14 பிப்ரவரி 2017

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!! என உரக்கசொல்லும் துணிச்சல்.


சாமானியனின் எதிர்பார்ப்பு நடுநிலை தவறாமை!
              http://www.linesmedia.in/ ஓங்கி வளர  வாழ்த்தி வரவேற்கிறோம்!!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
         ஜனநாயகத்தின் நான்கு தூண்களான, ஊடகத்துறை,நீதித்துறை,அரசுத்துறைகள்,ஆட்சியாளர்கள், ஆகிய வைகள் ஆங்காங்கு சறுக்கலில் சிக்குண்டு அல்லது சறுக்கி செல்வதைக்காணும்போதெல்லாம் நான் மிகவும் வேதனைப்பட்டதுண்டு..இன்று எனது முகநூல் நண்பர் திரு.கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் சுதந்திரமாக பத்திரிக்கை நடத்துவதில் ஆர்வம் கொண்டு அறிக்கைவிட்டதைக்கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன்.திரு.கார்ட்டூனிஸ்ட் பாலா போன்ற அன்பர்களால் ஜனநாயகத்தின் தூண்கள் சரிவிலிருந்து மீட்கப்படும் என எதிர்பார்க்கிறோம்!

புள்ளியிலிருந்து...!
------------------------------
14-2-17.. இன்றைய தினம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தினம். அரசியல்வாதிகளையே சுற்றிவரும் எனக்கும் இன்று முக்கியமானதினம்..
இன்று நானும் என் நண்பர்களும் புதிய ஊடக பயணத்தை துவங்குகிறோம்.
வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது. அதை அதன் போக்கில் எதிர்கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமானது.
மும்பையில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவன் நான். ``உனக்கு ஓவியமே வரையத்தெரியவில்லை.. பேசாமல் கார்ட்டூனிஸ்ட்டாகிரு..” என்று நண்பர் பாலபாரதி சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு ஓவர் நைட்டில் கார்ட்டூனிஸ்ட் ஆனேன்.
குமுதத்தில் கார்ட்டூனிஸ்ட் ஆவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் குமுதம் 12 ஆண்டுகள் கார்ட்டூனிஸ்ட்டாக என்னை அரவணைத்துக்கொண்டது.
பிடித்தமான கார்ட்டூனிஸ்ட் பணிக்காகதான் மத்திய அரசின் ரயில்வே பணியை நிராகரித்தேன். இப்போது குமுதத்திலிருந்து வெளி வந்திருப்பதும் அதே கார்ட்டூன்களின் சுதந்திரத்திற்காகதான். பணிபுரிந்த எல்லா இடங்களிலும் என் சுயத்தோடவே இருந்திருக்கிறேன். நானாகவே விரும்பி வெளியே வந்திருக்கிறேன்.
``நாம எப்பவும் `அலக்கா’ இருக்கணும்டா..” என்று
என் தாத்தா பொன்னையா அடிக்கடி ஒரு வாசகம் சொல்வார். அதில் வரும் அலக் என்ற இந்தி வார்த்தைக்கு தனித்துவம் என்று அர்த்தம். அந்த வார்த்தைதான் என்னை எப்போதும் இயக்குகிறது.
இப்போதும் தனித்துவமாக புதிய பயணத்திற்கு ஆயத்தமாகிறேன். கூட சில பத்திரிகை நண்பர்களும் இணைக்கிறார்கள்.
தமிழக அரசியல் களம் செம சூடாக இருக்கிறது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக எனக்கு மிகவும் பிடித்த களம் இது.
போர்களில் மிக பலம் வாய்ந்தது ஊடகப்போர். ஊடகப்போர் தந்திரத்தின் வலிமை அறியாத.. அல்லது அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத தமிழ் சமூகத்திலிருந்து வந்தவன் என்பதால் எனக்கு தெரிந்த ஊடகப்போரையும்.. தந்திர அரசியலையும் என் கோடுகளின் வாயிலாக மக்களுக்கு கடத்த விரும்புகிறேன். இதுநாள் வரை அதைதான் செய்திருக்கிறேன்.
செல்போனில் இணையம் வந்தப்பிறகு பிரிண்ட் மீடியாக்களின் அந்திம காலம் ஆரம்பமாகிவிட்டது இப்போது. இனி வரும் காலங்களில் பத்திரிகைகள் வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார் குடும்பத்தைப்போல் காட்சி அளிக்கும்.
இப்போதிருப்பது இணைய ஊடகங்களின் சாம்ராஜ்யம். சமூக வலைதளங்களின் வரவுக்குப்பின் ஊடகங்கள் என்பது மக்கள் வசம் வந்துவிட்டது. அதை சமீபத்தில் மெரினாவில் தமிழ் பிள்ளைகள் நடத்திய போராட்டத்தின் மூலம் நேரடியாகவே பார்த்தோம்.
இந்த காலத்தில் பத்திரிகை ஆரம்பிப்பது என்பது முதலை வாயில் நாமே தலையை கொண்டுப்போய் விடுவது அல்லது.. மலை உச்சிக்கு சென்று தற்கொலை செய்வது போன்றது அது.
ஆக என்னுடைய பணக்கார நண்பர்கள் முதலீடு செய்வதாக இருந்தாலும் கூட, அடுத்தவர் பணம் என்பதற்காக தெரிந்தே அந்த தவறை செய்ய மாட்டேன்.
இந்தியாவின் அரசியல் கார்ட்டூன் பிதாமகர்களில் ஒருவரான சங்கர் என்னைப்போல் பத்திரிகை பணியிலிருந்து வெளி வந்தபோது, `சங்கர்ஸ் வீக்லி’ என்று கார்ட்டூன்களுக்காக தனியாக அந்த காலத்தில் பத்திரிகை ஒன்றை நடத்தினார். அவர் பொருளாதாரரீதியில் செழிப்பாக இருந்ததால் அதை செய்தார்.
ஆனால் பாலாவோ.. பாலாவின் அப்பாவோ கோடிஸ்வரர்கள் இல்லை என்பதால், அரசியல் கார்ட்டூன்கள் வாயிலாக செய்திகளை பேசும் ஒரு சிறப்பான இணைய ஊடகத்தை ஆரம்பிக்கிறோம்.
linesmedia என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர்.
www.linesmedia.in என்பது எங்கள் இணையதள முகவரி. கோடுகளையும்.. பயணத்தின் பாதையையும் குறிக்கிறது என்பதால் நான் மிகவும் விரும்பி தேர்ந்தெடுத்த பெயர்.
வரலாற்று சிறப்பு மிக்க தினமான இன்று இந்த புதிய பயணத்தை அறிவிக்க வேண்டும் என்பதால் அவசரமாக என் கார்ட்டூன் கேரக்டர்கள் சுவரில் கிறுக்கி அறிவித்திருக்கிறார்கள்.
இன்னும் முழுமையாக வடிவமைப்பு பணிகள் முடியவில்லை. தற்போதைக்கு என்னுடைய பழைய கார்ட்டூன்களும் எழுத்துகளும் மட்டுமே இடம்பெற்றிருக்கும். சில நாட்களில் சரிசெய்யப்படும்.
இன்று துவங்கியிருக்கும் எங்களது ஊடக பயணத்தை தொடர்ந்து நடத்தப்போவது ஏதேனும் ஒரு தனி முதலாளி அல்ல.. நீங்கள்தான்.. பங்களிப்பு செய்யப்போவதும் நீங்கள்தான்.
இன்றைய அடாவடி அரசியல் சூழலில் கார்ட்டூன்களை கண்டு அரசியல்வாதிகள் பயப்படுவதைவிட அதிகமாக பத்திரிகை முதலாளிகள் பயப்படுகிறார்கள் என்பதால் பாரபட்சமில்லாமல் அரசியல்வாதிகளை விமர்சிக்கும் பணியை துணிச்சலுடன் நாங்கள் துவங்குகிறோம்.
ஒவ்வொரு செயலுக்கும் பொருளாதரா பலம் என்பது மிக முக்கியமானது. ஒரு படைப்பாளி தோற்றுப்போவது அந்த பொருளாதர பலமில்லாததால்தான்.
நான் பணியிலிருந்து விலகிவிட்டேன் என்றதும் பொருளாதாரரீதியில் எனக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக உலகெங்கிலிருந்தும் நண்பர்கள் பலர் தொடர்பு கொண்டார்கள்.
அவர்களின் அன்பை பெற்றிருப்பதை இந்த தருணத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறேன். அவர்கள் என்றும் என் நினைவில் இருக்கிறார்கள். என்னுடைய கோடுகளும் எழுத்துகளும் சம்பாதித்து கொடுத்த சொத்துக்கள் அந்த நண்பர்கள் மட்டுமே.
எங்களைப்போன்ற பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் வாசகர்களாகிய நீங்கள் காசு கொடுத்து புத்தகம் வாங்குவதிலிருந்தும் விளம்பரதாரர்கள் விளம்பரம் கொடுக்கும் வருவாயிலிருந்துதான் வழங்கப்படுகிறது.
யாரோ ஒரு முதலாளிகள் முதலீடு செய்வதால் தங்களது வியாபார நலனுக்காக, அண்னா அறிவாலயத்திலோ, போயஸ்தோட்டத்திலோ சென்று பத்திரிகையாளர்களை அடகு வைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள்.
அதனால் முதலாளிகள் சொல்வதற்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் அடியாட்களாக செயல்பட வேண்டியிருக்கிறது .
ஆக இந்நிலையில் இருந்து நானும் என் கோடுகளும், என் போன்ற நண்பர்களும் சுதந்திரமாக இயங்க வேண்டுமானல் அது உங்கள் பங்களிப்பில்தான் இருக்கிறது.
சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. சித்திரம் வரைய நான் தயார். பொருளாதாரம் என்ற சுவர் எங்களுக்கு பலமாக இருக்க வேண்டுமானால் அதற்கு நிச்சயம் உங்கள் பங்களிப்பு எங்களுக்கு சந்தா தொகையாக மாற வேண்டும்.
அந்த தொகை சிறியதாக.. பெரியதாக.. என எவ்வளவாகவும் இருக்கலாம்.. அது பிரச்னை இல்லை. ஆனால் எங்கள் பயணத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
அதை ஒரு இயக்கமாக செய்ய விரும்புகிறோம். அடுத்தாண்டு இதே நாள் எங்களுக்கான சந்தா தொகையை அறிவிக்கும் அளவுக்கு வளர்வோம் என்று நம்புகிறேன்.
என்னுடைய ஒவ்வொரு கார்ட்டூனும் 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்படுகிறது. 60 ஆயிரம் நண்பர்கள் என்னை பின் தொடர்கிறார்கள்.
இவர்களில் போகிறப் போக்கில் நடிகை போட்டோவுக்கு சும்மா லைக் போட்டுவிட்டு கடந்து செல்பவர்கள் என்று நினைத்து ஒரு 55 ஆயிரம் பேரை கழித்து விட்டுவிடலாம்.
மீதி இருக்கும் 5 ஆயிரம் பேரில் ஒரு ஆயிரம் பேர் எங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரரீதியில் துணை நின்றால் போதும். தயங்காமல் நின்னு விளையாடலாம். என்ன.. அந்த ஆயிரம் பேரில் நீங்களும் ஒருவராக இருந்தால் போதும் நாங்களும் நண்பர்களும் நின்னு விளையாடுவோம்.
இது எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கு எண்.
LINES MEDIA
C/A : 6499827223
INDIAN BANK
BRANCH : PORUR
IFSC: IDIB000P047
சந்தா தொகை அனுப்பும் நண்பர்கள் மறக்காமல் cartoonistbala@gmail.com அல்லது editorlinesmedia@gmail.com என்ற முகவரிக்கு விபரங்களை அனுப்பவும். அவர்களுக்கு முறையான ரசிது அனுப்பி வைக்கப்படும். மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் 8300187099 என்ற எனது எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
எங்களின் இந்த பயணத்தை நாங்கள் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்கவில்லை.. புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறோம்..
ஏனெனில் புள்ளியில் இருந்துதான் கோடுகள் உதிக்கின்றன.. அந்த கோடுகள் மக்களின் கோடுகளாக பயணிக்கும்..
நன்றி.. :)
-கார்ட்டூனிஸ்ட் பாலா
14-2-17
http://www.linesmedia.in/
விரும்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...