5-11-2024....
இதழியல் அறிவோம்.தொடர்..4
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்,
அறிஞர்தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.
என்று போற்றுகிறார்.
தேசியக்கவி பாரதியார் அவர்கள் 'எழுதுகோலும் தெய்வம்.,எழுத்தும் தெய்வம்' என்கிறார்.
பொதுவாக இதழ்கள் எதை வெளியிட்டாலும் மக்கள் அதை அப்படியே நம்புகின்ற பழக்கம் பரவலாக உள்ளது. வாசகர்கள் செய்தித்தாள்களில் வெளிவருபவை எல்லாம் சரியானவையே என்று நம்புகின்றனர்.ஆதலால் பத்திரிக்கைகள் நடுநிலையோடு சரியான செய்திகளையே வெளியிட வேண்டும்.சந்தேகத்திற்குரிய செய்திகளை வெளியிடக்கூடாது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஏராளமான செய்திகள் விரைவாக கிடைக்கின்றன.அவற்றையெல்லாம் செய்தியாக வெளியிட இயலாது.அவற்றில் மக்களுக்குத் தேவையான பயன்பாடுடையவற்றைத் தேர்ந்தெடுத்து இதழ்கள் வெளியிட வேண்டும்.
சமுதாயத்தில் அமைதியைக் கெடுக்கும் செய்திகளை வெளியிடக்கூடாது.
மக்களாட்சியில் மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கும் பொறுப்பு இதழ்களுக்கு உள்ளது.
நாட்டின் நலனையும் குறிக்கோள்களையும் மனதில் வைத்து நாட்டுப்பற்றுடனும் பொதுமக்களின் நலன் காக்கும் உணர்வுடனும் இதழ்கள் செயல்பட வேண்டும்.
பத்திரிக்கைகள் தாங்கள் வெளியிடும் செய்திகளின் பின்விளைவுகளை உணர்ந்து கடமையுணர்வோடு செயல்படவேண்டும்.
(தொடரும்...)
6-11-2024
இதழியல் அறிவோம். தொடர்..5
Canons of Journalism
இதழியல் விதிகளை மனதில் வைத்து செயல்படும் இதழியலாளர்கள் தரமான இதழ்களை உருவாக்க முடியும்.
(1) பொறுப்புடைமை :
வாசகர்களைக் கவர்வதற்காக பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் உரிமை இதழாளர்களுக்கு உள்ளது.அதேவேளை பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பில்லாமல் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.
(2) மனித இனத்தின் தலையாயக் கடமைகளில் ஒன்று பத்திரிக்கை சுதந்தரம்.
சட்டத்திற்குட்பட்டு எதனையும் விவாதிக்கவும் வெளியிடவும் கட்டுப்பாடற்ற சுதந்தரம் இதழ்களுக்குத் தேவை.
(3) தனித்துவம்...
பொதுமக்களின் நலனுக்கு கேடுவிளைவிக்காமல் இதழ்கள் சுதந்தரமாக தனித்து இயங்க வேண்டும்.
அதேவேளை சுயநலனுக்காக செய்திகளை தவறாக வெளியிடக்கூடாது.உண்மைக்குப் புறம்பாக செய்திகளுக்கு தவறான விளக்கம் தருவதோ, தவறான விமர்சனம் கொடுப்பதோ கூடாது.
(4) நம்பிக்கை,உண்மை,துல்லியம்...
பத்திரிக்கைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உண்மையான செய்திகளை துல்லியமாக வெளியிட வேண்டும்.
செய்திகளை வேண்டுமென்றே திரித்தோ,முரண்பாடாகவோ வெளியிடக்கூடாது.
செய்தியின் உள்ளடக்கத்திற்கேற்ற தலைப்பினை பொருத்தமாக தர வேண்டும்.கவர்ச்சிக்காகவோ,மனக்கிளர்ச்சிக்காகவோ செய்திக்கு சம்பந்தமில்லாத தலைப்பு இடக் கூடாது.
(5) ஒருதலைப் பக்கம் சாராத நிலை : நடுநிலையான செய்திகளைத்தான் வெளியிட வேண்டும்.செய்தி அறிக்கைகளையும், அவை பற்றிய கருத்துக்களின் வெளியிடலும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.வாசகர்களை திசைதிருப்பும் வேலைகளை அதாவது செய்திகளின் கோணங்களை மாற்றக்கூடாது.
(6) நியாயமான நடவடிக்கை : ஆதாரமில்லாமல் மற்றவர்களை குற்றம் சாட்டக்கூடாது, யாருடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதும் கூடாது.மற்றவர்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்புத் தரவேண்டும்.தவறு நேர்ந்துவிட்டால் தயக்கமின்றி திருத்திக்கொள்ள வேண்டும்.
(7) பண்பாடு: செய்திகளை வெளியிடும்போது பண்புநெறி தவறக்கூடாது. குறிப்பாக குற்றங்கள்,கொலைகள்,கற்பழிப்பு,வன்முறை போன்றவை வெளியிடும் செய்திகள் வாசகர்களின் பாலுணர்வுகளைத் தூண்டாதவகையில் மிருகத்தன்மை ஏற்படாதவகையில் தகுந்த சொற்களை நயமாகப் பயன்படுத்தி தரப்படுத்தி செய்திகளை வெளியிட வேண்டும்.சமுதாயம் கட்டிக் காக்கும் மரபுகளையும் பண்பாடுகளையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இதழியலுக்கும் உண்டு.
(தொடரும்...5)
7-11-2024
இதழியல் அறிவோம்...
கட்டுரையாளர் (சிபிசாரதி)
C.பரமேஸ்வரன்...
தொடர் - 6 :
விடுதலை இயக்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் இதழ்கள்..
தமிழில் முதல் அரசியல் இதழாக ," சுதேசமித்திரன்" 1882 ல் வார இதழாக தொடங்கி 1889 ல் நாளிதழாக நடத்தியவர் G.சுப்பிரமணிய ஐயர் .
'சுதேசமித்ரன்' - இதழில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் துணை ஆசிரியராக பணியாற்றி இதழியலுக்கு தொண்டுசெய்தார்.
மகாகவி பாரதியார் அவர்கள் சுதேசமித்திரன் இதழிலிருந்து விலகி 1907- ல் ,"இந்தியா" என்ற தமிழ் மாத இதழையும், " பால பாரதி" என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.
திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் 1917 - ல் ,"தேச பக்தன்" என்ற நாளிதழைத் தொடங்கி நல்ல பழகுதமிழில் நடத்தி இதழியல் தமிழுக்கு வளம் சேர்த்தார். 'நவசக்தி' என்னும் வார இதழையும் நடத்தினார்.இவ்விதழ் மூலமாக எழுத்துலகம் வருகை தந்து புகழ்பெற்றவர்கள் 'கல்கி' இதழாசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும், 'கலைமகள்' இதழாசிரியர் கீ.வா.ஜகந்நாதன் அவர்களும் ஆவர்.
திராவிடன் இதழ் 1917 லும்,
1926 ல் 'தமிழ்நாடு' என்ற நாளிதழை டாக்டர்.பி.வரதராஜூலு நாயுடு அவர்களும்,
1930 ல் 'இந்தியா' என்ற இதழை காங்கிரஸ் ஆதரவாளர்களும்,
1933 ல் 'சுதர்மம்' என்ற நாளிதழும், 'ஜெயபாரதி' என்ற நாளிதழும், 'சுதந்தர சங்கு' என்ற நாளிதழும்,
'குமரன்' என்ற இதழ் மற்றும் 'சண்டமாருதம்' நாளிதழ் 1953 ல் காரைக்குடி சொ.முருகப்பா அவர்களும் தொடங்கினர்.
1934 இல் சதானந்தம் அவர்கள் தொடங்கிய ,'தினமணி' நாளிதழ் இன்றுவரை வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.
ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்கள் 1936 இல் ,'விடுதலை' இதழை தொடங்கினார்.
ப.ஜீவானந்தம் அவர்கள்,'ஜனசக்தி' இதழை தொடங்கினார்.
தெ.ச.சொக்கலிங்கம் அவர்கள்,'காந்தி' வாரம் இருமுறை இதழ் மற்றும் 'வந்தே மாதரம்' நாளிதழ் தொடங்கினார்.இவரே 1944 இல்,' தினசரி' தொடங்கியவர் பிறகு 'ஜனயுகம்', 'பாரதம்' 'நவசக்தி' ஆகிய இதழ்களையும் நடத்தி தேசியம் வளர்த்த இதழாசிரியராக புகழ்பெற்றார்.இதேகாலச் சூழலில் , S.S.வாசன் ,'ஆனந்தவிகடன்' வார இதழைத் தொடங்கி விடுதலை இயக்கத்திற்கு ஊக்கமளித்தார்.
1942 இல் சி.பா.ஆதித்தனார் ,
'தினத் தந்தி' நாளிதழைத் தொடங்கி பேச்சுத் தமிழில் செய்திகளை வெளியிட்டு பாமரனும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி 'தமிழர் தந்தை' என புகழ்பெற்றார்.
இவை தவிர இன்னும் பல இதழ்கள் வெளிவந்து நாட்டின் விடுதலை இயக்கத்திற்குத் துணை நின்றன.
1968 இல் ஒரு நாவலை இதழாக வெளியிடும் பழக்கத்தை ' ராணிமுத்து' தொடங்கி வைத்தது. தற்போது நாவல்களை வெளியிடும் பல இதழ்கள் வெளிவருகின்றன.
நாடு விடுதலை பெற்றபிறகு பத்திரிகைகளுக்கும் முழு சுதந்தரம் கிடைத்ததால்
தற்காலத்தில் அதிக எண்ணிக்கையில் பத்திரிகைகள், நாளிதழ்களாகவும்,மாலைநேர நாளிதழ்களாகவும், பருவ இதழ்களாகவும் வெளிவருகின்றன.
திகிலூட்டும் கதைகளை ' முத்து காமிக்ஸ், மற்றும் புதுச்சேரி கலீல் அகமது அவர்கள் மாதந்தோறும் வெளியிடும் 'வகம் காமிக்ஸ்' திகிலூட்டும் படக்கதை ஆகியன உள்ளிட்ட பல படக்கதை இதழ்கள் அறிவுப்பசிக்கு விருந்தளித்து சிறந்து விளங்குகின்றன.
மகளிர் இதழ், அறிவியல் இதழ், இலக்கிய இதழ், கல்வி இதழ், கதை& புதின இதழ், வேளாண் இதழ், திரைப்பட இதழ், அரசியல் இதழ்,சிறுவர் இதழ்,பொழுதுபோக்கு இதழ், புலனாய்வு இதழ், சமய இதழ், தொகுப்பு இதழ், எழுத்தாளர் இதழ், திராவிட இயக்க இதழ், பொதுவுடைமை இயக்க இதழ், தனித் தமிழ் இயக்க இதழ், சோதிட இதழ், ,கவிதை இதழ், பல்நோக்கு இதழ்,இவை தவிர தனிச்சுற்று இதழ்களாக என பல்வேறு வடிவங்களில்
இதழ்கள் கீழ்கண்ட வகைகளாக வெளிவருகின்றன.
(1) நாளிதழ்களில் காலை இதழாக,மாலை இதழாக வெளிவருகின்றன.., (2)பருவ இதழ்களில் வார இதழ்,வாரம் இருமுறை இதழ், மாத இதழ், மாதம் இருமுறை இதழ், காலாண்டிதழ், அரையாண்டிதழ்,ஆண்டிதழ், சிறப்பிதழ் என எண்ணிலடங்காமல் வெளிவந்தாலும் மக்கள் கல்விக்குத் துணைசெய்து ,மக்களாட்சி வெற்றிபெற தமிழ் இதழ்கள் பாடுபட வேண்டும்.அப்பொழுதுதான் அவற்றின் எதிர்காலம் பயனுடையதாக அமைந்து, மக்களின் கருத்துரிமையைக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட மக்களின் நலன்களுக்கான பணிகளை செய்தால் மட்டுமே மக்களாட்சியின் நான்காவது தூண் என்ற பெருமையை தக்கவைக்க முடியும்.
(அடுத்த தொடரில் , பத்திரிகைச் சட்டங்கள் )
8-11-2024
இதழியல் அறிவோம்..
தொடர்-7 (சிபிசாரதி)
பத்திரிகைச் சட்டங்கள்,
மக்களாட்சி சரியாகச் செயல்பட இதழ்கள் சுதந்தரமாகச் செயல்பட வேண்டும்.அதேவேளை இதழ்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படத் தவறினால் மக்களுக்கு கேடுகளும் விளைவிக்கும்.
பொதுவாக மக்கள் இதழ்களில் அச்சிடப்படுகின்ற எல்லாவற்றையும் உண்மையென நம்பிவிடுகின்றனர்.இதை சாதகமாகப் பயன்படுத்தும் சிலர் தங்களது விருப்பம்போல செய்திகளை வெளியிட்டு சமுதாய அமைதியை கெடுக்கலாம்.
இந்நிலை தவிர்க்க இதழ்களைத் தேவையான அளவு கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் 19(2)விதியின்படி பத்திரிகைகளின் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் கொண்டுவர
நமது அரசாங்கம் அதிகாரம் பெற்றுள்ளது. இது தவிர இதழ்களைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.அவைகளில் முக்கியமான சட்டங்கள் சிலவற்றை அறிந்துகொள்வோம்.
(1) அவமதிப்புச் சட்டம்.(Law of Defamation)
ஒருவரின் மனுளைச்சல் மற்றும் மான இழப்புக்கு காரணமாக இருந்தவர்மீது குற்றவியல் சட்டத்தின்படியும்,சமுதாயவியல் சட்டத்தின்படியும் (Criminal Law & Civil Law) நடவடிக்கை எடுக்கலாம்.
ஒருவரை வாய்மொழியாக இழிவுபடுத்துவதை அவதூறு(Scandal) என்றும், எழுத்தின்மூலம் அவமதிப்பதை சட்டவழக்கிற்குட்பட்டது( Libel) என்றும் கூறப்படுகிறது.
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் (IPC) 499 ஆம் பிரிவு அவமதிப்பு எதுவென விளக்கமாக கூறுகிறது.(IPC) 500 ஆம் பிரிவு தண்டனைகள் பற்றிக் கூறுகிறது.IPC499 முதல் IPC 502 வரை தெரிந்துகொள்வது நல்லது.
1973ஆம் ஆண்டின் குற்றவியல் வழக்குத் தொடர்விதிப்படி 199(1), அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.அதேவேளை இந்தியக் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மாநில ஆளுநர், மத்திய அமைச்சர்கள்,மாநில அமைச்சர்கள் அவமதிப்புக்கு ஆளானதாகக் கருதினால் அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கு தொடரலாம்.
அவமதிப்பு வழக்கு அவமதிப்புச் செய்தவர் மற்றும் அதனை வெளியிட்ட நாளிதழின் பதிப்பாளர், அச்சிட்டவர், ஆசிரியர், ஆகியோர் மீதும் வழக்கு தொடர முடியும்.சட்டப்படி அவமதிப்பு உறுதி செய்யப்பட்டால் பொறுப்பானவர் அனைவருக்கும் தண்டனை உறுதி.
இ.கு.ச.500 ஆவது பிரிவின்படி இரண்டாண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும்.
பொதுச்சட்டத்தின்படி மான இழப்பு வழக்கு தொடர்ந்தவர் இழப்பீடு பெறமுடியும். குற்றவியல் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்தால் அவமதிப்பு செய்தவர் சிறைத் தண்டனை பெறுவர்.
அடுத்த தொடரில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், அலுவலக இரகசியங்கள் சட்டம், பத்திரிகை,புத்தகங்கள் பதிவுச் சட்டம், ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம், தீமைபயக்கும் வெளியீடுகள் தடைச் சட்டம், அஞ்சல்,தந்திச் சட்டங்கள், பணிசெய் இதழியலாளர் சட்டம், இதழ்கள் சம்பந்தப்பட்ட வேறுசில சட்டங்கள் பற்றி சுருக்கமாக அறிவோம்.