15 பிப்ரவரி 2012

இந்திய தேசியக்கொடி




ன்று செவ்வாய்க் கிழமை. ஜூலை மாதம் 22ம் தேதி 1947ம் வருடம். இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டம். அன்றைய தினத்தின் முதல் நடவடிக்கையாக, நம் நாட்டின் தேசியக்கொடியினைத் தீர்மானித்து முடிவு செய்வது எனும் நோக்கத்தில் கூடியிருந்தது.
ஆனாலும் அன்றைக்கு முதலில் பேசிய பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராம் நாராயண் சிங், ஒரு வேண்டுகோளை முன்வைத்து சபையின் கவனத்தை ஈர்த்தார்.
“விடுதலை அடையவிருக்கும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை நிர்ணயம் செய்ய கூடியுள்ள இந்த மாபெரும் அவையின், கடிதங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறைகளில் இன்னமும் ‘மாட்சிமை தங்கிய மன்னரி சேவையில்’ எனும் தலைப்பு காணப்படுகிறது. இந்த பொருத்தமற்ற வாசகத்தினை இனிவரும் நாட்களில், இந்த அவை தனது அஞ்சல் உறைகளில் பயன்படுத்தாது கைவிட வேண்டும்.”
இந்தக் கோரிக்கைக்கு அவைத் தலைவர் ராஜேந்திர பிரசாத் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
தேசியக்கொடியின் மீதான முன்மொழிவினை அவையில் பகிர்ந்து கொள்ளுமாறு ஜவஹர்லால் நேருவுக்கு அவர் அழைப்பு விடுத்தார். நேரு தேசியக்கொடி குறித்து முன்மொழிந்த தீர்மானம்:
தேசியக்கொடி செவ்வகமாகவும் அதன் நீள அகலம் 3: 2 எனும் விகிதத்திலும், கொடியில் மூன்று வர்ணங்களில் காவி மேல்புறத்தும், பச்சை கீழ்ப்புறத்தும், இவற்றிற்கு இடையே வெள்ளை நிறமும்; அதில் நீல நிறத்தில் சாரநாத் ஸ்தூபியில் இருக்கும் சக்கரம் மையத்தில் அமையும்படியாகவும் இருக்கும் கொடி நமது தேசியக்கொடியாகத் திகழும் எனும் தீர்மானத்தினை அவையின் அனுமதிக்கும் ஏற்புக்கும் முன்மொழிகின்றேன்
தீர்மானத்தை முன்மொழிந்த நேருவின் உரையில் உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளால் சுதந்திரப் போரின் தருணங்கள் மேற்கோளிடப்பட்டன. கொடியின் நிறத்தினையும் வடிவத்தினையும் குறிப்பிட்ட நேரு, அதுவரை சுதந்திரப் போரினை முன்னின்று நடத்திய போராளிகள் பயன்படுத்திய கொடிக்கும், தான் தற்போது முன்மொழிந்துள்ள கொடிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை எனச் சொல்லி, அன்றைய கொடியின் மத்தியில் சாமன்ய மனிதனைக் குறிக்கும் சின்னமாக காந்தியார் கருதிய ராட்டை சக்கரம் இருந்தது, இன்றைக்கு அந்த இடத்தில் சாரநாத் ஸ்தூபியில் காணப்படும் தர்ம சக்கரம் காணப்படுகிறது எனக் குறிப்பிட்டு, கதர் துணி மற்றும் பட்டுத் துணிகளாலான இரண்டு கொடிகளை அவைக்குச் சமர்பித்தார்.
அவைத்தலைவர் இந்த தீர்மானத்திற்கு மாற்றம் வேண்டி தனக்கு உறுப்பினர்களிடமிருந்து மூன்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தவுடன் அவையில் சலசலப்பு தோன்றியது.
நேரு முன்மொழிந்த தீர்மானத்தில் திருத்தம் கோரும் தனது தீர்மானத்தினை முன்மொழிந்து ஹெச்.வி காமத் எனும் உறுப்பினர் பேசினார்:
நேரு முன்மொழிந்துள்ள கொடியில் காணப்படும் தர்ம சக்கரத்திற்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னத்தினை அமைக்கலாம் என முன்மொழிந்தார் காமத். இந்தியாவின் நீண்ட பாரம்பரியக் கலாசாரத்தினை ஸ்வஸ்திக் வெளிப்படுத்தும் என்பது காமத் சொன்ன விளக்கம்.
தாஜாமுல் ஹுசைன் எனும் உறுப்பினரை தனது தீர்மானத்தினை முன்மொழியுமாறு அவைத்தலைவர் அழைத்தார். ஆனால் ஹுசைன் அப்போது அவையில் இல்லை. ஆகையால் நேருவின் தீர்மானத்தில் மாற்றம்வேண்டி கருத்து சமர்ப்பிக்க கோரிக்கை வைத்திருந்த மற்றுமொரு உறுப்பினர் தேஷ்முக் தனது கருத்துகளைக்கூற அவைத்தலைவர் அழைத்தார்.
அப்போது பேசிய தேஷ்முக், அங்கு அதற்கு முன்பு உரைநிகழ்த்திய நேருவின் உணர்ச்சிமிகுந்த, ஆழ்ந்த கருத்துகளினால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதால் தான் முன்மொழிவதாக இருந்த திருத்தம் வேண்டும் தீர்மானத்தினை, திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்.
நேருவின் தீர்மானத்தினை ஆதரித்து சேத் கோவிந்த் தாஸ், வி.ஐ. முனிசாமிப் பிள்ளை, சௌத்ரி கலிசுமான் ஆகியோர் பேசினர்.
நேருவின் தீர்மானத்தினை ஆதரித்து சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தனக்கே உரிய தத்துவ ஞானத்துடன் உரை செய்தார். நேரு முன்மொழிந்த வண்ணங்கள், ராஜ தர்மத்தையும் மத ஒற்றுமையையும் எடுத்துரைப்பதாகச் சொன்னார்.
பின்னர் மோகன் சிங் மேத்தா, மொகமத் ஷரிஃப் இருவரும் நேருவின் தீர்மானத்தினை ஆதரித்தனர். இந்நிலையில் இடைமறித்த உறுப்பினர் சத்திய நாராயண சின்ஹா, இந்த விவாத்தினை நீட்டித்துக் கொண்டே செல்லாது, விரைந்து தீர்மானத்தினை நிறைவேற்றலாம் எனக் கருத்து சொன்னார்.
அவைத்தலைவர் ராஜேந்திர பிரசாத், இந்தப் பொருளில் பேச 26 உறுப்பினர்கள் வேண்டுகோள் வைத்திருப்பதாகவும், இதில் அவையின் உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் கருத்துகளைச் சொல்வதற்கு ஆவலாக இருக்கலாம் எனவும், ஆனால் நேருவின்  தீர்மானத்தினை அவையின் கருத்தறியும் வகைக்கு ஓட்டெடுப்புக்கு விடலாம் எனக் கருதுவதாகவும் சொன்னார்
அப்போதுதான் அவைக்கு வந்திருந்த தாஜாமுல் ஹுசைன், இந்த சபையில் கருத்துரைக்க வேண்டுகோள் செய்த உறுப்பினர்கள் அனைவரது கருத்துகளையும் அறிந்தபின் ஓட்டெடுப்பு நிகழ்த்தலாம் எனத் தெரிவித்தார்
தேசியக்கொடியினை நிர்ணயம் செய்யும் இதுபோன்றதொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும் வாய்ப்பும் பின்னர் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை, ஆகவே பேச வேண்டுகோள் வைத்துள்ள அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என, பி.கே சித்வா, ராய் பகதூர் சியாமனந்தன் சஹாயா, பண்டிட் கோவிந்த் மாளவியா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த, ராஜேந்திர பிரசாத், தான் அவையின் கருத்துக்குச் செவி சாய்ப்பதாகவும், அதேசமயம் இந்தப் பொருளில் பேச வாய்ப்புக் கேட்டு கோரிக்கை வைத்தவர்களை மட்டும் பேச அழைப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது பாலகிருஷ்ண சர்மா, தாஜாமல் ஹூசைன் இருவரும் கவிக்குயிலைக் கூவ அழையுங்கள் எனச் சொன்னதற்கு, ராஜேந்திரப் ப்ரசாத், “கண்டிப்பாக அழைக்கிறேன். அந்த இனிமையான குரலுடன் இன்று நாம் நிகழ்வுகளை நிறைவு செய்யலாம், இனிப்புடன் நிறைவு செய்வது வழக்கம்தானே” என்று வேடிக்கையாகச் சொன்னார்
அதன்பின்பு சயித் மொகமத் சாலுல்லா, ஹெச்.சி. முகர்ஜி, ஆர்.கே சித்வா, ஜெய்பால் சிங், ஃப்ராங் அந்தோணி, குர்முக் சிங் முகாஃபர், ஹெச்.ஜே காண்டேகர், பால கிருஷ்ண சர்மா, பண்டிட் மாளவியா, ஜோசப் அல்பான், ஜெய் நாராயண வியாஸ், நாகப்பா, லஷ்மி நாராயண சர்மா, ஜெரோம் டிசோசா ஆகியோர் உரையாற்றியபின், நிறைவு உரைக்கு கவிக்குயில் சரோஜினி நாயுடு அழைக்கப்பட்டார். அவரது உரையுடன் அன்றைக்கு நேரு முன்மொழிந்த, இன்றைக்கு நாம் மதிப்புடன் கொண்டாடும் தேசியக்கொடி, இந்திய நாட்டின் தேசியக்கொடியாக ஏற்கப்பட்டது.
அதன்பின் நேரு அவைக்குச் சமர்ப்பித்த இரண்டு தேசியக்கொடிகளும், வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டி, தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டன‌.
அவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மரியாதையினை மஹாத்மா காந்தியாருக்குத் தெரிவிக்க ராஜேந்திர பிரசாத்திடம் கேட்டுக்கொண்டனர். அவ்வாறே செய்வதாக அவரும் சொன்னார்.
இந்தத் தீர்மானத்தினை முன்மொழிய நேரு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு சிறு வரலாறு உண்டு.
அரசமைப்பு சட்டத்தினை வடிவமைக்க அரசியல் சாசன நிர்ணய சபை அமைக்கப்பட்டபோது, தேவையான பணிகளைப் பிரித்துச் செய்ய துணைக் கமிட்டிகள் அமைத்துக் கொள்ளப்பட்டன. அப்படி தேசியக்கொடி, தேசிய சின்னங்களுக்கெனவும் ஒரு தனி கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டியில் ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆசாத்,  ராஜாஜி, சரோஜினி நாயுடு, சர்தார் கே.எம். பணிக்கர், கே.எம். முன்ஷி, அம்பேத்கர், சர்தார் பல் தேவ் சிங், ஃப்ராங்க் அந்தோணி, எஸ்.என். குப்தா, பண்டிதர் ஹிராலால் சாஸ்திரி, பட்டாபி சீதாராமையா, சத்தியநாராயண சின்ஹா ஆகியோர் உறுப்பினர்கள்.
இந்த கமிட்டியின் கூட்டம் 19-ஜூலை-1947 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு நேரு சிறப்பு அழைப்பாளராக அழைக்ப்பட்டார். அன்றுதான் அவர் சுதந்திர இந்தியாவின் தேசியக்கொடிக்கான தீர்மானத்தினை அரசியல் சாசன நிர்ணய சபையில் முன்மொழிந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
காந்தியாரின் ராட்டைக்குப் பதிலாக, இந்திய தேசியக்கொடியின் மத்தியில் அசோக சக்கரம் இருக்கும் என்பது நேருவின் உரையில் காணப்பட்டாலும், இதற்கும் ஒரு பூர்வ வரலாறு இருக்கிறது
கிலாபத் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான மௌலான மொகமத் அலி தலைமையில் 1923ம் ஆண்டு ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பிங்கலி வெங்கய்யா, இந்தியாவுக்கு தேசியக்கொடி வேண்டும் எனப் பேசினார். அவரையே தேசியக்கொடியினை வடிவமைத்திடும்படி காந்தியார் கேட்டுக்கொண்டார். இவர் வடிவமைத்த கொடியிலும் அசோகச் சக்கரமே இருந்தது. இவர்  “A National Flag for India“ எனும் புத்தகமும் எழுதினார். இந்தப் புத்தகம் அச்சாவதற்குரிய அனைத்துச் செலவுகளையும் எஸ்.வி. ராமமூர்த்தி ஏற்றுக்கொண்டார். எஸ்.வி. ராமமூர்த்தி அந்நாளில் ப்ரிடிஷ் ஆட்சியில் சென்னை ராஜதானியின் கவர்னரது எக்சிக்யூட்டிவ் கௌன்சிலின் உறுப்பினர்.
இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ன் தொடக்க நேரம், அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவு மிகச் சரியாக 12 மணிக்கு, நாடாளுமன்றக் கட்டடக் கடிகாரம் கணீரென ஒலித்த தருணம், இந்தியா சுதந்திர இந்தியாவாக மலர்ந்த தருணம்.
ஜூலை மாதம் 22 ம் நாள் அதே சபையில் ஏற்கப்பட்ட தேசியக்கொடியினை இந்திய அன்னையர் சார்பாக நாட்டுக்கு வழங்கிடுமாறு, அதற்கென அமைக்கப்பட்ட மகளிர் குழுவினை ராஜேந்திர பிரசாத் அழைத்தார். அந்தக் குழுவில் சரோஜினி நாயுடு, அம்ரித் கௌர், விஜயலஷ்மி பண்டிட், ஹன்சா மேத்தா, அம்மு ஸ்வாமிநாதன், சுசேதா க்ருபளானி, குத்சியா அய்சத் ரசூல், துர்கா பாய், ரேணுகா ராய், தாட்சாயிணி வேலாயுதன் ஆகியோர் உறுப்பினர்கள்
தேசியக்கொடியினை கையாளவும், அதற்கு மரியாதை செய்யவும் உரிய விதிமுறைகள் Flag Code of India எனும் தலைப்பில் 2002ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த விதிமுறைகள் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவையாவன: தேசியக்கொடியின் அளவுகள் குறித்த விதிகள்; தேசியக்கொடியினை தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள், தனியாள் நிறுவனங்கள் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விதிகள்; தேசியக்கொடியினை அரசும், அரசு நிறுவனங்களும் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விதிகள்.
  • தேசியக்கொடி செவ்வக வடிவில், நீள அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேல்புறம் காவி வண்ணம், நடுவில் வெண்மை, கீழ்ப்புறம் பச்சை, நடுவில் உள்ள வெண்மையின் நடுவில் நீலநிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் என்ற வடிவத்தில் இருக்க வேண்டும்.
  • தேசியக்கொடி, கம்பளி, கதர் மற்றும் பட்டுத் துணிகளில் கையினால் நெய்யப்பட்டதாகவே இருக்கவேண்டும்.
  • செவ்வக வடிவில் 3:2 என நீள அகலம் எனப் பொதுவில் இல்லாது கீழ்க்கண்ட அளவுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • 6300 x 4200, 3600 x 2400, 2700 x 1800,1350 x 900, 900x 600, 450 x 300, 225 x 150, 150 x 100 (அளவுகள் மில்லி மீட்டரில்.)
  • தனிமனிதர், தனியார் நிறுவனங்கள் தேசியக்கொடியினை, தேசியச் சின்னங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அதற்குரிய மரியாதையுடனும் மதிப்புடனும் பயன்படுத்த தடையில்லை.
  • இதன்படி, தேசியக்கொடியினை எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தலாகாது. பிறருக்கு மரியாதை செய்யும்போது தேசியக்கொடியினைத் தாழ்த்திப் பிடித்து வணக்கம் சொல்லுதல் கூடாது.
  • பொது இடத்தில் தேசியக்கொடியினைக் கிழித்தல், எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்
  • எந்த ஒரு பொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாக தேசியக்கொடியினைப் பயன்படுத்தலாகாது. (அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் மறைந்தவரின் உடலை, ராணுவ வீரர் இறந்தால் அவரது உடலை தேசியக்கொடி கொண்டு போர்த்துதல் இதில் அடங்காது.)
  • தேசியக்கொடியை, அணியும் உடை, பயன்படுத்தும் கைத் துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது.
  • தேசியக்கொடி மண்ணில்/தரையில்/தண்ணீரில் படுபடியாக விடக்கூடாது.
  • தனியார் கல்வி நிலையங்களில், நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும் போது, கிழிந்த, சேதமான நிலையில் இருக்கும் கொடி பயன்படுத்தலாகாது; மிகவும் பிரதானமான இடத்தில் கொடி ஏற்றப்பட வேண்டும்; தேசியக்கொடியுடன் பிற கொடிகள் ஏற்றப்படலாகாது.  தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பம் மற்றும் அதன் பீடத்தின் மீது மாலைகளோ அல்லது வேறு பொருட்களோ வைக்கலாகாது.
  • தேசியக்கொடியினை காகிதத்தில் செய்து, விருந்தினர் வருகையின்போது மரியாதை நிமித்தம் அசைத்து வரவேற்பு நல்கலாம்.
  • சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக்கொடி ஏற்றப்படவேண்டும். அது போல சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கி வைக்கப்படவேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில், தேசியக்கொடி முக்கிய தினங்களில் ஏற்றப்படும்போது, கூடிநிற்பவர் கொடிக்கு எதிர்ப்புறம் ஒரே பக்கத்தில் இருக்கவேண்டும். கொடி ஏற்றப்பட்டுள்ள கம்பத்தினை சூழ்ந்து நிற்கலாகாது.
  • அரசு கட்டடங்களில் பிறநாட்டுக் கொடி அல்லது ஐ.நாவின் கொடியுடன் நமது தேசியக்கொடி ஏற்றப்படும் சந்தர்ப்பங்களில், கட்டடத்தின் எதிரே நின்று கட்டடத்தைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கட்டடத்தின் இடதுமூலையில் கொடி வருமாறு ஏற்ற வேண்டும்.
  • பலநாட்டுக் கொடிகள் ஏற்றப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் (உதாரணமாகப் பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம்) கட்டடத்தில், நமது தேசியக்கொடியே முதலில் ஏற்றப்பட்டு, கடைசியில் இறக்கப்பட வேண்டும். பிறநாட்டு ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்து அகரவரிசைப்படி கொடிகளின் வரிசை அமைய வேண்டும்.
  • அரசு  விருந்தினராக இந்தியாவில் பயணிக்கும் வெளிநாட்டுப் பிரமுகரின் காரில், வலப்புறம் நம் தேசியக்கொடியும், இடப்புறம் அவரது நாட்டுக் கொடியும் பறக்கவிடப்பட வேண்டும்.
  • தலைவர்கள் மறைவின்போது, தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும்.
  • குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் இவர்களது மறைவின்போது நாடெங்கும்; லோக்சபா சபா நாயகர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இவர்கள் மறைந்தால் டெல்லி நகரிலும்; மத்திய அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரம் மற்றும் அவர் சார்ந்த மாநிலத் தலைநகரிலும்; மத்திய அரசின் இணை அமைச்சர்/ துணை அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரிலும்; மாநில அரசின் அல்லது யூனியன் பிரதேச‌ கவர்னர் / முதலமைச்சர் / மறைந்தால் அந்த மாநில யூனியன் பிரதேசம் முழுவதும்; மாநில / யூனியன் பிரதேச அமைச்சர் மறைந்தால் அந்த மாநில / யூனியன் பிரதேச தலை நகரத்திலும் அரைக் கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும்.
  • ஆயினும் தலைவர்கள் மறைவு, அடக்கம், எரியூட்டும்  தினம் இவை, குடியரசு தினமான ஜனவரி 26, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, தேசப்பிதா காந்தியாரின் பிறந்த தினமான அக்டோபர் 2, தேசிய் வாரமான ஏப்ரல் 6 முதல் 13 வரை (ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை போற்றும் விதமான தேசிய வாரம் இது), மாநில உதயம் கண்ட நாட்கள் போன்றவற்றில் ஏற்பட்டால், மறைந்த தலைவரின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் மட்டுமே தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். அதுவும் அந்த நாளில் அவரது உடல் தகனத்திற்காக / அடக்கத்திற்காக அந்தக் கட்டடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டபின் மீண்டும் தேசியக்கொடி முழுக்கம்பத்திற்கு உயர்த்தப்படவேண்டும்.
  • காலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பு தலைவர்களின் மரணச் செய்தி கிடைக்கப்பெற்றால், உடன் தேசியக்கொடி அரைக் கம்பத்திற்கு இறக்கப்பட வேண்டும். அன்றைக்கு மாலை அடக்கம் / தகனம் நடைபெறாது இருப்பின் மறுநாளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவேண்டும். மறுநாள் பறக்கவிடப்படும் போது, தேசியத் துக்கம் பின்பற்றப்படும் என தொடர்புடைய அரசு அறிவிக்கும் நிலையில், அந்த நாட்களில், கொடி முழுக்கம்பத்துக்கு ஏற்றப்பட்டு பின்னர் அரைக்கம்பத்துக்கு இறக்கப்பட வேண்டும். அன்று மாலை கொடி இறக்கப்படும்போது அரைக்கம்ப நிலையிலிருந்து இறக்கப்படலாகாது; அரைகம்ப நிலையில் இருந்து, முழுக்கம்ப நிலைக்கு கொடியினை உயர்த்தி ஏற்றி, அதன் பின்னரே இறக்க வேண்டும்.
சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பமே நம் நாட்டில், தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பங்களில் மிக உயர்ந்தது.
இந்திய தேசியக்கொடிக்குத் தரப்படவேண்டிய மரியாதை தொடர்பாக நடைபெற்ற சில சுவாரசியமான வழக்குகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
கட்டுரை எழுத உதவிய நூல்கள் / ஆவணங்கள்:
1. Constituent Assembly Debates
2. Flag Code of India
3. Dr Rajendra Prasad in the Constituent Assembly- Correspondence and Selected Documents
4. Great Indian Patriots – P Rajeshwar Rao
-நன்றிங்க;-சந்திரமௌளீஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...