25 மே 2013

அம்மா உணவகம்-சபாஷ்!

  மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
    
   
                     தற்போது நமது  மாண்புமிகு முதல்வர் அவர்களால் துவக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ''அம்மா உணவகம்'' சென்னை பற்றிய பதிவு இங்கு காண்போம்.

    

               நான் அடிக்கடி சென்னை மாநகர் செல்வது வழக்கம்.அம்மா உணவகம் மிக மிக குறைந்த செலவில் சுகாதாரமாகவும் சிறப்பாகவும்  செயல்படுவதாகக் கேள்விப்பட்டு  அம்மா உணவகத்திற்கு  சாப்பிட்டு சோதிக்க  ஆசைப்பட்டேன். 
   
 
        கடந்த 25-05-2013சனிக்கிழமை அன்று சென்னை- ஈக்காட்டுத்தாங்கல்-அம்பாள் நகரில் அமைந்துள்ள அம்மா உணவகத்திற்கு சென்றேன்., உணவு வழங்கும் நேரம் காலை 07-00 மணி முதல் காலை10-00 மணி வரை என்ற அட்டவணையைப்பார்த்து காலைஏழு மணிக்கே சென்று இருந்தேன்.ஆனால் எட்டு மணிக்குத்தான் அங்குள்ள பணியாளர்களால் உணவு வழங்க முடிந்தது.
     காலை நேர சிற்றுண்டிக்காக
                       டோக்கன் பெற  வரிசையில் காத்திருக்கும்  மக்கள்.

 நான் இட்லி சாப்பிட வாங்கிய ஐந்து அடையாள வில்லைகளில் பார்வைக்காக ஒன்று மட்டும் இது.
        கூலி வேலைக்காரரிலிருந்து நடுத்தரப்பட்ட வேலைக்காரர்கள் வரை காலைநேரத்தில் இட்லி வாங்கி சிற்றுண்டி! உண்ட காட்சி.
       
                                    இதோ இட்லிகளும் சாம்பாரும் காணீர்.தட்டு நிறைய சாம்பார் ஊற்றிக்கொள்ளும் காட்சி.


                        
   நான் உணவு அருந்த பெற்ற சாம்பார் சாதம் அடையாள வில்லை (டோக்கன்) இது.


 
        இது மதிய உணவு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் மக்கள் உண்ணும் காட்சி.     (இரண்டு மணிக்கே முடிந்துவிட்டது.)
         விலை சாம்பார் சாதம் ஐந்து ரூபாய் மட்டும்.தயிர் சாதம் மூன்று ரூபாய் மட்டும்.

           உண்மையிலேயே வரவேற்கவேண்டிய மிக நல்ல திட்டம் நாடு முழுவதும் பரவலாக்கப்பட வேண்டிய திட்டம்.குறிப்பாக அனைத்து பேருந்து நிலையங்களிலும்விரிவுபடுத்த வேண்டும்.

                அப்போது  (டீ குடிக்கக்கூட நேரம் இல்லாத பேருந்துகளில் பணிபுரியும்) ஓட்டுநர்கள், நடத்துநர்கள்,பயணிகள் மிகுந்த பயனை அடைவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
      
              .இந்த திட்டத்தைப் பொறுத்த வரையிலும் ''மாண்புமிகு  முதலமைச்சர் அவர்களை இரண்டாவது காமராசர்'' என்று கூட அழைக்கலாம்.

          எத்தனையோ இலவசங்கள் மக்களுக்கு வாரி வழங்கலாம்.ஆனால் இந்த மலிவு விலை உணவகத்தைப்பொறுத்தவரை வரவேற்க வேண்டிய மற்றும் நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய மிக நல்ல திட்டம். 

                 கூலி வேலை செய்யும் ஏழைகளுக்கும்,நடுத்தர மக்களுக்கும் மிகவும் பயன்தரக்கூடிய திட்டம்.சாதாரணமாக சென்னையில் ஒரு வேளை சிற்றுண்டிக்கு குறைந்த பட்சம் ஐம்பது ரூபாய் செலவு ஆகும்.மதிய உணவுக்காக குறைந்த பட்சம் அறுபது ரூபாய் செலவு ஆகும்.ஆனால் திருப்தி இருக்காது.இது எனது அனுபவம்.ஆனால் இந்த திட்டத்தால் எனக்கு காலை ஐந்து ரூபாய் மட்டுமே எனக்கு செலவு.மதியம் ஐந்து ரூபாய் மட்டுமே செலவு.

    குறிப்பு;-
                எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.ஆனால் அங்கேயே சாப்பிட வேண்டும்.பார்சல் எடுத்துச்செல்ல முடியாது.
                  வேதனை என்னவென்றால் அம்மா உணவகமான மலிவுவிலை உணவகத்திலும் அதிக அளவு வாங்கி குப்பையில் கொட்டுகின்றனர்.

       இதனை தடுப்பது மிக அவசியம்.அல்லது சாப்பிட்ட பிறகு மீண்டும் வாங்க வைக்க வேண்டும்.அல்லது வாங்கிய முழு உணவையும் சாப்பிட வைக்க வேண்டும்.
          அம்மா உணவகத்தில் பணிபுரியும்  பணியாளர்களும் கனிவுடனும்,சுகாதாரமாகவும்,சிறப்பாகவும் பணியாற்றுகின்றனர்.
  டோக்கன் என்னும் உணவுக்கான அடையாள வில்லை வழங்கும் இடத்தில் இறுதியாக சென்று விசாரித்த போது தினசரி இட்லி இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து நூறு வரை விற்கப்படுவதாகவும்,மதிய உணவான சாம்பார் சாதம் தினசரி ஐந்நூறு வரையிலும் தயிர் சாதம் முந்நூறு வரையிலும் விற்பனை ஆவதாகக்கூறினார்.யதார்த்தமான  தகவல் வழங்கிய அந்தப் பெண் பணியாளருக்கு சமூகம் சார்பாக நன்றி.மற்றும் அம்மா உணவகத்தில் கடமையுணர்வோடு பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும்
 சமூகம் சார்பாக பாராட்டுக்கள் . சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.சாப்பிடும் தட்டுகளும் மிக சுத்தமாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
       அம்பாள்நகரில் அம்மா உணவகத்திற்கு இடம் மட்டும் பற்றாக்குறை! அமர்ந்து சாப்பிட இட வசதி குறைவு.
             அம்மா உணவகத்திலேயே சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய கூலித்தொழிலாளி ஒருவரை தேடிப்பிடித்து பேட்டி கண்டபோது,  அவர் கூறியதாவது,
   
     அவரது பெயர் துரை.
          (புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன்.அவர் பயந்துவிட்டார்.அதனால் அவரை புகைப்படம் எடுக்கவில்லை) 
     
            சென்னை நகருக்குள் கூலி வேலை செய்து வருகிறார்.அவர் M.M.D.,மற்றும் வடபழனி,கோடம்பாக்கம்,பவர் ஹவுஸ்,அம்பாள் நகர் என ''அம்மா உணவகம்'' அமைந்துள்ள எல்லா இடங்களிலும் அவரது வேலைச்சூழலுக்கு ஏற்றபடி சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக கூறினார்.எல்லா இடங்களிலும் மிக நன்றாகவே உள்ளது.இடவசதி மட்டும் அம்பாள் நகரில் குறைவு.அதேபோல வடபழனி அம்மா உணவகத்தில் செயல்பாடு சிறிது தரம் குறைவு என்றார்.
                      
                 இந்தக்குறைபாட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.அம்மா உணவகத்திற்கு கெட்ட பெயர் வரவிடக்கூடாது.இந்த தகவல் சுயநலனுக்கான தவறான தகவலாகக்கூட இருக்கலாம்!.இருப்பினும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.மிகச்சிறப்பான இந்த மலிவுவிலை உணவுத்  திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது.இது அதிகாரிகள் கையில்தான் உள்ளது.
     
               அடுத்ததாக அங்கு மேற்பார்வையிட்டு வந்த அதிகாரி திரு.N.சண்முகம் வீட்டு வரி வசூலர்-அம்பாள்நகர் அவர்களை சந்தித்து அம்மா உணவகம் பற்றிய நிறைகுறைகளை விவாதித்தேன்.அவர் வாயிலாக சென்னையைச்சுற்றி இருநூறு வார்டுகளிலும் அம்மா உணவகம் செயல்படுவதாக அறிந்தேன்.
                   பிறகு அம்மா உணவகத்தில் உள்ள  புகார்ப்புத்தகத்தில் எனது கருத்தினை பதிவு செய்துவிட்டு நன்றி கூறி விடை பெற்றேன்.
           சென்னைக்கு செல்லும் சமூக ஆர்வலர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,அரசு சாரா அமைப்புகள் உட்பட அனைவரும் அம்மா உணவகத்திற்கு சென்று ஒருமுறை சாப்பிட்டுவிட்டு நல்ல கருத்தினை வழங்கலாமே.!.
  மரியாதைக்குரியவர்களே,
               இங்கு நமக்கு அரசியல் முக்கியமல்லங்க.யாராக இருந்தாலும் பொதுமக்களுக்காக செயல்பாட்டில் இருக்கும் நல்ல திட்டங்கள்,பயனுள்ள திட்டங்கள் பற்றி கருத்துரை வழங்குவது,விமர்சனம் செய்வது,விவாதிப்பது மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எதுக்குங்க சந்தேகம்?.
     பதிவேற்றம்;-
  C.பரமேஸ்வரன்,
      செயலாளர்,
        நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-
             தமிழ்நாடு.(ஈரோடு மாவட்டம்)
           http://consumerandroad.blogspot.com


    
  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...