31 ஜூலை 2018

நல்வழி கூறும் நீதி.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
விளக்கம்: 
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.

===============================================
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
விளக்கம்: 
ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.

==========================================

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்


விளக்கம்: 
நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.

===============================================
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.
=====
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால
நாழி அரிசிக்கே நாம்

விளக்கம்: 
பிறருக்கு சலாம் போட்டும், அடுத்தவரிடம் சென்று இரங்கி உதவி கேட்டும், உறவுகளை விட்டு அகலமான கடல் கடந்தும், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும், அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிறால் தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது.

===========================================================


நீதி கூறும் நூல்கள்

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள்  ஏராளம் உள்ளது. 

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று. 

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது. 

நறுந்தொகை

1. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே
 .நீண்டு நெடிந்து உயர்ந்து இருக்கும் பனைமரத்தில் பழமும், அதில் இருந்து வரும் விதையும் கை கொள்ளும் அளவிற்கு பெரிதாக இருக்கும். அது வானுற வளர்ந்து இருந்தாலும் அந்த மரத்தில் இருந்து வரும் நிழல் ஒருவருக்கும் நிழல் ஆகாது. 


2. தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

. பசுமையான வளமான ஆலமரத்தின் சிறிய விதை, ஒரு சிறு ஓடையில் வாழும் சிறிய மீனின் முட்டையை விட சிறிதாக இருக்கும். ஆனால் அதில் இருந்து வரும் சிறிய செடி, பெரிதாக வளர்ந்து ஆயிரம் விழுதுகளுடன் பெருகி படர்திருக்கும் போது பெரிய மன்னனின் யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய அனைவருக்கும் நிழல் தரும். 

பூமித் தாயின் கருவறை மகிமை

மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறுகின்றார்.

' புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர்ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். '

எல்லா உயிர்களும் தாயின் கருவறையிலிருந்துதான் பிறக்கின்றன. ஓருயிரான புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றுக்குப் பூமிதான் தாய். எனவே அவைக்குக்  கருவறையும் பூமிதான். நாம் ஒரு விதையை நிலத்தில் நாட்டித் நீர் ஊற்றிவிட்டால், அது நாலு, ஐந்து நாட்களில் உயிர் பெற்று வெளியே வந்து வளரத் தொடங்கிவிடும். இவ்விதையை வெளியில் போட்டால் இவ்வண்ணம் வராது இறந்துவிடும்.
பண்டைய தமிழரிடையேயும் உயிரியல் ஆய்வாளர்  உயிர்களின் 
வளர்நிலையை  ஒழுங்குபடுத்தினர் .
"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"     - (தொல்: பொருள்: 571)
இது இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முந்திய
 எமது உயிரியலாளர்களின் கண்டுபிடிப்பாகும். 
மனிதர்களாகிய எமக்கு ஆறறிவு இருக்கிறது என்றும் 
ஆறாவது அறிவே பகுத்தறிவு என்றும் கூறுகிறோம் அல்லவா? 
ஆறாவது அறிவு பகுத்தறிவானால் மிகுதி ஐந்தறிவும் என்னென்ன?
 எத்தனை ஆசிரியர்கள் அதற்கு விளக்கம் தந்தார்கள்?
 நம்மில் எத்தனை பேர் அதனைச் சிந்தித்தோம்? 
தமிழர்  அறிவை அடிப்படையாக வைத்தே உயிர்களின் கூர்ப்பை 
ஆராய்ந்துள்ளனர்.  உலகில் வாழும் உயிர்கள் படிப்படியாக
 ஒவ்வொரு அறிவாக  வளர்நிலை அடைந்து 
சிறப்பு எய்தியதை, பண்டைத் தமிழ் உயிரியலாளர்கள் 
ஆறு வகை அறிவுள்ள உயிர்களாக நெறிப்படுத்தினர்.

"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே" ஓர் அறிவென்பது 
உடலால் தொட்டு அறியும் அறிவு. தாவரம் சூரியஒளியை நாடி 
வளர்வதும், கொடிபடர்வதும், வேர்கள் நிலத்துள் விரவிச்செல்வதும், 
தாவரம் நிலத்துடன் நிலைத்து நிற்பதும் தொடும் அறிவாலேயேயாகும். 
தொட்டு அறிவதே முதலாவது அறிவாகும்.
 புல், செடி, கொடி, மரம்  போன்றவை ஓர் அறிவு உடையவை. 

"இரண்டறிவதுவே அதனொடு நாவே" இரண்டு அறிவென்பது 
உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும் அறிவது. 
நாவால் சுவையை அறிவதே இரண்டாவது அறிவாகும். 
சங்கு, சிப்பி போன்றன ஈரறிவுடையன. 
"மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே" மூன்று அறிவென்பது 
உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும் அறிவது.
 மணத்தை மூக்கால் முகர்ந்து அறிவதே மூன்றாவது அறிவாகும். 
கறையான், எறும்பு போன்றன மூன்றறிவு உடையன. 

"நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே" நான்கு அறிவென்பது 
உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், 
கண்ணால் கண்டும் அறிவது. கண்ணால் காண்பதை 
தெரிந்து கொள்வதே நான்காவது அறிவாகும். 
நண்டு, தும்பி போன்றன நாலறிவுடையன. 
"ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே" ஐந்து அறிவென்பது 
உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும்,
 கண்ணால் கண்டும், செவியால் கேட்டும் அறிவது. 
செவியால் கேட்பதை விளங்கிக் கொள்வதே ஐந்தாவது அறிவாகும்.
 விலங்கு, பறவை போன்றன ஐந்தறிவுடையன. 

"ஆறறிவதுவே அவற்றொடு மனனே" ஆறு அறிவென்பது 
மேலே சொன்ன ஐவகை அறிவுடன் மனதால் நினைத்தும் அறிவது.
 மனத்தில் எழும் எண்ணங்களைப் புரிந்து கொள்வது அல்லது
 நல்லது எது கெட்டது எது எனப்பகுத்து அறிந்து கொள்வது 
ஆறாவது அறிவாகும். மனிதரே ஆறறிவு உடையோர். 
ஆறறிவுடைய விலங்கும் இருப்பதாகக் கூறுவர். 
"நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" உயிர்களை நேரடியாக 
ஆராய்ந்து அறிந்தோரே அப்படி ஆறுவகையாக ஒழுங்குபடுத்தினர்.

 படிப்பவர் யாவரும் புரிந்து கொள்ளுமாறு 'உயிர்களின் பகுப்பும்
 சிறப்பு மரபும்' என்ற தலைப்பில் தொல்காப்பியர் கூர்ப்பைக் 
குறிப்பிடுகிறார்?  இந்த உதாரணங்களை தொல்காப்பியம் 
விரிவாகத் தருகிறது. அவற்றை தொல்காப்பியத்தில் படித்து 
அறிந்து கொள்ளுங்கள். 
 இன்றைய உலகசூழலில் மனிதன் எப்படி வாழவேண்டும் 
என்பதையும் சங்க இலக்கியம் எமக்குக் காட்டுகிறது. 
உலகின் எந்த மூலையிலும் போரும் புரட்சியும் பிடுங்கலும்
 இருக்கும்வரை மனிதன் மனிதனாக வாழமுடியாது.
 போரால் ஏற்பட்ட பேரழிவுகளைக் கண்ட சங்ககாலப் புலவர்கள், 
போர்கள் உண்டாகக் காரணம் என்ன? எப்படி அவற்றைத் தடுப்பது?
 போர்கள் இல்லாது ஒழிய யார் யார் திருந்த வேண்டும்? 
என்றெல்லாம் சிந்தனை செய்திருக்கிறார்கள்.
 போர்கள் உண்டாக எவரெவர் காரணமோ அவர்கட்கு பல 
நல்ல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்கள்.

அவ்வறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவையே.
 'உண்ணும் உணவும் பருகும் நீரும் உயிரை வாழ்விக்கின்றது 
என நினைப்பது தவறு.' இந்தத் தத்துவத்தை மோசிகீரனார் என்ற
 சங்ககாலப் புலவரே சொன்னார். அவர் தகடூர் எறிந்த 
பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனால்
 கவரி வீசப்பட்ட பெருமையும் அடைந்தவர். 
உலக உயிர்கள் அனைத்தும் இன்பமாக உயிர்வாழ 
மோசிகீரனார் கூறிய அறிவுரையைப் பாருங்கள்.

'உண்ணும் உணவும் உயிரை வாழ்விப்பதில்லை. 
பருகும் நீரும் உயிரை வாழ்விப்பதில்லை. 
உலகத் தொழிற்பாடு நாட்டின் ஆட்சியாளர்களாலேயே
 நடைபெறுகிறது. அதனால் ஆயுதப்படைபலம் கொண்ட 
ஒவ்வொரு நாட்டு ஆட்சியாளரும் தாமே அந்தந்த 
நாட்டின் உயிர் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். 
அதனை உணர்ந்து நடப்பது ஆட்சியாளர் கடமை என்கிறார்.
"நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே
மன்னன் உயிர்த்ததே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது  அறிகை
வேன்மிகு தானை வேந்தற்கு கடனே"            - (புறம்: 186)
மோசிகீரனாரின் இந்தப் பாடல் கொடுந்தமிழா? 
நெல்லும் உயிரரை வாழ்விப்பதில்லை, 
நீரும் உயிரைக் காப்பதில்லை.

மோசிகீரனார் மனிதநேயத்தைக் கருத்தில் கொண்டு 
மனிதவுயிர்களை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. 
அதற்கும் மேலே சென்று புல், பூண்டு, செடி, கொடி, மரம், புழு, 
பூச்சி, பறவை, விலங்கு, மனிதன் என உலகவுயிர்களையும் 
உயிர்கள் அல்லாதவற்றையும் மலர்தலை உலகம் என்ற
 சொல்லால் சுட்டுகிறார். என்னே, அவரது உலகநேயம்!

உங்கள் கால்களில் நெருஞ்சி முள் குத்தியிருக்கக்கூடும். நெருஞ்சி நிலத்துடன் படர்ந்து வளர்வது. அதன் பூ எவ்வளவு சிறியது என்பது அதனைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். சூரியன் வரவு பார்த்து தாமரை மலரும். அது உலகறிந்த விடயம். ஆனால் நெருஞ்சிப்பூவும் சூரியன் வரவு பார்த்திருந்து கிழக்கே மலர்ந்து அது செல்லும் திசையில் சென்று மேற்கே கூம்பும் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? ஒரு தாவரவியல் நிபுணர் போல தாவரவியல் நுட்பத்தை மோசிகீரனார் இன்னொரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
"பாழ்ஊர் நெருஞ்சி பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு"            - (புறம்: 155: 4 - 5)
அவருக்கு இயற்கையின் மேலிருந்த ஈடுபாட்டை இப்பாடல் வரிகள் காட்டுகின்றன. அந்த ஈடுபாடே அவரை உலகவுயிர்கள் யாவும் ஒன்றென உணரவைத்துள்ளது போலும். போர்களால் மனிதவுயிர் மட்டுமா அழிகின்றது. இல்லையே. போர்களால் எத்தனையோ அரிய உயிர்கள் காலங்காலமாக அழிந்து ஒழிந்து இருக்கின்றன. 

மன்னர் ஆட்சியாய் இருந்தால் என்ன, மக்கள் ஆட்சியாய் இருந்தால் என்ன நாட்டை ஆள்பவரின் செயற்பாட்டிலேயே உலகம் நடைபோடுகிறது. அதனால் தொழில் நுட்பத்தில் சிறந்த ஆயுதப்படையை வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் தமது உயிரே உலகம் என்பதை அறிந்து நடப்பது கடமையாகும். மோசிகீரனார் ஆட்சியாளர்களைப் பார்த்து "யான் உயிர் என்பது அறிகை" என அழுத்தி உரத்து கட்டளை இட்டதோடு வேந்தற்கு என்று பன்மையில் சொல்லியிருப்பதையும் பாருங்கள்.

இன்றுள்ள உலக ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இப்பாடல் எட்டுவது எக்காலமோ? ஆட்சியாளர் எல்லோருக்கும் மோசிகீரனாரின் "நெல்லும் உயிர் அன்றே" என்றபாடலை வாழ்த்துமடலாக அனுப்பினால் அதன் உண்மையை உணர்வார்களா? அல்லது இனிமேல் வரும் ஆட்சியாளர்களாவது உறுதிமொழியாக இப்பாடலைக் கூறி பதவியேற்று அதன்படி நடப்பார்களேயானால் உலகம் உய்ய வழிபிறக்கும்.

எனவே இளம்தலைமுறையினரே! நீங்களாவது மோசிகீரனார் கூறியதை நெஞ்சில் பதித்து வாழுங்கள். வருங்கால உலகமாவது இன்பமாக உலகநேயத்துடன் வாழட்டும். சங்கத்தமிழ் சொல்வதென்ன? என்பதை அறியவிரும்புவோர் அதனைப் படித்துப் பாருங்கள். உங்கள் ஆற்றலுக்கு ஏற்ப அறிந்து கொள்வீர்கள்.

24 ஜூலை 2018

ரூபாய்நோட்டில் தமிழ் எண்கள்!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். ரூபாய் நோட்டில் தமிழ் எண்களைப் பயன்படுத்தும் ஒரே நாடு ஆப்பிரிக்காவின் அருகிலுள்ள மொரீசியஸ்நாடு ஆகும்.

தமிழ் எண்கள்
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

23 ஜூலை 2018

தாளவாடி புத்தகக்கண்காட்சி-2018

          களப்பணிகள் ......இன்று
தாளவாடி சமூக ஆர்வலர்கள் நடத்தும்.....
2-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி ...மற்றும் 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்' மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான முதலாம் ஆண்டு செஸ்போட்டி!
மரியாதைக்குரியவர்களே,
வருகிற ஆகஸ்டு 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் தாளவாடியில் 2ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தாளவாடி சமூக ஆர்வலர்கள் சார்பாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 20ஆம் தேதி ஜூலைமாதம் வெள்ளிக்கிழமையன்று காலை 9மணிக்கு T.V.ஆனந்தநாராயணன் அவர்களுடன் ஸ்கூட்டரில்  புறப்பட்டு
திகினாரை அரசு உயர்நிலைப்பள்ளி,புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி,

கெட்டவாடி-குன்னன்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,(KGBV) கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டுஉறைவிடப் பள்ளி ,

பனகஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி,மரியதீப்தி மெட்ரிக் பள்ளி,

மல்லன்குழி அரசு மாதிரிப் பள்ளி,

சூசையபுரம் புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி,CCF என்னும் ஆஷாகேந்திரா குழந்தைகள் நல சேவை நிறுவனம்,

தாளவாடி-ராமாபுரம் கேசிடி மெட்ரிக் பள்ளி,பாரதிபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,

அரேப்பாளையம் ஊ.ஒ.ந.நி.பள்ளி ஆசிரியர் திரு.செந்தில்,
ஆசனூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி -
தலைமை ஆசிரியர்களை சந்தித்து புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான கருத்துப்பரிமாற்றம் செய்தோம்.

தொடர்ந்து.....

சமூக ஆர்வலர் திரு.வெங்கட்ராஜ் அவர்கள்(ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர்),தாளவாடி சமூக சேவை மையம் நிறுவனர்.

 திரு.R.மாதேஷ் அவர்கள்(ஊத்துக்குளி உதவி தொடக்க கல்வி அலுவலர்) ,

திரு.சிவா (சமூக ஆர்வலர்),USSS மெட்டல்வாடி

 திரு. முருகன் (சமூக ஆர்வலர்),தொட்டபுரம்

 திரு. ஏ.பி.ராஜூ (சமூக ஆர்வலர்),

திரு.சுஹைல் அகம்மது (சமூக ஆர்வலர்),

திரு.இனாயத்துல்லா பாய் (சமூக ஆர்வலர்),

திரு.மணி ,(சமூக ஆர்வலர்) விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி,

திரு.பிரபு (சமூக ஆர்வலர்) விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி,

திரு.கிறிஸ்டோபர் (சமூக ஆர்வலர்) ,CCFஆஷாகேந்திரா-சூயையபுரம்,

ஆகிய தாளவாடி சமூக ஆர்வலர்களை சந்தித்தோம்.

இனி....
                                   விரைவில்,READ என்றழைக்கப்படும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்,   தாளவாடி வட்ட கல்வி அலுவலர்,  SSA சர்வ சிக்ச அபியான் மேற்பார்வையாளர்,  தாளவாடி வட்டாட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம்,அரசு நூலகர்,  காவல் ஆய்வாளர், ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடிகிளை மேலாளர், தமிழ்நாடு மின்சாரவாரியம் செயற்பொறியாளர்,  வனத்துறை ,  தீயணைப்புத்துறை,  அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  நெடுஞ்சாலைத்துறை, வங்கிகள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிலையம் உட்பட

    தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  ஜே.எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி மற்றும் ஜே.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி மையம்,   சிக்கள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி,    தலமலை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி,    தொட்டபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,    நெய்த்தாளபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,    மெட்டலவாடி ஊ.ஒ.ந.நி.பள்ளி,    அருளவாடி ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஊ.ஒ.ந.நி.பள்ளி,கோட்டாடைஊ.ஒ.ந.நி.பள்ளி,சுஜில்கரைஊ.ஒ.ந.நி.பள்ளி மற்றும் கெத்தேசால்,கேர்மாளம்,கோட்டாமாளம் பகுதியிலுள்ள பள்ளிகள் என தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் சந்திக்க உள்ளோம்.ரோஸ் சேவை அமைப்பு, ஒய்ஸ்மென்கிளப் உட்பட தாளவாடி மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரையும் சந்தித்து ஒன்றிணைத்து மக்கள் நலனுக்காக,குறிப்பாக மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அறிவுசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள்அரசியல்,மதம்,சாதி,மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலப்பணியாற்ற எப்போதும் இணைந்துகொள்ள வருக! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
 என சமூக ஆர்வலர்கள் சார்பாக...............
(1) திரு. வெங்கட்ராஜூ, தாளவாடி சமூக சேவை மையம்
(2) T.V.ஆனந்தநாராயணன் - 9442437103
(3) மணி - 9865700800
(4)சுஹைல் முகம்மது -9442316608
(5)யேசுதாசன் (PALM2NGO)
(6)மரிய அருள் வியானி(ரோட்டரி கிளப் தாளவாடி)
(7)சிவா (USSS)மெட்டல்வாடி
(8) தாளவாடி கணேசன் செய்தியாளர் - 9047222642
(9)C.பரமேஸ்வரன் - 9585600733

20 ஜூலை 2018

தாளவாடியில் செஸ்போட்டி நடத்துவது எதற்காக?

தாளவாடியில் 2 ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சியில்
பள்ளி மாணவர்களுக்கு THALAVADI PANCHAYAT UNION CHAMPIONSHIP -CHESS MATCHES
செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடத்துவது எதற்காக?


மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
        நம்ம தாளவாடியில் 2ஆம் ஆண்டாக புத்தகக்கண்காட்சி நடைபெற இருக்கும் இத்தருணத்தில் மாணவர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுகள் நடத்தலாமே! என ஆலோசனை வழங்கியவர்களுக்கு நன்றிங்க.


           ஒரு நிகழ்வை நடத்த பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.எனவே இயன்றளவு புத்தகக்கண்காட்சியையாவது தாளவாடியில் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு ஆண்டுதோறும் தவறாமல் நடத்த முயற்சியெடுத்து வருகிறோம்.இந்நிலையில்

                   செஸ் எனப்படும் சதுரங்கப்போட்டி மட்டும் நடத்துவது ஏன்?என்ற வினாவும் சிலரால் எழுப்பப்பட்டது.

    அதற்கான விளக்கமான பதிவு இது...
 

        சென்ற ஆண்டு கல்வி வளர்ச்சி நாளான 2017 ஜூலை 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி இருநாட்கள் 
              மதிப்பிற்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களது ஆதரவோடு    சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் 
 திரு .வியானி அவர்கள் தலைமையில் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு புத்தகத்திருவிழாவினை  ..திகினாரை அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜடேசாமி அய்யா அவர்கள் திறந்து வைத்து நடைபெற்ற அறிவுத்திருவிழாவிற்கு  

             தம் பள்ளிக்குழந்தைகளையும் இருபால் ஆசிரியர் பெருமக்களையும் அழைத்து வந்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியும் பேனர் உட்பட பல உதவிகளையும் செய்துகொடுத்து தானும் நேரில் பங்கேற்று ஊக்குவித்த

                   KCT MATRIC SCHOOL THALAVADI -PRINCIPAL திரு.சுரேஷ்குமார் அய்யா அவர்களது அறிவுரைப்படி ,
               தாளவாடி சமூக ஆர்வலர்கள் இந்த ஆண்டு நடத்தும் 2ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சியினை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையைத்தூண்டும் செஸ் போட்டியினை

     தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளின் மாணவ,மாணவியருக்காக
 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்"  
என்ற பெயரில் சான்றிதழ் வழங்கும் அடிப்படையில் செஸ் போட்டி (THALAVADI PANCHAYAT UNION CHAMPIONSHIP - CHESS COMPETITION ) நடத்தப்படுகிறது.  
            செஸ் எனப்படும் சதுரங்கப்போட்டியினை KCT MATRIC பள்ளியே சமூக ஆர்வலர்கள் சார்பாக இந்த ஆண்டு போட்டியை  தம் சொந்த செலவில் நடத்திக்கொடுப்பதாக கூறியதின்பேரில் தாளவாடி சமூக ஆர்வலர்கள் ஆகிய நாம் KCT MATRIC SCHOOL THALAVADI பள்ளியையே இணைத்துக்கொண்டு செஸ்போட்டியை நடத்துகிறோம்.

               இவ்வாறாக ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் மக்களுக்குப் பயன்படும் நிகழ்வினை நம்முடன் இணைந்து தாராளமாக செய்யலாம்.

                 நெருக்கடியான சூழலிலும் சதுரங்கப்போட்டியை நடத்த ஏற்றுக்கொண்டதற்கான காரணம்,

                   KCT MATRIC SCHOOL PRINCIPAL கூறியவாறு (CHESS) சதுரங்கப்போட்டியானது இரு மன்னர்களுக்கிடையே நடைபெறும் யுத்தத்தின் பிரதிபலிப்பு ஆகும். 

              போர்க்களத்தில் யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை என பல்வேறு படைப்பிரிவுகள் இருந்ததைப்போன்று 

                  செஸ்(CHESS) விளையாட்டிலும் கருப்பு,வெள்ளை என இரு மன்னர்களாக உருவகப்படுத்தி 
              ஒவ்வொருவருக்கும்  King ராஜா-1, Queen ராணி-1, Bishop பிஷப் என்னும் மந்திரி-2(தற்போது பாதிரியார்), Knight நைட்ஸ் என்னும் குதிரை-2, Rookரூக் என்னும் யானை-2(தற்போது கோட்டை),Pawns பான்ஸ் எனப்படும் சிப்பாய்கள்-8 என ஆறுவித மதிப்பெண்கள் கொண்ட  தனக்குரிய 16 காய்களை ஒருவர் எட்டு விதமான போக்குகளில் நகர்த்தி விளையாடும் விளையாட்டு ஆகும்.

                    பதினாறு காய்களையும் வைத்து a,b,c,d,e,f,g,h என FILE எழுத்துக்களாக கருப்பு,வெள்ளை என மாறி மாறி எட்டுக்கட்டங்கள் கொண்ட நிற்கும் வரிசையிலும்   ,1,2,3,4,5,6,7,8 என RANK எண்களாக கருப்பு,வெள்ளை என மாறி மாறி எட்டுக்கட்டங்கள் கொண்ட படுக்கைவரிசையிலும், ஆக 64 சம சதுரக் கட்டங்கள் அமைந்த போர்டில் 

                  ராஜாவுக்கு (castling) கோட்டை கட்டுதல்,
(en-passant ) பொருந்தாநிலை விதிப்படி பான் எதிரியின் பானை அடித்தல்,
Pinned எனப்படும் ஆப்பு வைத்து(மறைத்து) ராஜாவை செக் நிலையிலிருந்து காப்பாற்றுதல்,
Skewers எனப்படும் இரட்டைக்குறி வைத்தும்,Fork எனப்படும் இரண்டில் ஒன்று முறையில் குறி வைத்தும் எதிரியின் காயை அடித்தல் அல்லது பயமுறுத்தல்,
தந்திரமாக தன் காயை கொடுத்து எதிரியின் காயை அடித்தல்,
டிரா செய்தல், 
stale-mate செய்து டிரா செய்தல்,
ராஜாவுக்கு செக் வைத்தல்,டிஸ்கவர்டு செக் வைத்தல்,
செக்மேட் செய்தல் என

                  பல்வேறு திசைகளில் பயணிக்கும் காய்களின் போக்கை வைத்து, மனதை ஒருமுகப்படுத்தி, மூளையினால் அறிவை உபயோகித்து, கவனமாகச் சிந்தித்து விளையாடப்படும் நுணுக்கமான விளையாட்டு செஸ்விளையாட்டு ஆகும்.

           எதிராட்டக்காரர் தன் காய்களை எந்த கோணத்தில் எந்தப்போக்கில் எந்தக்கட்டத்திற்கு எந்தக்காயை நகர்த்தி தனது காய்களைத் தாக்க முயற்சிக்கிறார்!தனது காயை தற்காத்துக்கொண்டு எதிரியின் காயை அடிப்பது எப்படி? என பலகோணங்களில் ஆழமாக முன்னெச்சரிக்கையாக சிந்திக்க வைப்பதால் செஸ்போட்டி மாணவருடைய மூளையின் செயல்பாட்டை பலவழிகளிலும் தூண்டச்செய்து,

                     மாணவர்களுடைய அறிவைப் பெருக்குகிறது.கவனிக்கும் திறனை வளர்க்கிறது,சிந்தனை ஆற்றலைப் பெருக்குகிறது,நினைவாற்றலைப் பெருக்குகிறது,சுறுசுறுப்பைத்தருவதோடு தாம் எதிர்கொள்கும் எந்தவகையான சிக்கலையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைத் தருகிறது .

                     இதை மக்களுக்கு புரியும்வகையிலும்,மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் எங்களிடத்திலே நேற்று தாளவாடி கேசிடி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள்  எங்களிடத்திலே விளக்கியதால்!, இத்தனை சிறப்புகொண்ட செஸ் போட்டியையும் நடத்த உள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

                     எனவே அனைவரும் முழு ஆதரவுகொடுத்து விழா சிறக்க உறுதுணை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 

என அன்பன்
C.பரமேஸ்வரன் -
(ஒருங்கிணைப்பாளர்)

சமூக ஆர்வலர்கள் சார்பாக,
தாளவாடி 9585600733
paramesdriver@gmail.com

தாளவாடி புத்தகக்கண்காட்சி 2ஆம் ஆண்டு



மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
திட்டமிட்டபடிஅரசியல்,மத,சாதி வேறுபாடின்றி
 தாளவாடியின் சமூக ஆர்வலர்கள்
 ஈரோடு பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து
 2-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி வருகிற
ஆகஸ்டு 25 சனிக்கிழமை மற்றும் 26ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் வாசிப்புத்திருவிழாவாக
தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடத்துகிறோம்.

                                இருநாட்களிலும் மாணவ,மாணவியருக்கான வருங்கால மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அனுபவமிக்க கருத்தாளர்களால் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.அதாவது

      (1) -மத்திய,மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளும் பயிற்சிகளும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி - சென்னை TNPSC.ACADEMY குழுவினர் நடத்த வருகைதர உள்ளனர்.

            (2) பிளஸ்டூ முடித்தபிறகு என்ன படிக்கலாம்? உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.

                     இதற்கு முன்னதாக வருகிற ஆகஸ்டு 20ஆம் தேதிக்குள் மாணாக்கரின் அறிவு வளர்ச்சிக்கான சிந்தனையைத்தூண்டும் விளையாட்டுப் போட்டியாக (CHESS MATCHES) தாளவாடி வட்டாரத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்து,
 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்'   செஸ்போட்டி
  KCT MATRIC SCHOOL உடன் இணைந்து நடத்த உள்ளோம்.

                மாணவ,மாணவியர் தங்களது பள்ளியின் வாயிலாக முன் பதிவுஆகஸ்டு 8ஆம் தேதிக்குள் செய்யவேண்டும் எனவும் முன் பதிவுக்கான சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விபரம் அனைத்து பள்ளிகளுக்கும் ஓரிரு நாட்களில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

         தெளிவான திட்டமிடலுடன் விரைவில் முன்தயாரிப்பு பணிகளை செய்து அறிவிக்கப்படும்.சூழ்நிலை காரணமாக வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கருத்தாளர்கள் மாறலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
(முக்கிய அறிவிப்பு தாளவாடி வட்டார மக்களின் அக்கறையுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்)
  என
தாளவாடி சமூக ஆர்வலர்கள் சார்பாக
 C.பரமேஸ்வரன்-9585600733
ஒருங்கிணைப்பாளர்

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...