30 ஜூலை 2024

தமிழ் மொழியின் சிறப்பு


                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.



தமிழ் எழுத்தின் வரிவடிவங்கள் ...

 அறிமுகம்:

 ஒலி அணுக்களின் திரட்சியே மொழி. மொழியின் முதல் தொழில் தொடர்பு. சொல்லும் எழுத்தும் மொழியின் தொடர்புக் கருவிகள். மொழிதலின் வரிவடிவம் எழுத்து. தமிழ் மொழியின் வரிவடிவத் தொகுப்பே தமிழ் நெடுங்கணக்கு . உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர்மெய் எழுத்துகள் 216, ஆய்த எழுத்து 1, எல்லாமாகத் தமிழ் எழுத்துகள் 247.

 247 எழுத்துகளைக் கொண்ட தமிழ் நெடுங்கணக்கு.
 பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துகள், பானை ஓடுகளில், மட்பாண்டங்களில், பனை ஓலை ஏடுகளில் எழுத்தாணியால் எழுதப்பட்டு வந்துள்ளன. செப்புத் தகடுகளிலும் கல்லிலும் பொறிக்கப்பட்டதும் உண்டு. காலங்கட்கூடாகத் தமிழ் வரி வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ) 200 ஆண்டுகட்கு முன்புவரை ஏடும் எழுத்தாணியும் தான் தமிழை எழுதப் பயன்பட்டன. கடதாசியும், பேனாவும், பென்சிலும், அச்சும், எந்திரமும், மையும் புழக்கத்துக்கு வர, ஏடும் எழுத்தாணியும் படிப்படியாகப் புழக்கத்தில் இருந்து மறைந்துள்ளன.  தமிழ் மொழியின் சிறப்பு பற்றி  பார்க்கலாம்
தமிழ் மொழியானது உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆயுத எழுத்து 1 என மொத்தமாக 247 எழுத்துக்களை கொண்டது.

இத்தமிழ் இயல், இசை, நாடகம் என 3 பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது.

தமிழ் வரலாற்றைப் பற்றி நாம் எடுத்து நோக்கின் தமிழர் குடியானது,

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே — வாளோடு

முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” என்று சிறப்புரிமை பெறுகிறது.

இதன் மூலம், தமிழ் நிலையானது என்ற அந்தஸ்தை நிரந்தமாக பெறுகிறது எனலாம்.

சங்க காலம்

           தமிழின் சிறப்பை பற்றி விரிவாகப் பார்ப்போமாயின் சங்கங்கள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் வளர்க்கப்பட்ட ஒரே மொழி என்றால் அது தமிழ் மொழி ஆகும்.

கி.பி 1 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சங்ககாலம் எனப்படும்.

முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என புலவர்கள் தமிழ் சங்கங்களை வளர்த்து இலக்கியங்களை அமைத்து தமிழை வளர்க்களாயினர்.

இதனால், ஏராளமான இலக்கிய நூல்கள் தோன்றியதோடு, தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் தழைத்தோங்கத் தொடங்கியது என்றால் மெய்யே ஆகும்.

சங்க கால இலக்கியங்களின் சிறப்பை நோக்கின் இவை எட்டுத் தொகை, பத்து பாட்டு எனக் கொண்டு பதினெண் மேற் கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

நம்முன்னோர்கள் இயற்றிய தமிழ் இலக்கியங்கள், கவிதை நயம், சொல் நயம் மிகுந்தனவாக காணப்படுகின்றன. இவை தமிழ் மொழியின் சிறப்பம்சம் ஆகும்.

மேலும், கூறின் அக்காலம் முதல் இக்காலம் வரையுள்ள இனி எக்காலத்தோருக்கும் பயன்படும் விதமாக, பொருந்தும் விதமாக தர்ம கருத்துக்கள் வாழ்வியல் செழுழைகள் கொண்டனவாக காணப்படுகின்றன என்றால் அது மென்மேலும் தமிழ் சிறப்பயே குறிக்கும்.

மேற் கூறப்பட்டது போன்று கி.பி 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க கால பகுதியில் தமிழின் சிறப்பு பற்றி கிட்டத்தட்ட 473 புலவர்களால் பாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. அண்ணளவாக 2,381 பாடல்கள் உள்ளனவாக கூறப்படுகிறது.

பண்டைய மக்களின் காதல், வீரம், போர், பொருளாதாரம், ஆட்சி சிறப்பு, கொடைச் சிறப்பு இவற்றைப் பற்றி பாடியே தமிழ்ப் பெருமைகளை வளர்க்களாயினர்.

இவை அகப் பாடல், புறப் பாடல் என இரண்டாகப் பிரித்து நோக்கப்பட்டன.

காதல், அன்பு, சார்ந்தன அகப்பாடல் எனவும் போர், வீரம், கொடை என்பன பற்றியன புறப்பாடல் எனவும் போற்றப்பட்டன.

சங்க கால எட்டுத் தொகை நூல்களாக நற்றினை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, பதிற்றுபத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல் என்பன திகழ்கின்றன.

பத்துப் பாட்டு நூலகளாக திருமுருகாற்று படை, பொருநராற்று படை, சிறுபாணாற்று படை, பெரும்பாணாற்று படை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மதுரை காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன விளங்குகின்றன.

இவையே பதினெண் மேற்கணக்கு நூல்கள் என சிறப்பிக்கப்பட்டு சங்க இலக்கியங்களில் தமிழ் மொழிப் பெருமைகளை எடுத்தியம்புகின்றன.

இந்த ஒவ்வொரு இலக்கியமும் தனித்தன்மை வாய்ந்த மற்றும் சொற்சுவை, பொருட்சுவை நிறைந்தனவாக காணப்படுகின்றன என்றால் அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

உதாரணமாக, நற்றினைக் காதல் பாடலில் ஒன்றினை எடுத்து நோக்கின் மிகவும் அற்புதமாக சொற்சுவையும் பொருட்சுவையிம் பொதிந்து தமிழ்சுவை காணப்படுவதை அவதானிக்கலாம்.

“நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே…..”

என்று தொடங்கும் நற்றிணையில் பின்வருமாறு காதற் சுவை ததும்புவதை காண இயலுகிறது.

என் காதலர் சொன்ன வார்த்தையைக் காப்பவர்; எப்போதும் இனிமையானவர்; என்றுமே என் தோள்களைப் பிரியாதவர்; குளிர்ச்சியான தாமரையின் மகரந்த மணிகளை தொட்டுச் சென்று, உயரமான மலைகளிலிருக்கின்ற சந்தன மரத்தில் வண்டுகள் சேமிக்கின்ற தித்திக்கும் தேனாமிர்தம் போன்றது அவரது காதல்; நீர் இல்லாமல் இவ்வுலகம் எவ்வாறு நிரந்தரம் இல்லையோ அவரில்லாமல் நானில்லை; அத்தனை அளவு என்னை விரும்பி நேசிக்கிறார் என்னவர்; என் நெற்றியில் படரும் பிரிவுத் துயரடையாளமான பசலையை பார்த்து பயப்படுவார்; தான் என்ன செய்வது என்று அறியாது என்னை பிரிந்து சென்று துன்பம் அடைவாரே என்று ஒரு காதற் தலைவி, தலைவன் தன்னை விட்டு பிரியமாட்டான் என்பதை உட்பொருளால் உணர்த்துவதை தமிழ் சுவையால் கபிலர் எத்தனை பிரமிப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

இதுவே தமிழின் பெருமையும் சிறப்பும் ஆகும்.

மேலும், குறிஞ்சி நிலப் பாடலான குறுந்தொகையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை தற்போது நாம் பார்ப்போம்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எதிர்பாரா விதமாக காதல் மலர்ந்தது. முன்பின் அறியாத நபருடன் கண்டதும் காதல் ஏற்பட தலைவிக்கு ஐயம் ஏற்படுகிறது எங்கு இவன் ஏமாற்றி விடுவானோ என.

இதையறிந்த தலைவன் தமிழ்ச் சுவை பொதிந்த பாடல் மூலம் கவலையை போக்குவதாக புலவர் கூறும் விதத்தை நோக்கலாம்.

“யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும், எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயர்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே……!” என்கிறார் புலவர்.

அதாவது, எனது அன்னையும் உனது அன்னையும் யார் யாரோ; என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்களாவர்; எந்த உறவின் அடிப்படையில் நீயும் நானும் அறிந்துகொண்டோம்; மழை நீரானது செம்மண் நிலத்தில் கலந்து செந்நில நீர் போல ஆகின்றது; அதுபோல நாமும் ஒன்று கலந்து இருந்தோம் என்பதாக கூறி தலைவிக்கு காதல் பயத்தை போக்குவதாக தமிழ் சுவையின் உச்சக்கட்டத்தை உணர்த்துகிறார் புலவர்.

இத்தனை கவி வல்லமை தமிழ் மொழியைத் தவிர, வேறு எந்த மொழிக்குமே கிடையாது. இக்கருத்தில் எவ்வித மிகையுமில்லை; ஐயப்பாடுமில்லை.

இவ்வாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலத்திற்கும் ஏற்றாற் போல அகப்பாடல் மற்றும் புறப்பாடல்கள் கொண்டு தமிழ் இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டமை தமிழ் வரலாற்றின் சிறப்பம்சமாகும்.

சங்கமருவிய காலம்

       இதேபோல, நாம் சங்கமருவிய காலத்தை எடுத்து நோக்கினால் அக்காலத்திலும் தமிழின் வளர்ச்சி நிலை எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.

கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சங்கமருவிய காலம் ஆகும்.

குறிப்பாக, கி.பி 3 ஆம் நூற்றாண்டின் பின் தமிழ் ஆட்சி அயலார் ஆட்சிக்கு உட்பட்டது. இதனால் பாளி மொழி மற்றும் பிராகிருத மொழி ஆதிக்கம் பெறலாயிற்று.

இதனால், தமிழ் வளம் சற்று சரியத் தொடங்கியது. ஆயினும், தமிழ்ப்புலவர்களும் மன்னர்களும் முற்றிலும் கைவிடவில்லை. தங்கள் விடா முயற்சியால் தமிழை வளர்த்துத் தலைத்தோங்கச் செய்தனர்.

இதனாலேயே, இக்காலத்தில் நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஏலாதி, பழமொழி நானூறு, ஆசாரக் கோவை, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழிநாற்பது என்ற பதினெண் கீழ் கணக்கு நூல்கள் உருவாகின.

அத்துடன் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இலக்கியங்களும் தோன்றலாயின.

இவை தமிழ் மொழியை மாத்திரமன்றி சமய அறக் கருத்துக்களையும் வாழ்வியலையும் புகட்டியமை தமிழுக்கு கிடைத்த இன்னோரன்ன பெருமையாகும்.

இதனால், சிறிது சிறிதாக தமிழ் மொழி சங்கமருவிய காலத்தில் தலைத் தோங்கி முடி சூடத் தொடங்கிற்று என்றால் உண்மையே.

பல்லவர் காலம்

இதே போல பல்லவர் காலத்திலும் பக்தி இயக்கம் தமிழுக்கு புதிய வகை இலக்கிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் தந்தருளியது.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப்பாடல்கள் அக்கால சமூக நிலை, சமய நிலை, மொழி நிலை, கலை சிறப்பை பறைசாற்றின.

இவர்களது பாடல்களில் முற்கால மரபுகள் காணப்பட்டன. எனினும், அவை புது உருவம் பெற்று அமைந்திருந்தன.

நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய கலம்பகம், இறையனார் களவியலுறை, திருமந்திரம், சங்க யாப்பு, முத்தொள்ளாயிரம், தும்பிபாட்டு போன்ற இலக்கியங்கள் பல்லவர் காலத்தே தோன்றிய தமிழ் இலக்கியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பண்டைய வரலாற்று காலங்கள் அடிப்படையில் தமிழ் மொழியின் சிறப்பினையும் தொன்மையினையும் வளர்ச்சியினையும் நாம் அறியலாம்.

கவிஞர்களும் புலவர்களும் தமிழை சிறப்பித்தமை

தமிழின் சிறப்பை பற்றியும் புகழை பற்றியும் பல புலவர்களும் கவிஞர்களும் விளக்கிக் கூறியுள்ளார்கள்

குறிப்பாக, பாரதியார் கூறுகையில் ,

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்…………..” 

            என்று தனித்துவச் சிறப்பை அற்புதமாக எடுத்து இயம்புகிறார்.

நாம் அறிந்துக் கொண்ட மொழிகளுள் தமிழ் மொழியைப் போல இனிமையானதொரு மொழி உலகெங்கும் இல்லை. உலகனைத்தும் இகழ்ந்துப் பேசி புகழ் இழந்து சிறப்பு கெட்டு பெயருக்கு தமிழர் என்று வாழ்ந்திடுதல் நன்றா? சொல்லுங்கள். எனவே, தேனை விட இனிமையான மொழியான தமிழை, தமிழ்ப் புகழை உலகம் எங்கெங்கிலும் பரவிடச் செய்வாயாக. அதுவே தமிழ் சிறப்பு என பாரதியார் வலியுறுத்துகிறார்.

மேலும், “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவனைப் போல், இளங்கோவை போல் பூமிதனில்

யாங்கனுமே பிறந்ததிலை……” என தமிழ் புலவர்களை கூட பாரதி புகழ்வது தமிழ் சிறப்பை பறைச்சாற்றுகிறது.

அவரைத் தொடர்ந்து, பாரதிதாசனும் பின்வருமாறு தமிழ் மொழியை சிறப்பித்து கூறுவது எடுத்துக்காட்டத்தக்கது.

“தமிழுக்கு அமுதென்று பேர் — அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

உயிருக்கு நேர்……” என்கிறார் பாரதிதாசன்.

மேலும், பாரதியார் கூறுகையில் பிறநாட்டு நல்லறிஞர்களது சாத்திரங்களை தமிழ் மொழியிலும் மொழி பெயர்த்தல் வேண்டும். பழங்கால கதைகளை நமக்குள்ளேயே இரகசியமாக மறைவாக சொல்வதில் ஒரு சிறப்பும் இல்லை பலனுமில்லை. அவற்றை வெளிநாட்டவர் அறியும் படி போற்றிப் புகழச் செய்தல் வேண்டும் எனக் கூறுவதனூடாக தமிழ் மொழியின் சிறப்பு உலகம் எங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும் என்கிறார்.

இத்தனை நேரம் வரலாற்று ரீதியாகவும் புலவர், கவிஞர் வாயிலாகவும் தமிழ் மொழியின் தொன்மை சிறப்பைப் பற்றி நோக்கின நாம் சற்று பொதுவாக தமிழ் மொழியைப் பற்றி ஆராய்வது சிறப்பு.

ஏனெனில், எந்த மொழியிலும் இல்லாத சர்வ சாதாரணமாக கவனிக்கக் கூடிய சிறப்பம்சங்கள் பல நம்ம தமிழ் மொழியில் உள்ளன.

ஒரே மொழியான தமிழையே பேச்சு அடிப்படையிலும் எழுத்து வழக்கு அடிப்படையிலும் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று கூறி வருகிறோம்.

அத்துடன், தற்காலத்தில் பிரதேச ரீதியாக பிரதேச தமிழ் எனவும் ஊருக்கு ஊர் மொழியை அழகு படுத்தியும் விதவிதமாகவும் பேசுகின்றனர்.

மேலும், இலக்கண அடிப்படையில் எழுத்தியல், சொல்லியல், பொருளியல் எனப் பாகுபடுத்தி நோக்கலாம்.

எண்கள், காலம், பொருள், இடம், சினை, குணம், தொழில் எனப் பெயர் சொற்கள் என்ற ரீதியிலும் வினைச் சொற்கள் என்ற ரீதியிலும் பார்க்கலாம்.

மேலும், வேற்றுமைகள், புணர்ச்சிகள், ஒலி அமைப்புகள், எழுவாய், பயனிலை, செயற்படு பொருள், பால் மற்றும், திணை அடிப்படையில் என பல்வேறு வழிகளில் தமிழ் மொழியின் சிறப்பை இலக்கண ரீதியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ் இலக்கணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு தொல்காப்பியமாகும். இது எழுத்து, சொல் ,பொருள் என 3 இலக்கணத்தையும் கூறுவது இதன் சிறப்பம்சமாகும்.

இவ்வாறு பண்டைய கால சமூக, இலக்கிய வளர்ச்சி அடிப்படையிலும் புலவர்களின் தமிழாற்றல் மற்றும் தமிழ்ப் பணிகளின் அடிப்படையிலும் அவர்களது இலக்கிய தோற்றுவிப்புக்களின் அடிப்படையிலும் தமிழ் மொழியின் தொன்மையினையும் சிறப்பினையும் எம்மால் அறியக் கூடியதாக இருக்கிறது.

இப்பெருமையை பிற்கால கவிஞர்கள் இலக்கியங்கள், இலக்கணங்கள் மூலம் மென்மேலும் எவ்வாறு தலைத்தோங்க செய்துள்ளனர் என்பதை விரிவாகவும் தெளிவாகவும் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி, எம்மொழி கலப்புமற்று தனித்து நிற்கும் வல்லமை கொண்டது. காலத்தால் அழியாத மூத்த தமிழ் மொழியானது ஆதி மொழியாகும். என்றும் இளமையானதும் ஆகும்.

 உலகின் முதன் மொழி, மூத்த மொழி, ஆதி மொழி என்றெல்லாம் அழைக்கபடும் மொழியானது தமிழ் மொழியாகும். இது தொண்மை மொழி என சிறப்பிக்கப்படுவதோடு அத்தனை பெருமைகளையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

உலகின் மற்ற மொழிகளுக்கு மத்தியில் நமது தாய் மொழியான தமிழ் மொழி அத்தனை சிறப்பம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளமை பெருமைபடக்கூடியதே.

இன்று மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் உள்ளது என்றால் மிகையில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...