14 டிசம்பர் 2011

சமயம்

                              சமயம்
                        உலகின் தொன்மையான மதங்களுள் அடங்கக்கூடிய இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன இந்தியாவில் தோன்றியவை. இவற்றுள் இந்து சமயத்தின் தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாது. இந்து சமயத்தின் அடிப்படை நூல்களுள் ஒன்றான ரிக்வேதம் உலகின் மிகப் பழைய நூல்களுள் ஒன்று. எனினும் இந்தியாவுக்கு வெளியே இதன் பரவல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. ஆனால், பௌத்தம் ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இன்றுவரை நிலைபெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து சமயங்கள் வெளிநாடுகளுக்குப் பரவியது ஒருபுறமிருக்க, வெளிச் சமயங்களும் இந்தியாவுக்கு வந்து நிலை பெற்றுள்ளன.

இயேசு கிறித்துவின் சீடர்களில் ஒருவராகிய புனித தோமா கேரள கடற்கரையில் அமைந்துள்ள பண்டைய சேர நாட்டு முசிறிப்பட்டினத்தில் (கொடுங்களூர்) கி.பி. 52/53இல் வந்திறங்கி, கிறித்தவ சமயத்தைப் பரப்பினார் என்றொரு மரபு கேரள கிறித்தவர் நடுவே உறுதியாக நிலைத்துள்ளது. புனித தோமா மயிலாப்பூரில் உயிர்துறந்தார் என்றும் மரபுவழி அறியப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவம் இந்தியாவில் வேரூன்றியிருந்தது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர் இந்தியாவில் கிறித்தவம் பரவ வழிவகுத்தனர். 1498இல் வாஸ்கோ தெ காமா இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்தபின் போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்பினர்.


13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்து அரசுகளையும், பேரரசுகளையும் நிறுவிய இஸ்லாமியர்கள் மூலமாக இஸ்லாம் சமயம் இந்தியாவுக்குள் வளரத் தொடங்கியது.


2001இல் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்குப்படி, இந்தியாவில் 80.5% மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். உலகிலேயே இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது. கிறித்தவம், சீக்கியம், சமணம், அய்யாவழி, பௌத்தம், யூதம், பார்சீகம் ஆகியவை இந்தியாவில் பின்பற்றப்படும் மற்ற சமயங்கள். இந்திய மக்கள் தொகையில் 13.4% இஸ்லாமியர்; 2.5% கிறித்தவர் உள்ளனர்.

சமூக அமைப்பு

சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இது தவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.


இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் (தாசிகள்) என பெண்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாக பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என கூட சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள் போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களை சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாக பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன.


சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதை தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.


பண்பாடு

முதன்மைக் கட்டுரை: இந்தியாவின் பண்பாடு


இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் என பல கூறுகளை கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளை கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.


கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை, இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவை தவிர நாட்டார் இசை, தமிழிசை என பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம் மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.


உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமஸ்கிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் என பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.


கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி என கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.


பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாக பாவிக்கப்படும் கணித எண்கள், இந்து-அரேபிக் எண்கள் ஆகும். இந்தியாவிலேயே பூச்சியம் என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.


சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும் கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.


இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.


இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளை காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டை குறிப்பிடத்தக்க அளவு மேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.


பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்

விளையாட்டு

ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா


ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு எனினும் கிரிக்கெட் விளையாட்டே மிகப் பிரபலமாக உள்ளது.டென்னிஸ், செஸ், கால்பந்து (குறிப்பாக கேரளா, வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்) ஆகியவை பிரபலமான பிற விளையாட்டுகளாகும். கபடி ( சடுகுடு ), மல்யுத்தம், கில்லி தண்டா ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களாகும். ஒலிம்பிக் போட்டிகளில், தனி நபர் மற்றும் தடகள விளையாட்டுகளில் இந்தியாவின் சாதனைகள் பெரிய அளவில் இல்லை. ஹாக்கியில் மட்டும் சில முறைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்த வரையில் உலக அளவிலான இரட்டையர் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


சதுரங்கம், கேரம், போலோ, ஸ்னூக்கர், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகள் இந்தியாவிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

[தொகு] விடுமுறை நாட்கள்

இந்தியாவில் மூன்று நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவை:


1. விடுதலை நாள் (ஆகஸ்ட் 15)

2. குடியரசு நாள் (ஜனவரி 26)
3. காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2)

இவை தவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...