28 ஜூன் 2024

ஓவியக்கலை ஒரு கண்ணோட்டம்-

                                             ஓவியக் கலை..

      கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்பு வாசகர்களை மகிழ்வோடு வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் ஓவியக்கலை பற்றி சிறிதளவு அறிந்துகொள்வோம். 


                                      தமிழ்த் தாய் வரைபடம்.(கோட்டோவியம்)



கோபிசெட்டிபாளையம் ஓவியர் திரு.GMK  தருண்ராஜாஅவர்களது கைவண்ணத்தில் உருவான  ஓவியம்.


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

                      இது ஔவையார் கூற்று....

இதில் சித்திரம், செந்தமிழ், கல்வி, நடை இவை எல்லாம் தொடர்ப் பயிற்சி. முயற்சி.     

                       ஓவியத்துக்கு என மிக நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் குகையில் இருந்து தான் ஓவியங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. ஓவியம் என்பதை தூய தமிழில் சித்திரம் என்று சொல்வார்கள்.வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் உருவாக்கிய கலைப்பொருட்களிலிருந்தே ஓவியத்தின் வரலாறு தொடங்குகிறது.

                ஓவியம் என்பது பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகம்,பாரம்பரியத்தை தழுவி வெளிக்காட்டுவதாக இருந்து வருகிறது.

                            ஒவ்வு என்னும் வினையடியாகப் பிறந்த ஓவு, ஓவம், ஓவியம் என்னும் இம்மூன்று சொற்களும் சித்திரத்தையே குறிக்கின்றன. 'ஓவியனுள்ளத் துள்ளியது வியப்போன்' எனக்கூறும் மணிமேகலைச் செய்யுள் வரியிலிருந்து தமிழக ஓவியர்கள் புறக்கண் கண்டதை அகக்கண் கொண்டு நோக்கி, அதை அகத்தினின் தீட்டி பின்னர் பிற ஊடகங்களில் வரைந்தனர் என்பது புலனாகிறது.

ஓவியங்களில், குகை ஓவியம் தொடங்கி உடலோவியம்,கேலிச்சித்திரம்,துணி ஓவியம்,கண்ணாடி ஓவியம்,எனபலவகைகள் உள்ளன.

                    நிறம் தீட்டாமல் வரையும் ஓவியத்துக்கு புனையா ஓவியம் (Outline drawing) என்று பெயர். 'புனையா ஓவியம் கடுப்ப' என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. ஓவியத் தொழிலுக்கு 'வட்டிகைச் செய்தி' என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்றால் துகிலிகை (brush).

                 ஆதி காலத்திலிருந்தே இந்துக்களிடையே ஓவியக் கலை மரபு விருத்திபெற்றிருந்தமையைத் தொல்பொருளாய்வுகளும் இலக்கிய ஆதாரங்களும் காட்டுகின்றன. இவை பற்றி விஷ்ணுதர்மோத்திரம்,தக்கணசித்திரம்,சித்திர லட்சணம்  முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன. 

                பண்டைய ஓவியப் பயன்பாடுகளுக்கு மட்பாண்டங்கள்,உடைகள்,அரண்மனை,குகைகள்,கோயில்கள் ஆகிய இடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.   ஓவியம் வரையப்பட்ட கூரை 'ஓவிய விதானம்' எனப்பட்டது.

தமிழர் ஓவியக் கலை...

                    சங்க‍காலத்தில்  இறந்த போர் வீரனுக்காக நடுகல்லில் சித்திரம்  தீட்டும் மரபு காணப்பட்டது. சங்க காலத்தின் தமிழ் நூல்களான தொல்காப்பியம் , மதுரைக்காஞ்சி , சிலப்பதிகாரம் , மணிமேகலை  ஆகிய நூல்களில் இவ்வோவியங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. ஆண்டிப்பட்டிமலை(பழனி),  பகுதியில் சங்ககாலத்தைச் சேர்ந்த சுமார் 3000 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.     "நாடக மகளிர்க்கு நற்கனம் வகுத்த ஓவியச் செந்நூல்" என சிலப்பதிகாரத்தில் கூறப்படுவதிலிருந்து இதனை நாம் ஆதாரப்படுத்தலாம்.தக்கண சித்திரம் என்ற ஓவிய நூலுக்கு பல்லவ மன்ன‍ன் அணிந்துரை எழுதியதாகவும் அறிய முடிகிறது. இந்துக் கோவில்களில் பச்சிலைகளைக் கொண்டு ஓவியம் தீட்டும் வழக்கம் இருந்துள்ளது. சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோவில் ஆகிய இடங்களில் இந்தவகையான ஓவியங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

          இந்துக் கோவில்கள் சிலவற்றில் சித்திரக்கூடம் அமைக்கப்பெற்றுள்ளன. இவைகளில் ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாக வரையப்பெறுகின்றன. இத்துடன் பல கோவில்களின் மேற்பரப்பில் இறைவனின் மேன்மையைப் போற்றும் ஓவியங்களும், தலவரலாறுகள் வரையப்பெறுகின்றன.

                 தமிழ்நாட்டில் ஓவியங்களாக இன்று காண்பவற்றுள் மிகப் பழைமைமிக்கவை பல்லவர் காலத்து ஓவியங்களே.

                  காஞ்சீவரம் (காஞ்சீபுரம்): பண்டைய பல்லவ மன்னர்களின் தலைநகரம், இங்கு கோயில்களும், சன்னதிகளும் நிறைந்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை கைலசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் கோயில்கள், அவை பண்டைய சுவர் ஓவியங்களைக் கொண்டுள்ளன. பல்லவ மன்னரான நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மன் (கி.பி 680-722) காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாத கோயிலில், கி.பி 7 முதல் 8ஆம் நூற்றாண்டுகளின் ஓவியங்கள் குறுகிய கலங்களின் உள் சுவர்களில் வெளிப்புற சுவர்களில் முற்றத்தில் வரிசையாக உள்ளன. அவை இந்து புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. ஆனால் பெரும்பாலான ஓவியங்கள் காலம் மற்றும் கூறுகளின் மாறுபாடுகள் மூலம் மறைந்துவிட்டன. தப்பிப்பிழைத்த சில சமீபத்திய காலங்களில் சுண்ணாம்பு பூச்சால் மூடப்பட்டிருந்தன. ஆனால் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஜுஈவ் டப்ரூயில், அங்கும் இங்கும் வெள்ளை பூச்சு அடுக்கை அகற்றி ஓவியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். நந்திவர்மன் II என்ற பல்லவமல்லா (கி.பி. 725-790) வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டினார். இந்த கோயிலில் உள்ள ஓவியங்கள், அநேகமாக கி.பி. 8 முதல் 9ஆம் நூற்றாண்டு காலத்தியவை, அவை கிட்டத்தட்ட மறைந்துவிட்டன, ஆனால் மத்திய கோபுரம் அல்லது விமானத்தின் ஒன்றின் கீழ் தலையுள்ள ஓவியம் காணப்படுகின்றது. ஆனால் எல்லா இடங்களிலும் வண்ணப்பூச்சின் தடயங்கள் உள்ளன. இந்த பல்லவ ஓவியங்கள் பாரம்பரிய அல்லது அஜந்தா பாணியில் உள்ளன, மேலும் இந்து சுவரோவியக் கலையின் சில சிறந்த மாதிரிகளைக் குறிக்கின்றன.

                     (  ஆழமில்லாத அறிவு, ஆத்திரத்தில் பெற்ற குழந்தையே நாத்திகம். அறிந்தோ அறியாமலோ சிலர் அதற்கு வைத்த பெயர் பகுத்தறிவு.- கண்ணதாசன்)

சங்க இலக்கியங்களில் ஓவியம் பற்றிய  செய்திகள்

'ஓவியர் தம் பாவையினோ டொப்பரிய நங்கை' - சிந்தாமணி
'ஓவியப் பாவை யொப்பாள்' - சிந்தாமணி
'ஓவியத்து எழுத ஒண்ணா, உருவத்தாய்' -கம்பராமாயணம்
'கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் தீட்டினான் கிழிமிசைத் திலகவள் நுதல்' - சிந்தாமணி
'ஓவுறழ் நெடுஞ்சுவர்' - பதிற்றுப்பத்து 
'ஓவியத்துறை கைபோய ஒருவனை' - நைடதம்
'ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்' - மணிமேகலை 


கோபிசெட்டிபாளையம் ஓவியர் திரு.GMK  தருண்ராஜாஅவர்களது கைவண்ணத்தில் உருவான  ஓவியம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...