில + கலை     = சில கலை
         அவை + தவித்தன     = அவை தவித்தன
     
    9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.
         வா + கலையரசி     = வா கலையரசி
         எழு + தம்பி     = எழு தம்பி
         போ + செல்வி     = போ செல்வி
         பார் + பொண்ணே     = பார் பெண்ணே !
     
    10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
    கோவலனொடு + கண்ணகி வந்தாள்     = கோவனொடு கண்ணகி வந்தாள்.
         துணிவோடு + செல்க     = துணிவோடு செல்க.
    அண்ணனோடு + தங்கை வந்தாள்     = அண்ணனோடு தங்கை வந்தாள்.
     
    11. ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது.
         காணிய + சென்றேன்     = காணிய சென்றேன்
         உண்ணிய + சென்றாள்     = உண்ணிய சென்றாள்
    12. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.
         தாய் + கண்டாள்     = தாய் கண்டாள்.
         கண்ணகி + சீறினாள்     = கண்ணகி சீறினாள்.
    13. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.
         மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.
         மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.
         மலையினின்று + சரிந்தது     = மலையினின்று சரிந்தது.
     
    14. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.
         விரி + சுடர்     = விரிசுடர்
         பாய் + புலி     = பாய்புலி
     
    15. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.
         காய் + கனி     = காய்கனி
         தாய் + தந்தை     = தாய்தந்தை
     
    16. ‘அது, இது’ என்னும் சட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
         அது + பறந்தது     = அது பறந்தது.
         இது + கடித்தது     = இது கடித்தது.
     
    17. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
         எது + பறந்தது = எது பறந்தது?
         யாது + தந்தார் = யாது தந்தார்?
     
    18. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.
         கண்ணா + பாடு     = கண்ணா பாடு.
         அண்ணா + கேள்     = அண்ணா கேள் !
     
    19. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.
         எழுத்து + கள்     = எழுத்துகள்
         கருத்து + கள்     = கருத்துகள்
         வாழ்த்து + கள்     = வாழ்த்துகள்
         போற்று + தல்     = போற்றுதல்
         நொறுக்கு + தல்     = நொறுக்குதல்
     
    20. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.
         கோஷ்டி + கானம்     = கோஷ்டி கானம்
         சங்கீத + சபா     = சங்கீத சபா

    சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருது வழங்கும் 6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025

        "செயற்கரிய செய்வார் விருது" வழங்கி பாராட்டு வழங்க அழைத்துள்ளனர். அனைவருக்கும் வணக்கம்.                  வெள்ளக்கோவில் மகாத்மாக...