05 டிசம்பர் 2015

ஈரோடு கதிர்.....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.பிறமொழி மற்றும் பிற மாநில நடிகர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் உதவிகளை முன்வைத்த கதிர் ஐயா அவர்களுக்கு நன்றிங்க..


              கடந்த நான்கு நாட்களாக, வெள்ளம், மீட்பு, நிவாரணம் தவிர்த்து எதுவும் பேசக்கூடாது பகிரக்கூடாது என்றிருந்த கட்டுப்பாடு இந்தச் செய்தியைக் கண்டவுடன் தளர்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள்(!) வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்படுவது அல்ல. இன்றைய நிலையில் மக்கள் மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்கும் நேரத்தில் திரை “நட்சத்திரங்கள்” நீங்கள் செய்வது குறித்து எந்தக் கவலையும் இல்லை. ஆனால் திரையைத் தாண்டி நிஜத்தில் நீங்கள் நடிக்க முற்படுவது மட்டும் காணச் சகியாதது.
உங்கள் விஸ்வரூபம் அரசியல் விளையாட்டில் தள்ளாடியபோது தமிழகமே உங்கள் இன்னல் கண்டு தவித்தது, மருகியது, நீங்கள் நல்லாயிருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தும் தொலைத்தது. நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என ஒவ்வொரு பேட்டியிலும் மிரட்டல் விடுத்தீர்கள். சில நாட்கள் கழித்து உங்களை அலைக்கழித்த அதே அரசின் தலைமைப் பீடத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்தினீர்கள். இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுத்தொலைப்போம்.
உங்களைப் போலவே தமிழ் திரையுலகில் சித்தார்த் என்ற ஒரு நடிகர் இருக்கிறார். மன்னிக்கவும் உங்களைப் போலவே என்று சொல்வதை உங்கள் ரசிக சமஸ்தானமும் ஏற்றுக்கொள்ளாது, சித்தார்த்தை உண்மையாய் உணர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த சித்தார்த்துக்கு ரசிகர் மன்றமெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ”யேய்ய்ய்.. சித்தார்த் படம் ரிலீசாகப்போவுது... நா கட்டாயம் பாப்பேன்” எனச் சொல்லும் ரசிகர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை. சித்தார்த்க்கு கட்அவுட் வைப்பார்களா, அதில் ஒரு கிறுக்கன் பால் அபிஷேகம் செய்திருக்கிறானா என்றும் தெரியாது. தமிழ் திரையில் இருக்கும் நூற்றில் ஒரு நடிகனாகத்தான் சித்தார்த் இருக்க முடியும். சித்தார்த்துக்கென்று தனி மார்கெட் எதும் இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது. ஆனால் சித்தார்த்திற்கு மனம் இருக்கின்றது.
தன் வீட்டில் தண்ணீர் புகுந்தபோது “அய்யய்யோ என் வூட்லய தண்ணி பூந்துடுச்சு, இந்த கேடு கெட்ட அரசாங்கம் வரி கட்டும் எனக்கு என்ன பாதுகாப்பு தருது!?” என்பது போன்றெல்லாம் எதும் புலம்பவில்லை. சித்தார்த் எனும் நடிகனையும் தாண்டிய மனிதன் களத்தில் இறங்கினார். ”நல்ல இடத்தில் வசிக்கும் எனக்கே இந்த நிலையென்றால், மற்றவர்கள் நிலை என்னவாக இருக்கும்” என்ற ஆதங்கத்தோடு களம் இறங்கினார். BIG எஃஎம் RJ பாலாஜியுடன் இணைந்து தனது ட்விட்டர் தளத்தின் மூலம் மட்டுமே பல நூறு தகவல்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினார். இரவு பகல் பாராது களப்பணியாற்றுபவர்களை ஒருங்கிணைத்தார். அவரின் செயல்பாடுகள் மூலம் மட்டுமே பல நூறு உயிர்கள் பிழைத்ததையும், பல்லாயிரம் பேர் பசியாறியதையும் அதே பாதுகாப்பான அறையில் இருந்து வெட்கத்துடனோ, பொறாமையுடனோ நீங்கள் பார்க்க வேண்டும் திரு.கமல் அவர்களே.
இன்னொன்றும் சொல்ல வேண்டும், உங்கள் விஸ்வரூபத்திற்கு பிரச்சனை வந்ததுபோல், சித்தார்த்தின் ஏதாவது ஒரு படத்திற்கு பிரச்சனை வந்திருந்தால் இந்தத் தமிழகம் மிகச் சிறிய சலனத்தைக்கூட ஏற்படுத்தியிருக்காது. “யாரு அந்த சித்தார்த்!?” என்ற கேள்வியை மட்டும் கேட்டிருக்கும். அதன் பின் கடந்து போயிருக்கும். தெலுங்கு நடிகர்கள் பணத்தை அள்ளிக்கொடுக்க, மலையாள நடிகர் மம்முட்டி தன்னால் இயன்ற 30 இடங்களில் மக்கள் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ததையும் நீங்கள் பார்த்திருக்க முடியும் திரு.கமல் அவர்களே.
அடுத்து அறிவுப்பூர்வமான ஒரு கணக்கு சொல்லியிருக்கிறீர்கள். கார்ப்ரேட் திட்டங்களுக்கு அளிக்கும் 4000 கோடியை 120 கோடி மக்களுக்கு பிரித்துக் கொடுத்தால் எல்லோரும் கோடீஸ்வரர்களாக மகிழ்வார்களே என்று அரிய கண்டுபிடிப்பைச் சொல்லியுள்ளீர்கள். மேலோட்டமாய்ப் படிக்கும் எல்லோருக்கும் ”வாவ் நம்மாளு எவ்ளோ சுலுவா சொல்லிட்டார்டா… இதுக்குத்தான் ப்ரெய்ன் வேணும்ங்கிறது”ன்னுட்டுப் போவான். அது கவுண்டமணி – செந்தில் காமடிக்கு நிகரான அறிவார்ந்த கண்டுபிடிப்பு என எளிதாக புரிந்துவிடுமா என்ன? நீங்கள் பேட்டிகளில் புரியாதுபோல் பேசுவதை போன்ற ஒரு கணக்கு இதுவும் என்று புரியாது.
திரு.கமல் அவர்களே… நீங்கள் கணக்குப் போட்டது போல் 4000 கோடியை 120 பேருக்கு பிரித்துக் கொடுத்தால் தலைக்கு 33.33 கோடி வரலாம், ஆனால் கால்குலேட்டர் எடுத்து அறிவைப் பயன்படுத்தி எல்லா சைபர்களும் நிரப்பி கணக்குப் போடுங்கள், 4000 கோடியை 120 கோடி மக்களுக்குப் பிரித்தால் தலைக்கு வெறும் 33.33 ரூபாய் தான் வரும். இந்த வெங்காயக் கணக்கை அறிவார்ந்த கணக்காக நீங்களும் சொல்லியுள்ளீர்கள், உங்களைப் பேட்டியெடுத்தவரும் சரி செய்யாமல் வெளியிட்டிருக்கிறார். ஒருவேளை அவர்களுக்கு புரிந்திருந்தாலும் உங்கள் சாயம் வெளுக்கட்டுமே என்று விட்டிருந்திருக்கலாம்.
திரு.கமல் அவர்களே, பாதுகாப்பான அறையில் இருந்து கொண்டு சக சென்னை மக்கள் வெள்ளத்தில் அடைந்த இன்னல்களை கண்டு வெட்கப்படுவதாக பேட்டியில் நடிப்பதற்குப் பதில் உண்மையில், எழுந்து சென்று உங்கள் வீட்டுக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள் அல்லது ஒரே ஒரு நிமிடம் நேர்மையாக மனசாட்சியிடம் பேசுங்கள். உங்களைக் கண்டோ அல்லது உங்களை நினைத்தோ நீங்கள் கூசிப்போகும் சாத்தியமுண்டு.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக