30 ஜூலை 2024

தமிழெழுத்துகள் பிறக்கும்நிலைகள்...

 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு வருக,வருக ...



                         தொல்காப்பியம் பிறப்பியல் படியுங்கள். தமிழ் எழுத்துக்கள், எழுத்துருக்கள் இடுகுறிகள் அல்ல என்பதும், அவை ஒலி எழுத்துகள் என்பதும் புரியும்!

தொல்காப்பியன் காலத்திலேயே மலர்ச்சி, மறுமலர்ச்சி, மேல்வளர்ச்சி, முதிர்ச்சி, அறிவு, முற்றறிவு என்ற பலபடிகளைக் கடந்த தொன்மொழி நம் செம்மொழியான தமிழ்மொழி என்பதைக் குறித்து . அறிந்து கொள்ளவேண்டும் என்றால் வினவுங்கள்! 
                 உந்தி என்பது காற்றை உந்தும் diaphragm. உந்தி உறுப்பானது அடிவயிற்றுக்கும் மூச்சுப்பைக்கும் இடையில் உள்ளது
                சொல்ல நினைக்கும்போது உந்தியில் காற்று முந்திக்கொண்டு வரும்.
அது மூளை, தொண்டை, நெஞ்சு ஆகிய இடங்களில் நிலைகொள்ளும்.
பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவற்றில் செயல்படும்.
ஒலிக்க உதவுவன இந்த 8 அறுப்புக்கள்.

இவை வெவ்வேறு பாங்குகளில் செயல்பட்டு ஒலியை உண்டாக்கும். 

நூற்பா மூலம்

உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியும் காட்சியான. 1

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 3 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)

பிறக்கும் நிலைகள்

    வளி என்பது உலகைச் சூழ்ந்துள்ள காற்று. நாம் பேசும்போது வளி உந்தியிலிருந்து தோன்றும்.


உந்தியில் தோன்றும் வளி தலையிலும், மிடற்றிலும், நிலைகொள்ளும்.

மிடறு என்பது தொண்டையில் உணவுக்குழாயையும், காற்றுக்குழாயையும் மிடைந்துவைக்கும், அதாவது மடைமாற்றும் pharynx.

அங்கிருந்து பாய்ந்து பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவற்றில் ஒலியைத் தோற்றுவிக்கும்.
ஆக நிலைகொண்டு பாயும் ஒலியுறுப்புகள் 8.
இந்த எழுத்துச்செல்வத்தைத் திறப்படக் காணின் அவற்றின் வெவ்வேறு தன்மை புலப்படும்.

உயிரெழுத்துகள்

  • 12 உயிரெழுத்துகளும் மிடற்று வளியில் இசைக்கும். இந்த இசையுடன் ...,
  • அ, ஆ வாய் திறக்கப்  பிறக்கும்.
  • இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை அங்காப்புடன் அண்பல் முதலை நாவிளிம்பு தொடப் பிறக்கும்.
  • உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவை அங்காப்புடன் இதழ் குவியப் பிறக்கும்.
இவற்றில் திரிபில் சிறு மாறுதலும் நிகழும்.

மெய்யெழுத்துகள்

வாய் திறத்தலுடன்
  • க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
  • ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
  • ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

  • த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
  • ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
  • ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
  • ல - நாவிளிம்பு வீங்கி அண்பல் அடியை நா நுனி தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
  • ள - நாவிளிம்பு வீங்கி அண்பல் அடியை நா நுனி தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
  • ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
  • வ - மேல் பல்லும் கீழ் இதழும் இயையப் பிறக்கும்.
  • ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

சார்பெழுத்துகள்

             குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துகள். இவற்றிற்கு என்று தனி ஒலி இல்லை. எந்த எழுத்தோடு சார்ந்து வருகிறதோ அந்த எழுத்தின் ஒலியைப் பெறும்.

(தற்கால வழக்கப்படி சார்பெழுத்துகள் பத்து என்பதை நினைவில் கொள்க.}

எழுத்து பிறக்கும் பள்ளிகள் தலை, மிடறு, நெஞ்சு என்று கூறிய தொல்காப்பியர் எந்தெந்த எழுத்துகள் அவற்றில் பிறக்கும் என்று காட்டவில்லை.

"பள்ளிகளில் வளி எழும். சொல்லிய 5 இடங்களில் எழுத்தாகப் பிறந்து வளி விடுபடும். எழுத்தானது பிறந்து, எழுந்து, விடுபடும் அளபு அந்தணர் மறையில் உள்ளது. அகத்தே தோன்றும் அதனை இங்குச் சொல்லாமல், புறத்தே வெளிப்படும் பாங்கை மட்டும் கூறியுள்ளேன்" என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

வல்லின எழுத்துகள் நெஞ்சிலும், ஆய்த எழுத்து தலையிலும், ஏனையவை மிடற்றிலும் பிறப்பதை அறிஞர்கள் உணர்ந்து கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...