13 டிசம்பர் 2016

மொபைல்போன் பணம் பரிவர்த்தனை?

       மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மொபைல் போன் பாதுகாப்புக்கு நீங்கதாங்க பொறுப்பு!  
         ஸ்மார்ட்போன்கள் காலத்தில் இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தைக் கையாள முடியவில்லை. செல்போன் பயன்படுத்துபவரின் தனிப்பட்ட தகவல்களும் சேர்ந்தே போய்விடுகிறது. குறிப்பாக பல்வேறு தேவைகளுக்கான செயலிகளை பயன்படுத்தும் இந்த நாட்களில் செல்போன் என்பது மிகவும் பாதுகாப்புக்குரிய முக்கிய பொருளாகவே மாறிவிட்டது.
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களை பெரும்பாலானோர் மொபைல் மூலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தவிர இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் செயலி மூலமான விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றன.
இந்த வகையிலான பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக செயலி களில் நமது தனி விவரங்களை ஒரு முறை பதிவு செய்துவிட்டால் போதும். செல்போன் மூலமாக அந்த தளத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுக்க தேவையில்லை.
இது போன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியிருக்கிறது.
டிஜிட்டல் மணிபர்ஸ்
தவிர தற்போது நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல செயலிகள் வந்துவிட்டன. பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். குறிப்பாக வங்கிகளின் நெட் பேங்கிங் வசதிகளிலிருந்து தற்போது மொபைல் பேங்கிங் சேவைகளுக்கு மாறி வருகின்றனர். மேலும் சில வங்கிகள் மற்றும் செயலிகள் செல்போன் மூலம் கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து வைத்து, இதன் மூலம் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட இதர வர்த்தகச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.
அதாவது சமீப காலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களைப் போல உருமாற்றமும் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.
இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளலாம் என்கிறபோது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது.
சரி இது போன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்பது அடுத்த கட்டம்தான். அது நமது தனிப்பட்ட விவரங்களை தவறாக கையாளப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் மொபைல் போன் கிட்டத்தட்ட ஒரு பர்ஸ் போல இருப்பதால் இதில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது ? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.
இது தொடர்பாக மொபைல் சர்வீஸ் மற்றும் செல்போன் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மொபைல் வாலட் பயனாளிகளிடமும் பேசினோம்.
ஸ்மார்ட்போன்களில் தற்போது கிடைக்கும் வசதிகளைப் போல பல மடங்கு வசதிகள் தினசரி அப்டேட் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் போன்களின் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க தனிநபர்களின் பாதுகாப்பு சார்ந்ததாகவே இருக்கிறது.
பொதுவாக ஸ்மார்ட் போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் சாப்ட்வேர் தெரிந்தவர்கள் அதை ஓப்பன் செய்துவிட முடியும். எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போது மானதல்ல என்பதை உணர வேண்டும்.
மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் செயலிகளின் பாஸ்வேர்டுகள்.
பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது என்கின்றனர்.
மொபைல் வாலட்டுகளுக்கு நுழைய பாஸ்வேர்டு தனியாகத்தான் உள்ளிட வேண்டும். இதை அவ்வப்போதும் கொடுக்கலாம். அல்லது 24 மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை என்கிற வகையிலும் செட்டிங்குகள் இருக்கிறது. இந்த இரண்டாவது வகையில் செட்டிங் செய்திருப்பவர்களது மொபைல் போன் வாலட்டில் பணம் இருந்தால் எளிதாக எடுத்துவிட முடியும் என்கின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
சமீப காலத்தில் மொபைல் வாலட் முறையிலான டிஜிட்டல் பரிவர்த் தனை நடவடிக்கைகளை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது. இந்த வகை யிலான சேவைகளுக்கு அனுமதி வழங்குவதில் புதிய நிறுவனங் களும் இறங்குகின்றன. ஏனென் றால் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை நடவடிக்கைகள் தனிநபர் களது கணக்கில் முழுமையாக வந்துவிடு கிறது. இதில் சட்ட விரோத பண பரிவர்த் தனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்பதால் அரசு ஊக்குவிக்கிறது.
ஆனால் மொபைல் வாலட்டில் அதிகமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப கிரெடிட்கார்டு அல்லது டெபிட் கார்டிலிருந்து பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டு வாலட் மூலம் பயன்படுத்தலாம். இதுவரை வாலட் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் இனி நடக்காது என்றும் சொல்ல முடியாது என்கின்றனர் இவர்கள்.
ஒவ்வொரு புதிய வசதியும் மனிதனை மேலும் சோம்பேறியாக்குவது என்கிற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதை உறுதிபடுத்துவதுபோலத்தான் மொபைல் பயன்பாடு உருவாகி யுள்ளது. அதே சமயத்தில் நவீன கண்டுபிடிப்புகள் மனிதனை மேலும் நவீன மனிதனாக்குகிறது என்பதையும் மறுக்க முடியாது.
நாம் நவீன மனிதனாக இருக்கும் அதே வேளையில் சோம்பேறியாகவும் மாறாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்போனுக்கு பாதுகாவலர் நீங்கள்தான். 
 தி இந்து நாளிதழுக்கு நன்றிங்க. 
மொபைல் பேங்கிங் - அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
 
உங்கள் மொபைல்போன் மூலம், ஒரு நாளில் ரூ.5000 வரைப் பணப்பரிமாற்றமும், ரூ 10,000 வரை வர்த்தகப் பரிமாற்றங்களிலும் நீங்கள் ஈடுபடலாம்.

உரிமம் பெற்ற, நெறிபடுத்தப்பட்ட வங்கிகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகள் மூலமாகவோ அல்லது வர்த்தக செயலர்கள் மூலமாகவோ மொபைல் பேங்கிங் சேவையை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வங்கியில் கணக்கு வைத்திருப்போர், வங்கியின் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பெற்றவர்கள், இச்சேவைகளைப் பெறலாம்.
தற்சமயம், மொபைல் பேங்கிங் சேவை உள்நாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மொபைல் பேங்கிங் சேவையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள் வங்கிகளின் குறை தீர்ப்பாளர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

சேவையைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் மற்றும் இடர்பாடுகளைப் பற்றி வங்கிகள் உங்களுக்கு சொல்லவேண்டும்.

இச்சேவையைப் பெறும் முன், பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்கள், மாதம்/ஆண்டு சந்தா விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

மொபைல் போன் கொண்டு நடைபெறும் பணபரிமாற்றங்கள் அனைத்துமே வங்கி அலுவலர் மூலமாகவே நிகழ்கிறது என்பதை உணருங்கள்.

மொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றபின் உங்கள் மொபைல்போனை நண்பரிடமோ அல்லது பிறரிடமோ கொடுக்காதீர்.

உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் வங்கிக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...