14 டிசம்பர் 2011

இந்தியாவின் தாவர, விலங்கு- வளங்கள்

             இந்தியாவின் தாவர, விலங்கு- வளங்கள்

     இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய (endemic) இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன.

இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட மத்திய இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சம வெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் ஞானம் பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.


பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சிங்கவால் மந்தி (Trachypithecus johnii), புபோ பெதோமீ (Bufo beddomii) என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும்.


அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், தேசியப் பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் (Ramsar Convention) எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...