"தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணர்ந்திடாத இயல்பினளாம் எங்கள் தமிழ்த்தாய்!"- மகாகவி பாரதி ....
வீரமாமுனிவர்....
தமிழில் ஒற்றுவைத்து எழுதும் பழக்கத்தைக் கொண்டுவந்தவர் ''வீரமாமுனிவர்'' என்று தமிழில் அழைக்கப்பட்ட இத்தாலியப் பாதிரியாரான கான்ஸ்டன்டீன் ஜோசஃப் பெஸ்ச்கி(Constantine Joseph Beschi (8 November 1680 – 4 February 1742) ஆவார்.
மதநூல்களுக்கப்பால், தமிழில் அகராதிகள், உரைநடை விளக்கங்கள் பற்றியும் பிரவாளமாகவே எழுதியிருக்கிறார். அவர் செய்த எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றைய தமிழை இலகுவாக வாசிக்கக்கூடியதாக மாற்றியிருக்கிறது.
அவையாவன:
1) தரிப்புக்குறியீடுகளும் முற்றுப்புள்ளிகளும்
2) மெய்யெழுத்துக்களுக்கு மேல் குற்றிடல் (க், ங்,ச்……..)
3) குறில்-நெடில் குறியீட்டு மாற்றம்: தமிழில் தொல்காப்பியர் தந்த வழக்கப்படி உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தோம். அவற்றின் நெடில் ஓசைக்குப் புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை வீரமாமுனிவர் மாற்றி "ஆ, ஏ" எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே,பே) வழக்கத்தை உண்டாக்கினார்.
4) உயிர் - எகர ஒகர மாற்றம்: எ, ஒ என்னும் குற்றெழுத்துகளில் மேலே உள்ள புள்ளியை நீக்க வேண்டும்; ஏகாரத்துக்குக் கீழே காலிட வேண்டும்; ஓகாரத்துக்குச் சுழி தந்து எழுத வேண்டும் என்பவை அவர் செய்த மாற்றங்கள்
5) உயிர்மெய் - எகர ஒகர மாற்றம்: உயிர்மெய்க் குறில் எகர ஒகரங்களுக்குப் புள்ளி உண்டு என்பது பழைய இலக்கணவிதி. ஆனால், இவ்விதியை மாற்றி உயிர்மெய்க்குறில் எகர ஒகரங்களுக்கு ஒற்றைக் கொம்பையும் உயிர்மெய் நெடில் ஏகார ஓகாரங்களுக்கு இரட்டைக் கொம்பையும் அமைத்தார்.
6) ரகர வரிவடிவ மாற்றம்: ரகரத்திற்குக் கால் இட்டு மற்ற நெடில் குறியாகிய ‘ா’ துணைக்காலிலிருந்து வேறுபடுத்தினார்.
இணையத்திலிருந்து ....
நான் தமிழில் எழுதுகிறவன். கதை, கவிதை, கட்டுரை என்று எதையும் விட்டுவைப்பதில்லை. இவற்றுக்கான பல குழுக்களிலும் தளங்களிலும் உள்ளேன். இங்கெல்லாம் நான் பிற எழுத்தாளர்களின் எழுத்துகளை மேம்படுத்தவும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்தும் வருகிறேன்.
இந்த துய்ப்பின் (அனுபவம்) அடிப்படையில் தமிழில் எழுதுபவர்கள் செய்யும் பிழைகள் பின்வரும் வகைகளில் அமைகின்றன:
- ஒற்றுப்பிழை
- எழுத்துப்பிழை
- சொற்பிழை
- தொடரமைப்புப் பிழை
- மரபுப் பிழை
- நடை தெளிவின்மை
1. ஒற்றுப்பிழை: இது பெரும்பான்மையும் வல்லினம் மிகல் என்ற இலக்கணப் புரிதல் இன்மையால் வருகிறது. சிறுபான்மை பிற புணர்ச்சிவிதிகளைப் பற்றிய புரிதல் இன்மையால் உண்டாகின்றது. சொற்களுக்கிடையே வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமையும், மிகாத இடத்தில் மிகுத்து எழுதுதலும் ஒற்றுப்பிழையாகும்.
2. எழுத்துப்பிழை: நெருக்கமான ஒலி உடைய எழுத்துகளைக் குழப்பிக்கொள்ளுதல். ணகர நகர னகர வேறுபாடு, லகர ழகர ளகர வேறுபாடு ரகர றகர வேறுபாடு ஆகியவற்றை அறியாமையால் இப்பிழைகள் பெரும்பான்மையும் எழுகின்றன. ’ற்’ என்ற வல்லின தனிமெய்யை அடுத்து பிற வல்லின தனிமெய்கள் வாரா (எந்த வல்லினமெய்யும் தனித்து இரட்டித்து வாரா!) ஆனால் பலரும் ‘அதற்க்கு’ என்று றகர மெய்யை அடுத்து ‘க்’ போட்டு எழுதுகின்றனர்! இடையினமான ரகர தனி மெய்யை அடுத்து பெரும்பான்மையும் வேறொரு தனி மெய் வரும் (சொல்லின் முதலெழுத்து நெடிலாக இருக்கும், தனிக்குறிலைத் தொடர்ந்து ரகரமும் ழகரமும் அமையாது, தமிழ்ச் சொற்களில்!) இது போன்ற இலக்கண அமைப்புகளைத் தெரிந்திராமையாலும் பிழைகள் உண்டாகின்றன.
3. சொற்பிழை: சொற்களை அவற்றின் சரியான பொருளறிந்து கையாள வேண்டும். தமிழின் பல சொற்கள் ஒருபொருட்பன்மொழியாகவும் பலபொருளொருமொழியாகவும் அமைந்திருக்கின்றன. அதாவது, ஒரே பொருள் உடைய பல சொற்கள் என்றும், பல பொருள் உள்ள ஒரே சொல் என்றும் பல இருக்கின்றன. ஆனால், இவற்றின் வெவ்வேறு பொருளுக்கிடையே நுண்ணிய வேறுபாடுகளும் இருக்கும். ஒரு சூழலுக்குப் பொருந்தும் ஒரு சொல் வேறொரு சூழலுக்குப் பொருந்தாமல் போகலாம். சொற் பொருளின் ஆழ அகலங்களையும் வீச்சையும் உணர்ந்து கையாண்டால் எழுத்து மிளிர்வுறும்!
மேலும், சிலர் தவறான முறைகளில் சொற்களை படைத்துக் கையாள்கின்றனர். ‘ஒருவன்’ என்ற ஆண்பால் சொல்லுக்கான பெண்பால் நிகரன் ‘ஒருத்தி’ என்பதே, பலரும் ‘ஒருவள்’ என்று பிழையாகக் கையாள்கின்றனர். ’சொன்னால்’ என்பதற்கும் ‘சொன்னாள்’ என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் ‘என்று அவள் சொன்னால்’ என்று எழுதும் பலரை நான் பார்த்துவிட்டேன்!
அதே போல சில வினைகளின் தன்வினை பிறவினை வடிவங்களைக் குழப்பிக்கொள்கின்றனர். ‘செய்தான்’ / ‘செய்வித்தான்’ போன்ற அமைப்பின் தன்மையை உணர வேண்டும்.
4. தொடரமைப்புப் பிழை: (தொடரமைப்பு - வாக்கியம்) இதுவும் ஒற்றுப் பிழைகளைப் போல பெரும்பான்மையாகக் காணப்படும் ஒன்று.
தொடரில் இருக்கும் எழுவாய்க்கு ஏற்ப வினைமுடிபு அமைய வேண்டும். திணை - பால் & எண் ஆகியவை பொருந்தி வர வேண்டும். பொதுவாக பன்மை எழுவாய்க்கு ஒருமை வினைமுடிபு கொடுத்து எழுதும் பிழையே அதிகம் காணப்படுகிறது (அதிலு அஃறிணையில்!). ’மாடுகள் சென்றன’ என்று எழுதுவதற்குப் பதில் ‘மாடுகள் சென்றது’ என்று எழுதுகின்றனர்.
தான், உம் போன்ற இடைச்சொற்களைக் கையாள்வதில் பலருக்கும் குழப்பம் இருப்பது தெரிகிறது!
தான் என்பது தனிச்சொல்லாக வருகையில் படர்க்கை தன்மையைக் குறிக்கும்: ‘அவன் தான் செய்ததாக ஒப்புக்கொண்டான்’
அதுவே இடைச்சொல்லாக வருகையில் (முந்தைய சொல்லோடு இணைந்து வர வேண்டும்) அழுத்தம் கொடுக்கப் பயன்படும்: ‘அவன்தான் செய்தான் என்று அனைவரும் சொன்னார்கள்’
‘உம்’ என்பதைப் பற்றித் தனிக்கட்டுரை எழுத வேண்டும்!
5. மரபுப் பிழை: இதை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று தமிழ் இலக்கணங்கள் சில மரபுகளை வைத்திருக்கின்றன. எழுதும் பொருளின் தன்மைக்கேற்ப அவற்றை அவ்வப்போது மீறலாம். குறிப்பாக கவிதைகளில் நிறையவே மீறலாம். ஆனால், மீறுவதற்கும் மரபைச் சரியாக உணர்ந்திருத்தல் தேவையல்லவா?
மயில் அகவும், யானை பிளிறும்… என்று ஒவ்வொரு விலங்கின் ஒலிக்கும் ஒரு பெயரை வைத்திருக்கிறோம், இதை மாற்றினால் குழப்பமே மிஞ்சும்!
கதை எழுதுபவருக்கு எந்தக் கதைமாந்தரை ‘அவன், இவன்…’ என்பது, யாரை ‘அவர், இவர்…’ என்பது என்பதில் குழப்பம் இருப்பதை நான் காண்கிறேன்!
வாசகர் யாரை மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அக்கதைமாந்தரையும், வயதில் மூத்தோர், சமூக நிலையில் பெரியோர், சான்றோர் போன்றோரை ‘அவர், இவர்’ என்றும், வயதில் இளையோர் போன்றோரை ‘அவன், இவன்’ என்றும் எழுதுதல் பொருத்தமாக இருக்கும்.
சில கதைகளில் நாயகன் / நாயகியின் தந்தை / தாயைச் சுட்டுகையில் அவன் / அவள் என்று எழுதுவிடுகின்றனர். இது பொருந்தாது அல்லவா?
6. நடை தெளிவின்மை:
‘நடை’ (style) என்பதும் ‘பாணி’ என்பதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இயல்பானதாக உருவாக வேண்டும். எது சிறந்த நடை என்ற ஆய்வுக்குள் நாம் புக வேண்டா.
ஆனால், எந்த நடை / பாணியாக இருந்தாலும் படிப்பவருக்கு எழுத்தாளர் சொல்ல வரும் கருத்து தெளிவாகப் போய்ச் சேர வேண்டும். (சில வேளைகளில் கதை சொல்லலின் ஒரு உத்தியாகத் தெளிவின்மை கையாளப்படலாம், அது வேறு!)
எழுத்தாளர் ஒன்றை நினைத்து எழுத, படிப்பவர் வேறு வகையாகப் புரிந்துகொள்ளும் சாத்தியங்கள் பலவாக இருந்தால் எழுத்து வாசகரைச் சரியாகச் சென்று சேராது!
நாம் எழுதியவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
நாம் ஒரு மனநிலையில் இருந்து எழுதுவோம், படிப்பவரும் அதே மனநிலையில் இருந்துதான் படிப்பார் என்று எந்த உறுதியும் இல்லையே!
அதே போல, நாம் ஒரு துறையில் / விடயத்தில் நல்ல தேர்ச்சி பெற்று அதைப் பற்றி எழுதுகிறோம், படிப்பவருக்கு அதே அளவு தேர்ச்சி இருக்காது, எனில் அவருக்கு நாம் எழுதுவது சரியாகப் புரியுமா என்று நாம் அலச வேண்டும்.
இதற்குப் பிறரின் உதவியை நாம் நாடலாம்.
நாம் எழுதியதை நாமே சில நாள்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் எழுதுவதை மீண்டும் மீண்டும் நாமே படித்தும், பிறரிடம் கொடுத்தும் குறைந்தது மூன்று முறையாவது மெய்ப்புப் பார்த்துப் பிழை திருத்தி மெருகேற்ற வேண்டும்!
நன்றி; விசயநரசிம்மன் கார்த்திகேயன் அவர்களுக்கு...
முதலில் ஒலிப்பு பழக வேண்டும்.எழுத்து பழக வேண்டும். இயல்புச் சொற்கள், வாழ்க்கைச் சொற்களைப் பழக வேண்டும்.
*ஒருமை பன்மை பிழைகள் நிறைய நடக்கின்றன. பன்மை மயக்கம் வரக் கூடாது. "அவை நடந்தன" என்பதே சரி; "அவை நடந்தது" என்று சொல்லக்கூடாது.
*போலவே ஒரு/ஓர் பயன்பாடும். அஃறிணைச் சொற்களில் உயிரெழுத்து முதலாய் வரும் போது, ஓர்/ஈர் என்றே பயன்படுத்தல் நலம். உயிரெழுத்து அல்லாத பிற உயிர்மெய் முதலாய் வரும் சொற்களில், ஒரு/ஓர் என்று இரண்டு பயன்பாடும் சரியே.
சான்று: ஓர் அருவி, ஒரு சொல்; ஓர் சொல் என்று சொன்னாலும் பிழையில்லை; ஆனால் ஒரு அருவி பிழையே; ஓர் அருவி என்பதே சரி.
*காலப் பிழைகளும் கூடாது. நேற்று வந்தாள் என்பதே சரி, நேற்று வருவாள் அல்ல. நாளை வருகிறாள் என்று எழுதாது, நாளை வருவாள் என்பதே சரியான காலம் காட்டும் முறை. காலம், மொழி அடிப்படை!
*சந்திப்பிழை பெரிய குற்றம் கிடையாது. நிறுத்தற் குறிகள்/தரிப்புக் குறிகள் இல்லாத காலத்தில் சந்தி பயன்படுத்தப்பட்டது. இன்று, காற்புள்ளிகளை (comma) சேர்த்து எழுதிக் கொண்டால் குற்றமில்லை.
*வாழ்த்துக்கள்/ வாழ்த்துகள், கோயில்/ கோவில், மாயிலை/ மாவிலை – இவையெல்லாம் தமிழில் இரட்டைப் பயன்பாடுகள்; இரண்டும் சரியே. ஒன்று மட்டும் சரியில்லை என்று மிகைத்திருத்தம் (Over Correction) செய்வதும் பிழையே! பொழுதுபோக்குக்காக, அறியாமலே மிகைத் திருத்தம் செய்து, மொழிநெகிழ்வை நம் காலத்தில் நாம் அழித்துவிடக் கூடாது.
*அறிவியல் காலத்தில் பெருகி விட்ட தொழில்நுட்பத்தால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுதல் என்பதும் இன்று பலரும் செய்யும் பிழை. ‘சூப்பர்’ என்று எழுதாமல், ‘Super’ என்று அதை ஆங்கிலத்திலேயே எழுதிவிடுதல் தான் நலம்.
*ஆங்கிலத்தை விடச் சம்ஸ்கிருதச் சொற்கள் தான், தமிழுக்குத் தீங்கானவை. ஆங்கிலமாச்சும் ‘பிகர்’ என்று எழுதினால், அது Figure என்று யாரும் அறிந்து கொள்ளலாம். ஆனால் வார்த்தை/அர்த்தம் இவையெல்லாம் பிரித்தறிய முடியாதபடி, இந்தச் சம்ஸ்கிருதச் சொற்களே தமிழ் போல் தோற்றம் காட்டி, ஓர் ஒட்டுண்ணி (Parasite) போல் உறிஞ்சி விடும்.
வார்த்தை/அர்த்தம் விலக்கி, சொல்/பொருள் என்று பழகுவதே, தமிழ்நலம்!
இதோ, இந்த வடமொழி விலக்கு அகராதியைப் (tamilchol.com) பயன்படுத்திக் கொள்க.
இவை தான் பெரும்பாலோனோர் செய்யும் சிறுசிறு பிழைகள். பிழை செய்வோரைக் கடிந்து கொண்டு திட்டாது, எள்ளி நகையாடாது, தக்க ஊக்கமூட்டுங்கள்! தமிழும் ஊக்கமுறும்!
நமது கலாச்சாரம் , மற்றும் பண்பாடு குறித்து நமது விழிப்புணர்வு மிகவும் குறைவு. நாம் மொழியைக் காப்பாற்ற பல மேடைகளிலும் அரசியல் களங்களிலும் அசகாய சூரர்களின் பேச்சை கேட்கலாம். ஆனால் கலாச்சார சீரழிவு பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. உண்மையில் கலாச்சார சீரழிவு தான் மொழிக்கும் ஆபத்தாகி இருப்பதை யாரும் உணரவில்லை. இதற்கு முக்கிய காரணம் நமது தொலைக்காட்சி சேனல்கள். வட இந்திய சீரியல்கள் மற்றும் உடை நடை பாவனைகள் நம்மை கவர வைத்து இப்போது திருமண நிகழ்ச்சிகளிலும் மெஹெந்தி இருக்கிறதே தவிர நலங்கு இருப்பதில்லை. திருமணத்திற்கு வருவோரும் சேலை கட்டுவதில்லை (இதில் குறிப்பாக reception அல்லது நிச்சயதார்த்தம் என்பது மாடர்ன் ட்ரேஸஸ்ஸிற்காகவே என்று ஆகிவிட்ட்து.)சுரிதார் மற்றும் குர்த்தா வகைகள் தான் பிரபலம். முகூர்த்த நேரத்தில் மணப்பெண் மற்றும் இதர பெண்கள் புடவை அணிகிறார்கள்.
நாம் பொருளாதாரப் போர்வையில் கலாச்சார சீரழிவை விலைக்கு வாங்கி விட்டோம். பல வருடம் முன்பே திருமதி ராதிகா வட இந்திய சீரியல்கள் நமது தொலைக்காட்சிகளில் நுழைவதை தடுக்க முற்பட்டார். ஆனால் பாவம் அவருக்கு யாரும் பக்க பலமாக இல்லாமால் அவரை தோற்கடித்துவிட்ட்து.
என்றாலும் இதுவரை கோவில்கள் மற்றும் பூஜை போன்ற நேரங்களில் ஆண்கள் வேட்டி மற்றும் பெண்கள் புடவை கட்டுவதை பார்க்க இதமாக இருக்கிறது.
ஒரு மொழியானது ஒரு நாளில் தோன்றுவதல்ல, அதேபோன்று கடவுள் உடுக்கினை அடிக்க மறுபக்கதிலிருந்து வருவதுமல்ல; மாறாக அது 'படிமலர்ச்சி' (Evolution)முறையில் இடம்பெறும் ஒரு தொடர்ச்சியான நீண்டகாலச் செயற்பாடாகும். மேலும் மொழியில் எழுத்துகளானவை ஓவிய எழுத்துகள், கிறுக்கல்கள், ஒலி எழுத்துகள் என்ற வரிசையிலேயே இன்றைய எழுத்துகள் கிடைத்துள்ளன (அவையும் தமிழி- வட்ட எழுத்துகள் என்ற வகையிலேயே). மற்றொன்று மொழி தோன்றும்போது பேச்சு வடிவிலேயே தொடங்கியே, பின்பே எழுத்துகள் தோன்றின.
எவ்வாறாயினும் தமிழில் எமக்குக் கிடைக்கும் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுவதன்படி, தமிழில் எத்தனை எழுத்துகள் எனப் பார்ப்பது அவசியம்.
"எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப.” : (தொல். முதல் சூத்திரம்).
எனவே தொல்காப்பிய காலத்திலேயே 30 எழுத்துகளே (உயிர், மெய்) முதன்மையாகக் காணப்பட்டன. அவற்றினைச் சார்ந்தே பிற எழுத்துகள் அமைந்தன. இன்றைக்கும் இந்த தொல்காப்பிய விதி பொருந்தும். அதுவே தமிழின் சிறப்பியல்பு.
தாய்த்தமிழர்களுக்கோ,தமது மொழி பற்றிய ஆய்வு ,மதிப்பீடு போன்றவை பற்றி எதுவும் தெரியாது!பெரும்பாலோர் மொழி உணர்வே இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்!இவர்களில் அதிக சதவீதத்தினர்,அவர்களுடைய அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கே போராட வேண்டிய தாழ்- பொருளாதார நிலையில் இருப்பதால்,தாய்மொழி பற்றி சிந்திப்பதற்கோ அதிலுள்ள இலக்கியங்களைப் படித்துச் சுவைப்பதற்கோ கால அவகாசம் இல்லாதவர்களாக உள்ளனர்!அவர்களுக்கு தம் தாய்மொழியின் பழமை பற்றி எதுவும் தெரியாது!