04 செப்டம்பர் 2013

ஆசிரியர் தினம்-2013

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
              கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
             இன்று ஆசிரியர் தினம்.எதிர்கால இந்தியாவிற்கான சிந்தனை சிற்பிகளை,அறிஞர்களை,அறிவியலார்களை,ஆட்சியர்களை,ஆட்சியாளர்களை,
பாதுகாப்பிற்கான ராஜ தந்திரமிக்கவர்களை,முன்னேற்றத்திற்கான வழிகாட்டுபவர்களை,உருவாக்கும் உன்னத பணி புரியும் மேதைகளின் தினம்.
இவர்களே போற்றத்தக்கவர்கள்!
        எந்தச்சூழ்நிலையிலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியப்பெருந்தகைகள்  கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.
இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம்.நாமும் ஆசிரியர்களுக்கு,கல்வியாளர்களுக்கு வாழ்த்துக்கூறி வணங்குவோம்.வாங்க!.

               ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு
          உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூறும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

  ஆசிரியர் பணி என்றால் என்ன?
                        ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

    ஆசிரியப் பணியின் மதிப்பு
             ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. 
                                                        ஏனெனில்,             
                      ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.
                            மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். 
                           ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம்.

 ஆசிரியர் தினம்
                         தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

    சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு
                                சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். 
                 சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். 
                        மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
                             1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில்,  தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
                       இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். 
                          இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
               1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். 
                            சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

  ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
                        இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
                             ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
                             என 
  ஆசிரியர் தின நன்னாளில் 
 அவர்களின் மேன்மை போற்றும் 
            அன்பன்.
    PARAMESDRIVER.,
        அரசு போக்குவரத்துக்கழகம்,
            தாளவாடி கிளை.
                  ஈரோடு மண்டலம்.

3 கருத்துகள்:


  1. """பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்."""




    ""இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.""


    இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியுதுங்கண்ணா....


    பதிலளிநீக்கு

  2. ””அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்.””


    ”இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.””



    இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியுதுங்கண்ணா....

    பதிலளிநீக்கு
  3. அருமை... அருமை...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...