இசை என்ற தமிழ்ச்சொல் ஆழ்ந்த, அகன்ற பொருளுடையதாகும். (இயன்றவரையில் சுருங்கச் சொல்லியிருக்கிறேன்) .
இயை - என்ற வேர்ச்சொல்லி்லிருந்து பிறந்த இசை என்ற சொல் ஒரு காரணப் பெயர்ச்சொல்லாகும்.
- இயை > இசை.
- இயை > இயைதல் = பொருந்துதல், இணங்குதல், நிரம்புதல், ஒத்தல்.
- இயை - என்பது பொருந்துதல், சொல், பொருள், பா,பண் எனப் பலப் பொருள்கள் கொண்டது.
- பாவோடு பொருந்தி நிற்றலால் 'இசை' என்று பெயர் பெற்றது.
இசை என்ற சொல் இசைவு, ஊதியம், சொல்லுதல், அறிவித்தல், பாடுதல், ஓசை, சொல், புகழ், இசைப்பாட்டு, நரம்பில் பிறக்கும் ஓசை, சீர் என்ற பொருள்களிலும் வரும்.
பாடற்பொருளோடும், சொல்லோடும், தொடரோடும் இசைந்து, உணர்ச்சிகளுக்கு வலிவும் பொலிவும் தருவதால் இசை என்று பெயரிட்டனர்.பாடலில் வரும் யாப்பமைதியோடு இன்னோசை தரும் இசைச்சுரங்கள் இயையும்பொழுது, மக்களையும், வனத்தில் வாழ் உயிரினங்களையும் இசை மகிழ வைக்கிறது - உள்ளங்களை ஈர்க்கிறது - இறை அருளோடு மக்களை இசையவைக்கிறது.
முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழை, இசையின் இலக்கணம் எனக் கருதுவர்.இசை இலக்கணம் என்ற பொருள் தரும் சொல்லாக இசைத்தமிழ் கையாளப்படுகிறது. நரம்பிசை இலக்கணம்,பண் இலக்கணம், தாள இலக்கணம், இசைப்பா இலக்கணம், இசைக்கருவிகள் இலக்கணம், ஆடலிசை இலக்கணம் போன்றன இசைத்தமிழில் அடங்கும்.
இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர்.
ஏழு சுவரங்கள்:
ச- சட்டுசமம் -சட்டெனத் தொடங்கும் மயில் குரலை ஒத்த அடிப்படை இசையொலி.
ரி- (இ)ரிடபம்- எருதின் அடித்தொண்டை ஒலி ஒத்த இசையொலி.
க- காந்தாரம்- காந்தார நாட்டின் ஆடுகளது கட்டைக்குரல் போன்ற கம்பீர இசையொலி.
ம- மத்திமம்- மந்தமாக ஒலிக்கும் நாரையின் குரல் போன்ற இசையொலி.
ப- பஞ்சமம் - பஞ்சு போன்ற உறுதியில் மேயானால் மென்மையாக ஒலிக்கும் குயிலின் இசையொலி.
த- தைவதம்- தை தை என குதித்தோடும் வலிமையான குதிரைகளின் கனைப்பொலி போன்ற இசையொலி.
நி- நிடாதம் - நிதானமாக நடந்தவாறே யானையின் பிளிரலின் இசையொலி.
இசை என்பது உலகின் எல்லா மதங்களின், மொழிகளின் ஆதி ஒலி வடிவம். இசை என்பதே தன்னில் தானாகவே ஒரு மொழி. எனவே இசையைப் பறிமாற இன்னொரு மொழி தேவையில்லை. ஆம். இசைக்கு மொழி இல்லை. (மொழி ஒரு தடை இல்லை).
மெட்டுடன் கூடிய பாடல்கள் என்பன உண்மையில் இசையின் மொழியை பேச்சு மொழியில் சொற்களின் வடிவில் பிரதிபலிக்கச் செய்யும் மொழிபெயர்ப்பு முயற்சிகளே.
மொழி பிறந்தது பிற்பாடு. அருவியின் ஓசை, மின்னல்-இடியின் முழக்கம், மழைச் சாரலின் சல்லாப அரட்டைக் கச்சேரி, தீக்கங்குகளின் வெடிப்புச் சிதறல் தில்லானா, கடல்-நதிகளின் அலையோசை ஆலாபனை, மூங்கிலுடன் காற்று உறவாடும் உல்லாசப் பிரபந்தம் என இசை எங்கும் நிறைந்து பரவி இருந்தது. இருக்கிறது. பின்பும் இருக்கும்.
ஏற்றம் இறைக்கும் முறுகல் இசை, நாட்டுச் செக்கிழுக்கும் தைலக் கசிவான நெஞ்சைப் பிழியும் துன்பியல் சுரங்கள் என எங்கும் இசை. எல்லாம் இசை. இசைக்கு இத்தனை பெருமைகள் இருப்பதால்தான் புகழ் என்றச் சொல்லுக்கே 'இசை' என்று இன்னொரு பெயரும் உண்டு.
ஆதிமனிதன் பகலில் அதிகம் ஒளி கண்டான். இரவில் இருளோ, நிலவின் வெண்ணெய் தடவிய ஒளியோ, மின்மினிப் பூச்சிகளும் நட்சத்திரங்களும் கசியும் கொஞ்சமேயான சமிக்ஞை ஒளி கசிந்து வரக்கண்டான். அந்த ஒளித் தெளிப்புகள் இருட்டின் மறுவடிவங்களாகவே தோன்றின.
ஆனால், இரவும் பகலும் பறவைகளின் கூவலாய், கேவலாய் காலடிச் சருகுகள் நொறுங்கும் கவன ஈர்ப்புத் தாளங்களாய் எப்போதும் அவன் உடனேயே பிரியாமல் இருந்தது இசை. பிரியாமல் இருந்த அதன் மேல் பிரியம் கொண்டான்.
வயிற்றுப்பாட்டுத் தேவை தேனுக்கு. தேவை தேடல் ஆயிற்று.தேடல் பாடல் ஆயிற்று.
தேடும் கானம் தேவகானம் ஆயிற்று. அதுவே வேதகானமும் ஆயிற்று.
இரை தந்த இயற்கையே இசைவாக இருந்து இசையும் தந்தது. இசை தந்த இயற்கையே இறையும் ஆயிற்று. கூப்பிட்டு உணவு தந்த இயற்கையே கும்பிட்டுக் கூவுகின்ற இசையும் ஆயிற்று.
கையறு நிலையிலும், வயிற்றுக்கு உணவில்லாத போதும் காத்திருந்த அவனது காதுகளில் இந்த இசையே பால் வார்த்தது. தேன் பாய்ச்சியது. காத்திருப்பவனைக் காத்த அந்தக் கண்ணுக்குத் தெரியாத இசைப் பொருளையே இறைவன் என்று ஏற்றிவைத்தான் மனிதன்.
மரக்கிளையில் உச்சியில் காணும் மாங்கனிக் கொத்தாய், மரக்கிளையின் அடியில் கட்டிய கூட்டை மொய்க்கும் தேனீக்களின் பாட்டாளி மந்திரங்கள் என்று வர்க்க பேதம் இல்லாத அரசியே சங்கீத தேவதை.
வீணையை ஒரு வல்லுநர் மீட்டும்போது அவர் மீட்டுவது வீணையை மட்டும் அல்ல. தன்னையும், கேட்கும் நம்மையுமே. அவர் மீட்டுவதில்லை. மீட்கிறார். நம்முள் புதைந்திருக்கும் இசைக் கூறுகளை தம் விரல் நுனிகளால் கொய்து மீட்டு, மீண்டும் நமக்கே தருகிறார்.
தாலாட்டில் தொடங்கி, குலவையாகத் தொடர்ந்து ஒப்பாரியில் முடியக்கூடிய நம் வாழ்வின் குறுகியப் பொழுதுகளை இசையால் நிரப்புகிறார். இருப்பை நீட்டிக்கிறார். விளைவு? இசை கேட்கும் ஒவ்வொரு தருணமும் நாம் குழந்தைகளாய் மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறக்கிறோம்.
கூர்ந்து கவனித்தால் நமது சுவாசக் காற்றுதான் இசை. வடமொழியில் உயிர்மூச்சுக்கு 'ஸ்வரம்' என்றும் பெயர். நமது இதயத் துடிப்பே லயம் என்னும் தாளகதி.
இன்னும் ஆழ்ந்து நோக்கின் கரும்பின் கணுக்கள் போல, வீணையின் பிரடைகள் போல 'மேரு' என்று சூக்குமமாகச் சொல்லப்படும் நமது முதுகெலும்பும் நீட்டி வைத்த வீணைதான்.
நாம் பார்க்கும் இசையும், கேட்கும் இசையும், முணுமுணுக்கும் இசை நிரல்களும் நமது மூச்சுக் காற்றால் இங்கேதான் மீட்கப்பட்டு ரீங்கரிக்கப்படுகிறது.
வீணையில் சுரம் மீட்டும் 22 பிரடைகள் (ஸ்வரஸ்தானங்கள்) இருப்பது போலவே நம் முதுகெலும்பிலும் 22 கணுக்கள் (பழுக்கள்) இயற்கையஇயற்கையாம் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன. மனிதனை விட சிறந்த இசைக்கருவி உலகில் வேறொன்று கிடையாது.
மனிதன் இசை என்னும் அந்தக் கிடங்கு உள்ளே வைக்கப்பட்டுத்தான் பிறக்கிறான். மனம் என்னும் பேழைக்குள் லட்சம் கோடி ராகங்கள் ஒவ்வொரு நொடியும் துள்ளித் ததும்பிக் கொண்டிருக்கின்றன. ஆம். ராகம் என்றால் 'ஆசை' என்றும் பொருள் உண்டே. அந்த ராகங்கள் அரங்கேறும் கச்சேரி மேடைகளே காதலும், பாசமும், கடமையும், கடவுளும், பக்தியும்.
இசை இன்றி யாரும் இல்லை இங்கே! ஒவ்வொரு மனிதனும் ஒரு ராகமாலிகைதான். இசையாகவே வாழ்கிறான் மனிதன்.
இசை என்பது ஒரு நீண்ட பயணம். முடிவில்லாதது இசை.
தமிழர் சமயம்
பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலைஉறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. . . . . . . - (திருமந்திரம் 86)
பண்அமை யாழ்குழல் கீதம்என்று இன்னவை
நண்ணி நயப்ப செவிஅல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொல்நீக்கி விண்இன்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி. - (அறநெறிச்சாராம் - 196)
விளக்கவுரை: இசையுடன் பொருந்திய யாழும் குழலும் இசைப் பாட்டும் என்னும் இவற்றை அவை நிகழும் இடங்களுக்குப் போய் அவற்றை விரும்பிக் கேட்பவை செவிகள் ஆகா. உறுதியுடன் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைக் கேளாது நீக்கித் துறக்க இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும் உறுதிமொழிகளைக் கேட்பதே செவிகளாகும்.
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தம்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)
வாழ்க்கை நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் கடமையை உடனுக்குடன் செய்வர். இடையறாத இசையை சோதிடத்தை பார்த்துப் பிதற்றிக் கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை.
பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். (ஏலாதி 25)
பொருள்: பாடல் பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள்தோன்றும் நாடகங் காணாமை. அவ்வாறு கண்டால், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக