மறைந்தார் மாமனிதர்
முனைவர்.இரா.கா.மாணிக்கம் தமிழ்த்துறை பேராசிரியர் அவர்கள்..கோபி செட்டிபாளையம்.
தோற்றம்; 17.01.1943 மறைவு; 25.02.2024
பாராளும் பைந்தமிழைப்
பார்போற்றக் கற்றிருந்தார்
யாரோடும் பகையறியா
அரும்பண்பு பெற்றிருந்தார்
நூறாண்டு வாழ்ந்திருந்து
நூல்செய்வார் என்றிருந்தோம்
தீராத நோய்த்தொற்றால்
திடுமென்று மறைந்துவிட்டார்!
அன்பாகப் பேர்சொல்லி
அழைக்கின்ற வாயெங்கே?
என்றைக்கும் வழங்குகின்ற
ஏந்தலவர் கைகளெங்கே?
இரக்கத்தின் இருப்பிடமாய்
இருந்தவிரு கண்களெங்கே?
மறக்கத்தான் மனம்வருமோ
மாமனிதர் நினைவுகளை.
காப்பியரைக் காணுதற்குக்
ககனந்தான் சென்றாரோ?
பாப்புனைந்த பாரதியைப்
பார்க்கத்தான் சென்றாரோ?
தீப்பட்ட புழுவினைப்போல்
துடிக்கின்றோம் வேதனையில்
சாப்பறையும் கொட்டுகின்ற
சங்கடமும் வந்ததம்மா!
பொய்சொல்லா மாணிக்கம்
போனதிசை தெரியவில்லை
செய்நூல்கள் அழியாது
செப்பிடுமே அவர்திறனை
பெய்மழைபோல் பயன்தந்த
பெருமகனைக் காணாமல்
கைபிசைந்து நிற்கின்றோம்
கண்ணீரும் குறையவில்லை!
முல்லைப்பூ விரிவதுபோல்
முறுவலிக்கும் இன்முகத்தார்
இல்லைஇனி என்பதையே
ஏற்கமனம் மறுக்கிறதே
தில்லைவாழ் பெருங்கூத்தன்
திருவடியில் அவர்ஆன்மா
எல்லையிலா அமைதியிலே
எப்போதும் திளைக்கட்டும்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
அவருடைய மாணாக்கர்,
இனியன் அ.கோவிந்தராஜூ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக