அன்பிற்கினிய தமிழார்வர்களுக்கு
வணக்கம். மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்படும்
அரசுப் பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 01-08-2025 வெள்ளிக்கிழமை இன்று 20 நிமிடங்கள் மாணவ மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு (Mass reading) நடைபெற்றது.கொளப்பலூர் MRS MATRICULATION HSc SCHOOL நிர்வாகம் அழைப்பின்பேரில் சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கம் சார்பாக செயலாளராகிய பரமேஸ்வரன் செ ஆகிய நான் கலந்துகொண்டு கீழ்குறிப்பிட்டவாறு மாணவ,மாணவியருடன் தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் வாசிப்பு பற்றிய கலந்துரையாடல் நிகழ்த்தினேன்.
ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு 🙏
01-08-2025 இன்று கொளப்பலூர் MRS மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் காலை சரியாக 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாணவ,மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு தொடங்கியது.
சிறப்பு அழைப்பாளராக சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் செயலாளர் செ.பரமேஸ்வரன் ஆகிய அடியேன் கலந்துகொண்டு சிறப்பித்தபோது........
உரையாற்றிய நிகழ்வு ........
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே....
மதிப்பிற்குரிய எம்ஆர்எஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர்,இருபால் ஆசிரியப்பெருந்தகைகள் உள்ளிட்ட இருபால் மாணவர் சமுதாயம் அனைவருக்கும் முதற்கண் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித இனம் சுமார் 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது.நாடோடியாக அலைந்த மனிதன் தனது தேவைகள் போன்ற உணர்வுகளை ஒலிகள் மற்றும் சைகைகளால் வெளிப்படுத்தியவன் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு பேச்சுமொழி அறிந்தான்.தன் சிந்தனைத்திறனால் குடும்பம் அமைத்து சமூகமாக வாழக் கற்றுக்கொண்டு வேளாண்மை செய்துவந்தான்.மேலே,கீழே,முன்னால் என தன் தேவைகளை "ஆங்..., ஈங்....,ஊங்."..., என ஒலியெழுப்பி சுட்டிக்காட்டிய மனிதன் , தன்னுடைய சைகையிட்ட ஒலிகளைக் கவனித்து ஒலிப்பின் காலக்கழிவை உணர்ந்து 'ஆ, அ, ஈ, இ, ஊ, உ' என எழுத்துக்களாகப் பிரித்தான்.
மகிழ்ச்சிப்பெருக்கால் வெளிப்படுத்திய சிரிப்பை கவனித்தான். 'எ, ஏ' உயிரெழுத்துக்களையும் அறிந்தான்,
துக்கத்தின் வெளிப்பாடாக 'ஓ' என ஒப்பாரியை வைத்தவன் அந்த ஒலியிலிருந்து ஒ, ஓ எழுத்துக்களை அறிந்தான்.
அ+இ இரண்டின் சேர்க்கை ஐ என்றும், அ+ உ இரண்டின் சேர்க்கை ஔ என்றும் வகைப்படுத்தி
குறுகிய நேரத்தில் உச்சரிக்கும் உயிர்க்குறில் எழுத்துக்களையும், நீண்ட நேரம் ஒலிக்கும் உயிர்நெடில் எழுத்துக்களையும் பிரித்தான்.
மேலும் சிந்தித்து தான் வெளிப்படுத்தும் ஒலிகளில் கவனம் செலுத்தியவன் இடப்பிறப்பினையும்,முயற்சிப் பிறப்பினையும் அடிப்படையாக வைத்து ஒலிக்கும் தன்மைக்கேற்றவாறு வல்லினம், மெல்லினம், இடையினம் என மெய்யெழுத்துக்களையும் வகைப்படுத்தினான்.
பள்ளி மாணவர்களாகிய நாம் நமது அறியாமையால் தமிழ் இலக்கணம் மதிப்பெண் பெறுவதற்காக மட்டும் என்று கருதி அலட்சியப்படுத்தியதால் உயிர்க்குறில்,உயிர்நெடில் எழுத்துக்களை ஒரு மாத்திரை,இரண்டு மாத்திரை நேரம் அளவெடுக்க மறந்துவிட்டதன் விளைவு
இதுவும் எழுத்துப்பிழைகளுக்கு காரணமாக அமைகிறது. வல்லினம் , மெல்லினம் மற்றும் மயங்கொலி எழுத்துக்களையும் ஒலிக்கும் வேறுபாட்டை கவனிக்கத்தவறியதால் ல, ள, ழ, ர, ற, ந, ண, ன உச்சரிப்பிலும் எழுதுவதிலும் தவறுகள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு மெய்யெழுத்துடனும் 12 உயிரெழுத்துக்களும் புணர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன. அதாவது 18 மெய்யெழுத்துக்களுடன் அ,இ,உ,எ,ஒ, ஆகிய ஐந்து உயிர்க்குறில் எழுத்துக்கள் புணர்ந்து 90 உயிர்மெய்க் குறில்களையும், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு உயிர்நெடில் எழுத்துக்கள் புணர்ந்து 126 உயிர்மெய் நெடில் எழுத்துக்களையும் உருவாக்குகின்றன.
.இந்த எழுத்துக்களை பாடப்புத்தகத்திலோ ,அல்லது வாசிப்புகளிலோ குறில்,நெடில் உணர்ந்தும், வல்லினம்,மெல்லினம்,இடையினம் உணர்ந்தும் கவனமாக வாசித்து பழக்கப்பட்டாலே பெரும்பாலான எழுத்துப்பிழைகள் தவிர்க்கப்படும். அசை பிரிக்கும் பழக்கத்தை உங்களுடைய பெயரை பிரித்துப் பழகுங்க. பாடப்புத்தகத்திலுள்ள சொற்களை அசைபிரித்து பழகுங்க. குறில்,நெடில் பாகுபாடு அறிந்து வாசியுங்க. மெய்யெழுத்துடன் புணரும் ஒவ்வொரு உயிரெழுத்தும் துணையெழுத்து வடிவம் பெற்று அகரமேறிய மெய்யெழுத்துடன் முன்னொட்டாகவும், பின்னொட்டாகவும், இணைப்புக்குறிகளாகவும், இணைத்து அதாவது துண்டறிக்கையில் கண்டுள்ளபடி துணையெழுத்துக்களை நினைவில் நிறுத்தி எழுதுங்க. வாசியுங்க .இதுவே பெரும்பாலான எழுத்துப்பிழைகளையும்,சொற்பிழைகளையும் தவிர்க்கும்.
தமிழ்மொழி சொற்பெருக்கம்நிறைந்த இலக்கியங்களும்,இலக்கணங்களும் நிறைந்த தொன்மையான மொழி.
தமிழர் பண்பாடும்,நாகரீகமும் வளர,வளர அவைகளின் மாற்றங்களுக்கேற்றவாறு இலக்கணநூல்களும் மிகுதியாகத் தோன்றி தமிழ்மொழியின் வளத்தைப் பெருக்கியுள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தொல்காப்பியம் தொடங்கி சுமார் 60 க்கும் அதிகமான இலக்கணநூல்கள் இயற்றப்பட்டு தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கின்றன.அவைகளில் இன்றுவரை எல்லோரும் எளிமையாக புரிந்துகொள்ளும்வகையில் உள்ள இலக்கணநூல் பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் இலக்கணம் ஆகும்.
இவை தவிர நேமிநாதம்,தண்டியலங்காரம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கல விருத்தி,வீரசோழியம்,தொன்னூல் விளக்கம்,சுவாமிநாதம்,முத்துவீரியம் உட்பட பல இலக்கணநூல்களை புரட்டிப்பார்க்கும் வாய்ப்புஅடியேனுக்கு கிடைத்தது.🙏
வாசிக்கும்போது நிறுத்தற்குறிகளின் முக்கியத்துவம் அறிந்து தேவையான இடத்தில் போதிய இடைவெளி கொடுத்து வாசிக்க வேண்டும்.இல்லையேல் வாசிப்பில் ஏற்படும்பிழையால் கேட்பவர்கள் சொற்பிழை ஏற்படுத்துவர்.
உதாரணமாக...
(1) அம்மாநிலம் என்ற சொற்றொடரை
அம்மா நிலம் என்று வாசிக்கக்கூடாது.
(2) குறுப்புதினம் -
குறும்பு தினம் எனவும்,
(3) வரிக்குதிரை -
வரிக்கு திரை எனவும்,
(4) செல்கையிலே -
செல் கையிலே எனவும்,
(5) வரவேற்கிறது -
வர வேற்கிறது எனவும்,
(6) தேவயானி -
தேவயா னி எனவும்,
(7) வாச ரோஜா -
வா சரோஜா எனவும்,
கவனமின்றி பிழையாக வாசிக்கக்கூடாது.
ஒவ்வொரு எழுத்தின் ஒலிப்புமுறை மனதில் வையுங்க.
உயிரும் மெய்யும் கலந்த எழுத்து உயிர்மெய் என்பதை நினைவில் வையுங்க.
ஒவ்வொரு எழுத்து உச்சரிப்பின் காலக்கழிவே மாத்திரை என அளவிடப்படுகிறது.
தனி "ல"கரம், பொது "ள"கரம், சிறப்பு "ழ"கரம் ,
டண்"ண"கரம், தந்"ந"கரம், றன்"ன"கரம், இடையின "ர"கரம், வல்லின "ற"கரம் ஆகிய மயங்கொலி எழுத்துக்களை சரியாக உச்சரித்துப் பயிற்சி செய்யுங்க.
மொழியும் ஒலிகளுக்கு கொடுக்கப்படும் வரிவடிவமே எழுத்து என்பதை அறிந்துகொள்ளுங்க.
பிழைகளைத் தவிர்க்க தினமும் தொடர்வாசிப்புப் பழக்கம் தேவை.
வாசிப்புத்திறனை மேம்படுத்து.
குறில்,நெடில் உணர்ந்து அதற்குரிய காலநேரத்தில் உச்சரித்துப் பழகு,
துணையெழுத்துகளை நன்கு மனதில் வைத்துக்கொள்,
மயங்கொலிப் பிழைகள் இல்லாமலிருக்க, வல்லினம்,மயங்கொலி எழுத்துக்களை சரியாக சொல்லுடைப்பு இல்லாமல் சரளமாக உச்சரித்துப் பழகு,
நிறுத்தற்குறிகளின் அவசியம் அறிந்து வாசித்துப் பழகு.
என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள் எல்லோரும் தமிழ்மொழி இனியமொழி,இனி தவறு இல்லாமல் வாசிப்போம்.தொடர்ந்து வாசிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.பிறகு ஐந்து நிமிடங்கள் தமிழ்பாடநூல் வாசித்தனர். "MRS பள்ளி முத்தமிழ் மன்றம்" தொடங்கப்பட்டது.
நாட்டுப்பண் இசைத்து வாசிப்பு முகாம் நிறைவடைந்தது.
தகவலுக்காக...
பரமேஸ்வரன் செ.,
செயலாளர்,சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் மற்றும்
அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கம்.
01-08-2025