16 டிசம்பர் 2024

என் பார்வையில் பவானி ஆறு..

   கட்டுரைத்தலைப்பு ;      என் பார்வையில் பவானி ஆறு


முன்னுரை; 

               நாம் ஆரோக்கியமாக வாழ காற்று,தண்ணீர்,உணவு இம்மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். பொது அறிவு வளர்த்து  புது உலகைப் படைக்க, தமிழ் இலக்கியங்களையும்,வாழ்க்கை வரலாறுகளையும் ,அறிவியல் கண்டுபிடிப்புகளையும் வாசிக்கிறோம்.ஆனால் நம்தேவைகளைப்பெருக்கி வெளியேற்றப்படும் விசக்கழிவுகளை பவானி ஆற்றில் கலந்து மாசுபடுத்தி இயற்கையைச் சீரழிக்கிறோம். நம் ஜீவநதியான பவானி ஆறு நொய்யல்நதிபோல,கூவம்நதிபோல மாசடைந்துவருவதைக்கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.

பொருள்;

               நீலகிரி உயிர்ச்சூழல்மண்டலமான மேற்குத்தொடர்ச்சிமலையை  இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாக யுனெஸ்கோ  அறிவித்துள்ளது.இந்தமலையில்தான் நம் பவானி ஆறு உற்பத்தி ஆகி மூலிகைத்தாவரங்கள் நிறைந்த சோலைவனங்களுக்குள் புகுந்து மருத்துவக்குணம் பெற்று பரிசுத்தமான ஆறாக பெருகி சுமார் ஐம்பதுஇலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உயிர்வளமாக விளங்கி வருகின்றது.அதேவேளை நமது தேவைகளைப்பெருக்கியதாலும்,போதிய விழிப்புணர்வு இல்லாதகாரணத்தாலும்,விழிப்புணர்வு இருந்தும் கண்டுகொள்ளாதகாரணத்தாலும் நம் பவானி ஆறு மாசுபட்டு கழிவுநீராக ஓடுகிறது.அதனை நாமும் குடிநீராகப் பயன்படுத்திவருகிறோம்.

காரணம்;

                 தேக்கம்பட்டியில் கலந்துவிடப்படும் காகித ஆலையின் இரசாயனக்கழிவுகள் தொடங்கி சத்தியமங்கலம்வரை பதினைந்துக்கும் அதிகமான தொழிற்சாலைகளின் இரசாயனக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதாலும், பெருகிவரும் குடியிருப்புகளின் கழிப்பிடக்கழிவுகளும்,சமையலறைக்கழிவுகளும், மோட்டார்வாகனங்களின் பணிமனைக்  கழிவுகளும்,  மருத்துவமனைகளின் கழிவுகளும், நவீன விவசாயத்திற்குப் பயன்படுத்தும் இரசாயன உரங்களின் எச்சங்களும்,களைக்கொல்லிகளின் எச்சங்களும்,பூச்சிவிரட்டிகள்,பூச்சிக்கொல்லி மருந்துகள்,களைக்கொல்லிகள் ஆகியவற்றின் எச்சங்களும் பூமியில் படிந்து மழைக்காலங்களில் கரைந்து ஆற்றில் கலப்பதாலும் பவானி ஆறு மாசடைந்து வருகிறது.

விளைவுகள்;

                நம் பவானி ஆறு பல்லுயிர் வளமைபெற்று நமக்கும்,விவசாயத்திற்கும்,கால்நடைகளுக்கும்,ஆற்றுநீரில் வாழும் உயிரினங்களுக்கும் பலநூறு ஆண்டுகளாக சுத்தமான தண்ணீரை வழங்கி வந்த‍து.அதேநேரத்தில்நமது நாகரீக வளர்ச்சியால் உருவாகும் அனைத்து அசுத்தங்களையும் ஆற்றில் கலந்து அரைநூற்றாண்டுக்குள் அதாவது ஐம்பது ஆண்டுக்குள் மாசுபடுத்திவிட்டோம்.கழிப்பிடங்களின் மலக்கழிவுகளையும் செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும்  மலக்கழிவுகளையும் ஆற்றில் நேரடியாக‍க்கலந்து வருகிறோம்.இதனால் மனித மலத்தில் மட்டும் உருவாகும் (FECAL COLIFORM)  பீக்கல்கோலிபாரம் என்னும் நுண்ணுயிரி 100 மில்லி தண்ணீரில் 310 MNP (Most Probable Number) அளவில் அதிகரித்து குடிக்கவே தகுதியில்லாத தண்ணீராக கழிவுநீராக மாறிவிட்டது. இதனால் ம‍ர்ம‍க்காய்ச்சல்,தோல்வியாதி,கண்நோய்கள்,உணவுக்குழாய்நோய்கள்,நரம்புநோய்கள், புற்றுநோய்,சளி,இருமல் என புதுப்புது நோய்களை அனுபவித்து வேதனைப்படுகிறோம்.

தீர்வுகள்;

                முதலில் தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம். பண்டிகைகாலங்களில் உருவாகும் கழிவுகளான பூமாலைகள் மற்றும் பூஜைப்பொருட்களையும்,ஆற்றில் வீசுவதைத்தவிர்க்கவேண்டும்.கோழிக்கறிக்கழிவுகளையும்,மீன்கடைகளின் கழிவுகளையும்,மருத்துமனைகளின் கழிவுகளையும் ஆற்றில் வீசுவதைத்தவிர்க்கவேண்டும். மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகளும்,சுகாதாரவிதிமுறைகளும்,குடியிருப்பு விதிமுறைகளும் பற்றிய அறிக்கைகளைப்பரப்ப வேண்டும். புத்தக‍த்திருவிழா,கோவில்திருவிழா,சுற்றுலாத்தலங்கள்,ஆன்மீகத்தலங்கள்,பேருந்துநிலையங்கள்,நூலகங்கள்,கல்விநிலையங்கள்,தினசரிச்சந்தைகள்,மருத்துவமனைகள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் பவானி ஆறு மாசடைதலினால்  மனிதகுலத்துக்கு ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் பவானி ஆறு பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வும் கொடுத்து  மாசடையச்செய்வதைத்தடுக்கவேண்டும். ஆற்றின் ஓரப்பகுதியில் உள்ள தரிசுநிலங்களில்  சூழலியலாளர்கள்,தன்னார்வலர்களின் உதவியுடன் நிறைய மரங்களை வளர்த்து  பசுமையை மீட்டெடுத்து அதிக மழை பெற வேண்டும்.ஆறுகளில் மண் எடுப்பதைத்தடுக்கவேண்டும்.தொழிற்சாலைகள்,சாயப்பட்டறைகள்,குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவுநீரை சுத்தப்படுத்தி  மறுசுழற்சி பயன்பாடுகளுக்கு அதாவது வேறுபயன்பாடுகளுக்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மலக்கழிவுகளையும்,மக்கும்குப்பைகளையும் கம்போஸ்ட் செய்து விவசாய நிலங்களுக்கு உரமாக ப்பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடக்கழிவுகளையும், மருத்துவக்கழிவுகளையும்,பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளையும் சாலை அமைக்கும் மூலப்பொருட்களோடு கலந்து பயன்படுத்தவேண்டும்.இதற்காக நெடுஞ்சாலைத்துறையுடன் ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சிகள் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

முடிவுரை; 

              மாணவர்களாகிய நாம் ஆசிரியர்களின் உதவியோடும்,பெற்றோர்களின் துணையோடும், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடும் பவானி ஆறு பாதுகாப்புக்குழு அமைத்து நாமும் விழிப்புணர்வு கொள்வதுடன் மக்களுக்கும் பரப்புரை செய்ய வேண்டும்.அரசாங்கத்தை மட்டுமே குறைகூறாமல் ஆட்சித்துறை,நீதித்துறை,வருவாய்த்துறை,காவல்துறை உட்பட அனைவருக்கும் பாதிப்பு என்பதை வலியுறுத்தி மனிதசமூகமாக ஒன்றுபட்டு உணவுத‍ந்து உயிர்தந்த பவானி ந்தியை நம்மால் நாசமடைவதைப்பட்டியலிட்டு தவிர்ப்போமேயானால் அரசியல் பாகுபாடின்றி ஒன்றிணைந்து  முயற்சித்தோமானால் மாசடைந்த பவானி ஆற்றை ஜீவ‍நதியாக மீட்டெடுக்கலாம் .

நாம் வாழும் ஒரே பூமியைக் காக்க,நமது சந்த‍தியினரைக் காக்க,இனியாவது நம் ஜீவந‍தியான பவானி ஆற்றைக்காப்போம்.

மாணவர் பெயர்; **************************

வகுப்பு                     *****************************

பள்ளியின் பெயர்********************

ஊர்                           ********************

வழிகாட்டுநர்; *********************************

உறவுமுறை ;அப்பா,

களப்பணியிடங்கள்;

ஆற்றுப்பாலம்,குடிநீரேற்றப்பகுதி, சாக்கடைக்கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்குமிடங்கள்.

இணைப்பு; புகைப்படங்கள்,துண்டறிக்கைகள்,

கையொப்பம்**********************

நாள் **********************

நேரம் ********************

 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...