பொறுமை:
சதுரங்கத்தில் பொறுமை மிகவும் முக்கியம். எதிராளியின் நகர்வைப் பற்றி பொறுமையாக யோசித்து, நம் நகர்வை தீர்மானிக்க வேண்டும்.
அதே போல, நம் வாழ்க்கையிலும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் பொறுமையாக, பல கோணங்களில் யோசிக்க வேண்டும். நாம் எடுக்கப் போகும் முடிவினால் ஏற்படவிருக்கும் சாதக, பாதகங்களை ஏற்றுக் கொள்ளவும் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவு, பல நேரங்களில் தவறாக இருக்கலாம், அவ்வேளையில் நம் சிந்தனையில் "இதை அவ்வாறு செய்திருக்கலாம், இவ்வாறு மாற்றியமைத்திருக்கலாம்", என்ற சிந்தனைகள் மேலோங்கும். எனவே, அம்முடிவை எடுக்கும் முன்னர் தேவைப்படும் நேரமெடுத்து, பொறுமையாக யோசித்து செயல்பட்டால், நம்முடைய அடுத்த நகர்வுகள் நற்பயன்களைத் தரும்.
பொறுமை கடலிலும் பெரியது
திட்டமிடல்:
சதுரங்கத்தில் எதிராளியின் நகர்வையும், கவனமின்மையையும் நமக்குச் சாதகமாக பயன்படுத்த வேண்டும், அதற்கு நாம் சரியான விதத்தில் திட்டமிட்டு காய்களை நகர்த்த வேண்டும்.
நம் வாழ்க்கையிலும், எதைச் செய்வதாய் இருந்தாலும், திட்டமிடல் நல்ல பழக்கமாக இருக்கும். அதன் மூலமாகவே, நம் முயற்சி எந்த அளவில் பயன் தரும், இடர்கள் வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பவற்றை எல்லாம் முன் கூட்டியே அறிந்து, அதற்கேற்ப நம் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.
கட்டத்திற்கு தேவை, நல்ல திட்டம்
வீழ்த்துவதை விட, தற்காத்தலே முக்கியம்:
சதுரங்கம் விளையாடுபவர்களை எளிதாக இருவகையாக பிரிக்கலாம்,
- தாக்குபவர்கள்
- தடுப்பவர்கள்
தாக்குதல், தடுத்தல் என்னும் இந்த இரண்டில் ஏதோ ஒன்றை மட்டுமே ஒருவர் பின்பற்றினால், நிச்சயம் அவரால் வெற்றியை எட்டிவிட முடியாது. இந்த இரண்டையும் தகுந்த நேரத்தில் பயன்படுத்துவது மூலமாக தான், நம் நோக்கத்தை அடைய முடியும். எனினும், தாக்குவதை விட, தற்காத்தலே நம்மை உயிர்ப்புடனும், தன்னம்பிக்கையுடனும் வைத்திருக்க உதவும்.
வாழ்க்கையிலும் நாம் மற்றவரை வீழ்த்துவதை விட, நம்மை தற்காத்துக் கொள்வதே நல்ல முடிவாக இருக்கும். மற்றவரை தாக்கும் நோக்கத்தை மட்டுமே நாம் கொண்டிருந்தால், நாம் செய்யும் சிறு பிழை கூட, நம்மை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடும். மேலும், நாம் பிறரை வீழ்த்த நினைப்பதற்கு முன், அதற்கான ஆற்றலும், தன்னம்பிக்கையும் நமக்கு இருக்க வேண்டும், அதற்கு தற்காத்தலே தேவைப்படும்.வலியது தான் உயிர் பிழைக்கும்
நேர மேலாண்மை:
சதுரங்க விளையாட்டில் இன்னொரு வகை, நேரத்திற்குள் வெற்றி பெறுவது. அதாவது, இருவருக்கும் குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்படும், அதற்குள் ஒருவர் எதிராளியை வென்றுவிட வேண்டும். ஒருவருக்கு பத்து நிமிடங்கள் என எடுத்துக் கொண்டால், அவர் சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டு தன் காயை நகர்த்தி விட்டு, அந்த நேரம் குறைந்து கொண்டிருக்கும் காலக் கருவியை தட்டுவார், பின் எதிராளிக்கு நேரம் குறையத் தொடங்கும். இவ்வாறு, இருவருக்கும் நேரம் குறைந்து கொண்டே இருக்கும், அதற்குள் யாராவது ஒருவர் வெற்றி பெற வேண்டும்.
இத்தகைய விளையாட்டு முறை, நமக்கு நேர மேலாண்மையை கற்றுத் தரும், சிறிய கால இடைவேளையில், வேகமாக சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வைக்கும். மேலும், நமக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை எவ்வளவு பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.
வினையும், எதிர்வினையும்:
நம் ஒரு காயை நகர்த்த, நம்மை வீழ்த்த, அல்லது தன் காயை காப்பாற்ற எதிராளி ஒரு காயை நகர்த்துவார். எனவே, நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும், தகுந்த எதிர்வினை இருக்கும்.நியூட்டன்விதி நினைவுபடுத்தும்.
இதே போல, நம் வாழ்க்கையிலும், நாம் செய்யும் செயல்களுக்கேற்ற எதிர்வினை இருக்கும், அது நல்லதா, தீங்கானதா, என்பது நம் வினையையும், நேரத்தையும் பொறுத்தது.
எதிர்காலத்தை யூகித்தல்:
நாம் சதுரங்கம் விளையாடிப் பழகப் பழக, எதிராளி என்ன யோசிக்கிறார், எதற்காக குறிப்பிட்ட காயை நகர்த்துகிறார், என எளிதாக நம்மால் யூகிக்க முடியும். இதனால், அடுத்தடுத்து எதை நகர்த்துவார் என்பதை நாம் அனுமானித்து, அதற்கேற்ற பதிலடியை நாம் கொடுக்கலாம்.
நாம் பெறும் அனுபவங்களும், கற்ற அறிவும், நம் எதிர்காலத்தை எதிர்நோக்க உதவும், எனவே அவற்றை எவ்விதத்தில் அமைத்துக் கொள்வது என நாம் முடிவு செய்து, அதற்கேற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.நிகழ்கால முயற்சி, எதிர்காலத்தை மாற்றவல்லது
மனதை ஒருநிலைப் படுத்துதல்:
சதுரங்கம் விளையாடும் பொழுது, நம் கவனம் முழுவதும் அதில் இருந்தால் மட்டுமே, நம்மால் எந்தநிலையையும் சமாளிக்க முடியும். இதனால், மனதை ஒருநிலைப் படுத்தி விளையாடுவது, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
வாழ்க்கையிலும் ஒன்றை நாம் அடைய வேண்டிய பட்சத்தில், அதற்கான முனைப்பும், முயற்சியும் அவசியம். அதற்காக நம் மனதை ஒருநிலைப் படுத்தி, கவனச் சிதறல்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
மனதை நாம் கட்டுப்படுத்த வேண்டுமன்றி, மனம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது
சுற்றத்தை கவனித்தல்:
சதுரங்கத்தில் நாம் ஒரு காயை நோக்கியே நம் கவனத்தை செலுத்தக் கூடாது, அனைத்தையும் கவனிக்க வேண்டும். நம்முடைய மற்றும் எதிராளியின் ஒவ்வொரு காயிற்கான அனைத்து சாத்தியமான நகர்த்தல்களையும் கவனித்து விட்டு, பின் நம் முடிவை மேற்கோள்ள வேண்டும்.
நம் வாழ்க்கையிலும், ஒன்றை நம்பியே களம் இறங்கக் கூடாது, நமக்கு உதவக்கூடிய மற்றும் நம் வெற்றிக்குத் தேவையான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து, பின் நம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதே போல, நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருவெரின் செயல்பாடுகளையும் நாம் கவனிக்க வேண்டும். நமக்கு தீங்கு செய்பவர் யார், நன்மை யார், என்பதை அதன் மூலமாக தான் அறிய முடியும்.
புன்னகைப்பவர்கள் யாவரும் நல்லவர்கள் அல்ல, கோபிப்பவர்கள் யாவரும் கெட்டவர்களும் அல்ல
தியாகங்கள்:
சதுரங்கம் விளையாடும் பொழுது, சில நேரத்தில் நம்முடைய பலம் பொருந்திய காயை காப்பாற்ற இன்னொரு காயை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த காயின் தியாகத்தினால், மற்றொரு சாமர்த்தியமான நகர்த்துதலை நம்மால் மேற்கொள்ள முடியும்.
நம் வாழ்க்கையிலும், ஒன்றைப் பெறவும், முயற்சியால் அடையவும் சிற்சில தியாகங்களை நாம் செய்ய வேண்டியதிருக்கும். அவ்வாறான தியாகங்களை செய்யத் தயங்கினால், வெற்றி நம்மை விட்டு, தொலைதூரம் சென்றுவிடும்.
தியாகம் ஒருவனை உயர்த்தும்
எளிதில் துவண்டு போகாதிருத்தல்:
முக்கியமாக, சதுரங்கத்தில் ஒரு பலம் பொருந்திய காயை, ஏதோ ஒரு பிழையினால் இழக்க நேரிட்டால், உடனே மனம் தளர்ந்து, விட்டுக் கொடுத்து விடக் கூடாது. நம் கையிருப்பைக் கொண்டு எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். ஏனெனில், நாம் இழக்கும் தருவாயில் கூட, ஆட்டத்தின் போக்கை மாற்றி விடலாம்.
நம் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள், நம் முயற்சியில் இடர்கள், தன்னம்பிக்கை குறைந்து போதல், மனச் சோர்வு, விரக்தி போன்ற சூழ்நிலைகளில், நம் களைப்படைந்த மனதைத் தேற்றி, அடுத்த கட்டத்தை நம்மை நகர்த்திக் கொள்ள வேண்டும். யாருக்குத் தெரியும், நாம் விழுந்த குழியில் வைரக்கற்கள் கூட இருக்கலாம்.
தோல்விகளாலே துவண்டு விடாதே
வெற்றிகளாலே வெறி கொள்ளாதே!
மேலே கூறிய அனைத்தும், மறைமுகமாக ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. 64 கட்டங்களும், 32 காய்களும் பல வாழ்க்கைப் பாடங்களையும், அறிதிறன்களையும் நமக்கு கற்றுத் தரும் என்பதே ஒரு விந்தை தான்.
- 2. மூளையின் ஒருங்குமுனைப்புக்களின் வளர்ச்சி (Grows dendrites):-
ஒருங்குமுனைப்புகள் மூளையில் ஒரு கிளை வடிவமான பகுதி. அது நமது நரம்பு மண்டலத்தில்லுள்ள அனைத்து நரம்பு அணுக்களுக்கு தகவல் பரிமாற்றம் (conducting signals) செய்கிறது. குழந்தை பருவத்தில் செஸ் விளையாடும் குழந்தைகளுக்கு இந்த ஒருங்குமுனைப்புகள் (dendrites) அதிகமாக வளர்கிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளனர்.