23 ஜனவரி 2014

தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 வரலாறு.

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.கொங்குதென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.இந்தபதிவில் காயல்பட்டினம் வலைப்பதிவில் கிடைத்த தகவல்களை பதிவிடுகிறேன்.

               இந்திய அளவில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக உருவானதே தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005. இதற்கான விதைகள் - 1987 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள தேவ்துங்கிரி என்ற சிறு கிராமத்தில் தூவப்பட்டன. அவ்வாண்டில் தான் - மனிதஉரிமை ஆர்வலர்கள் நிக்கில் தே, அஞ்சி, ஷங்கர் சிங் மற்றும் அருணா ராய் ஆகியோர் இக்கிராமத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான ஓர் அமைப்பை உருவாக்க முடிவுசெய்தனர்.

துவக்கமாக - அரசு திட்டங்களில் பணிபுரியும் எளிய மக்கள் எவ்வாறு சம்பளம் வழங்குவதில் ஏமாற்றப்படுகின்றனர், நியாய விலை கடைகளில் எவ்வாறு முறையாக விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற விபரங்களை அவர்கள் கண்டறிந்தனர். கிராம மக்களோடு தங்கி அவர்கள் புரிந்த மூன்றாண்டு சேவையின் விளைவாக மஸ்தூர் கிசான் சக்தி சங்கட்டன் என்ற அமைப்பு 1990 ஆம் ஆண்டு உருவாகியது.

இந்த அமைப்பு முறையாக செயல்பட - அரசிடம் இருந்து பல தகவல்கள் பெறுவது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அரசிடம் தகவல் பெற இவ்வமைப்பு முயற்சி செய்யும்போது, ஆங்கிலேய காலத்து அதிகார ரகசியங்கள் சட்டம், 1923 (Official Secrets Act, 1923) - இவர்களுக்கு பதிலாக வழங்கப்பட்டு, தகவல்கள் மறுக்கப்பட்டன. பெரும் போராட்டத்திற்கு இடையில் சில தகவல்களை இவ்வமைப்பு வெற்றிகரமாக பெறவும் செய்தது. அரசு திட்டம் மூலம் இல்லாத நிறுவனம் ஒன்றிற்கு 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது போன்ற தகவலை இவ்வமைப்பு வெளிக்கொண்டுவந்தது.

இது போல் பல முறைக்கேடுகள் வெளிவரவே, எவ்வித தடையும் இன்றி அரசு துறையினால் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவ்வமைப்பு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவர் என்ற ஊரில் ஏப்ரல் 5, 1996 அன்று போராட்டத்தை நடத்தியது. 40 நாட்கள் நடந்த இப்போராட்டம் - தகவல் பெறும் உரிமைச் சட்டம் கோரும் இயக்கத்திற்கு ஒரு முன்னோடி என்றே சொல்லவேண்டும்.

இந்திய ஊடகங்கள் அவை (Press Council of India) - 1996 ஆம் ஆண்டு வடிவமைத்த முன்மாதிரி கொண்டு சில மாநிலங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டங்களை - தத்தம் மாநிலங்களில் - கொண்டு வந்தனர். இந்தியாவில் - குடிமக்களுக்கு, தகவல் பெறும் உரிமை வழங்கி சட்டம் கொண்டுவந்த முதல் மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களில் - பல குறைப்பாடுகள் இருந்தன. இது போன்ற சட்டம் - தேசிய அளவில் வகுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

தேசிய அளவில் இது குறித்து போராடிய அமைப்புகளில் - National Campaign for People’s Right to Information (NCPRI) போன்றவை முக்கியமானவை. 2002 ஆம் ஆண்டு Freedom of Information Act 2002 என்ற சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் திருப்தியானதாக இல்லை என்று எதிர்ப்புகள் கிளம்பவே, இந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக, இந்திய பாராளுமன்றம், ஜூன் 15, 2005 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற புதிய சட்டத்தினை நிறைவேற்றியது. இச்சட்டத்திற்கு - இந்திய ஜனாதிபதி, ஜூன் 22, 2005 ஒப்புதல் வழங்க - அக்டோபர் 12, 2005 அன்று - இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.


இந்த சட்டத்தின் நோக்கம் என்ன என்பதை - இச்சட்டத்தின் முகப்புரை தெரிவிக்கிறது.

இச்சட்டம் குறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த (நி.சீ.3) துறை வெளியிட்டுள்ள கையேடு வழங்கும் சாராம்சம் இதோ:
<><><> அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்;

<><><> அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்;

<><><> அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்வதோடு , ஊழலை ஒழித்தல்;

<><><> அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அமலில் உள்ள இச்சட்டம் மூலம் பல வெற்றிகளை, பல சமூக ஆர்வலர்கள் பெற்றுள்ளனர்.

மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிட ஊழல் வெளிக்கொண்டு வர இந்த சட்டம் முக்கிய பங்கு வகித்தது. இதன் விளைவாக - முதல் மந்திரி அசோக் சவான் பதவி விலகவும் நேரிட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் வறுமை கோட்டின் கீழே உள்ள மக்களுக்கு செல்லவேண்டிய பொது விநியோக (ரேசன்) பொருட்கள் முறைக்கேடாக கையாடப்பட்ட விஷயம் - இச்சட்டம் மூலம், சமூக ஆர்வலர் ஒருவரால் வெளிக்கொண்டுவரப்பட, பல அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊடகங்களின் பார்வையில் பட்ட இது போன்ற பல வெற்றிகளை தவிர, ஆயிரங்கணக்கான இந்தியர்கள், சிறு விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை - இந்த சட்டத்தை பயன்படுத்தி, தங்கள் உரிமையை நிலை நாட்டி வருகின்றனர்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி, தொடர்ச்சியாக பல அரசு துறைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் சமூக ஆர்வலர்களை கேலியாக பல அரசு அதிகாரிகளும், சில பொது மக்களும் பார்த்தாலும் - இச்சட்டம் மூலம் வெளிப்படையான, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க போராடும் பலர் - இதனால் தங்கள் உயிரை இழந்த சம்பவங்களும் ஏராளம் - என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் அமலுக்கு வந்த சில காலங்களிலேயே - இச்சட்டம் குறித்த எதிரான விமர்சனங்களும் வர துவங்கின. அவைகளில் குறிப்பிடும்ப்படியானவை, இச்சட்டம் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே அரசு துறைகள் முடங்கிவிடும் போன்ற ஐயப்பாடுகள்.

இது போன்ற விமர்சனங்களுக்கான பதிலினை இந்த சட்டத்தின் - விதிமுறை 4 வழங்குகிறது. இந்த விதிமுறை - ஒரு அரசு நிறுவனம், தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் முறையாக குறியிட்டு, பகுதி வாரியாக ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் - என்று தெரிவிக்கிறது. மேலும் அதில் முக்கிய தகவல்களை - தானாகவே (Suo Moto / Pro-active), அவ்வப்போது இணையதளம் போன்ற வாயிலாக வெளியிடவும் வலியுறுத்துகிறது. இதனால் - தகவல் கோரி பெறப்படும் விண்ணப்பங்களும் குறையும்.

இதனையே இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட கையேடுகளும் தெளிவுபடுத்துகின்றன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள கையேட்டில் இருந்து...




தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் - ஒரு அரசு நிறுவனத்திடம் உள்ள ஒரு தகவலை மட்டும் தான் கோரமுடியும். அந்நிறுவனத்தின் கருத்தையோ, அபிப்பிராயத்தையோ கோர இயலாது. எனவே - முறையாக செயல்படும் ஓர் அரசு நிறுவனத்திற்கு, முறைப்படி வகுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கூற எவ்வித சிரமும் இருக்காது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி - பாரத பிரதமர் அலுவலக வாயிலில் 1984 ஆம் ஆண்டு நடந்த போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் (2009 ம் ஆண்டு)...

(c) Frontline (Fortnightly)
ஜனவரி 7 அன்று மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில், சமூக ஆர்வலர்கள் - 238 கேள்விகளை, காயல்பட்டினம் நகராட்சியிடம் - தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பித்துள்ளனர்.


இக்கேள்விகள் - பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு விண்ணப்பத்திலும், 1 முதல் 15 கேள்விகளாக, ஏறத்தாழ 25 சமூக ஆர்வலர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் - நகராட்சியிடம் பல கேள்விகளை கேட்டு, மேல்முறையீடு செய்யாமல் விட்ட பலரும் உண்டு. மேல்முறையீடு செய்து பலன் இல்லாமல், சென்னை வரை தங்கள் முறையீட்டை கொண்டு சென்றவர்களும் உண்டு.

நகராட்சி குறித்த அடிப்படை தகவல்களை வெளியிடவேண்டும் என 2007ஆம் ஆண்டு - நகராட்சி நிர்வாகத்துறையால் சுற்றறிக்கை ஒன்று விடப்பட்டது.



அதனை தொடர்ந்து TAMIL NADU TOWN PANCHAYATS, THIRD GRADE MUNICIPALITIES, MUNICIPALITIES AND MUNICIPAL CORPORATIONS (PUBLIC DISCLOSURE) RULES, 2009 என்ற தனி சட்டத்தையே தமிழக அரசு - 2009 இல் அறிமுகம் செய்ததது.








ஆனால் காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் (http://municipality.tn.gov.in/kayalpattinam/) விதிமுறைகள் கூறும் தகவல்கள் பெரும்பாலானாவை இன்றளவும் ஏற்றப்படவில்லை.
ஜனவரி 29, 2013 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் - தகவல்கள் முறையாக வழங்காத காரணத்தால், தொடரப்படும் வழக்கிற்காக அதிகாரிகள் சென்னைக்கு அடிக்கடி செல்வதால், நகராட்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என்றும், எனவே - தேவையான தகவல்களை நகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கோரி நகர்மன்றத் தலைவர் தீர்மானம் ஒன்று முன் மொழிந்திருந்தார். இருப்பினும் பெருவாரியான உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அத்தீர்மானம் நிறைவேறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.







அரசு மற்றும் அதன் வெவ்வேறு துறைகளின் வெளிப்படையான செயல்பாடுக்காகவும், ஊழலை ஒழிப்பதற்காகவும் கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் - தனது 8 ஆண்டு பயணத்தில், பல அனுபவங்களை கற்று தந்துள்ளது. இந்த சட்டத்தினை மதித்து பதில் கூறும் துறைகள் சில இருக்க, இச்சட்டத்தினை மதிக்காத அரசு துறைகளே மிக அதிகம். இந்நிலைக்கு முக்கிய காரணம் - தகவல் ஆணையத்தின் செயல்பாடும் கூட.

தகவல் ஆணையத்தின் அலுவலர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்பது ஒரு புறம் இருக்க, மேல்முறையீட்டுக்கு பிறகும் பதில் கிடைக்காமல் ஆணையத்திற்கு வரும் இரண்டாம் மேல்முறையீடு விண்ணப்பங்களை - விசாரிக்க சென்னையில் உள்ள தகவல் ஆணையம் பல மாதங்கள் எடுத்து கொள்கிறது. அது மட்டும் அல்ல - தகவல்களை முறையாக வழங்க தவறும் அதிகாரிகள் மீது அபராதம் (காலதாமதம் ஆன நாள் ஒன்றிற்கு ரூபாய் 250 வீதம் கூடுதலாக ரூபாய் 25,000 வரை) விதிக்க சட்டத்தில் இடம் இருந்தும் - தொடர்ச்சியாக இச்சட்டத்தை மதிக்காத அதிகாரிகள் / அரசு அலுவலகங்கள் மீது கூட அபராதம் விதிக்க ஆணையம் தயக்கம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் - தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளித்து பாராளுமன்றத்தில் சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டது. சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெருவாரியான கட்சிகளின் ஆதரவுடன் இத்திருத்தம் நிறைவேறியது. 8 ஆண்டுகளில் - இச்சட்டம் குறித்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் திருத்தம் இதுவாகும்.

படிப்படியாக இச்சட்டம் அழிந்திடாமல் இருக்க, 8 ஆண்டு அனுபவத்தில் அரசு அதிகாரிகள் பயன்படுத்திய இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க திருத்தங்களை - சமூக ஆர்வலர்கள் முன்மொழிவது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி காயல்பட்டினம் இணையதளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...