30 டிசம்பர் 2011

"ஆங்கிலம்"

அன்பு நண்பர்களே,வணக்கம். 
இன்று ஆங்கிலம் பேசுவது நாகரீகமாகவும்,படித்த மேதாவிகள் போன்றும் ஒரு மாயையைத் தோற்றுவித்து நம்மிடையே வலம் வருகிறது.அந்த ஒலிப்பொழுக்கமற்ற மொழி,நமது நுண்ணுணர்வு மிக்க செம்மொழியான தமிழ் மொழியை விஞ்சி நிற்கக்காரணம் பற்றி சிறிது இங்கு காண்போம்.

          "ஆங்கிலம்" இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது ஜெர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். ஜெர்மனிய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைத்ததாகும். இருப்பினும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும்.

இன்று உலகில்  சீனம், ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. உலகஅளவில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை 1.8 பில்லியன் ஆகும்.
அண்மைக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சியினால் ஆங்கிலம் உலகெங்கும் மென்மேலும் பரவி வருகின்றது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை (United Nations - UN), ஐரோப்பிய ஒன்றியம் (European Union - EU), பொதுநலவாய நாடுகள் (Commonwealth of Nations), ஐரோப்பிய ஆலோசனை சபை (Council of Europe), வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization - NATO) போன்ற உலக அமைப்புகளிலும் ஆங்கிலம் முதன்மை அலுவல் மொழியாக இருக்கின்றது. மற்றும் பொருளாதாரம், மருத்துவம், அரசியல், நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், இராணுவம் பலம், ஊடகத்துறை, ஆங்கில கலாச்சார மோகம், கணனி, இணையம் போன்றவற்றின் காரணமாகவும் ஆங்கிலம் பலருக்கு அவசிய மொழியாகவும், விருப்பு மொழியாகவும் மாறிவருகிறது. அத்துடன் இன்றைய இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படு மொழியாகவும் ஆங்கிலமே காணப்படுகின்றது.
ஆங்கில மொழியின் வரலாறு

சரி! இனி ஆங்கில மொழியின் வரலாற்றைப் பார்ப்போம்.

முந்தைய வரலாறு
     கி.மு 6500 ஐரோப்பிய நிலத்துடன் இணைந்திருந்த பனிப் பிரதேசம்; பனியுருகி கடல் மட்டம் உயர்ந்ததால் தீவாக தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றே, தற்போது "பிரித்தானியா" என்றழைக்கப்படும் தீவாகும்.

கி.மு 3000 புதிய கற்காலத்தின் தோற்றம் (New Stone Age begins) ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து கெல்டிக் மக்கள்; குழுமங்களாகப் பிரித்தானியாவில் வந்து குடியேறத் தொடங்கினர். அவர்கள் விவசாயிகளாக இருந்தனர். போர்க் குணமிக்கவர்களாகவும் விளங்கினர்.

கி.மு 2100 வெண்கலக் காலத்தின் தோற்றம் (Bronze Age begins)

கி.மு 2050 மக்கள் வெண்கலத்திலான உலோக வேலை, செப்பு, தகரம் போன்றவற்றைப் பயன்படுத்திய மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். மக்கள் வெண்கலத்திலானக் கருவிகள், ஆயுதங்கள் செய்து பயன்படுத்தத் தொடங்கினர்.

கி.மு 1200-ல் பிரித்தானியாவில் சிறிய கிராமங்கள் தோன்றிய காலகட்டமாகும். வணிகத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கின.

கி.மு 750 இரும்புக் காலத்தின் தோற்றம் (Iron Age); வெண்கலத்திற்கு பதிலாக மக்கள் இரும்பு பொருட்களை பயன்படுத்தத் தொடங்கினர்.
கி.மு 500 மத்திய ஐரோப்பியப் பகுதிகளில் இருந்தும் கெல்டிக் (Celts) இனக் குழுமங்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறத்தொடங்கினர். அவர்களும் விவசாயிகளாகவும், போர் குணமிக்கவர்களாகவுமே இருந்தனர்.

கெல்டிக் மக்கள் - கெல்டிக் மொழி (Celtic Language)

கெல்டிக் இனக் குழுமத்தினர் தங்களது விவசாய நிலங்களில் குடில்கள் அமைத்து சிறிய கிராமங்களாக வாழ்ந்தனர். வேட்டையாடுதலுடன், போர் விரும்பிகளாகவும் இருந்தனர். இரும்பில் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றை செய்யக் கூடியவர்களாவும் விளங்கினர். இந்த கெல்டிக் மக்கள் ஏற்கெனவே பிரித்தானியா வருகைதந்திருந்த கெல்டில் மக்களுடனும், சக கெல்டிக் இனக் குழுமத்தினருடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டனர். அதேவேளை கடவுள் பக்தி மிக்கவர்களாகவும் இருந்தனர். வானம், மின்னல், சூரியன் என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாக வழிபட்டனர். 400 க்கும் மேற்பட்ட தெய்வங்கள், தேவதைகளை அவர்களது வழிபாட்டில் இருந்ததாக நம்பப்படுகின்றது. இந்த கெல்டிக் இனக் குழுமங்கள் பேசிய பேச்சு மொழிகள், குழுமங்களிடையே வேறுபட்டவைகளாக இருந்தாலும், கிட்டத்தட்ட அம்மொழிகள் ஒரே மாதிரியானதாகவே இருந்தன.

இருப்பினும் இம்மக்களை "கெல்டிக் மக்கள்" என்றும், அவர்கள் பேசிய மொழியை "கெல்டிக் மொழி" என்றுமே ரோமானியர்கள் அழைத்தனர். இந்த "கெல்டிக்" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதன் அர்த்தம் (barbarians) பாபேரியன்கள் என்பதாகும். அதன் தமிழ் பொருள் "நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள்" என்பதாகும். ரோமானியர்கள் பிரித்தானிய இனக் குழுமத்தினர்களை மட்டுமன்றி, ஐரோப்பாவின் வாழ்ந்த பல்வேறு பழங்குடி மக்களையும் அழைக்கும் பொதுவான பெயராகவே "கெல்டிக்" எனும் சொல்லை பயன்படுத்தினர்.

உரோமர் ஆட்சிக் காலம் - இலத்தீன் மொழி (Latin Language)

கி.மு 55 இல் உரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் (Emperor Julius Caesar) இரண்டு படைஅணிகளுடன் வந்து பிரித்தானியாவை தாக்கி கைப்பற்ற முனைந்தார். கெல்டிக் இனக் குழுமத்தினர்; பல்வேறு குழுமங்களாக ஆட்சி அமைத்திருந்தனர். பல அரசர்கள் இருந்தனர். இவர்கள் உரோமர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடும் போர் புரிந்தனர். இருப்பினும் பிரித்தானியாவின் தென்-கிழக்கு பகுதிகளில் தாக்குதல் தொடுத்த ஜூலியஸ் சீசர், பல கெல்டிக் இனக் குழுமங்களை வெற்றிகொண்டபிறகே திரும்பிச் சென்றார். மீண்டும் கி.மு 54 இல் இரண்டாம் தடவையாக ஐந்து படைஅணிகள் (30,000 படை வீரர்கள், 2,000 குதிரை வீரர்கள்) சகிதம் வந்து தாமஸ் ஆற்றை கடந்து போரிட்டார். கடும் போரின் முடிவில் கெல்டிக் இன குழுமத்தினர் தோல்வியடைந்து, உரோமப் பேரரசுக்கு வரி செலுத்த ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பிரித்தானியா இயல்பு நிலையில் இருந்தது.

கி.மு 43 இல் பேரரசர் கிலாடியஸ் (Emperor Claudius) மூன்றாம் தடவையாக போரிட்டதன் வளைவாக பிரித்தானியா உரோமர்கள் வசம் வீழ்ந்தது. அதன் பின்னர் பிரித்தானியா; உரோமப் பேரரசின் ஓர் ஆட்சிப் பகுதியானது.

பிரித்தானியாவின் பூர்வக் குடிகள் பேசிய மொழி “கெல்டிக் மொழி” ஆகும். உரோமானியர்கள் பேசிய மொழி இலத்தீன் மொழியாகும்.

உரோமானியர்களின் இவ்வருகையே பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது எனலாம். உரோமர் ஆட்சி காலத்திலேயே ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளுக்குமான வணிகத் தொடர்புகளுக்கு ஏற்ற இடமாக தாமஸ் ஆற்றுடன் (The River Thames) இணைந்திருந்த நிலப்பரப்பு அமைந்திருப்பதை உணர்ந்து லண்டனை தலைநகராக உருவாக்கினர். அவர்கள் அதற்கு வழங்கியப் பெயர் "லண்டேனியம்" என்பதாகும். அப்பெயரே மருவி (Londinium > Landon) "லண்டன்" என்றானது. பிரித்தானியாவில் உரோமர் ஆட்சிக் காலத்திலேயே 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டி (Calendar) அறிமுகமானது. மக்கள் தொகை கணக்கிடும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. கோட்டைகள், குளியல் தடாகங்கள், பொதுக் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், வீதி அமைப்பு , பாலங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. அவற்றின் எஞ்சிய பகுதிகள் இன்றும்பிரித்தானியாவில் பல பகுதிகளில் சான்றாக உள்ளன. உரோமானியர்கள் ஆட்சிக் காலத்திலேயே அரச நிர்வாகம், நீதி, சட்டம், மருத்துவக் கல்வி போன்றவைகளும் பிரித்தானியாவில் அறிமுகமாகின. இவை அனைத்தும் இலத்தீன் மொழி வழியாகவே இருந்தன.

உரோமர்கள் பிரித்தானியாவை கைப்பற்றும் முன்னரே, பிரித்தானிய இனக்குழுமங்களின் பேச்சு வழக்கில் இலத்தின் சொற்கள் பயன்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக: camp, cook, inch, mill, mint (சில்லறை), noon, pillow, pound (நிறை அளவு), punt (படகு), street, wall போன்றவை. இச்சொற்கள் எப்படி கெல்டிக் மொழியினரின் பேச்சு வழக்கில் பயன்பட்டன என்றால்; பிரித்தானியாவில் வந்து குடியேறிய கெல்டிக் இனக்குழுமங்கள் ஐரோப்பியப் பகுதிகளில் இருந்தே வந்தனர். அக்காலக்கட்டத்தில் ஐரோப்பாவின் பெரும் பகுதி உரோமர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததாலும், அவர்களது இலத்தின் மொழி தாக்கமும் ஐரோப்பா எங்கும் பரவியிருந்ததே அதன் காரணமாகும்.

கெல்டிக் மக்களை போன்றே உரோமர்களும் பல தெய்வ வழிப்பாடு உடையவர்களாவே இருந்துள்ளனர். ரோமாபுரியில் கிறிஸ்தவ மதத் தோற்றத்தினைத் தொடர்ந்து, கி.பி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டு காலங்களில் ரோமாபுரிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வணிக மற்றும் போக்குவரத்து தொடர்புகள் ஊடாக பிரித்தானியாவிலும் ரோமன் கத்தோலிக்கம் துளிர்விடத் தொடங்கியது. இதன் வழியாகவும் பல இலத்தின் சொற்கள் பிரித்தானியரின் பேச்சு வழக்கில் கலந்தன. "கத்தோலிக்" எனும் சொல்லும் லத்தின் வழி வந்த ஒரு சொல்லேயாகும். அதன் ஆங்கிலப் பொருள் "அகிலம்" (Universal) என்பதாகும்.

கி.மு 43 இல் இருந்து கி.பி 410 வரை; நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் பிரித்தானியாவை தம் வசம் வைத்திருந்த ரோமானியர்கள், தமது தாயகமான ரோமாபுரிக்கு அதன் அண்டை நாடுகளின்   அச்சுறுத்தல் காரணமாக, தமது படைகளுடன் தாயகம் திரும்பவேண்டி ஏற்பட்டது. கி.பி 436 ஆம் ஆண்டு அளவில் பிரித்தானியாவில் இருந்த ரோமப் படைகள்  முழுதுமாக தாயகம் திரும்பியது.

"பிரித்தானியா" (Britania) எனும் பெயரும் ரோமர்கள் வழங்கிய இலத்தின் மொழி சொல் தான். இப்பெயரே காலப்போக்கில் மருவி Britania > Britain என்றானது. இப்பகுதியில் வாழ்ந்த பூர்வக் குடிகளான "கெல்டிக்" இனத்தவரையே "பிரிட்டன் அல்லது பிரிட்டிஷ்" (Britons or British) என அழைக்கப்படுகின்றர்.ரோமானியர்கள் பேசிய இலத்தீன் மொழியையும், எழுத்தையும் அடிப்படையாகக் கொண்டே ஆங்கில மொழி தோற்றம் பெற்றது. நிறைய இலத்தின் மொழிச் சொற்களையும் உள்ளடக்கியே உருவானது. ரோமர்கள் பயன்படுத்திய இலத்தின் எழுத்துருக்களை ரோமன் எழுத்துருக்கள் என்றும் அழைப்பர். இன்றைய ஆங்கிலம் ரோமன் எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பழைய ஆங்கிலம் (Old English [450 - 1100 AD])
-------------------------------------------------------------------------------------
ரோமர்களின் வெளியேற்றத்திற்குப்பிறகு பிரித்தானிய மக்கள் பெரும் கவலைக்கு உள்ளானர். அவர்களிடம் தொழில் முறையிலான போதிய படைவீரர்கள் இருக்கவில்லை. கிட்டத்தட்ட பத்து இலட்சம் (1,000,000) மக்கள் கிராமப் புறங்களிலேயே வாழ்ந்தனர். அவர்கள் விவசாயிகளாக இருந்தனர். பிரித்தானியா ரோமர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலங்களிலேயே, பிரித்தானியாவுக்கு அதனைச்சுற்றிஇருந்த இனக் குழுமங்களின் போரிடும்அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்தன. ரோமர்கள் வெளியேறிய பின் பிரித்தானியாவை தாக்குவது அவர்களுக்கு சுலபமானதாக இருந்தது. இந்நிலைஅறிந்து ஏங்கில்ஸ், செக்சான், யூட் எனும் மூன்று ஜெர்மனிய மொழிக் குடும்பத்தினர், பாய்மரக் கப்பல்களில், வட கடல் வழியாக வந்து பிரித்தானியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் திடீர் தாக்குதல் தொடுத்து கைப்பற்றிகொண்டனர். ஏங்கில்ஸ் இன்றைய கிழக்கு டென்மார்க்கில் இருந்தும், செக்சான் இன்றையஜெர்மனியில் இருந்தும், யூட் யூட்லாந்தில் இருந்தும் வந்தனர். பொதுவாக இவர்களை ஏங்லோ-செக்சான்ஸ் (Anglo-Saxons) என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களது நில ஆக்கிரமிப்பின் போது பிரித்தானியாவின் பூர்வக் குடிகளான கெல்டிக் மக்கள் (Britons) பிரித்தானியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு (அதாவது இன்றைய வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து) தள்ளப்பட்டனர்.

பிரித்தானியா ஏங்லோ-செக்சானின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஏங்லோ-செக்சான் பிரித்தானியாவை தமது வாழ்விடமாகக் கொண்டனர். ஏங்லோ-செக்சான் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்த பிரித்தானியாவை ஏழு அரசப் பிரிவுகளாக (Northumbria, Mercia, Wessex, Essex, Sussex and Kent.) ஆட்சி செய்தனர்.

அவர்களின் பரம்பரையினரே தற்போதைய இங்கிலாந்து மக்களாவர். இவர்களே ஆங்கிலம் எனும் மொழியை தோற்றுவித்தவர்கள் ஆவர்.

ஏங்கில்ஸ் இனத்தவர்கள் இங்கிலா லாந்து எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிஸ்க்" எனும் ஜெர்மனிய மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிஸ் என்றானது. (The Angles came from Englaland and their language was called Englisc - from which the words England and English are derived.)

தற்போதைய இங்கிலாந்தின் பல ஊர்களின் பெயர்கள் ஏங்லோ-செக்சான் வழங்கிய பெயர்களாகும். அவற்றை ஏங்லோ-செக்சான் சொற்கள் (Anglo Saxon Words) என்றும் சிலர் அழைப்பர்.

ஏங்லோ-செக்சான் இனத்தவர்களும் பலகடவுள் வழிபாட்டு முறையை கொண்டவர்களாகவே இருந்தனர். கி.பி 595 இல் ரோமாபுரியில் இருந்து போப்ஆண்டவர் அவர்களால், சென்.அகஸ்டின் (St. Augustine) என்பவர் தலைமையில் அனுப்பப்பட்ட மிசனரிகளின் வருகையினை ஏற்று, இங்கிலாந்தின் கெண்ட் பகுதியின் (ஏங்லோ-செக்சான்) அரசரான ஏதெல்பெட் (King Ethelbert of Kent) கிருஸ்தவ மதத்தை தழுவினார். அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய அவர், மக்களையும் கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் படிப்படியாக கிறிஸ்தவம் வேரூன்றத் தொடங்கியது.

கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் மற்றும் பைபிள் கல்வி போன்றவற்றால் மேலும் பல இலத்தின் மற்றும் கிரேக்கச் சொற்கள் பழைய ஆங்கிலத்தில் சேர்ந்து கொண்டன.

எடுத்துக்காட்டாக: street, kitchen, kettle, cup, cheese, wine, angel, bishop, martyr, candle.

இம்மூன்று மொழிக் குடும்பத்தினரும் பேசியது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மொழிகள் என்பது மொழிவல்லுநர்களின் கருத்து. இம்மொழிகளில் இருந்து வளர்ச்சி பெற்ற மொழியே "பழைய ஆங்கிலம்" என்றழைக்கப்படுகின்றது. இருப்பினும் அக்காலத்தில் பேசப்பட்ட ஆங்கிலத்தின் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்கு, இன்றைய தாய்மொழி ஆங்கிலேயர்களுக்கே புரிந்துக்கொள்ள முடியாத அளவில் வேறுபட்டதாகும். அதனால் அதனை "பழைய ஆங்கிலம்" என்கின்றனர்.

இக்காலப் பகுதியில் மேலும் இரண்டு மொழிகளின் சொற்கள் பழைய ஆங்கிலத்தில் கலந்தன.

வைக்கிங் (Viking)

கி.பி 793 இல் ஏங்லோ-செக்சான் கட்டுப்பாட்டில் இருந்த இங்கிலாந்தை; டென்மார்க், சுவீடன் மற்றும் நார்வே பகுதிகளில் இருந்து வந்த இனக் குழுமத்தினர் தாக்கத் தொடங்கினர். இவர்களை "வைக்கிங்" (Viking) என்றழைத்தனர். ஏங்லோ-செக்சோன் எதிர் தாக்குதல் தொடுத்த போதும், அவர்களது தாக்குதல்கள் இடைவிடாது தொடர்ந்த வண்ணமே இருந்தன. (கி.பி 793 - கி.பி 1066 வரை) இத்தாக்குதல்களால் இங்கிலாந்தின் சில பகுதிகளும், சில தீவுகளும் அவர்கள் வசமானது. அத்துடன் ஸ்காட்லாந்தின் கரையோரப் பகுதிகளும், அயர்லாந்தின் சில பகுதிகளும் கூட அவர்கள் வசமானது.  இவர்கள் பேசிய மொழிகள்; "பழைய நோர்ஸ்" (Old Norse) மற்றும் "டெனிஷ்" "Danish" என்றழைக்கப்படும் வட ஜெர்மனிய மொழிகளாகும். ஏற்கெனவே பிரித்தானியாவை வாழ்விடமாகக் கொண்ட ஏங்லோ-செக்சான் இனத்தவரதும் வைக்கிங் மக்களதும் பேச்சு மொழிகளுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும், அநேகமான வேர்ச்சொற்கள் ஒரே மாதிரியானதாகவே இருந்தன.

இவர்கள் பேசிய பழைய நோர்ஸ் மற்றும் டெனிஷ் மொழி சொற்களும் அதிகஅளவில் பழைய ஆங்கிலத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக: sky, egg, cake, skin, leg, window (wind eye), husband, fellow, skill, anger, flat, odd, ugly, get, give, take, raise, call, die, they, their,both, hit, law, leg, same.

இவர்கள் கைப்பற்றி வசித்த பகுதிகளுக்கு; அவர்கள் வழங்கியப் பெயர்களூம் தற்போது இங்கிலாந்தில் புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக "by" பின்னொட்டுடன் உள்ள பெயர்கள் அவர்களால் வழங்கப்பட்டவைகளாகும். எடுத்துக்காட்டாக: "Derby, Rugby, Whitby, Selby, Grimsby" போன்ற கிராமங்களின் பெயர்கள். "by" என்றால் அவர்கள் மொழியில் "கிராமம்" ஆகும். "பண்ணை" (Farm) எனும் பின்னொட்டுடன் வழங்கப்பட்ட பெயர்கள்: Scunthorpe, Grimethorpe போன்றவைகள். "thorpe" என்றால் "பண்ணை" என்பதாகும்.

அதேசமயம் கெல்டிக் மொழி பேசிய பிரித்தானியாவின் பூர்வக் குடிகளின் பேச்சுப் புழக்கத்தில் இருந்த ஒரு சில சொற்கள் பழைய ஆங்கிலத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக இடங்கள், ஆறுகள் போன்றவற்றின் பெயர்கள். எடுத்துக்காட்டாக: Devon, Dover, Kent, Trent, Severn, Avon, Thames.

எப்படியோ இன்றைய நவீன ஆங்கிலத்தில் புழக்கத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட சொற்கள், பழைய ஆங்கிலத்தின் வேர்ச் சொற்களைக் கொண்டதாகும். பழைய ஆங்கிலம் கி.பி.1100 வரை (ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகள் (700)) பேசப்பட்டது.

மத்திய ஆங்கிலம் (Middle English [1100 - 1500])

கி.பி. 1066 நோமண்டியிலிருந்து (தற்போதைய பிரான்ஸ்) வெற்றி வீரர் வில்லியம் (William the Conqueror) படையெடுத்து வந்து இங்கிலாந்தை வெற்றிகொண்டார். இவ் வெற்றியாளர்களை " நோர்மன்ஸ்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு விதமான பிரெஞ்சு மொழியைப் பேசினர். அம்மொழியை "நோர்மன் பிரஞ்சு" என்று அழைத்தனர். "நோர்மன்" மொழியை ஒரு உயர்மொழியாகவும் கௌரவ மொழியாகவும் அவர்கள் மதித்தனர். அரச நிர்வாகம், நீதித்துறை, வணிகத்தொடர்பு மற்றும் சட்டத்திட்டங்கள் போன்றவை; ஆங்கிலத்துக்குப் பதிலாக, பிரெஞ்சு பேச்சு மொழியாகவும், இலத்தின் எழுத்து மொழியாகவும் மாறின.

1067 இல் வெற்றி வீரர் வில்லியம் தனது வெற்றியை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில் (Tower of London) கோட்டையை கட்டத் தொடங்கினார். அவர் ஹாஸ்டிங்ஸ் எனும் இடத்தில் மேற்கொண்ட போர் நடவடிக்கையை (Battle of Hastings) சித்தரிக்கும் விதமாக 'The Bayeux Tapestry' எனும் பெயரில் சித்திர தையல் வேலைகளுடன் எழுதப்பட்ட கார்ட்டூன் ஓவியம் உலக வரலாற்றில் பிரசித்தி பெற்றதாகும். இதுவே உலகின் நீளமான (20 அங்குலம் உயரமம் - 231 அடி நீளம் ((50cm செ.மீ - 70 மீ)) ஓவிய தையல் (எம்ப்ரோயிடிங்) வேலையாகும். இதில் எழுதப்பட்ட மொழி லத்தின் ஆகும். இவரது காலத்தில் இங்கிலாந்து ஆட்சி முறைமை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அதனை "பிரபுத்துவ ஆட்சி முறை" (Feudal System) எனப்படுகின்றது. அதாவது பிரபுத்துவ ஆட்சி முறையின் கீழ் அரசரே சர்வ அதிகாரம் கொண்டவராவர். நாட்டின் அனைத்து வளங்களும் அவருக்கே சொந்தம். மக்களின் காணிகள், கால் நடைகள், கட்டிடங்கள் அனைத்தும்  அரசரின் சொத்தாகும். மக்கள் அரசரிடம் இருந்தே எல்லாவற்றையும் குத்தகைக்குப் பெறவேண்டும். நாட்டில் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் 80 க்கும் மேற்பட்ட கோட்டைகளை நாடெங்கும் கட்டினார். 1086 இல் "வீட்டு பெறுமதி மதிப்பீடு" முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது மக்கள் தமது வீடுகளில் என்னென்ன வைத்துள்ளனர், அவற்றின் மதிப்பீடு எவ்வளவு, மக்கள் அரசருக்கு எவ்வளவு செலுத்த வேண்டியுள்ளது, போன்றவற்றை அறிவதற்கான, மக்களது சொத்தை மதிப்பிடும் முறையாகும். இதுவே "The Domesday Book" என்றழைக்கப்படுகின்றது. இம் மதிப்பீடும் லத்தின் மொழியிலேயே எழுதப்பட்டது.

காலப்போக்கில் மொழித் தொடர்பில் ஒரு வர்க்கப் பிரிவு உருவானது. ஆட்சி அதிகாரங்களில் பிரெஞ்சு மொழி பேசுவோரே செல்வாக்கு செலுத்தினர். பிரெஞ்சு மொழி பேசுவோர் மேல் வர்க்கமாகவும், ஆங்கிலம் பேசுவோர் கீழ் வர்க்கமாகவும் கருதப்பட்டனர்.

இத்தகைய மொழித் தொடர்பிலான ஏற்றத் தாழ்வு; ஆங்கில தாய் மொழி ஆர்வலர்களிடையே, தம் தாய்மொழி தொடர்பான எழுச்சியைத் தோற்றுவித்தது. கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டுஅளவில் ஆங்கில மொழி அறிவியலாளர்களும், ஆங்கில மொழி ஆர்வலர்களாலும் மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவால் ஆங்கிலம் மீண்டும் அதிகார மொழியாக மாற்றம் பெறத் தொடங்கியது. இந்த ஆங்கிலத்தைத்தான் "மத்திய ஆங்கிலம்" என அழைக்கப்படுகின்றது. ஆனால் நிறைய பிரெஞ்சு மொழிச் சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.

எடுத்துக்காட்டாக:

calf - veal
cow - beef
wood - forest
sheep - mutton
house - mansion
worthy - honourable
close - shut
pig - pork
reply - answer
chicken - poultry
odour - smell
annual - yearly
demand - ask
chamber - room
desire - wish
power - might
freedom - liberty
bold - courageous
ire wrath - anger
Kingly - royal

மேலே இணை இணையாக எழுதப்பட்டிருக்கும் சொற்களின் முதலில் காணப்படும் சொற்கள் பழைய ஆங்கிலத்தில் இருந்து மருவியச் சொற்களாகும். இரண்டாவதாகக் காணப்படும் சொற்கள் பிரெஞ்சு (நோர்மன்) மொழியிலிருந்து மருவியச் சொற்களாகும்.
ஜெர்மனிய மொழி குடும்பத்தின் பன்மைச் சொற்கள் (house - housen, shoe - shoen) என்பது போன்று அமைந்திருந்தவை, பிரெஞ்சு முறைக்கு மத்திய முடிவில் "s" எழுத்தை சேர்த்துக்கொள்ளும் முறைமை (house - houses, shoe - shoes) மத்திய ஆங்கிலத்தில் தோன்றின. இருப்பினும் சில பன்மைச் சொற்கள் தற்போதும் ஜெர்மனிய மொழி வழக்கிற்கு ஏற்புடையவனவாக உள்ளன. எடுத்துக்காட்டாக: men, women, oxen, feet, teeth, children.

கி.பி 1258 இல் புரொவிசன் ஆஃப் ஆக்ஸ்ஃபோர்ட் (Provisions of Oxford) எனும் அரச ஆவணம், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் ஆவணம் ஆகும்.

கி.பி 1348 இல் இலத்தீன் மொழி வழி கற்பிக்கப்பட்ட பாடசாலைக் கல்வி, ஆங்கில வழிக் கல்வியாக மாற்றப்பட்டது. அதிகமான பாடசாலைகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படத் தொடங்கப்பட்டன.

கி.பி 1362 வரை பிரெஞ்சு மொழியிலேயே இருந்த நீதி, சட்டம் போன்றவை ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டன. இந்தகி.பி.1362-ஆம் ஆண்டே முதன் முதலாக ஆங்கிலம் பாராளுமன்றத்தில் அரியணை ஏறிய ஆண்டாகும். எட்வர்ட்-3 (Edward III) எனும் அரசன் முதன் முதலாக நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசினான்.

கி.பி. 1387 இல் மகா கவியான கியோபிஃரே சாவுச்சர் [Geoffrey Chaucer] எனும் எழுத்தாளர்; ஆங்கிலத்தில் “The Canterbury Tales” எனும் கதைத் தொகுப்பை எழுதினார். அவற்றை இன்றைய ஆங்கிலேயர்களாலும் வாசித்தறிய முடியாத அளவிற்கு கடினமானது என்கின்றனர். இன்றைய ஆங்கில எழுத்து நடைக்கும் அன்றைய ஆங்கில எழுத்து நடைக்கும் அதிக வேறுபாடு உள்ளது.

நவீன ஆங்கிலம் Modern English

நவீன ஆங்கிலத்தை; 1500 – 1800 வரை பேசப்பட்டதை "முந்தைய நவீன ஆங்கிலம்" என்றும், 1800 இலிருந்து தற்போது வரை பேசப்படுவதை "பிந்தைய நவீன ஆங்கிலம்" என்றும் வரையறுத்துள்ளனர்.


முந்தைய நவீன ஆங்கிலம் (Early Modern English [1500-1800])
-------------------------------------------------------------------------------------
மத்திய ஆங்கிலம் பேசப்பட்ட காலத்தின் இறுதியில் ஆங்கில மொழி உச்சரிப்புகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எழுத்திலக்கணத்திலும் ஒலிப்புகளிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன.

பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழியை பல துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் ஆங்கில மொழி பற்றாளர்களிடையே தலைதூக்கியது. அச்சு இயந்திரத்தின் தோற்றம் இதற்கு பெரும் துணை புரிந்தது. மற்றும் மதச் சீர்திருத்தம், புதிய புதிய கண்டுப்பிடிப்புகள், பண்டைய இலக்கியங்களில் ஏற்பட்ட மோகம், மறுமலர்ச்சி இயக்கம் போன்றனவும் இதற்கு துணை நின்றது.

இலத்தீன், பிரெஞ்சு போன்ற மொழிகள் அறிவியல் மொழிகள் என்றும், ஆங்கிலம் பண்படாத மொழி என்றும் பலர் கருதினர். ஒரு சில தாய் மொழி ஆங்கிலேயர்களிடமும் கூட அதே கருத்து நிலவியது. ஆனால் ஆங்கில மொழியை சகல வழிகளிலும் முதன்மையான மொழியாக கொண்டு வர வேண்டும் எனும் எண்ணக்கரு ஆங்கில அறிவியலாளர்களிடையே மேலோங்கியது. உலக மற்றும் பொது அறிவை பாமர மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழியினரின் வாசிப்புத் திறனே முதன்மையானது என்றும் ஆங்கில மொழிப் பற்றாளர்கள் உணர்ந்தனர். எனவே பாமர மக்களும் பயன்பெறும் வகையில் நூல்கள் மலிவு விலையில் வெளியிடப்பட்டன. இலத்தின் மற்றும் பிரஞ்சு மொழிகளில் இருந்த அறிவியல் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். அதுவரையில் இலத்தீன் மொழியில் மட்டுமே இருந்த மருத்துவக் கல்வி நூல்களும் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆங்கில வழி மருத்துவக் கல்வியும் அறிமுகம் செய்யப்பட்டது. கத்தோலிக்க விவலிய நூல் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது.

1564 இல் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரும் கவிஞரும் ஆன வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தார். (William Shakespeare [1564 - 1616]) இவரை இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் அழைக்கின்றனர்.சேக்சுபியர் பல்லாயிரக் கணக்கான புதிய சொற்களை  ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தார். இவற்றை சேக்ஸ்பியரின் ஆங்கிலம் எனக் கூறுவோரும் உள்ளனர்.

இலக்கண வளமிக்க மொழி எனும் தகுதி ஆங்கில மொழிக்கு ஏற்பட வேண்டுமாயின் ஆங்கில இலக்கண நூல்கள், அகராதிகள் ஆங்கில மொழியில் பெருக வேண்டும் எனப் பலரும் சுட்டினர்.

1604 இல் அகர வரிசையில் அமைந்த உலகில் முதல் ஆங்கில அகரமுதலி பிரசுரமானது.

1702 இல் முதல் ஆங்கில நாளிதழ் "The Daily Courant" இலண்டனில் வெளியானது.

1755 இல் சாமுவேல் யோன்சனின் ஆங்கில அகராதி பிரசுரமானது.

1776 இல் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்த அமெரிக்கா சுதந்திரப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாட்சியில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, அமெரிக்க ஆங்கிலப் பேச்சு வழக்கிலும் ஒலிப்புகளிலும் மாற்றங்கள் நிகழத்தொடங்கின.

தற்போதைய நவீன ஆங்கிலம் (Late Modern English [1800- Present])
-------------------------------------------------------------------------------------
முந்தைய நவீன ஆங்கிலத்திற்கும் தற்போதைய நவீன ஆங்கிலத்திற்கும் இடையிலான வேறுபாடு சொற்களஞ்சியத்தின் எண்ணிக்கையாகும். தற்போதைய நவீன ஆங்கிலத்தில் சொல்வளம் பெருகியுள்ளது. உலகின் பல்வேறு மொழிகளின் சொற்களையும் ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டு சொல்வளத்தைப் பெருக்கிக்கொண்டது.

இதன் வளர்ச்சிக்கான பிரதானக் காரணிகளாக இரண்டைக் கூறலாம். முதலாவது தொழில் புரட்சி, இயந்திர சாதனக் கண்டுபிடிப்புகள், மருத்துவத் துறை வளர்ச்சி, தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, அறிவியல் வளர்ச்சி போன்றவை பல புதிய, புதிய சொற்களை ஆங்கிலத்திற்கு வழங்கியது.

இரண்டாவது காரணி உலகின் பல பாகங்கள் பிரித்தானியரின் ஆளுகைக்குள் உட்பட்டிருந்தனவும் பலதேசங்களுடன் வைத்திருந்த அரசியல் மற்றும் வணிகத் தொடர்பு போன்றவைகளும், எண்ணற்ற பிறமொழிச் சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தன. ஒரு கணக்கெடுக்கின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் கடன் வாங்கியுள்ளது.

ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்ட தமிழ் சொற்கள்:

எனகொண்டா - Anaconda

காசு - Cash

கட்டுமரம் - Catamaran

கறி - Curry

மாங்காய் - Mango

பறை - Pariah

பப்படம் - Popppadam

அரிசி - Rice

இன்னும் நிறைய சொற்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதாக நம்பப்படுகின்றது. அநேகமான மூலிகைகளின் பெயர்கள் தமிழில் இருந்து கிரேக்கம் லத்தின் மொழிகளுக்கும், அவற்றில் இருந்து ஆங்கிலத்திற்கும் சென்றதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறு ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டில் பிறமொழிச்சொற்களை கடன் வாங்கும் திறந்த மனப்போக்கு, அதன் துரித வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன என்பதை  ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மேலும் ஆங்கில தொழில் நுட்பச் சொற்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. இதன் உணர்தலால் உலகில் ஆங்கிலம் கற்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக விரிந்து நிற்கின்றது. அமெரிக்க விஞ்ஞான வளர்ச்சி மற்றும் இணைய தொழில் நுட்பம் போன்றவைகளும் இதன் வளர்ச்சியின் இன்னுமொரு அங்கமாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் புது புதுச் சொற்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. வெகுவிரைவில் பத்து இலட்சம் சொற்கள் கொண்ட ஒரு மொழி எனும் தகுதியை ஆங்கிலம் பெற்றுவிடும் என செய்திகள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் சேக்ஸ்பியரின் காலத்தில் 5 முதல் 7 மில்லியன் மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்பட்ட ஆங்கில மொழி; இன்று உலகளவில் அறிவியல், அரசியல், வணிகம், தொழில்நுட்பம், திரைப்படம், ஊடகம் என சகல துறைகளிலும் பிரகாசிக்கும் ஒரு மொழியாக வளர்ந்து நிற்கின்றது.

ஆங்கிலம் எனும் மொழி இன்று உலகளவில் செல்வாக்கு செலுத்தும் மொழியாக இருந்தாலும், உண்மையில் ஆங்கிலம் ஒரு தனித்துவமான மொழி அல்ல. அது ஒரு கூட்டு மொழி. ஆங்கிலம் எனும் மொழியின் தோற்றுவாய் தொடக்கம் உலகின் அனைத்து மொழிச் சொற்களையும் கடனாகப் பெற்று உருவான மொழியாகும். பிரித்தானியா ஆக்கிரமிப்பாளர்கள், வந்தேறு குடிகள், வணிகர்கள், வேற்று மொழி கதைகள், சமயம், கலை போன்றவற்றின் ஊடாக பெற்ற சொற்களைக் கடனாகக் கொண்டு உருவான மொழியே ஆகும். அது இன்னமும் அதன் சொல்வளத்தை விஞ்ஞானம், திரைப்படத்துறை, வணிகத்தொடர்பு, இணையம் போன்ற துறைகளுடாக பெற்று வளர்த்து வருகின்றது.
    தொடரும்..................என PARAMESDRIVER.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...