28 பிப்ரவரி 2024

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                  

                                

                    முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D.,  

                              ( Dr.R.K.Manikkam, professor, Writer )

                       தோற்றம்; 17.01.1943      மறைவு; 25.02.2024                                                                    

                                          விதைகள் வாசகர் வட்டம் வெளியிட்ட 

                    "சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு"                                                                   நூல் ஆசிரியர் 


                               மனிதருள் ஓர் மாணிக்கம் 

          முதுமைக்கே உரிய நோய்களின் பிடியில் சிலகாலம் சிக்கியிருந்த முனைவர் இரா.கா.மாணிக்கம் அவர்கள் 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறரை மணியளவில் இவ் உலக வாழ்வை நீத்துத் தம் உள்ளங்கவர்ந்த  தில்லைக் கூத்தனின் திருவடி சேர்ந்தார். சரியாகச் சொல்வதென்றால் அவர் இம் மண்ணுலகில் வாழ்ந்த காலம் எண்பத்தோர் ஆண்டுகள் ஒரு மாதம் எட்டு நாள்கள்.

               ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கொங்கர்பாளையம் என்னும் சிற்றூரில் சீர்மிகு வேளாண் குடும்பத்தில் 17.01.1943 அன்று பிறந்தார். 

            பெற்றோர் திரு.காளியண்ணன் – திருமதி செல்லம்மாள். இவர்கள் தம் மகனுக்குச் சூட்டிய பெயர் உத்தரராசு என்பதாகும். இந்தக் குடும்பம் கொங்கர்பாளையத்திலிருந்து அருகிலுள்ள, அக் காலத்தில் இராஜேந்திரபுரம் என அழைக்கப்பட்ட, இப்போது மூலவாய்க்கால் என அழைக்கப்படும் ஊருக்கு இடம் பெயர்ந்தது. 1974இல் மீண்டும் கொங்கர்பாளையம் சென்று அங்கே வீடுகட்டித் தோட்டம் வாங்கி விவசாயம் செய்தனர்.

            உத்தரராசுவுக்குப் பள்ளியில் சேர்க்கும் வயது வந்தவுடன் முதலில் உள்ளூரில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர்.. பின்னர் சத்தியமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கச் சென்றபோது அப் பள்ளியின் தலைமையாசிரியர் உத்தரராசு என்னும் வடமொழிப் பெயரை நீக்கிவிட்டு, மாணிக்கம் என்னும் அழகிய தமிழ்ப்பெயரைச் சூட்டி, இராஜேந்திரபுரம் காளியண்ணன் மகன் மாணிக்கம் எனப் பள்ளிப் பதிவேட்டில் பதிவு செய்தார்! அப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார் மாணிக்கம் போன்ற மாணிக்கம்.

           தொடர்ந்து  கோவை பூ.சா.கோ. கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்தார். தொடர்ந்து அங்கேயே தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து முயன்று படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அந்த அளவில் ஓர் அரசு அலுவலகத்தில் எழுத்தராகப் போயிருக்கலாம். ஆனால் தமிழின்பால் அவருக்கிருந்த தணியாத ஆர்வத்தின் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து முறையாகப் படித்து, வகுப்பில் முதல் மாணாக்கராக விளங்கினார். பல்கலைக்கழகத் தேர்வில் உச்ச மதிப்பெண் பெற்று, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் மாணாக்கர் என்னும் பெருமையோடு, தெ.பொ.மீ. தங்கப் பதக்கமும் வென்றார்.

          தாம் விரும்பிய ஆசிரியப்பணி அவரைத் தேடி வந்தது. பூ.சா.கோ. கல்லூரியில் பணியாற்ற வருமாறு வந்த அழைப்பை ஏற்று 1965 ஆம் ஆண்டு தம் இருபத்திரண்டாம் அகவையில் அரும்பும் மீசையுடன் அளவில்லா ஆசையுடன் அங்கே இளம் பேராசிரியராய்ப் பணியாற்றத் தொடங்கினார். புகழ்பெற்ற அறிஞர் பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி அவர்களின் தலைமையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் கோவில்பட்டி கோ.வெங்கிடுசாமி நாயுடு கல்லூரியில் நான்காண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு கோபி கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். பணியில் இருக்கும்போதே பூ.சா.கோ. கல்லூரியில் பகுதி நேர ஆய்வாளராகச் சேர்ந்து எம்.ஃபில்., பிஎச்.டி பட்டங்களைப் பெற்றார். 

     கோபி கலை அறிவியல் கல்லூரியில் முப்பத்தோர் ஆண்டுகள் தகைசான்ற தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 2001ஆம் ஆண்டில் தமிழ்த்துறைத் தலைவர் என்ற நிலையில் பணிநிறைவு பெற்றார்.  

          தம் பணிக்காலத்தில் ஆய்வில் நாட்டமுள்ளவர் யார் அவரை அணுகினாலும், பள்ளி ஆசிரியர் கல்லூரிப் பேராசிரியர் என்ற பாகுபாடு பார்க்காமல் ஆய்வு நெறியாளராக இருந்து அவர்களைப் பட்டப் பேற்றுக்கு உரியவராக ஆக்கி மகிழ்ந்தார்; மகிழ்வித்தார். அவரது வழிகாட்டுதலில் இருபத்தொருவர்  எம்.ஃபில் பட்டமும், ஐவர் பிஎச்.டி பட்டமும் பெற்றனர். அம் மாணாக்கர் அணியில் நானும் ஒருவன். அவரது மேலான வழிகாட்டுதலில் இரண்டு ஆய்வுப் பட்டங்களைப் பெற்றேன்.

                 தகுதி உடையார்க்குத் தக்க வாய்ப்புகள் எப்போதும் தேடி வரும். அந்த வகையில் பணிநிறைவுக்குப் பின்னரும் அப்போது புதிதாகத் தொடங்கப்பெற்ற சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக மூன்று ஆண்டுகள் திறம்படப் பணியாற்றித் தன்விருப்பில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு குன்றாத தாளாண்மையுடன் விரும்பி வேளாண்மை செய்தார்.

         பணிக்காலத்தில் நிறைய ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை பல்வேறு இதழ்களுக்கு அணி சேர்த்தன. பணிநிறைவுக்குப் பின் தன் துணைவியாருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தமயந்தி பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி அதன் வாயிலாக பதினைந்து நூல்களை எழுதி வெளியிட்டார். 

          ஊர் வரலாறுகளை எழுதுவதில் தனித்திறன் பெற்று விளங்கினார். சத்தியமங்கலம் வரலாறு, கொங்கர்பாளையம் வரலாறு, விரைவில் வெளிவரவுள்ள அந்தியூர் வரலாறு ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை ஆகும். 

             இவர் தொகுத்து வெளியிட்ட பேராசிரியர் கா.அரங்கசாமி, பேராசிரியர் செ.சு.பழனிசாமி ஆகியோரின் நினைவேந்தல் மலர்கள் இன்றும் என்றும் பெரிதாகப் பேசப்படும் சிறப்புடையன.

         கோபி ஜேசீஸ் என்னும் அமைப்பின் தலைவராய் இருந்து சமூகப் பணிகளைச் செவ்வனே செய்தார். அவ்வமைப்பின் வாயிலாக வெளிவந்த ‘கரும்பு’ இதழின் பதிப்பாசிரியராய்ப் பல்லாண்டுகள் பணி செய்தார்.

             கோபி சுழற்சங்கத்தின் தலைவராகவும் விளங்கி நற்பணிகளை நாட்டமுடன் செய்தார்.

                கோபியில் திருக்குறள் பேரவையின் தலைமைப் போறுப்பேற்று அதன் நிதி நிலையை மேம்படுத்திச் செயல்பாடுகளையும் முடுக்கிவிட்டார்.

                  கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் நான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்றோர் ஆசிரியர்க் கழகத்தின் தலைவராக இருந்து பள்ளியின் செயல்பாடுகளுக்குப் பல்லாற்றானும் உதவியதை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.

                 இரா.கா.மாணிக்கம் அவர்களின் துணைவியார் திருமதி.தமயந்தி அவர்கள் ஈராண்டுகளுக்கு முன் இறையடி சேர்ந்தார்கள். 

                   மகேந்திரன், அரவிந்தன் என்னும் மக்களும், மூன்று பெயரன்களும் இவர் தக்கார் என்பதற்குச் சான்றெச்சங்களாகத் திகழும் வழித் தோன்றல்கள்.

                     வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த நம் பேராசிரியரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். 🙏

ஐயா அவர்களின் மாணாக்கராக,

-முனைவர் அ.கோவிந்தராஜூ,( கரூர்).

தலைமையாசிரியர்(பணிஓய்வு) ,

வைரவிழா மேல்நிலைப் பள்ளி,

கோபிசெட்டிபாளையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...