07 நவம்பர் 2014

நொய்யல் ஆறு...கோவை குற்றாலம்...

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். 
 தமிழனின் நீர் மேலாண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு..நொய்யல் நதியும் ஆகும்.
           மேற்குத்தொடர்ச்சி மலையில் கோயமுத்தூருக்கு மேலே சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் மழை பெய்யும்போது அந்த மழைநீரானது  சிறுசிறு ஓடைகளாக உருப்பெற்று ஏழு ஓடைகளாகிறது.இந்த ஏழு ஓடைகளும் ஒன்று சேர்ந்து குஞ்சரான்முடி என்று பெயர் பெறுகிறது.இதுதான் சிறுவாணி அடிவாரத்தில் காணும் கோவை குற்றாலம் ஆகும்.இந்த கோவை குற்றாலத்தை ப்ரியாறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க இன்னொரு பக்கத்தில் அதாவது வெள்ளிங்கிரி மலையிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பெய்யும் மழை ஐந்து ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என்று பெறுகிறது.இந்த ஓடை பெரியாறுடன் செம்மேடு அருகில் கலக்கிறது.
இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என்று அழைக்கப்படுவதில்லை!.
இந்த பெரியாறுடன்  தூத்துமலை ஓடை, கொடுவாய்ப்புடி ஓடை,பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என்று அழைக்கப்படுகிறது.
 இந்த சின்னாறு  சாடிவயல் வழியாக ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலைப்படுகையில் ஒன்று சேர்கிறது.பெரியாறு மற்றும் சின்னாறு சேர்ந்தவுடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் இருபது ஓடைகளை  ஒன்று சேர்த்து வரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறு தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது.இதை வைதேகி நீர்வீழ்ச்சி என்பர்.
 தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய அனைத்து ஆறுகளும் ஒன்று சேர்ந்தபிறகுதான் நொய்யல் ஆறு என்று பெயர் பெறுகிறது. இந்த நொய்யல் ஆறு பேரூர்,கோவைநகர்,சூலூர்,திருப்பூர்,கொடுமணல்,காங்கயம்,வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்னும் கிராமத்தில் காவிரி நதியுடன் இந்த நொய்யல் ஆறு கலக்கிறது. 
           நொய்யல் ஆற்றின் சராசரி நீளம் 160கி.மீ. முதல் 170கி.மீ. ஆகும்.இந்த ஆற்றின் சராசரி அகலம் 30அடி ஆகும்.நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகள் 32 எண்ணிக்கை ஆகும்.குளங்கள் 19 ஆகும். 
             நொய்யல் ஆற்றில் வருடம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு பத்து மாதங்கள் தண்ணீர் வரத்து உள்ளது. இந்த தண்ணீரையும் மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரையும் நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். 
                      ஆண்டிபாளையம் குளம். நொய்யல் ஆற்றின் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு. நொய்யல் ஆற்றில் வருகின்ற  தண்ணீர் மங்கலம் அருகேயுள்ள தடுப்பணையால் தடுக்கப்பட்டு 7 கி.மீ வாய்க்கால் மூலம் ஆண்டிபாளையம் குளத்திற்கு வருகிறது. இந்தக்குளம் நிரம்பியவுடன்.. வெளியேறும் நீர் மீண்டும் நொய்யலை அடைகிறது.

                          நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும்போது அந்த தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து பின்னர் சிறிய வாய்க்கால் மூலமாக குளங்களுக்கு தண்ணீரை எடுத்துச்செல்லும் முறை நொய்யல் ஆற்றில் பயன்படுத்தப்படுகிறது.நொய்யல் ஆறு வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் வேகம் மணிக்கு ஒருமுறை  மாறுபடும் தன்மை கொண்டது. அதனால் திடீர் என குளங்களை நிரப்பிவிடும்.அதனால் குளம் அழியும் ஆபத்து உள்ளது.
               அதனால்தான் தடுப்பணைகள் மூலம் தடுத்து  சிறு வாய்க்கால் வழியாக பாதிப்பு இல்லாமல் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
                                கூடுதுறையில் நொய்யல் என்று பெயர் பெற்ற பிறகு கோவையை நோக்கி ஓடி வருகிறது.அதே சமயம் நொய்யலின் குறுக்கே எந்த தடுப்பு இருந்தாலும் அதை தகர்த்துக்கொண்டு ஓடி வர காரணம் உள்ளது. 
                    காரணம் கூடுதுறையில் இருந்து ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் ஒரு மீட்டர் தாழ்வாக உள்ளது.அதனால் 30கிலோமீட்டர் தூரமுள்ள கோவையை நோக்கி ஓடிவரும் நொய்யல் ஆற்றின் நிலை 15மீட்டர் தாழ்வாக இறங்கியுள்ளது.
               இந்த புவியமைப்பின் நிலை காவிரி ஆற்றுடன் கலக்கும் இடம் வரை இயற்கையாகவே அமைந்துள்ளது.இதனால்தான் சொய்யல் ஆறு சீறிப்பாய்ந்து வருகிறது. 
           

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...