25 மே 2015

சாலை அறிவும்,வாகன அறிவும் வேண்டும்....


                        திம்பம் மலைப்பாதையில் இருபதாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து நிற்கும் அபாயத்தை உணராத வேன் பயணிகள் போக்குவரத்தை தடைசெய்துகொண்டு பேருந்தை ஓட்டவிடாமல் என்னுடன் வாக்குவாதம் செய்தும்,மொபைலில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த காட்சி...

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.

           கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை 24.05.2015அன்று  நான் பணிபுரிந்த அரசுப்பேருந்தை சத்தியமங்கலத்தில் காலை9.20 மணிக்கு புறப்பட்டு தாளவாடி செல்லும்போது திம்பம் மலைப்பாதையில் இருபதாவது கொண்டைஊசி வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற சுற்றுலா வேன் ஒன்று திடீரென நான் பணிபுரிந்த பேருந்தில் மோத பின்னோக்கி வந்தது.மோதலை தவிர்க்க நான் அறுபத்தைந்து பயணிகளுடன் பேருந்தைகாரன் அடித்தவாறே பின்னோக்கி எடுத்துக்கொண்டு எச்சரிக்கை கொடுத்தேன்.

                      உணர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் வேனை நிறுத்திவிட்டார்.

                ஆனால் பேருந்தோ அபாயமான வளைவின் சாலை விளிம்பில் விபத்து ஏற்படும் சூழலில் நின்றுகொண்டிருந்தது.நான் செலுத்திய பேருந்தில் ஹேண்ட் பிரேக் இல்லாததால் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தவாறே வேன் ஓட்டுநரை ஓரமாக தள்ளி நிறுத்துமாறு சத்தம் போட்டேன்.அதற்கு செவி மடுக்காதநிலையில் நடத்துநர் இறங்கிச்சென்று விசயத்தைக்கூற வேனில் பயணித்த பயணிகளில் சிலர் 

திம்பம் தினமும்தானே வழித்தடங்கல் (ரோடு பிளாக்) ஆகிறது.இன்றைக்கும் அப்படியாக நினைத்துக்கொள்ளுங்க.எங்க வேன் செல்லாமல் உங்க பேருந்து செல்லாது என சாலையின் மற்றும் பேருந்தின் சூழ்நிலை அறியாமல் அதே சமயத்தில் சற்று அதிகாரத்தோடு  கூறினர்.பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் இறங்கிச்சென்று கூறியபோது பயணியையும் மிரட்டிவிட்டனர்.பேருந்தைவிட்டு இறங்கமுடியாத ஆபத்தான சூழலில் நான் பயணிகளை மிரட்டுவதை தடுப்பதற்காக சத்தம் போட்டேன்.அதன்பிறகே வேனை பின்னோக்கி தள்ளி ஓரமாக நிறுத்தி வழிவிட்டதோடு என்னையும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.மொபைலில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.பதிலுக்கு நானும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என்பதால் கேமராவில் என்னால் முடிந்த அளவு பதிவு செய்தேன்.நான் கேமரா எடுத்ததைப் பார்த்த சிலர் ஓடிவிட்டனர்.

                ஊருக்கே ராஜாவானாலும் நெடுஞ்சாலை அனைவருக்கும் பொதுவான சாலை என்பது கூட உணராமல்,பயணிகள் வாகனங்கள் உட்பட இரு மாநிலத்தின் போக்குவரத்திற்கு  (N.H.209) தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்கிறோம் என்று கூட தெரியாமல் தானே பெரியவன் என்று அதிகாரத்தோடு வாதம் செய்யும்  இவர்கள் போன்ற சுயநலவாதிகள்  திருந்துவது எப்போது? நான் வேன் ஓட்டுநரிடம் இப்படி ஏன் போக்குவரத்திற்கு தொந்தரவு செய்கிறீர்கள் எனப்பேசியபோது சம்பந்தமே இல்லாமல் வேன் பயணிகள் குறுக்கிட்டு என்னுடன் தகராறு செய்தனர்.இவர்களைப்பார்த்தால் படித்தவர்கள் போலுள்ளது. படித்தால் மட்டும் போதுமா?சாலை அறிவிம் வாகன அறிவும் வேண்டாமா? பொதுச்சாலை அனைவருக்கும் பொதுவானது.போக்குவரத்தை தடை செய்ய காரணமாக இருக்கிறோம் என்ற விவரம்கூடத் தெரிய வேண்டாமா? இவர்களைப் போன்றோர்களால்  ஏற்படும் விபத்துக்கள்தான் எத்தனை?எத்தனை?அதன் பழியினை ஏற்பது தொழில் சார்ந்த அப்பாவி ஓட்டுநர்களா????

            பேருந்தில் பயணிப்பவர்கள் எத்தனையோ பிரச்சினைகளின் மத்தியில்,எத்தனேயோ தேவைகளுக்கு செல்லும் சூழலில் போக்குவரத்து செய்கிறார்கள் என்ற சிந்தனை இவர்களைப்போன்றோருக்கு எப்போது வரும்? இவர்களால் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்திருந்தால் அதற்கான காரணத்தை வேன் பயணிகளோ,ஓட்டுநரோ ஏற்றுக்கொள்வார்களா?அல்லது சமுதாயம்தான் ஏற்றுக்கொள்ளுமா?அல்லது போக்குவரத்துகழகம்தான் ஏற்றுக்கொள்ளுமா?அல்லது சட்டம்ஒழுங்கு நிர்வாகமோ மோட்டார் வாகனத்துறையோ ஏற்றுக்கொள்ளுமா? அப்போது பயணித்த அறுபத்தைந்து பயணிகளை நம்பியுள்ளோரின் வாழ்வாதாரத்திற்கு உதவிட முடியுமா? அனைத்து பழிகளும் அப்போது பணியில் இருந்த என்மீதுதானே பாயும்!..சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவரும் எனது நற்பெயரல்லவா வீணாகி இருக்கும்! அன்றைய தினம் நான் பணி புரிந்த பேருந்தில் என்னை நம்பி பயணித்த அறுபத்தைந்து பயணிகளின் உயிருக்கோ,உடலுறுப்புகளுக்கோ,அரசு பேருந்துக்கோ,நடத்துநருக்கோ,எனக்கோ ஏதாவது விபரீதம் ஏற்பட்டு இருந்தால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?.யார் மீது பொறுப்பு சுமத்துவது?
பதவியும்,செல்வாக்கும்,அதிகாரமும் இருந்தால் மட்டும் போதுமா? சிறிதளவாவது பொதுவான சிந்தனை வேண்டாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...