மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
பொங்கல் வழிபாடு சூரியனுக்கு நன்றி செலுத்தவே ஆகும்.இங்கு சூரிய பகவானை பற்றி காண்போம்.
"கண்கண்ட தெய்வம்' என்று போற்றப்படுபவர் சூரியன். சூரியனின் தோற்றம் குறித்து புராணங்கள் பலவாறு பேசுகின்றன. "வைவஸ்சதமன்' என்னும் மந்திர நூல், ஸ்வேத வராக கல்பத்தின் தொடக்கத்தில் விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சூரியன் அவதரித்தான் என்கிறது. உலகம் தோன்றியதும் ஓம் என்ற ஒலி எழுந்தது. அந்த ஓசையிலிருந்து சூரியன் தோன்றினான் என்கிறது சூரிய புராணம்.
கச்யபர்- அதிதி தம்பதியருக்குப் பிறந்தவன் சூரியன். பிரபவ ஆண்டு மகாசுக்ல சப்தமியில், விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. அதிலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அந்தப் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்றுசேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலா வருகிறான் என்கிறது சாம்ப புராணம்.
சூரியனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்களுண்டு. அவையெல்லாம் காரணப் பெயர்கள். அதிதிதேவியிடமிருந்து தோன்றிய அண்டம் இரண்டாகப் பிளந்து அதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பெயர் மார்த்தாண்டன். தேவர்களுக்கெல்லாம் தேவனாக இருப்பதால் சூரியன் "மகாதேவன்' எனப்படுகிறார். உலகில் உயிரினங்கள் படைப்புக்குக் காரணமாக இருப்பதால் "பவன்' எனப்படுகிறார். உலகப் பிரதிகளின் உற்பத்தி சூரியனிடமிருந்து தொடங்குவதால் "பிரஜாபதி' எனப் பெயர் பெற்றார். அதிதியின் மகன் என்பதால் "ஆதவன்' எனப்படுகிறார். எங்கும் பிரகாசமாய் ஒளிவீசுவதால் "சவிதா' எனப்படுகிறார். ஒளியில் பல வண்ணங்கள் இருப்பதால் "சித்ரபானு' என்று சிறப்பிக்கப்படுகிறார்.
மிகவும் பிரகாசமாகத் திகழ்வதால் "பாஸ்கரன்' என்றும்; மிகவும் விரைவாகப் பயணிப்பதால் "அரியமான்' என்றும்; தன்னை வழிபடுபவர்களுக்கு அருள்புரிவதால் "மித்திரன்' என்றும்; கேட்ட வரத்தைத் தருவதால் "வருணன்' என்றும்; தேவர்களின் அபிமானத்தைப் பெற்றிருப்பதால் "விஸ்வான்' என்றும்; எல்லா உலகங்களையும் காப்பதால் "பூஷ்யா' எனவும் போற்றப்படுகிறார்.
அதிகாலையில் சூரியன் ரிக் வேதமாகவும், உச்சிக்காலத்தில் யஜுர் வேத சொரூபமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபனாகவும் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது.
வெளிநாடுகளிலும் சூரியனுக்குப் பல பெயர்கள் உள்ளன.
எகிப்தியர் "ஆமன்ரா' என்றும், கிரேக்கர்கள் "போபஸ்- அப்போலா' என்றும், ஈரானியர் "மித்ரா' என்றும், சுமேரியர்கள் "சாமாஷ்' என்றும் அழைக்கிறார்கள்.
பாபிலோனியாவிலும், ரோமாபுரியிலும் சூரிய வழிபாடு உண்டு. மேலும், சீனா, ஜப்பான், மெக்சிகோ, பெரு நாடுகளி லும் சூரிய வழிபாடு உண்டு.
தமிழ்நாட்டில், குடந்தைக்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் புகழ்பெற்றது. தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூரில் கல்ப சூரியன் அருள்புரிகிறார். மற்றும் வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் ஆகிய ஊர்களிலும் சூரியனுக்குக் கோவில்கள் உள்ளன. இதேபோல் வடநாட்டில் துவாரகா, கோனார்க், பூரி, கயா ஆகிய நகரங்களில் சூரியனுக்கென்றே புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. காசியில் (வாரணாசி) மட்டும் சூரியனுக்கு 12 கோவில்கள் உள்ளன. அவை: கங்காதித்யர், விருத்தாதித்யர், திரௌபதி ஆதித்யர், லோலார்க்கர் ஆதித்யர், மயூராதித்யர், அருணாதித்யர், பொம்பாதித்யர், உத்திர ஆதித்யர், சுஷோல்கா ஆதித்யர், யம ஆதித்யர், கேசவாதித்யர், விமலாதித்யர்.
தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், சூரியனுக்கு அமைந்த கோவிலை "வாட் அருண்' என்று அழைப்பர். ஜப்பானில் இஸ்கு நதிக்கரையில் உள்ள சூரியன் கோவில் "இசே' என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் தினமும் கற்களால் அக்னி உண்டாக்கி வழிபாடுகள் நடைபெறுகின்றன. எகிப்தில் நைல் நதிக்கரையோரம் அமைந்துள்ள "அபுசிம்பெல்' என்ற சூரியக்கோவிலில், சூரியன் உதிக்கும்பொழுது அதன் ஒளிக்கதிர்கள் கோவிலின் கருவறைக்குள் விழும்படி அமைத்துள்ளார்கள்.
சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயருண்டு. தை மாதத்தில் விஷ்ணு, மாசி மாதத்தில் வருணன், பங்குனியில் பூஜா, சித்திரையில் அம்சுமான், வைகாசியில் தாதா, ஆனியில் சவிதா, ஆடியில் அரியமான், ஆவணியில் விஸ்வான், புரட்டாசியில் பகன், ஐப்பசியில் பர்ஜன்யன், கார்த்திகையில் துவஷ்டா, மார்கழியில் மித்திரன் என்றும் பெயர் பெறுகிறார்.
சூரிய மண்டலத்தில் முக்கியமான ஆயிரம் கதிர்களைக் கண்டறிந்திருக்கிறார்கள் ரிஷிகளும் ஞானிகளும். இவற்றில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் 300 கதிர்கள் "சுக்ரம்' என்ற பெயரில் வெம்மையூட்டும். அடுத்து ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் 400 கதிர்கள் "அம்ருதம்' என்று பெயர் கொண்டு மழையைப் பொழியவைக்கும். அடுத்து மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் 300 கதிர்கள் பனியைக் கொடுத்து குளிர்வைத் தரும்.
காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி, "ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று மூன்று முறை சொல்லி வணங்கினால் நற்பலன்கள் கிட்டும் என்று ஞானநூல்கள் சொல்கின்றன.
சூரிய பகவானை சகஸ்ரநாமத்தால் துதித்து பூஜை செய்தால் மிகுந்த பலனைப் பெறலாம். அந்த சகஸ்ரநாமத்தை முழுமையாகச் சொல்ல முடியாத பட்சத் தில், சூரியனது இருபத்தொரு பெயர்கள் கொண்ட மந்திரங்களைச் சொன்னால் போதும் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் சொல்வர்.
"இந்த மந்திரத்தை யார் ஒருவர் காலையிலும் மாலையிலும் ஜெபிக்கிறாரோ அவர் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுவார்; நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வார்' என்று கூறப்பட் டுள்ளது.
"ஓம் விகர்த்தனோ விவஸ்வாமஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப்பிரகாசக ஸ்ரீமான் லோகசக்ஷர் க்ரஹேச்வர:
லோக ஸாக்ஷீ த்ரி லோகேச: கர்த்தா
ஹர்த்தா தமிஸ் ரஹா:
தபனஸ் தாபனஸ் சைவகசி:
ஸப்தாச்வ் வாஹன
கபஸ்திஹஸ்தோ ப்ரஹ்மாச
ஸர்வதேவ நமஸ்க்ருத:'
சூரிய வழிபாட்டினை மேற்கொள்வதில் பல விதங்கள் உள்ளன. அந்த வகையில் தினமும் "அக்னி ஹோத்ரம்' செய்பவர்கள் (இது ஒரு யாகம்) சூரிய உதயவேளையில் பூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்லி யாகத்தீ வளர்த்து, ஹோமத்துக்குரிய சமித்துகளை நெய்யிலிட்டு அக்னியில் சமர்ப்பிப்பார்கள்.
அப்போது-
""சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நமஹ!
பிரஜாபதய ஸ்வாஹா! பிரஜாபதயே இதம் நமஹ'
என்ற மந்திரத்தை காலை நேர வழிபாட்டின்
போது சொல்வர். அதேபோல் மாலை பூஜையின்போது,
"அக்நயே ஸ்வாஹா!' அக்நயே இதம் நமஹ!
பிரஜாபதயே ஸ்வாஹா! பிரஜாபதயே இதம் நமஹ!'
என்று சொல்வர்.
இந்த அக்னி ஹோத்ர பூஜையில் சூரிய உதய நாழிகையும் அஸ்தமன நேரமும் முக்கியத்துவம் பெறும்.
அக்னி ஹோத்ர யாகத்தினை வீட்டில் பூஜை அறையில் மேற் கொள்வர். இதனால் சுற்றுச்சூழல் தூய்மையாகும்; வீட்டில் பிராணவாயு அதிகரிக்கும். தீயசக்திகள் அண்டாது. இந்த யாகப்புகை உடலுக்கு நலம் தருவதுடன் நோய் எதிர்ப்புசக்தியையும் வழங்கும்.
ஒளியில் மிதக்கும் அன்னப்பறவை, வானமண்டலத் தலைவன், மனிதர்களிடையே வாழ்பவன், அறவோன் என்று சூரியனை ரிக்வேதம் புகழ்கிறது.
வால்மீகி ராமாயணம் "உலகத்திற்கு ஈஸ்வரனாகவும்- ஒளி உற்பத்தி செய்பவனாகவும்- பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், சந்திரன் முதலிய எல்லா தெய்வங்களாகவும் பகலவனான பாஸ்கரன் விளங்குகிறான்' என்று குறிப்பிடுகிறது.
சூரியன், தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் நுழையும் மாதமான தை மாத முதல் நாளை தைப்பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறோம். சூரிய பகவானுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடும் வழக்கம் ஆதிகாலத்திலிருந்தே தமிழகத்தில் இருந்துவருவதாக வரலாறு கூறுகிறது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவை, இந்தியாவில் சில மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் "லோஹரி' என்ற பெயரிலும், மேற்கு வங்காளத்தில் "கங்காசாகர்' என்றும், அஸ்ஸாமில் "பொஹோக்கியோபிஷு' என்றும், உத்திரப்பிரதேசத்தில் "கிச்சேரி' என்றும், மகாராஷ்டிர மாநிலத்தில் "ஹடகா' என்றும், மத்திய பிரதேசத்தில் "சுகரத்' என்றும், அருணாச்சலப் பிரதேசத்தில் "மக்பிஹு' என்றும் கொண்டாடுகிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் புதிய பாத்திரங்கள் வாங்கி அதில் பொங்கல் பொங்கியும், வடமேற்கு மாநிலங்களில் கண்ணனை வழிபடும் விழாவாகவும், மராட்டியர்கள் பொங்கல் விழாவை மூன்று நாட்களும், ஆந்திராவில் பயிர்களுக்கு உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும்விதமாகவும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பொங்கல் விழாவினையொட்டி சூரிய பகவானை வழிபட்டதும், இரண்டு மாடுகளை ஏர்க்கலப்பையில் பூட்டி, வேகமாக வயல்வெளியில் ஓடவிட்டு போட்டிகள் நடைபெறும். மலையாள மாதமான மகர மாதம் தை முதல் நாளான பொங்கலன்று தொடங்குகிறது என்பது கேரள சித்தாந்தம்.
தைப்பொங்கல் அன்றுதான் சபரிமலையில் ஐயப்பன் ஜோதிவடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனை "மகரஜோதி தரிசனம்' என்று போற்றுவர்.
வெளியிட்ட நக்கீரன் இதழுக்கு நன்றி!.
அருமையான சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...