02 டிசம்பர் 2013

கேழ்வரகு தானிய உணவு


மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.
                        கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். 
                 கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது சந்தேகம்,இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.
பாரம்பரியமான கேழ்வரகு தானிய உணவு செய்யும் முறைகள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக ஜீரணிக்கும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் மிக முக்கிய சத்தான தானியங்களுள் கம்புக்கு அடுத்து இருப்பது கேழ்வரகு மட்டுமே.சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு. பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.

இதில் பெருமளவில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைப்பதோடு மட்டுமில்லாமல் சேதமடைந்த திசுக்களை சரி செய்து உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் செய்யும்.

கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், தேவையில்லாமல் மற்ற உணவு வகைகள் உண்பது தடுக்கப்படும், அதனால் உடல் எடை கூடுவதும் தவிர்க்கப்படும். கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும். இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்தும். உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும். தேவை இல்லாத கொழுப்பை அகற்றி கல்லீரலை வலுப்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களும் குணமாக்கும். குடல் வலுப்பெறும். தாய்ப்பால் சுரக்க பேருதவி புரியும்.

உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. அதனால் சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் அடிக்கடி உணவில் கேழ்வரகை சேர்த்துக் கொள்ள கூடாது.

கேழ்வரகு களி, கூழ்,கேழ்வரகு அடை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு சேமியா புட்டு, கேழ்வரகு சேமியா உப்புமா , கேழ்வரகு மாவு லட்டு என பல வகைகள் உண்டு. அதில் சில உணவு வகைகள் உங்களுக்காக.

கேழ்வரகு அடை
------------------------
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: தேவைக்கு
முருங்கைகீரை : 1 கப்
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்: தேவைக்கேற்ப
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிய பின் கடைசியாக கீரையை வதக்கி வதங்கியதும் அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரத்துணி (அ) எண்ணெய் தடவி மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

கேழ்வரகு இட்லி
-------------------------
கேழ்வரகு மாவு : 2 கப்
உளுந்து : 1/2 கப்
வெந்தயம் : 1/4 ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
உளுந்தை வெந்தயம் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுப்போல அரைத்து, அத்துடன் கேழ்வரகுடன் உப்பு சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் சாதாரண தோசை, இட்லி செய்முறையில் செய்யலாம்.

கேழ்வரகு புட்டு
-----------------------
கேழ்வரகு மாவு - ஒரு கப்
உப்பு: 3 சிட்டிகை
பனங்கற்கண்டு : தேவையான அளவு
தேங்காய் துருவல் : தேவையான அளவு
கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். பிசைந்த மாவை கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் கையில் ஒட்டாமல் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசைந்த பிறகு ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், பனங்கற்கண்டு கலந்து உண்ணலாம்.

கேழ்வரகு களி
----------------------
கேழ்வரகு மாவு: ஒரு கப்
உப்பு: தேவைக்கு
ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து இரண்டு கப் (மாவின் அளவை போல் இரு மடங்கு) தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்து, வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும். இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.

கேழ்வரகு சேமியா புட்டு
-----------------------------------
எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட‌.
சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் ஊற வைத்து நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் அவித்து எடுக்க வேண்டும்.
வெந்ததும் எடுத்து அதனோடு இனிப்புக்கு பனங்கற்கண்டு உதிர்த்து வைக்கவும்.

கேழ்வரகு சேமியா உப்புமா
---------------------------------------
வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாய்,கேரட், பீன்ஸ் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும். சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் ஊற வைத்து நீரை வடிய வைக்கவும்.
காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறிவிடவும். எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

கேழ்வரகு மாவு லட்டு
-------------------------------
கேழ்வரகு மாவு-ஒரு கப்
வெல்லம்:1/2 கப்
முந்திரி:5
ஏலக்காய்:1
நெய்:தேவைக்கு
முந்திரியைப் நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொண்டு, கேழ்வரகு மாவைப் போட்டு வாசனை வரும்வரை விடாமல் கிளற வேண்டும்.
மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும் போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறி முந்திரி, ஏலத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...