29 செப்டம்பர் 2016

அரசு மேல்நிலைப் பள்ளி - ஒலகடம் (பவானி வட்டம்) .

நேற்றிரவு அரசு மேல்நிலைப்பள்ளியில்,
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
  கடந்த 2016 செப்டெம்பர் 29 ந் தேதி வியாழக்கிழமை அதாவது நேற்று மாலை 5.00மணியளவில் பவானி வட்டம்,ஒலகடம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சேவையாற்றும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் ஆறாவது நாள் விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு பற்றி சிறப்பாக உரையாற்றினேன்.அது சமயம் மாணவர்களும் ,ஆசிரியப்பெருந்தகைகளும் நல்ல ஆதரவு கொடுத்து வரவேற்றனர்.மாலை5.00மணியளவில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் திருமிகு.த.சரவணன் அவர்கள் சிறப்பு முகாமில் என்னை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.சிறப்பு முகாமின் திட்ட அலுவலர் திருமிகு.ப.க.வெள்ளிங்கிரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.

           என்னை ஓட்டுநராகப் பாராமல் சிறப்பு விருந்தினராகப் போற்றி மதிப்பிடமுடியாத பொன்னாடை போர்த்தி வரவெற்று உபசரித்தனர்..
              முகாமில் சுவையான சுக்கு காப்பியும்,ஆரோக்கியமானஇரவு உணவும் என விருந்தோம்பல் அமர்க்களமாக இருந்தது.அன்றிரவு10.00மணி வரை மாணவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களைச்செய்தும்,மாணவர்களோடு ஆடல் பாடல் என கொண்டாட்டம்தான்! இவ்வாறாக அன்றிரவு முழுவதும் நானும் மாணவர்களோடு மாணவனாக தங்கி  மனநிறைவு பெற்றேன். 
 

  என்னுரையில்;
          மாணவர்களாகிய நீங்கள்  கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூக சேவையுடன் தொடர்புள்ளவர்களாக,தங்களது நேரத்தின் ஒரு பகுதியினை தன்னார்வ அடிப்படையில் செலவிட வேண்டும் என்ற அடிப்படையில்,''எனக்காக அல்ல உனக்காக'' என்ற கோட்பாட்டுடனும்,குறிக்கோளுடனும் சமூக சேவையின் மூலம் மாணவர்களாகிய உங்களிடம் சமூக சேவையின் மூலம் ஆளுமைப்பண்பினை வளர்க்கும் நோக்கத்துடன் திட்ட அலுவலரும்,இப்பள்ளி முதுகலை ஆசிரியருமான திருமிகு.ப.க.வெள்ளிங்கிரி M.A.,B.Ed அவர்களின் தலைமையில்,நாட்டின் நலனுக்காக பணி செய்யும் சிறப்பு முகாமினை நடத்திவரும் தங்கள் அனைவருக்கும்,இப்பள்ளிக்கும் நான் சார்ந்துள்ள ,'நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு'' அமைப்பின் சார்பாக முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துகொண்டு வாழ்த்துகிறேன்.
      இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவரின் நலனும் தனி மனித நலனாக அமையாமல் முழு சமூகத்தின் பொது நலனைச்சார்ந்தே இருக்கிறது.ஆதலால் நாம் ஒவ்வொருவரும் சமூகத்தோடு சேர்ந்தே வாழவேண்டிய கட்டாயமாகி உள்ளது.இதனால் பல்வேறு பிரச்சினைகளையும்,தொல்லைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இம்மாதிரியான சமுதாயப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சகித்துக்கொண்டு,பொறுமையுடன் சமூகத்தோடு ஒத்திசைந்து வாழும் பக்குவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.அதற்கு முன்னதாக நாம் நம்மை காத்துக்கொள்ளத்தெரிந்து கொள்ள வேண்டும்.நமது உடலையும் காக்க வேண்டும்.மனதையும் காத்துக்கொள்ள வேண்டும்.அப்படியானால் நம் உடலையும்,மனதையும் பாதிக்கும் விசயங்களை தெரிந்துகொண்டால்தான் அவைகளை தவிர்க்கும் வழிகளை அறிந்துகொள்ள முடியும்.
 எனக்கு  கொடுத்துள்ள தலைப்பு,''சாலை பாதுகாப்பு'  அப்படியானால் சாலை பாதுகாப்பு என்றால் என்ன?எதற்காக
 சாலை பாதுகாப்பு? என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
 நமது அத்தியாவசியத்தேவைகளான உணவு,உடை,இருப்பிடம்,பொழுதுபோக்கு மற்றும் நமது சுகபோகத்திற்காகத்தேடிக்கொண்ட சில தொழில்நுட்ப வசதிகள்  என இவைகளைப்  பெற  நாம் தினந்தோறும் பயணிக்கிறோம்.சாலையில் போக்குவரத்து செய்கிறோம்.நாம் உயிர்வாழ்வதற்கானத்தேவைகளைப்பெற போக்குவரத்து செய்யும் சாலையில் நமது அறியாமையினாலும்,அஜாக்கிரதையினாலும்,பொறுமையின்மையினாலும்,போட்டி மனப்பான்மையினாலும்,சாலை விதிகளை மீறுவதாலும்,சுயநலப்போக்காலும்,தன் விருப்பம்போல பயணிப்பதால் விபத்து ஏற்பட்டு நாமும் பாதிக்கப்படுகிறோம்.சாலையில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறோம்.இதனால் உடலும் கெட்டு மனமும் கெட்டு பெரிய இழப்புகளுக்கும்,தொல்லைகளுக்கும் ஆளாகிறோம்.
    .சாலை பாதுகாப்பு நமது பாதுகாப்பு என்பதால்தாங்க போக்குவரத்து செய்யும் சாலையில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.என்பதை வலியுறுத்துகிறேன்.
 முதலில் விபத்து எப்படி ஏற்படுகிறது?விபத்து ஏற்பட்டால் என்னென்ன விளைவுகளும்,இழப்புகளும் ஏற்படுகிறது?விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சூழ்நிலை எவ்வளவு மோசமாகிறது? என்பதை சற்று கவனமாக சிந்திக்க வேண்டும்.என்னமாதிரியான பாதுகாப்புமுறைகளை கடைப்பிடித்தால் சாலையில் விபத்தை தவிர்க்க முடியும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.முதலில் சாலையின் வகைகளை தெரிந்துகொள்வோம். சாலைகளை எக்ஸ்பிரஸ் சாலை ,தேசிய நெடுஞ்சாலை,மாநில நெடுஞ்சாலை,பெரிய மாவட்ட சாலை,மற்ற மாவட்ட சாலை,கிராமச்சாலை,வீதிகள் என பலவகைகளாகப்பிரிக்கலாம்.தேசிய நெடுஞ்சாலைகளில் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதியில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்கும்.தேசிய நெடுஞ்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் பச்சை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.பெரிய மாவட்ட சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் நீல வர்ணம் பூசப்பட்டிருக்கும்.மற்ற மாவட்டச்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் ஊதா வர்ணம் பூசப்பட்டிருக்கும்.கிராமச்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.போக்குவரத்தின் வசதிக்கேற்ப ஒவ்வொரு சாலைகளும்அகலப்படுத்துதலும், பராமரிப்புகளும்,உறுதிப்படுத்துதலும் வேறுபட்டிருக்கும்.. அடுத்ததாக சாலையின் பாகங்களைப்பற்றித்தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு சாலைகளும்,பொதுவாக வாகனங்கள் ஓடுவதற்கான பாதை இருக்கும்.அதையடுத்து பக்கவாட்டில் புயங்கள் என்றுசொல்லக்ககூடிய பக்கவாட்டப்பாதை இருக்கும்.காப்புக்கற்கள் இருக்கும்,பிரதிபலிப்பான்கள் இருக்கும்,பாலங்கள் இருக்கும்,வேகத்தடை இருக்கும்.காப்புச்சுவர்கள் இருக்கும்,சாலை பிரிப்பான்கள் இருக்கும்,
   சாலையில் பாதசாரிகளாகப்பயணிக்கும்போது  சாலையிலும் நாம் நடந்துசெல்லும் பாதையிலும் நிரந்தரமாக கவனம் செலுத்த வேண்டும்.பார்வை மறைவுப்பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.சாலையை கடக்கும்போது வாகனம் போக்குவரத்து இல்லாத போது வேகமாகவும் கவனமாகவும் கடந்துசெல்ல வேண்டும்.சாலை சந்திப்புகளிலும்,வளைவான பகுதிகளிலும்,பார்வை மறைத்திருக்கும் பகுதிகளிலும் சாலையை கடக்காமல் சாலையின் இரு புறமும் பார்வைக்கு கிடைக்குமாறு உள்ள இடத்தில் கடக்க வேண்டும்.படியில் பயணம் செய்யக்கூடாது.ஓட்டுநருக்கு இடையூறு செய்யக்கூடாது.கைகளையும்,தலையையும் வெளியே நீட்டக் கூடாது. சாலையில் விளையாடிக்கொண்டும்,கைகோர்த்துக்கொண்டும் சாலையை அடைத்துக்கொண்டு செல்லக்கூடாது.நாமும் சைகை காட்டி நடக்க பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.ஓட்டுநர்களின்  சைகைகளை புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

  அடுத்ததாக வாகனங்களின் பொதுவான பாகங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.முக்கியமாக வாகனங்கள் அனைத்தும் இயற்கைவிதிகளான இயக்க சக்திகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அதாவது உந்து சக்தி,புவி ஈர்ப்பு சக்தி,மார்க்க சக்தி,மைய நோக்கு விசை,திருப்பங்களில் பக்கவாட்டு விசை ஆகியவைகளை சமநிலைப்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும்.மோட்டார் வாகனச்சட்டப்படி எந்த வாகனத்தை ஓட்டத்தெரிந்திருந்தாலும் அந்த வாகனத்தை ஓட்டுவதற்கான அத்தாட்சி அதாவது லைசென்ஸ் என்று சொல்லக்கூடிய ஓட்டும் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.16வயது நிரம்பியவர்கள் கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களை ஓட்ட உரிமம் பெறலாம்.18 வயது நிரம்பியவர்கள் கியர் உள்ள மோட்டார் சைக்கிள் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம்.20வயது நிரம்பியவர்கள் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று ஓராண்டு நிறைவடைந்திருந்த பிறகு பேட்ஜ் பெற்று கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம்.பொது போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் பெறலாம்.உரிய லைசென்ஸ் இல்லாமல் ஒரு வாகனத்தை ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.வாகனம் ஓட்டுவதற்கு முன்னதாக  வாகனத்தை பரிசோதனை செய்து பழகிக்கொள்ள வேண்டும்.டயர்களில் காற்றழுத்தம்,எரிபொருள்,பிரேக்,கிளட்ச்,ஸ்டியரிங்,இன்டிகேட்டர்,ஹெட்லைட்,ஆர்ன்  போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.நாம் ஓட்டும் வாகனத்திற்கு மூன்றாம் நபர் பாலிசியாவது இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.வாகனக்காப்பீடு ஆண்டிற்கு ஒரே தவணையாக ஒவ்வொரு ஆண்டும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வாகனத்தில் வெளியேற்றும் புகையையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இனி சாலையுடன் பேசுவோமா?
 ஆமாங்க சாலையுடன் நாம் பேசலாம்.அதற்காக சாலையின் மொழியினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.சாலையில் வரையப்பட்டுள்ள கோடுகளும்,குறியீடுகளும்,சாலையோரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உத்தரவு,எச்சரிக்கை,தகவல் போன்ற போக்குவரத்துச்சின்னங்களும்,சாலையோரத்தில் நடப்பட்டுள்ள காப்புக்கற்களும்,பிரதிபலிப்பான்களும் ,ஓட்டுநரின் சைகைகளும்,காவலரின் சைகைகளும்,விளக்குச்சைகைகளும்,சாலையின் மொழிகளே..
என சாலையின் மொழிகளைப்பற்றி விரிவாக எடுத்தரைப்பட்டது.ஆயுள் காப்பீடு மற்றும் வாகனக்காப்பீடு அவசியம் பற்றி விளக்கப்பட்டது.வளைவுகளில் மெதுவாக நுழைந்து வேகமாக வெளியேறு  என்ற விதியை செய்முறை விளக்கங்களோடு எடுத்துக்கூறப்பட்டது.சாலை சந்திப்புகளிலும்,கிளைச்சாலையிலிருந்து மெயின் சாலைக்குள் நுழையும் முன்பாக நின்று கவனித்து பாதுகாப்பாக செல்லவேண்டும்.பார்வை மறைவுப்பகுதிகளை அடையாளம் கண்டு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கடக்க வேண்டும்.வாகனம் ஓட்டும்போது M.S.M.P.S.L.முறையை கடைப்பிடிக்க வேண்டும்.சாலை எப்படி உள்ளது?சாலை மேல் என்ன உள்ளது?.அடுத்து நாம் என்ன வேண்டும்?என நிரந்தரக்கவனத்தோடு பயணிக்க வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.சீருந்துகளில் அதாங்க கார்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதும் நமக்குப்பாதுகாப்பு என்று விளக்கப்பட்டது.
    லோகு டிரைவிங் ஸ்கூல் சார்பாக வழங்கப்பட்ட ஓட்டுநர்களுக்கான பயிற்சிக்கையேடு,வேகக்கணிப்பீடு பற்றிய துண்டு பிரசுரங்கள்,போதைப்பொருட்களை தவிர்ப்போம் நம்மை நாமே காப்போம் பற்றிய துண்டு பரிசுரங்கள்,நெகிழியின் தீங்கு பற்றிய துண்டுபிரசுரங்கள்,புத்தக வாசிப்பின் அவசியம் பற்றியும் குறிப்பாக,நமது நாடு அடிமைப்பட்டதும் சுதந்திரத்துக்காக கொடுமைப்பட்டதும் பற்றியும் உரையாடினோம்.ஹெலன்கெல்லரின் வாழ்க்கை வரலாறு,கணித மேதை ராமானுஜனின் வரலாறு,சமகால அறிவியலறிஞரான,ஸ்டீவ்ஜாப்ஸ் வரலாறு பற்றியும் எடுத்துரைத்த்தோடு.தேவையே தேடலுக்கு அடித்தளம் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.கூடவே மருத்துவத்தாவரங்கள் பற்றியும் கருத்துரையாடல் நடத்தப்பட்டது.
          (  பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்).

1 கருத்து:

  1. மாணவர்கள் அனைவரும் அவசியம்அறிந்திருக்க வேண்டிய கருத்துக்கள் ஐயா
    நன்றி
    தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...