07 நவம்பர் 2014

நடிகர் சிவக்குமார்!...

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். 
                     

            நடிப்புலகில் ஒரு மாசற்ற மாணிக்கம்.தனிமனித ஒழுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு! நம்ம கொங்குத்தமிழன் நடிகர் சிவக்குமார் அவர்களது வாழ்க்கைக்குறிப்பு இதோ கவிதையாக..........பதிவிட்ட கவிதாயினி அமுதா பொற்கொடி அவர்களுக்கு நன்றிங்க!..
     

மாய உலகில் ஒரு மாசற்ற சுவடு- 
நடிகர் சிவக்குமார் வாழ்க்கை குறிப்பு.......

 என் கேள்விக்கென்ன பதில்?
என் கேள்விக்கென்ன பதில்?
என்று கேட்ட நாயகனே
பல கேள்விகளுக்கு விடையானவனே

வாழ்வியலின் தத்துவமே
வாலிபத்தின் நிரந்தரமே
ஓவியத்தின் வித்தகமே
காப்பியத்தின் மறு புத்தகமே
வாய்மைக்கு உகந்தவனே
தீமைக்கு எத்தகனே
ஆயகலை பெற்றவனே
யோகநிலை கற்றவனே

உன் வாழ்க்கைவழிப் பயணத்தை
என் வரிகளில் வடிவமைக்கின்றேன்
ஏற்றல் குறைதல் இருப்பினும்
ஏற்றுக்கொள்வாய் புனிதனே

அக்டோபர் 27-1941 ஆம் ஆண்டு
ஆசான் பெற்றெடுத்த பழநிச்சாமியே
அற்ப ஆயுளில் தந்தை தமயனை இழந்ததால்
அன்னையின் அரும் உழைப்பாலே
அரிச்சுவடி நீ கற்றாய்
ஆவி கொண்ட ஓவியம் கற்க
தேடிச் சென்றாய் சென்னை கலைக் கல்லூரி
மேவிடும் உன் கை அசைவால்
பிரகதீசுவரர் ஆலயமும் மீனாட்சி அம்மன் கோவிலும்
திருமலை திருப்பதியும் திருமலை நாயக்கர் மகாலும்
தீர்க்கமான சித்திரம் ஆயின
உன் பயணம் அங்கே தொடரவில்லை

விபத்தானாலும் 1965-ல் உன் திரையுலக பிரவேசம்
முகப்பானது மூத்தோர் ஆசி பெற்றதனால்
மூன்று தலைமுறை அதிலே கண்டாய்
முத்தாய்ப்பாய் மூன்று திரைப்பட விருது வென்றாய்
நடித்த திரைப்படம் இருநூறுக்கு மேல்
உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன்,
ரோசாப்பூ ரவிக்கைகாரி, சிந்து பைரவி
உன் நடிப்பு பயணத்தில் மகுடம் சூடின
மார்க்கண்டேயன் எனப் பெயர்கொன்டவனே
மாய உலகில் மாசற்று நின்றவனே - எதுவும்
முடித்த எண்ணம் உன்னில் வரவில்லை

தேடல் வாழ்க்கையின் தூண்டுகோல் அல்லவா
தேடல் உனக்குள் தொடங்கியது
ஓவியன் நான்
ஓவியத்தில் சரித்திரம் படைக்கவில்லை
நடிகன் நான்
நடிப்பிற்கு நான் இலக்கணம் இல்லை
உன்னை நீயே ஆய்ந்து கொண்டாய்
உனக்குள் பிறந்தது உண்மை ஞானம்

கசடான பழைய புகழை சுமக்காதே
கடக்க வேண்டிய தூரம் வெகுதூரம்
காசுக்காய் அடுத்தவன் வசனம் பேசியது போதும்
உனக்கு நீயே எசமான்
உனக்கு நீயே படைப்பாளி
உனக்குள் எழுந்ததால் இவ்வெண்ணம்
உன் பார்வையில் விழுந்தது இலக்கிய வண்ணம்
மேடைகள் ஏறி முழங்கத்தொடங்கினாய்
பேச்சில் சொல் அலங்காரம் இல்லை
வீச்சில் உண்மை உறைந்து இருந்தது - அதனால்
எம்மவர் உள்ளத்தில் அது நிறைந்தது
இலக்கியம் இறைநம்பிக்கை
மனித நேயம் மனவளம் என
உன் உரை கரை புரண்டு ஓடியது
இது "ராஜ பாட்டை அல்ல" என் நூல் எழுதி
எழுத்தாளன் எனும் பட்டயம் சேர்த்தாய்

உமை ஒரு பாகமாய் கொண்ட சிவன் போல்
உன் வாழ்க்கை துணைவியாய் இலக்குமியை ஏற்றாய்
முத்தமிழ் போல் மூன்று பிள்ளைகள் ஈன்றாய்
அவர் எண்ணியதை திண்ணியமாக்கி
ஏற்பு அடைய நல வித்திட்டாய்

சொன்னதைச் செய்யும் செயல் வீரன் நீ
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையை அமைத்து
ஏழை எளிய மக்கள் உயர
கல்விக் கட்டணம் உகந்து ஈன்றாய்
உன் அகரம் இன்று சிகரம் தொட்டது

நீயே நிரந்தரம் என்றாய் உனக்குள்
மனமே நம் வினை ஊக்கி - அதனால்
வனப்பு சற்றும் குறையாமல்
வாலிபத்தை வசியம் செய்தாய்
இதுவும் கடந்து போகும் என்ற
கீதையின் உன்னத வாக்கிற்கு
உயிரோட்டமும் நீயே தந்தாய்

ஏழையாய்ப் பிறந்தாய்
எளியவனாய் வாழ்ந்தாய்
ஓவியனாய் பயணித்தாய்
நடிகனாய் முத்திரை பதித்தாய்
மனிதனாய் இத்திரை மதித்தாய்
தனிமையை ரசித்தாய்
சக மனிதனை நேசித்தாய்

மறை கூறும் முறை கொண்டு வாழ்பவனே
கரை அற்ற திரையுலகில் வரை கொண்டு நின்றவனே
பறை அடித்து உன் புகழைப் பாரெல்லாம் நான் உரைக்க
திருமுறை நான் படைத்துவிட்டேன்
மறுமுறை நீ பிறந்தாலும் - இப்புவி
புகழுரைக்கும் சிவக்குமாராய்ப் பிறப்பாய்
வாழ்க நீ பல நூற்றாண்டு
வான் புகழும் வள்ளுவம் போல்!

அமுதா அம்மு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...