நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம்.
20 ஆகஸ்ட் 2026
19 ஆகஸ்ட் 2026
பவானிசாகர் புத்தகத்திருவிழா,மரபு விதைகள் கண்காட்சி, மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி - 2026
மதிப்பிற்குரிய வாசகர்களே,
வணக்கம். வருகின்ற 2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமையும் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இரண்டுநாட்கள் னவானிசாகர் பேருந்துநிலையம் அருகிலுள்ள தியாகி எம்.ஏ. ஈஸ்வரன் ஐயா அவர்கள் நினைவு அரங்கத்தில்,
சத்தியமங்கலம் மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு,யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் இணைந்து, மக்களின் வாழ்வாதாரத் திருவிழாவாக
பவானிசாகர் புத்தகத் திருவிழா,மரபு விதைகள் கண்காட்சி மற்றும் பள்ளிகளின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி மற்றும் குறிப்புரை வழங்குதல் நிகழ்வு என நடத்துகின்றன.
பேரன்புகொண்ட பொதுமக்களே, வாசகர்கள் மற்றும் வேளாண்பெருங்குடி மக்களே,
வணக்கம்.பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் மரபு விதைகள் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கின்றோம் .அனுமதி இலவசம்,அனைவரும் வருக.அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்க.
தெற்காசியாவின் மிகப்பெரிய மண் அணை அமைந்துள்ள பவானிசாகரில் ஈரோடு பாசனத் தந்தை தியாகி M.A.ஈஸ்வரன் அரங்கத்தில்,
சத்தியமங்கலம் தாலுக்கா மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு, யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் கிளப் மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் இணைந்து ,
முதன்முறையாக ,
பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் விற்பனை, மரபு விதைகள் கண்காட்சி மற்றும் விற்பனை,பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்கும் மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி
வருகின்ற 2026- ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை மற்றும் 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் நடத்துகின்றன.
காலை 9.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை பல்லாயிரக்கணக்கில்
பொது அறிவுப் புத்தகங்கள் கண்காட்சி &10℅தள்ளுபடி விற்பனை,
நாட்டுக் காய்கறி விதைகள், கீரை விதைகள், மூலிகை விதைகள், விதைக் கிழங்குகள், விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களுக்கும் தேவையான உபகரணங்கள்,இடுபொருட்கள்,கண்காட்சி & விற்பனை நடைபெறுகின்றன.
2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை காலை சரியாக 10.00 மணிக்கு மீன்வளத்துறை,வனத்துறை உட்பட வேளாண்துறைகளின் விஞ்ஞானிகளும்,அரசு ஊழியர் பயிற்சிநிலையம், பேரூராட்சி மன்றத்தலைவர் அனைத்து வார்டு உறுப்பினர்கள்,வணிகர் சங்கம்,வியாபாரிகள் சங்கம்,சமூக சிந்தனையாளர்கள் உட்பட சான்றோர் மேன்மக்கள் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர்.
மாலை 3.00 மணியிலிந்து 4.00 மணிவரை வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் வேளாண் கருத்தரங்கம் மற்றும் தற்போது நம்மை மிரட்டிவரும் எல்- நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்கொள்ளும் வறட்சி,அதிகவெப்பம், மற்றும் பெருமழையின் பாதிப்புகளும் பாதுகாப்பும் கலந்தாலோசனைகளும் நடைபெறுகின்றன.இரவு 6.00 மணிக்கு இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
அடுத்தநாள் 2026 ஆகஸ்டு 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு
மகளிர் சுய உதவிக் குழுக்களும்,தன்னார்வ அமைப்புகளும் ,குடும்பப் பெண்களும் கலந்துகொள்ளும் பாரம்பரிய உணவுக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.அதுசமயம், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுப் பொருட்கள்,தின்பண்டங்கள்,நஞ்சில்லா உணவுகள்,கைவினைப் பொருட்கள்,கைத்தறி ஆடைகள் கண்காட்சியும் குறைந்தவிலையில் விற்பனையும் நடைபெறுகின்றன.
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
மதியம் 2.00 மணிக்கு மீனவர் நலனில் தமிழக அரசு தலைப்பில் ஒளிப்படக்காட்சியுடன் மீனவர்கள் குடும்பவிழாவும் மீன் உணவுகள் விற்பனையும் நடைபெறுகின்றன.
மாலை 4.00 மணிக்கு சித்த மருத்துவர்களும், மூலிகை மருந்துகள் விற்பனையாளர்களும்,மூலிகைத் தாவரங்கள் சாகுபடியாளர்களும் சூழல் ஆர்வலர்களும் கலந்துகொள்ளும், " தமிழ்வழி மருத்துவம் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
மாலை 6.00 மணிக்கு நிறைவுவிழாவுடன் நிறைவுபெறுகின்றது.
11 பிப்ரவரி 2026
ஆளப்பிறந்தவன் நூல் வெளியீட்டு விழா- 2026 பிப்ரவரி 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை.
ஓடும் நேரத்தோடு இயங்கவேண்டிய கட்டாயம் 🙏
பணிவான வணக்கம்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆளப்பிறந்தவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சான்றோர்களில் சில மேன்மக்கள் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்....அதாவது,
(1) நூல் வெளியீட்டுவிழாவில் வாசிப்பைப்பரவலாக்கும் தன்னார்வலர்களுக்கான ''மக்கள் சேவகர் விருது'' வழங்கப்பட்ட இருவருமே சரியான தேர்வு...
(2)பிற்பகல் சரியாக 4.00 மணிக்கே பவர்பாய்ண்ட் பிரசன்டேசன் ஒளிபரப்பி நேரத்தை பிரித்து வீண் ஆக்காமல் சரியாக பயன்படுத்தப்பட்டது...
(3) வரவேற்புரையிலிருந்து கடைசியாக திரு.முரளிதரன் அவர்களின் இளமைக்காலத்தை உரையாக வழங்கியதுவரை சலிப்பே இல்லாமல் 8.30 மணிவரை நிகழ்வினை எதிர்பார்க்க வைத்து நேரத்தை கடத்தியது பாராட்டவேண்டியது.
(4) நூலாசிரியரின் ஆசிரியர் திரு.அகஸ்டியன் அவர்களுடைய உரை நம்மையும் மாணவப்பருவத்திற்கு கொண்டுசென்றது.
(5) நூலாசிரியர் ஏற்புரை அருமை 👌
(6) நன்றியுரைக்கு நேரம் கொடுத்திருக்கலாம்.
(7) மேடையேறி உரையாற்றுவதற்காக தயாராக தயாரிப்போடு வந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்க வேண்டும்..
என்று கருத்து கூறியிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட கருத்தினை ஏற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன் அதற்கான விளக்கம் பின்வருமாறு...
(1) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிற்பகல்4.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.(2) நூலக விதிகளின்படி இரவு 8.00 மணியுடன் வேலைநேரம் முடிவதால் 8.00 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றனர்.
(3) சரியாக 4.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவினை தொடங்குவதற்கேற்ப எல்லோருமே 3.50 மணிக்குள் அரங்கு வந்திருந்தால் நேரத்தை ஒழுங்குபடுத்தி சமூக சேவகர்களின் PPT ஒளிப்படநிகழ்வினை தலா பத்துநிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பிவிட்டு மற்ற நேரத்தை விழாநிகழ்வுக்கு கொண்டுவந்திருக்கலாம். ஓரளவாவது குறையினை சமாளித்திருக்கலாம்.
(4) நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்து உதவ வேண்டும்.
(5) நிகழ்வு அரங்கில் உள்ளோர் விழா நடத்துவதற்கான மொத்தநேரத்தையும், ஒவ்வொரு உரைக்கும் கழிந்துவரும் நேரத்தையும் கணக்கிட்டு வரவேண்டும்.
வரவேற்புரை 5 - 8 நிமிடங்களில் முடிந்துவிடும்.
தலைமையுரைக்கு நேரம் அறிவிக்க இயலாது.இருந்தாலும் 5 முதல் 15 நிமிடங்களில் முடிப்பர்.
நூல் அறிமுகவுரை,
நூல் ஆய்வுரைக்கு நேரம் சுருக்கி அறிவிக்க இயலாது.
சிறப்புரைக்கும் நேரம் அறிவிக்க இயலாது.
மீதமுள்ள நேரத்தை நூல் வெளியிடுதல்,
முதல்பிரதி பெறுதல்,
சிறப்பு அழைப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கல்,
உரைக்கு முன்னதாக ஒவ்வொரு சிறப்புப் பேச்சாளர்களைப்பற்றி அறிமுகவுரை வழங்குதல்,
தேர்வு செய்யப்பட்ட சமூகசேவகர்களுக்கு அறிவித்தபடி விருது வழங்கல் ,
நூலாசியருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுப்பொருட்களும்,பரிசுகளும் வழங்கல்,
வாழ்த்துரை வழங்கல்,
ஏற்புரை வழங்கல்,
நன்றியுரைவழங்கல்,
நாட்டுப்பண் இசைத்தல் என அனைத்துக்கும் நேரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டிய சிக்கலான நெருக்கடி...
நீங்களே பகுத்தாய்ந்து கணக்கிட்டு பிரித்துப் பாருங்க.வேகமாக துரிதப்படுத்தியும் இரவு 8.30 மணிக்கு மேலாகி தாமதமாகிவிட்டது.
ஆதலால் இந்த விளக்கத்தில் எந்த இடத்தை சிக்கனப்படுத்தி நேரத்தை மீதப்படுத்துவது.நேரம் நமக்காக காத்திருப்பதில்லை.ஓடும் நேரத்தோடு ஓடிக்கொண்டே பகிர்ந்துகொள்ளவேண்டிய கட்டாயம்.ஆதலால் ஏற்பட்ட குறைகளை பொறுத்தருள வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
நிகழ்ச்சி நெறியாளர்,
செ.பரமேஸ்வரன்.
ஆளப்பிறந்தவன் நூல் வெளியீட்டு விழா
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
06-02-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை சென்னை,கோட்டூர்புரம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்திலுள்ள நூல் வெளியீட்டுக்கூடத்தில் கும்மிடிபூண்டி சாலைப் போக்குவரத்து நிறவனத்தின் தூணை இயக்குநர் திரு.முரளிதரன்.சு.ரெ. அவர்களின் 'ஆளப்பிறந்தவன்' நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.
25 ஆகஸ்ட் 2025
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025
அனைவருக்கும் வணக்கம்.
கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்....
3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 சனிக்கிழமை மற்றும் 14-09-2025ஞாயிற்றுக்கிழமை இருநாட்கள் நடைபெறுகின்றன.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும்
எழுத்தாளர்.த.ஸ்டாலின் குணசேகரன்,
தலைவர்,மக்கள்சிந்தனைப்பேரவை,ஈரோடு அவர்கள் கொளப்பலூர் வருகை....
01 ஆகஸ்ட் 2025
மாணவ,மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு நம்ம கொளப்பலூரில்.....
அன்பிற்கினிய தமிழார்வர்களுக்கு
வணக்கம். மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்படும்
அரசுப் பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 01-08-2025 வெள்ளிக்கிழமை இன்று 20 நிமிடங்கள் மாணவ மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு (Mass reading) நடைபெற்றது.கொளப்பலூர் MRS MATRICULATION HSc SCHOOL நிர்வாகம் அழைப்பின்பேரில் சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கம் சார்பாக செயலாளராகிய பரமேஸ்வரன் செ ஆகிய நான் கலந்துகொண்டு கீழ்குறிப்பிட்டவாறு மாணவ,மாணவியருடன் தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் வாசிப்பு பற்றிய கலந்துரையாடல் நிகழ்த்தினேன்.
ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு 🙏
01-08-2025 இன்று கொளப்பலூர் MRS மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் காலை சரியாக 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாணவ,மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு தொடங்கியது.
சிறப்பு அழைப்பாளராக சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் செயலாளர் செ.பரமேஸ்வரன் ஆகிய அடியேன் கலந்துகொண்டு சிறப்பித்தபோது........
உரையாற்றிய நிகழ்வு ........
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே....
மதிப்பிற்குரிய எம்ஆர்எஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர்,இருபால் ஆசிரியப்பெருந்தகைகள் உள்ளிட்ட இருபால் மாணவர் சமுதாயம் அனைவருக்கும் முதற்கண் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித இனம் சுமார் 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது.நாடோடியாக அலைந்த மனிதன் தனது தேவைகள் போன்ற உணர்வுகளை ஒலிகள் மற்றும் சைகைகளால் வெளிப்படுத்தியவன் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு பேச்சுமொழி அறிந்தான்.தன் சிந்தனைத்திறனால் குடும்பம் அமைத்து சமூகமாக வாழக் கற்றுக்கொண்டு வேளாண்மை செய்துவந்தான்.மேலே,கீழே,முன்னால் என தன் தேவைகளை "ஆங்..., ஈங்....,ஊங்."..., என ஒலியெழுப்பி சுட்டிக்காட்டிய மனிதன் , தன்னுடைய சைகையிட்ட ஒலிகளைக் கவனித்து ஒலிப்பின் காலக்கழிவை உணர்ந்து 'ஆ, அ, ஈ, இ, ஊ, உ' என எழுத்துக்களாகப் பிரித்தான்.
மகிழ்ச்சிப்பெருக்கால் வெளிப்படுத்திய சிரிப்பை கவனித்தான். 'எ, ஏ' உயிரெழுத்துக்களையும் அறிந்தான்,
துக்கத்தின் வெளிப்பாடாக 'ஓ' என ஒப்பாரியை வைத்தவன் அந்த ஒலியிலிருந்து ஒ, ஓ எழுத்துக்களை அறிந்தான்.
அ+இ இரண்டின் சேர்க்கை ஐ என்றும், அ+ உ இரண்டின் சேர்க்கை ஔ என்றும் வகைப்படுத்தி
குறுகிய நேரத்தில் உச்சரிக்கும் உயிர்க்குறில் எழுத்துக்களையும், நீண்ட நேரம் ஒலிக்கும் உயிர்நெடில் எழுத்துக்களையும் பிரித்தான்.
மேலும் சிந்தித்து தான் வெளிப்படுத்தும் ஒலிகளில் கவனம் செலுத்தியவன் இடப்பிறப்பினையும்,முயற்சிப் பிறப்பினையும் அடிப்படையாக வைத்து ஒலிக்கும் தன்மைக்கேற்றவாறு வல்லினம், மெல்லினம், இடையினம் என மெய்யெழுத்துக்களையும் வகைப்படுத்தினான்.
பள்ளி மாணவர்களாகிய நாம் நமது அறியாமையால் தமிழ் இலக்கணம் மதிப்பெண் பெறுவதற்காக மட்டும் என்று கருதி அலட்சியப்படுத்தியதால் உயிர்க்குறில்,உயிர்நெடில் எழுத்துக்களை ஒரு மாத்திரை,இரண்டு மாத்திரை நேரம் அளவெடுக்க மறந்துவிட்டதன் விளைவு
இதுவும் எழுத்துப்பிழைகளுக்கு காரணமாக அமைகிறது. வல்லினம் , மெல்லினம் மற்றும் மயங்கொலி எழுத்துக்களையும் ஒலிக்கும் வேறுபாட்டை கவனிக்கத்தவறியதால் ல, ள, ழ, ர, ற, ந, ண, ன உச்சரிப்பிலும் எழுதுவதிலும் தவறுகள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு மெய்யெழுத்துடனும் 12 உயிரெழுத்துக்களும் புணர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன. அதாவது 18 மெய்யெழுத்துக்களுடன் அ,இ,உ,எ,ஒ, ஆகிய ஐந்து உயிர்க்குறில் எழுத்துக்கள் புணர்ந்து 90 உயிர்மெய்க் குறில்களையும், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு உயிர்நெடில் எழுத்துக்கள் புணர்ந்து 126 உயிர்மெய் நெடில் எழுத்துக்களையும் உருவாக்குகின்றன.
.இந்த எழுத்துக்களை பாடப்புத்தகத்திலோ ,அல்லது வாசிப்புகளிலோ குறில்,நெடில் உணர்ந்தும், வல்லினம்,மெல்லினம்,இடையினம் உணர்ந்தும் கவனமாக வாசித்து பழக்கப்பட்டாலே பெரும்பாலான எழுத்துப்பிழைகள் தவிர்க்கப்படும். அசை பிரிக்கும் பழக்கத்தை உங்களுடைய பெயரை பிரித்துப் பழகுங்க. பாடப்புத்தகத்திலுள்ள சொற்களை அசைபிரித்து பழகுங்க. குறில்,நெடில் பாகுபாடு அறிந்து வாசியுங்க. மெய்யெழுத்துடன் புணரும் ஒவ்வொரு உயிரெழுத்தும் துணையெழுத்து வடிவம் பெற்று அகரமேறிய மெய்யெழுத்துடன் முன்னொட்டாகவும், பின்னொட்டாகவும், இணைப்புக்குறிகளாகவும், இணைத்து அதாவது துண்டறிக்கையில் கண்டுள்ளபடி துணையெழுத்துக்களை நினைவில் நிறுத்தி எழுதுங்க. வாசியுங்க .இதுவே பெரும்பாலான எழுத்துப்பிழைகளையும்,சொற்பிழைகளையும் தவிர்க்கும்.
தமிழ்மொழி சொற்பெருக்கம்நிறைந்த இலக்கியங்களும்,இலக்கணங்களும் நிறைந்த தொன்மையான மொழி.
தமிழர் பண்பாடும்,நாகரீகமும் வளர,வளர அவைகளின் மாற்றங்களுக்கேற்றவாறு இலக்கணநூல்களும் மிகுதியாகத் தோன்றி தமிழ்மொழியின் வளத்தைப் பெருக்கியுள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தொல்காப்பியம் தொடங்கி சுமார் 60 க்கும் அதிகமான இலக்கணநூல்கள் இயற்றப்பட்டு தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கின்றன.அவைகளில் இன்றுவரை எல்லோரும் எளிமையாக புரிந்துகொள்ளும்வகையில் உள்ள இலக்கணநூல் பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் இலக்கணம் ஆகும்.
இவை தவிர நேமிநாதம்,தண்டியலங்காரம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கல விருத்தி,வீரசோழியம்,தொன்னூல் விளக்கம்,சுவாமிநாதம்,முத்துவீரியம் உட்பட பல இலக்கணநூல்களை புரட்டிப்பார்க்கும் வாய்ப்புஅடியேனுக்கு கிடைத்தது.🙏
வாசிக்கும்போது நிறுத்தற்குறிகளின் முக்கியத்துவம் அறிந்து தேவையான இடத்தில் போதிய இடைவெளி கொடுத்து வாசிக்க வேண்டும்.இல்லையேல் வாசிப்பில் ஏற்படும்பிழையால் கேட்பவர்கள் சொற்பிழை ஏற்படுத்துவர்.
உதாரணமாக...
(1) அம்மாநிலம் என்ற சொற்றொடரை
அம்மா நிலம் என்று வாசிக்கக்கூடாது.
(2) குறுப்புதினம் -
குறும்பு தினம் எனவும்,
(3) வரிக்குதிரை -
வரிக்கு திரை எனவும்,
(4) செல்கையிலே -
செல் கையிலே எனவும்,
(5) வரவேற்கிறது -
வர வேற்கிறது எனவும்,
(6) தேவயானி -
தேவயா னி எனவும்,
(7) வாச ரோஜா -
வா சரோஜா எனவும்,
கவனமின்றி பிழையாக வாசிக்கக்கூடாது.
ஒவ்வொரு எழுத்தின் ஒலிப்புமுறை மனதில் வையுங்க.
உயிரும் மெய்யும் கலந்த எழுத்து உயிர்மெய் என்பதை நினைவில் வையுங்க.
ஒவ்வொரு எழுத்து உச்சரிப்பின் காலக்கழிவே மாத்திரை என அளவிடப்படுகிறது.
தனி "ல"கரம், பொது "ள"கரம், சிறப்பு "ழ"கரம் ,
டண்"ண"கரம், தந்"ந"கரம், றன்"ன"கரம், இடையின "ர"கரம், வல்லின "ற"கரம் ஆகிய மயங்கொலி எழுத்துக்களை சரியாக உச்சரித்துப் பயிற்சி செய்யுங்க.
மொழியும் ஒலிகளுக்கு கொடுக்கப்படும் வரிவடிவமே எழுத்து என்பதை அறிந்துகொள்ளுங்க.
பிழைகளைத் தவிர்க்க தினமும் தொடர்வாசிப்புப் பழக்கம் தேவை.
வாசிப்புத்திறனை மேம்படுத்து.
குறில்,நெடில் உணர்ந்து அதற்குரிய காலநேரத்தில் உச்சரித்துப் பழகு,
துணையெழுத்துகளை நன்கு மனதில் வைத்துக்கொள்,
மயங்கொலிப் பிழைகள் இல்லாமலிருக்க, வல்லினம்,மயங்கொலி எழுத்துக்களை சரியாக சொல்லுடைப்பு இல்லாமல் சரளமாக உச்சரித்துப் பழகு,
நிறுத்தற்குறிகளின் அவசியம் அறிந்து வாசித்துப் பழகு.
என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள் எல்லோரும் தமிழ்மொழி இனியமொழி,இனி தவறு இல்லாமல் வாசிப்போம்.தொடர்ந்து வாசிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.பிறகு ஐந்து நிமிடங்கள் தமிழ்பாடநூல் வாசித்தனர். "MRS பள்ளி முத்தமிழ் மன்றம்" தொடங்கப்பட்டது.
நாட்டுப்பண் இசைத்து வாசிப்பு முகாம் நிறைவடைந்தது.
தகவலுக்காக...
பரமேஸ்வரன் செ.,
செயலாளர்,சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் மற்றும்
அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கம்.
01-08-2025
09 ஜூலை 2025
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருது வழங்கும் 6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025
"செயற்கரிய செய்வார் விருது" வழங்கி பாராட்டு வழங்க அழைத்துள்ளனர்.
அனைவருக்கும் வணக்கம்.
வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணிமன்றம் அறக்கட்டளையினர்,
ஆற்றல்மிகு 6ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவினை,
வாசிப்போம்,சமூகத்தை நேசிப்போம்
என்னும் அறிவுசார்ந்த மக்கள்சிந்தனையில்,
திருப்பூர் மாவட்டம்,சீரங்கராய கவுண்டன்வலசு ரோட்டில் அமைந்துள்ள,R.P.S.மஹால் கல்யாணமண்டபத்தில்
2025 ஜூலை மாதம் 10ஆம்தேதி வியாழக்கிழமை இன்று தொடங்கி 14ஆம்தேதி திங்கட்கிழமைவரை
மக்கள்சிந்தனையுள்ள சான்றோர்களின்
அறிவுசார் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா, நூல்வெளியீடு என ஐந்துநாட்களும் அறிவுத்திருவிழாவாக நடத்துகின்றனர். .
10-07-2025 வியாழக்கிழமை இன்று தொடங்கிய புத்தகத்திருவிழாவிற்கு வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு.இரா.ராஜ்குமார் அவர்களுடைய தலைமை வகித்தார்.
வெள்ளக்கோவில் நகராட்சித்தலைவர், திருமதி.கனியரசி முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.,
புத்தகத்திருவிழாவினை காங்கேயம் சார்புநிலை நீதிமன்றம் நீதிபதி மாண்புமிகு S.சந்தான கிருஷ்ணசாமிB.A.B.L., அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையாளர்.உயர்திரு.C.மனோகரன் அவர்கள் புத்தக முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
கோட்டாட்சியர்,வட்டாட்சியர், அரிமா சங்கம், மற்றும் பள்ளிகள்,கல்லூரிகளின் நிர்வாகிகளும்,ஆசிரியர்,பேராசிரியர் பெருமக்களும்,சமூக சிந்தனையாளர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் இருபால் மாணவர்கள் இருபால் பேராசிரியர்கள்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மகாத்மாகாந்தி நற்பணிமன்ற உறுப்பினர்களனைவரும் பங்கேற்கும்
' வெள்ளக்கோவில் வாசிக்கிறது'
தலைப்பில் வாசிப்பைப் பரவலாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது.
தினந்தோறும் மாலை 6.30மணிக்கு நடைபெறும் அறிவுசார் நிகழ்வில்,
சிறப்பு விருந்தினர்களாக,
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்,
மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுத்தாளர்,முனைவர்.S.S.வைகைச்செல்வன் அவர்கள்,
சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் மரியாதைக்குரிய தேவிபாரதி அவர்கள்,
காந்தியச்செம்மல் மரியாதைக்குரிய தமிழருவி மணியன் அவர்கள்,
புகழ்பெற்ற சொற்பொழிவாளர் திருமதி.சுமதிஸ்ரீ அவர்கள்,
தீக்கதிர் ஆசிரியர்,உயர்திரு. மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள்,
முதன்மைச்சேவகர்,மரியாதைக்குரிய K.அண்ணாமலை (Ex IPS) அவர்கள்,
ஜெயா தொலைக்காட்சி புகழ் பட்டிமன்றப்பேச்சாளர் முனைவர்.கோ.பா.இரவிக்குமார் அவர்கள் மற்றும் அறிவுசார் சான்றோர் மேன்மக்கள்
ஐந்துநாட்களும் கலந்துகொண்டு அறிவுத்திருவிழாவிற்கு பெருமைசேர்க்கின்றனர்.
தொடர்ந்து....
கலைமாமணி,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையிலான குழுவினர்,
'குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரிவது கணவனின் வருமானமா? மனைவியின் நிர்வாகமா?'
என்னும் தலைப்பில்,சிந்தனையைத்தூண்டும் மாபெரும் சிரிப்புப் பட்டிமன்றம் நடத்துகின்றனர்.வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில்
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதுகள் கீழ்க்குறிப்பிட்டவாறு வழங்கி பாராட்டுகின்றனர்.
ஆன்மீகச்செம்மல் விருது,
சிறந்த இயற்கைஆர்வலர் விருது,
பாரம்பரியக்காப்பாளர் விருது,
மண்ணின் மைந்தர்கள் விருது,
சிறந்த பள்ளிகள் விருது,
செயற்கரிய செய்பவர் விருதுஎன வழங்குகின்றனர்.
செயற்கரிய செய்பவர்கள் விருது சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர்,உயர்திரு.தேவிபாரதி அவர்களுக்கும்,
உயர்திரு.செ.பரமேஸ்வரன், (அரசுப்பேருந்து ஓட்டுநர்-Rtd) சமூக ஆர்வலர்,இலக்கிய ஆர்வலர்,
சத்தியமங்கலம்,விதைகள் வாசகர் வட்டம்,செயலாளர்,
சத்தியமங்கலம்முத்தமிழ்ச்சங்கம்செயலாளர்,
அரியப்பம்பேரூராட்சி தமிழியக்கம் செயலாளர்,
ஆகிய அடியேனுக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த 2 010ஆம் ஆண்டு 'கற்கும் பாரதம்'எழுத்தறிவு கலைப்பணி இயக்கத்தில் தொடங்கி,இன்றுவரை 15 ஆண்டுகால சமூகசேவை களை பட்டியலிட்டு கணக்கிட இயலாது.
காரணம்,
பணியிலிருக்கும்வரை தாளவாடி சென்று வாழ்வாதாரப்பணியான ஓட்டுநர்பணியை முடித்துக்கொண்டு ஓய்வெடுக்கவேண்டிய நேரத்தில் தாளவாடி வட்டாரத்திலுள்ள பள்ளிகளுக்குச் சென்று போதை தவிர்ப்பது, சாலைப்பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, இயற்கையைக்காப்பது பற்றிய விழிப்புணர்வு, கண்தானவிழிப்புணர்வுதருதல், இலவச கண்சிகிச்சைமுகாம் நடத்துதல், பொது மருத்துவமுகாம் நடத்துதல், தாளவாடி வனத்துறையில் இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி பொதுஇடங்களில் மரங்களை நடுதல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அறிவயல்சார்ந்த விழிப்புரைகளைத்தருதல்,இலவசமாக சதுரங்கப்பயிற்சியளித்தல்,வானொலி வாயிலாகவும்,தொலைக்காட்சி வாயிலாகவும் சமூக விழிப்புணர்வு வழங்குதல்,
நடமாடும் மாணவர் நூலகம் தொடங்கி மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பொதுஅறிவுப்புத்தகங்களை வாசிக்கத்தூண்டுதல், புத்தகத்திருவிழாக்களை நடத்துதல், தமிழ்இலக்கியம் சார்ந்த பணிகளைச்செய்தல்,என பல்வேறு சூழல்களிலும்
எனக்கு ஆதரவாக களமிறங்கி சமூகப்பணியாற்றியவர்களான (1) தற்போது CPM (I)ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினராக இருந்துகொண்டு பவானிசாகர் மற்றும் புஞ்சைப்புளியம்பட்டி வட்டாரக்கமிட்டி &,தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தில் மாவட்டக்குழுவிலும் செயலாற்றிவருகின்ற சமூக ஆர்வலர் திரு.A.P..ராஜூ அவர்கள்,
(2)பாரதிபுத்தகாலயம்,ஈரோடுகிளைப்பொறுப்பாளர்
திரு.இளங்கோஅவர்கள்,
(3) சேலம் தோழா FM90.0 MHz இயக்குநர் திரு. R.V. முத்துசாமி அவர்கள்,
(4) பண்ணாரி அம்மன் சமுதாய வானொலிநிலைய மேலாளர்.திரு.சங்கர் அவர்கள்,
(5)தாளவாடி தாலுக்கா சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு,
(6)கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு,
(7)சத்தியமங்கலம் அரிமா K லோகநாதன் Logu Driving School, விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர்எழுத்தாளர்.யாழினி ஆறுமுகம் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்,
(8)கல்வி உரிமைகளுக்கான மேம்பாட்டுமையத்தின் இயக்குநர் திரு. R.கருப்புசாமி(READ) அவர்கள்,
(9) வேலூர் பல்கலைக்கழக வேந்தர் மதிப்பிற்குரிய கோ.விஸ்வநாதன் VITஅவர்கள் தலைமையிலான பன்னாட்டுத்தமிழியக்கத்தின் கிளையான அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கப்பொறுப்பாளர்கள் ,
(10) Rtnஆனைக்கொம்பு கல்யாண மண்டப உரிமையாளர் Rtnஆனைக்கொம்புஸ்ரீராம் அவர்கள் தலைமையிலான சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் ,
(11)கரட்டூர் இளந்தளிர்நண்பர்கள் குழுவினர் உள்ளிட்ட பல தன்னார்வலர்களின் கூட்டுப்பணிக்கு வழங்கப்பட்ட விருது இன்று வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் எனக்கு வழங்கவுள்ள விருது,
"சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதாக" அறிவிக்கப்பட்ட ,
"செயற்கரிய செய்பவர் விருது"
செ. பரமேஸ்வரன் (C.Parameswaran) ஆகிய அடியேனின் சமூகப்பணிகளில் சில...
2010ஆம் ஆண்டு...
13-08-2010 தாளவாடி ஊ.ஒ.ந.நி,பள்ளியில்தொடங்கி21-08-2010வரை
, கற்கும்பாரதம்,எழுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைத்து நடத்துதல்.
இன்னும்,இன்னும் நிறைய சான்றுகள் இனி தொடராகப்பதிவிடப்படும் ....
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
மரியாதைக்குரியவர்களே, வணக்கம். 'கொங்குத்தென்றல்' வலைப்பக்கத்திற்கு அனைவரையு...
-
மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பூமியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து ...























































