30 ஆகஸ்ட் 2016

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் வரலாறு !

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நமது மாநிலத்திலுள்ள மாவட்டங்களின் வரலாற்றுச்சுருக்கம் பார்ப்போம்.

தானியங்கு மாற்று உரை இல்லை.
1.அரியலூர் மாவட்டம் 2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர், உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. இவற்றில்
நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.
2.இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்துக்காக புகழ்பெற்ற இராமேஸ்வரம் நகரம் இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அமைந்திருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வடக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன.
3.ஈரோடு மாவட்டம் பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை எனப்பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு ஆனது. ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.
4.கடலூர் மாவட்டம் உப்பனாறு, பரவனாறு போன்ற நதிகள் இங்கு கடலோடு கூடுவதால் கூடலூர் என்று பெயர்பெற்று அதுவே பின்னர் 'கடலின் நகரம்' என்ற பொருளில் கடலூர் என்று அழைக்கப்படலாயிற்று. புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கின்றன.
5.கரூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும் குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.
6.கன்னியாகுமரி மாவட்டம் குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் தலைமையில் நடந்த விடுதலை போராட்டத்தின் வெற்றியாக நவம்பர், 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.
7.காஞ்சிபுரம் மாவட்டம் அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர், பட்டுப்புடவை என்று பற்பல விஷயங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் புகழோடு அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன.
8.கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக ஓசூர் நகரம் அறியப்படுகிறது.
9.கோயம்புத்தூர் மாவட்டம் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சிறுவாணி ஆற்றின் நீர் உலகிலேயே 2-வது சுவையான நீராக கருதப்படுகிறது.
10.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது. இவற்றில் காரைக்குடி நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.
11.சென்னை மாவட்டம் தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மையமாக கொண்டு அமையப்பெற்ற சென்னை மாவட்டத்துக்கு என்று தனியாக தலைநகரம் எதுவும் கிடையாது. சென்னை மாவட்டம் மெரினா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்றவருக்காக புகழ்பெற்றது.
12.சேலம் மாவட்டம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டமே அறியப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கிவரும் மேட்டூர் அணை, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.
13.தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் அரிசிக்கின்னம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திரப் புகழ் வாய்ந்த மாவட்டம். உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றுக்காக தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக திகழ்ந்து வருகிறது.
14.தர்மபுரி மாவட்டம் கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி மாவட்டம் கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவற்றில் சென்றாய பெருமாள் கோயில், ஒகேனக்கல் அருவி ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.
15.திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இதுதவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்.
16.திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மாவட்டம் வடக்கில் சேலம் மாவட்டத்தையும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தையும், தெற்கில் மதுரை மாவட்டத்தையும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான அணையாக கருதப்படும் கல்லணை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.
17.திருநெல்வேலி மாவட்டம் 1790-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ல் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு பாயும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் ஆலயம், அகஸ்தியர் அருவி ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.
18.திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம். 2008-ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.
19.திருவண்ணாமலை மாவட்டம் 1989-ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரயர் மாவட்டம் மற்றும் வ. டஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் 1996-ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.
20.திருவள்ளூர் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
21.திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் சோழர்களால் 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தியாகராஜஸ்வாமி திருக்கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது.
22.தூத்துக்குடி மாவட்டம் துறைமுக நகரம் என்றும், முத்துக்களின் நகரம் என்றும் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரத்தை தலைநகரமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டம் செயல்பட்டு வருகிறது.
23.தேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி, போடி மெட்டு ஆகியவை அறியப்படுகின்றன.
24.நாகப்பட்டினம் மாவட்டம் 1991-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மிகுந்த மாவட்டம் என்று அறியப்படுகிறது.
25.நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.
26.நீலகிரி மாவட்டம் மலைகளின் ராணி ஊட்டியை தலைநகரமாக கொண்டு நீலகிரி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியை தவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.
27.புதுக்கோட்டை மாவட்டம் ஜனவரி 14, 1974-ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக சித்தன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.
28.பெரம்பலூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
29.மதுரை மாவட்டம் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. மதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.
30.விருதுநகர் மாவட்டம் தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடமேற்கில் தேனி மாவட்டமும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாக சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவை அறியப்படுகின்றன.
31.விழுப்புரம் மாவட்டம் 1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வரலாற்று புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.
32.வேலூர் மாவட்டம் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது. பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.

பதிவிட்ட பேஸ்புக் நண்பர் திருமிகு.அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க..

27 ஆகஸ்ட் 2016

நேர நிர்வாகம் தமிழில் பதிவிடுங்க....


ஆர்வமிருந்தும் திட்டமிடுவது பற்றித் தெரியாமல் தடுமாறும் கிராமப்பகுதி மாணவ,மாணவியருக்கு அவசியம் தேவைப்படுவதால் இது அவசரம்!..

 மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
இன்றைய மாணவர்களுக்கான அவசியத்தேவை நேர நிர்வாகமும்,திட்டமிடலும் பற்றிய விபரங்கள்.ஆதலால் சான்றோர்களாகிய தாங்கள் நேர நிர்வாகத்தைப்பற்றி பதிவிட்டு மாணவர்களுக்கு உதவ வேண்டுகிறேன்.








19 ஆகஸ்ட் 2016

சிறு தானியங்களின் மகத்துவம்-


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நமது பழங்கால உணவுமுறையான,ஏழைகளின் உணவுகளான சிறுதானிய உணவுகள் தற்போது வசதி படைத்தவர்களின் உணவாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.அதாவது நமது பாரம்பரிய உணவு தற்போது மீண்டெழுந்து முக்கிய உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வாறான சிறுதானியங்களின் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இக்க்கட்டுரையில் படியுங்க.வெளியிட்ட தின மணி நாளிதழுக்கு நன்றிங்க..

சிறு தானியங்களின் பெரும் பலன்கள்

மக்களின் இன்றைய உணவு முறை இயற்கைக்கு மாறானதாக உள்ளது. செயற்கை உணவுகளால் மனித உடலுக்கும் நன்மை இல்லை,
மக்களின் இன்றைய உணவு முறை இயற்கைக்கு மாறானதாக உள்ளது. செயற்கை உணவுகளால் மனித உடலுக்கும் நன்மை இல்லை, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பலன் இல்லை. இயற்கையோடு இயைந்த தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியங்கள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. அவற்றின் வரலாறு, நற்குணங்கள் மற்றும் மருத்துவப் பலன்களை அறிந்துகொள்வதன் மூலம் நன்மை அடைவதுடன் சிறு தானியங்களின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்த முடியும்.
 சிறு தானியங்களாகத் தினை, சாமை,கம்பு, கேழ்வரகு (அல்லது) ராகி, குதிரை வாலி, காடைக்கண்ணி (பனிவரகு), வரகு,சோளம் ஆகியவற்றைப் பட்டியலிடலாம். இந்த அதிர்ஷ்டவசமான தானியங்கள் நமக்காகவே மேலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன என்று சிறு தானியங்களின் சிறப்பைச் சீன நாடோடிப் பாடல் ஒன்று சித்திரிக்கிறது.
 இந்தச் சிறு தானியங்கள் தமிழர் உணவு முறையிலிருந்து சிறிது சிறிதாக விட்டு விலகிக் காணாமல் போய்விட்டன. சிறு தானியங்கள் என்றொரு தானிய வகை இருப்பதையே இன்றைய தலைமுறையினர் அறியாமல் உள்ளனர்.
 சிறு தானியங்களின் மகத்துவத்தை மக்கள் அறியாமல் இருப்பது காலத்தின் கோலமே. சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் மழை பெய்வதிலும் முறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மழையை நம்பி விளையும் மானாவாரிப் பயிர்களையும் பாதித்துள்ளது. மானாவாரிப் பயிர்களான சிறு தானியப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளும் மிகமிகக் குறைவே.
 பசுமைப் புரட்சியால் மானாவாரிப் பயிர்கள் புறம் தள்ளப்பட்டன என்று பன்னாட்டு உணவுப் பயிர்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வில்லியம்தார் கூறியிருப்பது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது. நஞ்சை நிலப் பயிர்களுக்கு உள்ள விலைப் பாதுகாப்பு புஞ்சை நில மானாவாரிப் பயிர்களுக்கு இல்லை என்பதால் அவற்றின் உற்பத்தியும், அவற்றைச் சாகுபடி செய்யும் நிலப்பரப்பும் ஒன்றுக்குப் பாதியாகக் குறைந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன்.
 விளைவு? கேள்விப்படாததும் விநோதமுமான நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. நமது பாரம்பரிய சிறு தானியங்களைக் கைவிட்டு நவீன உணவு முறைக்கு மாறியதால் ஏற்பட்டதன் பலன் இது.
 நம் உடல்நலத்திற்கு அதிகம் கேடு விளைவிப்பது துரித உணவுகளே (Fast Food) ஆகும். குழந்தைகள், பதின் பருவத்தினரின் அதீத உடற் பருமனுக்குத் துரித உணவுகளை உட்கொள்வதே காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 சிறு தானியங்களை ஏழைகளின் உணவு என்று சொல்வார்கள். இன்று அவை வசதியானவர்களின் உணவாக, நோயாளிகளுக்கான உணவாக மாறியுள்ளது. இந்திய மக்களின் உணவு கலாசாரத்தைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் அதில் சிறு தானியங்களின் முக்கியப் பங்கை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
 தமிழர்களின் உணவுமுறையில் சிறு தானியங்களின் மறுபிரவேசம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று கூறலாம். சிறு தானியங்களின் மருத்துவக் குணங்களையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்ட நகர வாசிகள் அவற்றைத் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 மக்கள் பெருமளவில் காதி, சர்வோதயா மற்றும் ஆர்கானிக் கடைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். சிறு தானியங்களை விளைவிக்க விவசாயிகளும் இப்பொது முன்வந்துள்ளனர். மத்திய-மாநில அரசுகளும் மானாவாரியில் விளையும் சிறு தானிய உணவுப் பயிர்களை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன.
 பழந்தமிழ் இலக்கியங்களில் சிறுதானியங்கள் கூலம் என வழங்கப்படுகின்றன. சிறு தானியங்கள் குறிஞ்சி, முல்லை என்ற இரு நிலங்களிலும் பயிரிடப்பட்டன. சிறு தானியங்களை மழையை நம்பி விளையும் மானாவாரிப் பயிர்கள் அல்லது புஞ்சைநிலப் (புன்செய்) பயிர்கள் என்றும் கூறுவர்.
 சிறுதானியங்கள் தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பண்பாட்டில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இறை வழிபாட்டிலும் சிறு தானியங்களின் பங்கு இருந்திருக்கிறது. முருகக் கடவுளுக்குத் தினை மாவும், திருமாலுக்குத் தினைப் பாயசமும் படைக்கப்பட்டன.
 பூப்பெய்தும் பெண்களுக்குத் தினை மாவிடித்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி உண்ணக் கொடுப்பது தமிழக நாட்டுப்புற மக்களிடம் இன்றும் வழக்கில் உள்ளது. சிறு தானியங்களைப் பயிரிடும் வேளாண் முறைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் தெரிந்து வைத்திருப்பதுடன் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
 நமது உடலுக்கு நன்மை அளித்து விவசாயத்துக்கும் அனுகூலமாக இருந்ததாலேயே சிறு தானியங்களுக்கு பழந்தமிழகத்தில் அவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. சிறு தானியங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வரலாறும் சிறப்பு மருத்துவக் குணங்களும் உண்டு.
 தினை (Foxtail Millet): இந்தத் தானியம் உலக அளவில் பயிரிடப்படுகிறது. தினை உற்பத்தியில் இந்தியா முதன்மை வகிக்கிறது. தினையில் செய்யப்படும் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்குத் தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபாக உள்ளது. இது புரதச் சத்து, நார்ச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் (beta-Carotene) நிறைந்தது.
 குதிரைவாலி (Barnyard Millet): மானாவாரி நிலங்களில் விளையக்கூடிய இத் தானியம் குறைந்த நாள்களில் நிறைந்த விளைச்சல் தரக்கூடியது. இப்பயிரின் கதிர், குதிரையின் வால் போல் காணப்படுவதால் குதிரைவாலி என அழைக்கப்படுகிறது. குதிரைவாலி தானியத்தில் சமைக்கப்படும் உணவு உடல் உறுப்புகளைத் தூய்மைப்படுத்தும் நற்குணம் கொண்டது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
 சாமை (Little Millet): சாமை எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி, மலச்சிக்கல் வராமல் தடுக்கும் தன்மை முதலான ஏராளமான மருத்துவக் குணங்கள் சாமை உணவுக்கு உண்டு.
 கேழ்வரகு (Finger Millet): நகர்ப்புறங்களில் ராகி என்றும் நாட்டுப் புறங்களில் கேப்பை என்று வழங்கப்படுகிறது. இதை ஏழைகளின் உணவு என்று கூறுவார்கள். கேழ்வரகு உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும் குணமும் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகமிக நல்லது.
 கம்பு (Pearl Millet): ஆப்பிரிக்கக் காடுகளில் விளைந்து கிடந்த இந்தத் தானியத்தை அங்கு வசித்த பழங்குடிகளே உலகுக்கு அறிமுகம் செய்தார்கள். அமெரிக்கா இந்தத் தானியத்திலிருந்து எரிபொருள் எடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில்தான் கம்பு அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதனைத் தென் தமிழகக் கிராமப் பகுதிகளில் கம்மம்புல் என்று அழைக்கின்றனர்.
 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் உணவில் கம்பு இரண்டறக் கலந்திருக்கிறது. தமிழகத்தின் கரிசல் பகுதிகளில் கம்மஞ் சோறு உருண்டை மிகவும் பிரபலம். கம்பு கால்சியம், இரும்பு, புரதம், மாவுச் சத்து நிறைந்தது. வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணை ஆற்றும் குணம் கொண்டது. குழந்தைகள், கர்ப்பிணிகள் கம்பு உணவைத் தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.
 மன அழுத்தத்தைப் போக்கிப் புத்துணர்வு ஏற்படுத்தும் சக்தி கம்புக்கு இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்பார்வை மற்றும் பாலியல் குறைபாடுகளுக்கும் இதில் மருந்து பொதிந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்களிலே அதிக புரதச் சத்து நிறைந்தது கம்பு.
 சோளம் (White Millet): ஐரோப்பியர்கள் வழி இந்தியாவுக்கு வந்த சோளம் தமிழகத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் நாட்டுச் சோளம் (வெள்ளைச் சோளம்), கருஞ்சோளம், செஞ்சோளம், நாத்துச் சோளம், மக்காச் சோளம், இரும்புச் சோளம் எனப் பல வகைகள் உண்டு. நாட்டுச் சோளம் சுவையும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த தானியம். தமிழர்களின் உணவில் சோளம் இரண்டறக் கலந்துள்ளது. பொங்கல் திருநாளில் சோளம் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்டக் கிராமங்களில் சோளத் தோசையின் மணமும் ருசியும் அலாதியானது. சோளத்தில் செய்த உணவுகள் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது.
 வரகு (Kodo Millet): வறண்ட பகுதிகளில்கூட விளையக்கூடிய தன்மை வரகிற்கு உண்டு. வரகு தானியத்தின் மேல் பகுதி ஏழு அடுக்குகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் விதைகள் ஆயிரம் வருடங்கள் விதைப்புத்திறன் கொண்டவை என வேளாண் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வரகில் செய்த உணவுகள் உடல் பருமனைக் குறைத்துக் கண்களுக்கு ஒளி தரக் கூடியவை. பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளைச் சீர் செய்யும் தன்மை கொண்டது.
 மொத்தத்தில் சிறு தானிய உணவுகள் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. சிறு தானியங்கள் குறைந்த நீரில் விளையும் தன்மை கொண்டவை. குறுகிய காலப் பயிர்கள் வரிசையில் சிறு தானியங்கள் முதலிடம் பெறுகின்றன. குறைந்த எரிபொருளில் சிறு தானிய உணவைச் சமைக்க முடியும். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினர்க்கும் உகந்த நுண்ணூட்டச்சத்து கொண்டதாகச் சிறு தானியங்கள் விளங்குகின்றன.
 மனித உணவுத் தேவையை கலோரி சக்தியை வைத்துக் கணக்கிடாமல், புரதம், நல்ல கொழுப்பு, தாதுப்பு, வைட்டமின் சத்துக்களை வழங்கும் மானாவாரியில் விளையக்கூடிய சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி, வரகு முதலான சிறு தானியங்களை வைத்துக் கணக்கிட வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் வற்புறுத்துகின்றனர்.
 பாரம்பரியச் சிறு தானிய உணவுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நம் வலிமையான, ஆரோக்கியமான உடலுக்குப் பாரம்பரிய சிறு தானிய உணவுகளைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.
 சிறு தானிய விளைச்சலில் தன்னிறைவு அடைய மத்திய-மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். சிறு தானிய உற்பத்தி மற்றும் உணவுகளால் எதிர்கால இந்தியப் பொருளாதாரமும், சந்ததியினரும் பெரும் பலன் அடைவது திண்ணம். உடல்நலத்திற்கு அதிகம் கேடு விளைவிப்பது துரித உணவுகளே (Fast Food). குழந்தைகள், பதின் பருவத்தினரின் அதீத உடற் பருமனுக்குத் துரித உணவுகளை உட்கொள்வதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.தின மணி நாளிதழ்

12 ஆகஸ்ட் 2016

சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு-தாளவாடி



மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். ஈரோடு மாவட்டம்,தாளவாடி வட்டத்தில் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பாக  சேவையாற்றி வருகிறோம்.
 அதற்கு முன்னதாக தாளவாடி வட்டார சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து PET  என்னும்  ''பார்த்தீனியச்செடி அகற்றும்  குழு''என்ற பெயரிலும் செயல்பட்டு வந்தோம்..ஆக தாளவாடி வட்டார பொது மக்களின் நலனுக்காக சேவையாற்றும் அனைவரையும் அழைத்து பொதுக்குழு கூட்டம்  2016ஆகஸ்டு12ந் தேதி வெள்ளிக்கிழமை நேற்று மாலை4.00மணியளவில் தாளவாடி தொன்போஸ்கோ தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. அப்போது PET  என்னும் பெயரில் செயல்பட்டு வந்தவர்களும் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்புடன் இணைந்து   ''சமூக  ஆர்வலர்களின் கூட்டமைப்பாக''  செயல்பட முடிவு எடுக்கப்பட்டது

         அது சமயம் 
 ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி, 
ஆஷாகேந்திரா குழந்தைகள் நல மையம்,
பாம்2 சமூக சேவை நிறுவனம்,
தொன்போஸ்கோ தொழிற் பயிற்சி மையம்,
தாளவாடி சமூக சேவை மையம்,
மலைவாழ் மக்கள் சங்கம்,
மனித உரிமைகள் கழகம்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
ரீடு நிறுவனம் 
 உட்பட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் கீழ்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தீர்மானம்
    (1) தாளவாடி பொதுமக்களின் நலனுக்காக பாடுபடும் அனைவரும் ஒன்றாக இணைந்து  அரசியல்,சாதி,மதம்,மொழி, வேறுபாடின்றி    செயல்படுவது.
 (2) சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்புக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது.

(3)ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமை சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு கூட்டம் நடத்துவது.
(4)சேவை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஏற்கனவே மக்களுக்காக சேவையாற்றி வருவது நீடிக்கட்டும்.சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு தனிப்பட்ட  சேவை நிறுவனங்களின் தேவைக்கேற்ப முடிந்த உதவிகளை செய்யலாம்.
(5)தாளவாடி மக்களுக்கான தேவைகள்,குறைகள் என்னென்ன?என்பதை பட்டியலிட்டு  தீர்வு காண முயற்சிப்பது.
(6)சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு மாதாந்திரக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு மாதக்கூட்டத்திலும் ஒருவர் வீதம் அவரவர் செயல்பாடுகளை,திட்டங்களை,கருத்துக்களை பதினைந்து நிமிடம் பேச வேண்டும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மேற்கண்ட தீர்மானங்களின்படி,
 சீட்டு எழுதிக் குலுக்கி பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
திருமிகு.மரிய அருள் வியானி அவர்கள்,ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி தலைவர் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்புக்கும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமிகு.A.P. ராஜூ அவர்கள் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் சமூக ஆர்வலர்களின் கூட்டமைக்கு செயலாளராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமிகு. T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்புக்கு பொருளாளராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஏழாயிரம் ரூபாய் நிதியினை பொருளாளர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

வருகிற  2016 செப்டெம்பர் 21 ந் தேதி புதன்கிழமை நடைபெறும்  மாதாந்திரக்  கூட்டத்தில் திருமிகு.C.பரமேஸ்வரன்  செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் பொது  மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களைக்  கூற வாய்ப்பளிக்கப்பட்டது.

மேற்கண்ட நான்காவது  தீர்மானத்தின்படி   இளைய  சமுதாய நலன் கருதி செயல்படுத்தும் தாளவாடி  மாணவர்கள் நூலகத்தை  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்பே  செயல்படுத்துவது என்றும் தேவையான உதவிகளை சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பில் பெறுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

             தொடர்புக்கு  9585600733  paramesdriver@gmail.com

05 ஆகஸ்ட் 2016

வெளிச்சத்துக்கு வராத விடுதலைப்போராட்ட வீரர்களை வெளிப்படுத்தும் போட்டி!



 மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.நமது இந்தியா சுதந்திரம் பெற்று வருகிற 2016ஆகஸ்டு15 ந் தேதியுடன் அறுபத்தொன்பது ஆண்டுகள் நிறைவடைந்து எழுபதாவது சுதந்திர தினவிழாவினை கொண்டாட இருக்கிறோம்.இந்த மகிழ்வான தருணத்தில்  தேச விடுதலைக்காக போராடியவர்களில்,
                  நமது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த  சுதந்திரப் போராட்ட தலைவர்கள் உட்பட வீரர்களையும் வீர மங்கைகளையும் பெயர்,ஊர்,ஆண்டு,பங்களிப்பு மற்றும் அவர்களது குடும்ப விவரம் பற்றி சேகரித்து தொகுக்கும்வகையில்- 
             ஈரோடு மாவட்ட பள்ளிகளின் மாணவ,மாணவிகளுக்காக 

 ''வெளிச்சத்துக்கு வராத தேச விடுதலைப் போராட்ட வீரர்களை வெளிப்படுத்தும் போட்டி'' 

        என்ற தலைப்பில் 
             சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக,  READ  என்னும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் பொறுப்பில்  போட்டி நடத்துகிறோம். 
                அதிக எண்ணிக்கையில் தியாகிகள் விவரங்களைத்  தொகுத்து எழுதி அனுப்பும் மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்படும்.ஆதலால் ஒவ்வொரு பள்ளியிலும்  எழுதிப் பெற்ற விடுதலைப் போராட்ட  வீரர்களின் பெயர் பட்டியலில் அதிக எண்ணிக்கை அடிப்படையில் இரண்டினை தேர்வு செய்து   2016ஆகஸ்டு 31ந் தேதிக்குள், 

''பொறுப்பாளர்,
மாணவர் நூலகம்-தாளவாடி
(சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சேவை) 
ஈரோடு மாவட்டம் -638461" 
               என்ற முகவரிக்கு   அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.                                    
                                                                                                     என,
                                                                     சமூக நலனில் அக்கறையுள்ள,
                                                                                   C.  பரமேஸ்வரன்,
                                                                              ஒருங்கிணைப்பாளர்,
                                                         சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு,
                                                                 தாளவாடி வட்டம்-  ஈரோடு மாவட்டம்.  
                                                         தொடர்புக்கு 9585600733 
                                                      மற்றும்  paramesdriver@gmail.com      
       

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...