19 டிசம்பர் 2018

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மருத்துவ சேவை...

 யாருக்கு நன்மை?
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மருத்துவ சேவை... யாருக்கு நன்மை?
10 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் மத்தியில் மருத்துவர்களுக்கு மதிப்பு, சமூகத்தில் தனி அந்தஸ்து இருந்தது. அதுபோலவே நோயாளிகளின் மீது மருத்துவர்களும் தனி அக்கறை செலுத்தினர். அவர்கள் நலம் பெறவேண்டும் எனக் கருதி மருத்துவம் செய்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இதற்குக் காரணம் யார்? ஏன் இந்த மாற்றம்?
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.
கடந்த 10 அல்லது 15 வருடங்களில் மருத்துவர்- நோயாளி உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அனைத்துத் துறைகளும் வணிகமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற பிடிக்குள் சிக்கியது. இதில் மருத்துவத் துறையும் அடங்கும். அதனால், நோயாளிகளுக்குப் பொருளாதார ரீதியாக பெரும் சுமை ஏற்பட்டது. இதன் விளைவு மருத்துவர், நோயாளிகளுக்குள் இருந்த புனித உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு நம்பிக்கையற்ற தன்மை, வியாபார ரீதியான உறவு என்று மாறியது.
ஏற்கெனவே மருத்துவர்கள், பல சட்டத்தின் வரம்புக்குக் கீழ் வருபவர்களாக இருந்தாலும், அவர்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட (1986) அதிகார வரம்புக்குக் கீழ், கொண்டு வந்து நவம்பர் 1995-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. இதைப் பல அமைப்புகள் வரவேற்றாலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் இடையே இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அதன்படி, நோயாளிகளிடம் கட்டணம் பெற்று மருத்துவச் சேவை அளிக்கும் மருத்துவர்கள், இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் வருவர். இதுதொடர்பாக பல விவாதங்கள் நடந்தன. தனது மருத்துவ அறிவைக் காலத்துக்குத் தகுந்தவாறு புதுப்பிக்காத மருத்துவர்களுக்குப் புதிய மருத்துவக் கண்டுபிடிப்பின் அடிப்படை தெரிவதில்லை.
ஒரு சிறப்புப் பிரிவில் இருக்கும் மருத்துவருக்கு, மற்றொரு சிறப்புத் துறையின் எல்லா விவரங்களும் தெரிவதில்லை. எனவே, நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு மருத்துவ இயல் வழக்கு சம்பந்தமான நுணுக்கமான, சிக்கலான மருத்துவ விஷயங்கள் ஆழமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே, இந்தப் பிரச்னையில் சரியான நியாயம் கிடைக்காமல் போக அதிகம் வாய்ப்பு உள்ளது. இந்தச் சட்டத்தால் பல மருத்துவர்கள், 'தற்காப்பு மருத்துவத் தொழில்' செய்ய ஆரம்பிக்கும்போது, நுகர்வோரின் செலவு அதிகரிக்கிறது.
ஏற்கெனவே மருத்துவத் தொழிலை நெறிமுறைப் படுத்த `இந்திய மருத்துவ கவுன்சில்' என்ற அதிகாரம் படைத்த உயரிய அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை ஒழுங்குபடுத்தி, வெளிப்படைத்தன்மை கொண்டதாக ஆக்கி, அதிக அதிகாரங்களைக் கொடுத்தாலே போதும். மருத்துவ நுகர்வோர் நலன் காக்கப்படும்.
ஏனெனில், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மருத்துவப்புலம் உள்ளவர்களாக இருப்பதால் வழக்கில் அநீதி கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த அமைப்பின் செயல்பாடுகள், பல வருடங்களுக்கு முன்புவரை கேள்விக்குரியதாகவே இருந்தது.
காரணம், `அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்பதுதான். பொதுவாக இந்தச் சட்டத்தின்படி சேவை என்ற பிரிவின் கீழ் மருத்துவச் சேவையும் வரவேண்டுமா' என்று பல விவாதங்கள் நடந்தன.
ஏனெனில், இந்த சேவை மற்ற துறை சேவைகளைவிட வித்தியாசமானது. மனித உடலியக்கம் மற்றும் உயிருடன் தொடர்புள்ளது. இதற்காக மருத்துவர் சேவைக் கட்டணம் பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் அதை வரையறுக்க முடியாது. இந்தத் துறையில் உள்ளவர்கள் தவறு செய்யாமல் இருக்க, அதிக விதிமுறைகளை விதிக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ வல்லுநரின் சேவையை நுகர்வோர் நீதிமன்றங்கள் பெறலாம் என்ற ஷரத்தும் உள்ளது.
இதன் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த ஒரு நோயாளி, `தனக்கு அளித்த சிகிச்சை சரியில்லை' என மருத்துவருக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
அப்போது, `அவரின் புகாரை வழக்காக அனுமதிக்கவும், ஏற்கவும் முகாந்திரம் உள்ளது. அதனால் இருவேறு மருத்துவர்களின் உறுதிச்சான்றை (affidavit) புகார்தாரரே பெற்று வரவேண்டும்' என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.
இப்படி இந்தச் சட்டத்தில், வழக்கின் ஆரம்பநிலையே சற்றுக் குழப்பமாக உள்ளது. தன் சக மருத்துவருக்கு எதிராக எந்த மருத்துவர்கள் உறுதிச்சான்று தருவார்கள்?.
ஒருவேளை அந்தப் புகார், வழக்காக ஏற்கப்பட்டாலும் புகார்தாரர் தவறான வழக்கைத் தொடர்ந்தார் என எதிர்தரப்பால் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி இருக்கிறது.
அநேக மருத்துவம் சார்ந்த வழக்குகளை, மருத்துவருக்குச் சாதகமாக `மனுதாரர் தவறாகத் தொடர்ந்தார்' என்று நிரூபிப்பது மிகவும் எளிது. எந்த மருத்துவரும் தன்னை நாடிவரும் நோயாளியின் உடல்நிலையைப் பாதிக்கக் கூடிய செயலைச் செய்யமாட்டார். `ஒரு புனிதமான தொழிலில் உள்ளோம்' என்ற மனசாட்சி அவருக்கு உள்ளது. சில தவறுகள், எதிர்பாராத விதமாகவோ, அலட்சியத்தாலோ ஏற்படுகிறது.
எனவே, இந்தச் சட்டத்தின்கீழ் மருத்துவர்கள் வந்து விட்டபின், பலர் `defensive medicine' என்னும் தற்காப்பு மருத்துவ முறையைப் பின்பற்றுகிறார்கள். இந்த முறையால், நோயாளிகளின் செலவு, அலைச்சல் போன்றவை மறைமுகமாக அதிகரிக்கிறது.
இந்தச் சட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கவும், ஒருவேளை அபராதத் தொகை செலுத்த வேண்டியது வந்தால், அதைச் சமாளிக்க அநேக மருத்துவர்கள், மருத்துவக் காப்பீடு எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிரீமியம் தொகையை, மறைமுகமாக நோயாளியிடம் வசூலிக்கும் நிலை ஏற்படும்.
இதுபோக இந்தச் சட்டத்தை எதிர்கொள்ள, ஒவ்வொரு நோயாளிக்கும் பல ஆவணங்கள் தயார் செய்து, அதைப் பாதுகாக்கும் செலவு அதிகமாக இருக்கும். இதை அந்த மருத்துவர் , நோயாளியிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வசூலிப்பதே இயல்பாகும்.
இதுதவிர, இந்தச் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் வரும் முன்னர், ஆய்வுக்கூட பரிசோதனை, ஸ்கேன் போன்றவை இல்லாமலே சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், தற்போது தன்னை மருத்துவ அலட்சியக் குற்றச்சாட்டிலிருந்து தற்காக்க, நோயாளிக்குப் பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதற்குக் காரணம், சரியான ஆதாரமில்லாமல் சிகிச்சை அளித்ததாக வழக்கு வந்துவிடுமோ என்ற பயமே ஆகும். முன்பெல்லாம் நோயாளிகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் தனி முயற்சி எடுத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இன்று பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இதில் மருத்துவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை. அவர்கள் தங்களை நுகர்வோர் சட்டத்தின் பிடியிலிருந்து காக்க இவ்வாறு செய்கின்றனர்.
இப்படி மருத்துவர்களைத் தண்டிக்கும் நுகர்வோர் சட்டம் நோயாளிகளின் பாதுகாப்புக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பாதுகாப்போ நிவாரணமோ அரசோ நீதிமன்றங்களோ அளிப்பதில்லை. அநேக மருத்துவர்களின் மரணத்துக்குக் காரணம், மருத்துவத் தொழிலில் ஏற்படும் கடும் விளைவுகள்தாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. நோயாளிகளை வைத்து மருத்துவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது மட்டுமே சமூகத்துக்குத் தெரியும்.
ஆனால், இந்தத் தொழிலால் உடல்நலம், குடும்ப சந்தோஷம், மனநலம் போன்றவற்றை இழப்பது யாருக்கும் தெரிவதில்லை. அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் மனஅழுத்தம், ஹார்ட் அட்டாக், பக்கவாதம் இவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் ஏராளம்.
இந்தத் தொழிலால் மருத்துவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்று கூறும் சமூகம், அதே தொழிலால் மருத்துவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை.
எனவே, இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டாக்டர் டி.முஹம்மது கிஸார்
நன்றி : விகடன் செய்திகள் - 19.12.2018
https://www.vikatan.com
 பதிவிட்ட வழக்குரைஞர் செல்வம் பழனிச்சாமி அய்யா அவர்களுக்கு நன்றிங்க!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...